
எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி
எதிர்காலத்தில் கிளைகளாக முளைக்கும் என அஞ்சப்பட்ட களைகள் எல்லாம் கருவறுக்கப்பட்டன. ஜெயலலிதாவுக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் பட்டியலை ரெடி செய்ய ஆரம்பித்தது சசிகலா குடும்பம். எம்.ஜி.ஆர் இருந்தபோதே ‘ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள்’ என வர்ணிக்கப்பட்ட சேலம் கண்ணன், கருப்பசாமி பாண்டியன் போன்றவர்களைக்கூட ‘வேண்டாதவர்கள் பட்டியலில்’ சேர்த்தனர்.
அனுமதி கிடைக்கிறதோ, இல்லையோ... போயஸ் கார்டனுக்குள் கால் பதித்துவிட்டு வருவார்கள் சீனியர்கள். அவர்களுக்கு ஏற்பட்ட அவமானங்களைக் கேள்விப்பட்ட நெடுஞ்செழியன், கார்டன் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. சசிகலா குடும்பத்தின் பிடியில் ஜெயலலிதா இருக்கிறார் என்பதை நெடுஞ்செழியன் உணரத் தொடங்கியிருந்தார். 1988 பிப்ரவரி 14-ம் தேதி நடந்த ஜெயலலிதா அணியின் பொதுக்குழுவில், ஆட்சி மன்றக் குழு அறிவிக்கப்பட்டது. அதில் இருந்தவர்களின் பெயர்களைப் பார்த்துப் பலருக்கும் அதிர்ச்சி. சீனியர்கள் அமர்ந்து முடிவு செய்த பல பெயர்கள் அந்தப் பட்டியலில் இல்லை. அந்தப் பெயர்களை எல்லாம் கலைத்துப் போட்டிருந்தார்கள், கார்டனின் புதுப் பூசாரிகள். தேர்தலில் யார் யாருக்கு சீட் தரலாம் என்பதை முடிவு செய்வது ஆட்சி மன்றக் குழுதான். ‘வேண்டப்பட்டவர்களுக்கு சீட் தருவதில் எந்த சிக்கலும் வந்துவிடக் கூடாது’ என்கிற முன்யோசனையோடு, ஆட்சி மன்றக் குழுவில் வேண்டப்பட்டவர்களைப் போட்டிருந்தார்கள். ஜெயலலிதாவின் அறிக்கைகள், பேச்சுக்கள் வரையில் அவர்களின் ஆதிக்கம் நிரம்பியிருந்தது.

ஜானகி, ஜெயலலிதா என அ.தி.மு.க இரண்டு அணிகளாகப் பிரிந்திருந்தபோது இரண்டு தரப்பினரும் மேடைகளிலும் அறிக்கைகளிலும் மோதிக் கொண்டிருந்தனர். ஜானகி அணியை எதிர்த்து பண்ருட்டி ராமச்சந்திரன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ‘அரசியலில் எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று அண்ணா சொன்னார். உதையும் தாங்கும் உடல் வேண்டும் என்பது இன்றைய அரசியலில் தேவையாகிவிட்டது’ எனச் சொல்லியிருந்தார். ஆனால், அது ஜெயலலிதா அணிக்கே சரியாகப் பொருந்தியிருந்தது. சசிகலா குடும்பம் உருவாக்கிய ‘பூனைப் படை’யின் அடாவடிகளால் சொந்தக் கட்சியினரே ஆங்காங்கே அடி வாங்கினார்கள். கார்டனிலும், கட்சி அலுவலகத்திலும் ‘வாக்கி டாக்கி’களோடு பூனைப் படையினர் ‘‘அம்மா ரெடி ஆகி விட்டார்கள்... ஓவர்! இதோ, வந்து கொண்டிருக்கிறார்கள்... ஓவர்” என்றெல்லாம் பந்தா காட்டி, தொண்டர்களைப் பந்தாடினார்கள். ‘‘ஜானகி, அரசியலில் தலையிட்டதால், புரட்சித் தலைவர் ஆட்சியே கவிழ்ந்து போனது; அ.தி.மு.க தலைமைஅலுவலகம் மூடப்பட்டது; மக்களைச் சந்திக்கும் வாய்ப்பே எனக்கு இல்லாமல் போய்விட்டது’’ என அப்போது ஜெயலலிதா சொல்லியிருந்தார். மக்களைச் சந்திக்கவிடாமல் ஜெயலலிதாவை யார் தடுத்தார்கள் என்பது அவருக்கே தெரியும்.
ஜானகி ஆட்சி நடந்து கொண்டிருந்த சமயத்தில், டெல்லி சென்று பிரதமர் ராஜீவ் காந்தியை ஜெயலலிதா சந்தித்தார். ‘‘ஜானகி ஆட்சி மெஜாரிட்டியை நிரூபிக்க காங்கிரஸ் ஆதரவு தரக்கூடாது’’ என ராஜீவ் காந்தியிடம் ஜெயலலிதா கேட்டுக் கொண்டார். இந்தச் சந்திப்பை ஊதிப் பெரிதாக்கினார்கள். ‘எண்பது நிமிடங்கள் பிரதமருடன் ஜெயலலிதா பேசினார்’ எனப் பத்திரிகைகளுக்குச் செய்தி தந்தார்கள் புதுப் பூசாரிகள். உண்மையில் சந்திப்பு நடந்தது, வெறும் பத்து நிமிடங்கள்தான். இப்படித்தான் ஜெயலலிதாவின் 40-வது பிறந்த நாள் விழாவிலும் அரசியல் செய்தார்கள்.
1988 பிப்ரவரி 24-ம் தேதி, ஜெயலலிதாவின் பிறந்த நாளின்போது அவர் ராஜ்யசபா எம்.பி-யாக இருந்தார். கட்சி வேறுபாடு இல்லாமல் எம்.பி-க்கள் அனைவருக்கும் அவர்களின் பிறந்த நாளையொட்டி பிரதமர் வாழ்த்துச் செய்தி அனுப்புவது வழக்கம். பிரதமர் அலுவலகத்தில் இருந்து எல்லா எம்.பி-களுக்கும் போவது போலவே, ஜெயலலிதா பிறந்த நாளன்றும் வாழ்த்துச் செய்தி வந்தது. அப்பாவித் தொண்டர்களைப் பிரமிக்க வைக்க, ஏதோ தனிப்பட்ட முறையில் பிரதமர் வாழ்த்து அனுப்பியது போல, அந்தச் செய்தியைப் பெரிதாக்கினார்கள்.
(தொடரும்)

நடராசனை வாழ்த்திய ஒபாமா!
‘ஜாதகத்தை எதிரிகள் கணித்துவிடுவார்கள்’ என்பதால் தனது பிறந்த நாளை வெளிப்படையாகக் கொண்டாட மாட்டார் நடராசன். வீட்டிலேயே கேக் வெட்ட, நெருக்கமானவர்கள் மட்டும் வந்து வாழ்த்து சொல்லிவிட்டுப் போவார்கள். ஆனால் 2012-ம் ஆண்டு நடராசனின் பிறந்த நாள் வெளியுலகம் அறிய அமர்க்களப்பட்டது. காரணம், அந்த ஆண்டு நடராசனுக்கு 70-வது பிறந்த நாள். பத்திரிகையில் முழுப்பக்க விளம்பரம், தடபுடல் விருந்து, கச்சேரி, கவியரங்கம், வாண வேடிக்கை எனப் பிறந்த நாளை பிரமாண்டப்படுத்தி விட்டார்கள்.
அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமாவே(?) தன் கைப்பட பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி அனுப்பி வைத்திருந்தார். இந்தியாவில் இருக்கிற பெரிய அரசியல் புள்ளிகளின் பிறந்த நாளுக்குக்கூட இப்படி வாழ்த்துகள் வந்தது இல்லை. ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்குக் கிடைக்காத அமெரிக்க அதிபரின் வாழ்த்துகூட நடராசனுக்குக் கிடைக்கிறது என்றால், கடல் கடந்தும் நடராசனின் ஆதிக்கம் விரிந்திருக்கிறது என அர்த்தம்.