மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஒரு வரி... ஒரு நெறி! - 27

ஒரு வரி... ஒரு நெறி! - 27
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு வரி... ஒரு நெறி! - 27

‘எழுத்தாளன் என்பவன் வெறும் கதைசொல்லி மட்டும் இல்லை!’சூழலியல் எழுத்தாளர் நக்கீரன்

ந்த வரிகளைக் கடக்காமல் இருந்திருந்தால், என் வாழ்க்கை எந்தத் திசையில் பயணித்திருக்கும் என்று என்னால் அனுமானிக்க முடியவில்லை. சூழலியல் எழுத்தாளராக மாறியிருப்பேனா? நெடுவாசல், கதிராமங்கலம் என்று போராட்டக் களங்களில் சுழன்றுகொண்டு இருந்திருப்பேனா? தமிழக மக்களின் நீர் மேலாண்மை அறிவைத் தொகுக்க இப்படிப் பல்லாயிரம் கிலோமீட்டர் பயணித்துக்கொண்டு இருந்திருப்பேனா? ம்ஹும்... இப்போது நக்கீரன் எப்படி இருந்திருப்பான் என்று என்னால் யோசிக்கக்கூட முடியவில்லை. 

தொண்ணூறுகளில் நான் இந்தோனேஷியாவின் போர்னியா காடுகளில், மரம் வெட்டும் ஒரு பெரும் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். நாம் கற்பனைகூட செய்ய முடியாத அளவுக்குக் காட்டை அழித்துத் தினம் தினம் டன் கணக்கில் பிரமாண்ட மரங்களை வெட்டியது அந்த நிறுவனம். காடுகள் மிக வேகமாக சுருங்கிக்கொண்டிருக்க... பழங்குடிகள் வாழ்வாதாரம் இல்லாமல் சூழலியல் அகதிகளாக மாறிக் கொண்டிருந்தனர். நிறுவனங்கள் மட்டும் லாபத்தில் கொழுத்தன. ‘யாருக்காக... எதன் வளர்ச்சிக்காக இப்படி மரத்தை வெட்டு கிறார்கள்?’ என்று என்னுள் எழுந்த கேள்வி என்னைக் குற்ற உணர்ச்சியில் ஆழ்த்தியது. ‘இது அழிவின் அடிப்படையிலான வளர்ச்சி. நிச்சயம் இது பேரழிவுக்குத்தான் அழைத்துச் செல்லும்’ என்று புரிந்தது. இப்படிப்பட்ட அழிவின் பங்காளியாக இருக்க விரும்பாமல், உடனே வேலையை விட்டு சொந்த ஊர் திரும்பினேன்.

ஒரு வரி... ஒரு நெறி! - 27

அந்த நேரத்தில் கவிதைகள் எழுதுவது, புனைவுகள் எழுதுவது என்று இலக்கிய வட்டாரங்களில்தான் திரிந்து கொண்டிருந்தேன். கவிதைகளுக்காகக் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த சூழலில், ஒரு நாள், என்னைப் புரட்டிப் போட்டது. எண்ணெய் நிறுவனங்களை எதிர்த்துப் போராட்டம் நடத்தியதற்காக நைஜீரியா அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்ட கென் சாரோ விவா என்ற சூழல் போராளியின் ‘எழுத்தாளன் என்பவன் வெறும் கதைசொல்லி மட்டும் இல்லை’ என்ற வரிகளைப் படித்தேன். அதன் ஊடாக கென்னுடைய வாழ்வைத் தெரிந்துகொண்டேன்.

கென் ஒரு கவிஞர்; ஆனால், எழுதுவது மட்டும்தான் தன் பணி என்று அவர் நின்றுவிடவில்லை.  இப்போது நெடுவாசல், கதிராமங்கலம் எனத் தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்களால், மண்ணின் மக்கள் பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள் அல்லவா? அதுபோல சில தசாப்தங்களுக்கு முன் நைஜீரியா நாட்டின் ஒகானிலேண்ட் பகுதி பழங்குடி மக்கள் பிரச்னைகளை எதிர்கொண்டார்கள். நைஜீரிய அரசு, ஷேல் நிறுவனத்துக்கு இந்தப்  பகுதியில் எண்ணெய் எடுக்க அனுமதி தந்தது. இதை எதிர்த்த மக்கள் மீது வன்முறை ஏவப்பட்டது. அரசின் அடக்குமுறையை முதலில் எழுத்துக்களால் கேள்வி கேட்டார் கென் சாரோ. பின் மக்களைத் திரட்டி களத்தில் இறங்கி அரசுக்கு எதிராகவும், ஷேல் நிறுவனத்துக்கு எதிராகவும் போராடினார். இதற்காக அவரைக் கைது செய்து பொய் வழக்குகள் புனைந்து தூக்கிலிட்டது அரசு. பின் நடந்த  விசாரணையில், அவர் தூக்கிலிடப்பட்டதன் பின்னணியில் ஷேல் நிறுவனத்தின் பங்கும் இருந்தது வெளிச்சத்துக்கு வந்தது.

அந்த மக்கள் கலைஞனின் இந்த வரிகளைப் படித்தவுடன் என் ஆர்வம் இலக்கியத்திலிருந்து சூழலியல் பக்கம் திரும்பியது. தேடித் தேடி சூழலியல் சார்ந்து படிக்கத் தொடங்கினேன்; எழுதத் தொடங்கினேன். மக்கள் போராட்டங்களில் என்னை இணைத்துக்கொள்ளவும் செய்தேன். ‘நியாயத்துக்கான, அமைதிக்கான பசி என் நினைவுகள் முழுவதையும் வியாபித்து இருக்கிறது’ என்று கென் ஒரு கவிதையில் எழுதி இருப்பார். வாழும் காலம் முழுவதும் நியாயத்தின் பக்கம், அறத்தின் பக்கம் நின்றவர் கென். ‘நியாயத்துக்கான எழுத்து மற்றும் போராட்டம்தான் ஒரு கலைஞனை முழுமையாக்கும்’ என்று நம்பியவர். அதைத்தான் நானும் நம்புகிறேன். ஒரு தேசத்தை ஆளும் அரசே தன் சொந்தக் குடிகளைக் கொன்றுகொண்டிருக்கும்போது... மண்ணிற்கும், மக்களுக்கும் சம்பந்தமில்லாத கதைகளை மட்டும் எப்படிச் சொல்லிக் கொண்டிருக்க முடியும்? எழுத்து மக்களுக்கானது என்னும்போது, மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகள்தானே அதில் முதன்மை பெற வேண்டும்?

நைஜீரியாவில் ஷேல் நிறுவனம் என்ன செய்ததோ... அந்த நிறுவனத்துக்கு ஆதரவாக அந்த அரசு எப்படி மக்கள் மீது அடக்குமுறையை ஏவியதோ... அதையேதான் இப்போது நெடுவாசல் தொடங்கி கதிராமங்கலம் வரை செய்துகொண்டிருக்கின்றன நமது பெரு நிறுவனங்களும், அரசாங்கங்களும். பெரு நிறுவனத்தின் பிரதிநிதிகளாக, மண்ணின் மக்களை வதைக்கின்றன அரசுகள். இப்படியான சூழலில், இன்னும் வீரியமாக எழுதவும், இயங்கவும், மக்களோடு நிற்கவும் இந்த வரிதான் என்னை உந்தித் தள்ளுகிறது. எழுத்தாளன் என்பவன் வெறும் கதைசொல்லி மட்டும் இல்லை.

சந்திப்பு: மு.நியாஸ் அகமது
படம்: தே.தீட்சித்