
கவிஞர் காசி ஆனந்தன்
மாணவனாக இருந்தபோதே கவியரசர் கண்ணதாசனின் வரிகள் மீது எனக்குப் பேரார்வம் உண்டு. அப்போது அவர் நடத்திவந்த ‘தென்றல்’ பத்திரிகையில், அடிக்கடி வெண்பா போட்டி நடத்துவார். ஈற்றடி கொடுத்து வெண்பா எழுதச் சொல்லும் அந்தப் போட்டியில், ஒருமுறை ‘பொய்யடா பொய்யடா பொய்!’ என்ற ஈற்றடியைக் கொடுத்திருந்தார். என் மனதில் அப்போதே ஆழப் பதிந்துவிட்ட வரி இது.
வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் இந்த ‘பொய்யடா’ வரி உணர்த்திய ‘உண்மை’கள் ஏராளம். உலகமே இன்று, பொய்யில்தான் ஊறித் திளைத்துக் கொண்டிருக்கிறது.
‘ஆயிரமாயிரம் ஆண்டு காலமாகத் தொடர்ந்துவந்த மன்னராட்சி முறையை ஒழித்துக் கட்டிவிட்டோம்; மக்கள் ஆட்சி எனும் ஜனநாயகத்தைப் பெரும்பான்மையான நாடுகளிலும் கட்டியெழுப்பிவிட்டோம்’ என்றெல்லாம் பெருமை பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், ‘மனித வாழ்வியலில் இந்த மாற்றம் எந்தவிதமான முன்னேற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது’ என்று கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

இன்றைய நவீன விஞ்ஞானமும் வியக்கும் வகையில், கோயில், அரண்மனை எனக் கட்டடக் கலைகளில் உச்சம் தொட்டிருக்கிறார்கள் அன்றைக்கு அரசாண்டவர்கள். எந்திர வசதிகள் எதுவும் இல்லாத அன்றைய மன்னராட்சிக் காலத்தில், தொலைநோக்குத் திட்டத்தோடு வாய்க்கால் வெட்டியும் குளம், ஏரி, அணைகளில் மழை நீரைத் தேக்கியும் நீர் மேலாண்மையை செவ்வனே வகுத்திருக்கிறார்கள். ஆனால், இன்றைய மக்களாட்சியில் என்ன செய்திருக்கிறோம்? நீராதாரப் பகுதிகளை வீட்டு மனைகளாகவும் தொழிற்சாலைகளாகவும் ஆக்கிரமிப்பு செய்து அழித்திருப்பதோடு, தொலைநோக்குத் திட்டங்கள் குறித்த ஏற்பாடுகள் எதையும் செயல்படுத்தாத, அறமற்ற அலட்சிய சமூகமாகத்தானே மாறியிருக்கிறோம்?
போர்ச்சூழலின்போது, இரு நாட்டு மன்னர்களும் வாள் ஏந்திய நிலையில், கம்பீரமாக முன்நின்று படை வீரர்களை வழிநடத்திச் சென்றனர். போர்க்களத்தில் நேருக்கு நேர் மோதி ரத்தச் சரித்திரம் படைத்தனர். ஆனால், இன்று நாட்டை வழிநடத்திச் செல்லக்கூடிய தலைவர்கள் குளிரூட்டப்பட்ட அறைகளில் உட்கார்ந்து, உண்டு, உறங்கிப் போர் வியூகம் வகுக்கிறார்கள். படை வீரர்கள் மட்டுமே களமாடி செத்து மடிகிறார்கள். ‘பொய்யடா பொய்யடா பொய்’ என்ற வரியின் உண்மைகள் இங்கே உங்களை ஓங்கி அறையவில்லையா?
‘பெண் விடுதலை’ குறித்து நூற்றாண்டுகள் தாண்டியும் பேசிக்கொண்டே இருக்கிறோம். பெண் அடிமைத்தனம் பற்றிய பேச்சுக்கள் எழும்போதெல்லாம், ‘பெண்களைக் கடவுளாகப் பார்க்கிறோம்; மதிக்கிறோம்’ என்று நமக்கு நாமே சமாதானமும் செய்துகொள்கிறோம். ஆனால், இன்றைக்கும் நாடாளுமன்றத்தில், பெண்களுக்கான இருக்கைகள் எத்தனை? சட்டமன்றத்தில்தான் பெண்களின் விழுக்காடு எத்தனை?
ஜனநாயக நாடுகளின் ‘அண்ணனாக’ செயல்பட்டுவரும் அமெரிக்க அதிபர், அரபு நாட்டு மன்னரோடு சிரித்து மகிழ்ந்து விருந்து உண்ணுகிறார். சவுதி அரேபியா, குவைத் போன்ற நாடுகளில் இப்படி சுற்றுலா வருகிறபோது அந்த மண்ணிலிருந்தே, ‘இந்த நாட்டின் மன்னராட்சி ஒழிக; ஜனநாயகம் மலர்க’ என்று என்றாவது, அமெரிக்க அதிபர்கள் சொன்னதாக வரலாறு உண்டா? அப்போது மட்டும் அங்கே, மக்களாட்சியின் மாண்பும் ஜனநாயகத்தின் அவசியமும் ஏன் அர்த்தமற்றுப் போகின்றன?
நான் எழுதிய புதுக்கவிதை வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன...
‘தீவிரவாதி என்கிறான்
துப்பாக்கி வைத்திருக்கிறவனை...
அணுகுண்டு வைத்திருக்கிறவன்!’
வியட்நாம் விடுதலைப் போராட்டத்தின்போது, தமிழக மக்கள் வியட்நாமுக்குத் துணை நின்றார்கள். வங்க தேச விடுதலைப் போராட்டத்திலும் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த ஆதரவு அந்த மக்கள் பக்கம் இருந்தது. இப்போது பாலஸ்தீன விடுதலைக்காகவும் எம் தமிழ்ச் சமுதாயம் பாலஸ்தீனம் பக்கம் நிற்கிறது; குரல் கொடுக்கிறது. ஆனால், விடுதலை பெற்ற வியட்நாமிலிருந்தோ, வங்க தேசத்திலிருந்தோ, அல்லது விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் பாலஸ்தீனத் திலிருந்தோ இன்றுவரையிலும் தமிழீழ விடுதலைக்கு ஆதரவான ஒற்றைக் குரல்கூட எழவில்லையே?
எங்கு பார்த்தாலும் எதைப் பார்த்தாலும் திசை நான்கும் பொய்யாகவே இருக்கின்றன. கண்ணதாசனின் பாடல் திரும்பவும் நினைவுக்கு வருகிறது...
‘பொய்யடா பொய்யடா பொய்!’
சந்திப்பு: த.கதிரவன்
படம்: கே.ராஜசேகரன்