மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சசிகலா ஜாதகம் - 57 - ‘நடனமாடும் நங்கை வீட்டிலா நாவலர்?’

சசிகலா ஜாதகம் - 57 - ‘நடனமாடும் நங்கை வீட்டிலா நாவலர்?’
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா ஜாதகம் - 57 - ‘நடனமாடும் நங்கை வீட்டிலா நாவலர்?’

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

ஜானகி ஆட்சி கவிழ்ந்த பிறகு, தமிழகத்தில் கவர்னர் ஆட்சி நடைபெற்று கொண்டிருந்தது. கவர்னர் அலெக்சாண்டர்தான் ஆட்சி நிர்வாகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அ.தி.மு.க-வில் ஜானகி மற்றும் ஜெயலலிதா அணிகள், காங்கிரஸ், தி.மு.க ஆகிய கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகிக் கொண்டிருந்தன. எம்.ஜி.ஆர் இருக்கும்போதே ஜெயலலிதாவைத் ‘துணை முதல்வர்’ ஆக்கிவிட துடித்தவர்கள், இப்போது முதல்வர் ஆக்கிவிட முண்டாசு கட்டினார்கள். ஜெயலலிதா முதலமைச்சர் ஆகிவிட்டதைப் போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினார்கள் புதுப் பூசாரிகள். நெடுஞ்செழியன் முதல்வர் வேட்பாளர் என்பதை மாற்றி ‘ஜெயலலிதாதான் முதல்வர்’ எனச் சொல்ல ஆரம்பித்திருந்தார்கள்.

ஜெயலலிதா அணியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்கலாம் என்ற நிலை இருந்தது. ஜெயலலிதாவை முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் ஏற்க வேண்டும் என்று பூசாரிகள் விரும்பினார்கள். அதற்காக டெல்லி காங்கிரஸோடு பாதை போட முயற்சிகள் நடந்து வந்தன. இந்த நிலையில்தான் காவிரியில் தண்ணீர் திறந்துவிட்ட அன்றைய கர்நாடக முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டேவை பெங்களூரில் சந்தித்து ஜெயலலிதா நன்றி சொன்னார். அங்கு வி.பி.சிங்கையும் சந்தித்தார். இருவரும் காங்கிரஸுக்கு எதிரிகள் என்ற நிலையில், ஜெயலலிதா அவர்களைச் சந்தித்ததை காங்கிரஸ் ரசிக்கவில்லை. கூட்டணிக்கு காங்கிரஸை மிரட்டிப் பணிய வைக்க, புதுப் பூசாரிகள் போட்ட பாதையில் இப்படி ஜெயலலிதா பயணிக்கத் தொடங்கியிருந்தார். தமிழக காங்கிரஸை அலட்சியப்படுத்திவிட்டு, டெல்லியில் நேரடியாக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இப்படியான விஷயங்கள் அனைத்தையும் செய்தது சசிகலா குடும்பம்.

சசிகலா ஜாதகம் - 57 - ‘நடனமாடும் நங்கை வீட்டிலா நாவலர்?’

கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடர்பாக இரண்டு தரப்புக்கும் இடையே அறிக்கைப் போர்கள் நடைபெற்றன. ‘‘நாங்கள் எங்கள் தரப்பைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறோம். அதுபோல காங்கிரஸ் மேல்மட்டமும் கூட்டணி வேண்டும் என்றால் அறிக்கைகள் வெளிவராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இது தேர்தலின்போது மோசமான விளைவை ஏற்படுத்தும்’’ என ஜெயலலிதா பகிரங்கமாகவே எச்சரித்தார்.

கூட்டணி உரசல்கள் இப்படி நடந்து கொண்டிருந்த நேரத்தில், ஜெயலலிதா அணியிலும் புகைச்சல்கள். நெடுஞ்செழியன், க.ராசராம், அரங்கநாயகம், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகிய சீனியர்களுடன் சசிகலா குடும்பம் மோதல் போக்கைக் கடைப்பிடித்தது. பண்ருட்டி ராமச்சந்திரனைத் தங்களுடைய அமைச்சரவையில் சேர்த்துவிட்டு, கவலைப்பட்டு மிரட்சியுடன் கண்காணித்தவர்கள் கருணாநிதியும் எம்.ஜி.ஆரும். காரணம், அவரின் ராஜதந்திரம் பற்றிய பயம்தான். முதல்வர் எம்.ஜி.ஆரின் டெல்லி விசிட்டின்போது பண்ருட்டியார் கட்டாயம் இருப்பார். டெல்லியில் நடந்த பல கூட்டங்களுக்குத் தன் பிரதிநிதியாக அவரை எம்.ஜி.ஆர் அனுப்பியிருக்கிறார். இதனால் இந்திரா காந்தியுடனும் ராஜீவ் காந்தியுடனும் அவர் நெருக்கமானார். ஜானகியை ஆர்.எம்.வீரப்பன் முதல்வர் நாற்காலிக்குக் கொண்டு வந்தபோது, உடனே காயை நகர்த்தி ஜெயலலிதாவைக் கட்சியின் பொதுச் செயலாளர் ஆக்கியதில் பண்ருட்டியாருக்கு முக்கிய ரோல் உண்டு. ஜானகி ஆட்சியைச் சரிய வைத்ததிலும் தன் டெல்லி செல்வாக்கைக் காட்டினார் பண்ருட்டியார். ஜெயலலிதா அணிக்கும், காங்கிரஸுக்கும் பாலமாக இருந்த பண்ருட்டி, எங்கே கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஸ்கோர் செய்துவிடுவாரோ எனப் பயந்தார்கள். காங்கிரஸுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை பண்ருட்டியார் முன்னெடுத்துக் கொண்டிருந்தபோது, ஹெக்டே மற்றும் வி.பி.சிங் சந்திப்புகள், காங்கிரஸுக்கு எதிராக அறிக்கைகள் என அடுத்தடுத்து புதுப் பூசாரிகளின் அமர்க்களங்கள் அரங்கேறிக் கொண்டிருந்தன.

‘‘ஜெயலலிதாவை நான் தலைவியாக ஏற்றுக்கொள்ளவில்லை. அவரை என்னுடைய மகளாக ஏற்றுக்கொண்டுள்ளேன்’’ என 1988 மார்ச்சில் சொன்னார், நாவலர் நெடுஞ்செழியன். உடனே ஜானகி அணியைச் சேர்ந்த காளிமுத்து ‘‘தகப்பனுக்கு மகள் கட்டளையிடுவதா...மகளுக்குத் தகப்பன் கட்டளையிடுவதா?’’ எனக் கேட்டார். ‘நடமாடும் பல்கலைக்கழகம் நாவலர், நடனமாடும் நங்கை வீட்டிலா இருப்பது’ என்று கேலி பேசினார்கள். இதைக் குறிப்பிட்ட நெடுஞ்செழியன், ‘‘நானா ஜெயலலிதா வீட்டுக்குப் போனேன். போயஸ் கார்டனுக்கு நான் போவதே கிடையாது’’ என்றார்.

சுய லாபத்துக்காக இப்படி காங்கிரஸ் கூட்டணியிலும் கட்சிக்குள்ளும் உரசலை உண்டாக்கிக்கொண்டிருந்தார்கள் புதுப் பூசாரிகள்.

(தொடரும்)

‘‘ஆண்டவனுக்குத் தெரிகிறது. ஆள்பவர்களுக்குத் தெரியவில்லையே!’’

ஜெ
யலலிதா ஆட்சியில் இருந்தபோது நடராசனின் 70-வது பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. சென்னை, பெரியார் திடலில் நடந்த விழாவில் ‘பூலித்தேவனை நெஞ்சில் நிறுத்திய புலிப்படைத் தலைவா’, ‘தமிழர்களின் இதயக்கனி’, ‘தமிழினத்தின் முகவரி’ என்றெல்லாம் பேனர்கள் வைத்து அசத்தினார்கள். ‘இந்த இதயம் துடிப்பது...’ என்ற தலைப்பில் நடந்த கவியரங்கத்தில் நடராசனுக்குப் புகழாஞ்சலிகள் வேறு.

சசிகலா ஜாதகம் - 57 - ‘நடனமாடும் நங்கை வீட்டிலா நாவலர்?’

‘‘ஆனந்த நடராசனின் பலம் தெரியவில்லை. படைத்தல், காத்தல், அழித்தல் என மூன்றையும் செய்யும் ஆண்டவனுக்குத் தெரியும் நீ செய்யும் தொண்டு. ஆனால், ஆள்பவர்களுக்குத் (ஜெயலலிதா) தெரியவில்லையே’’ என பஞ்ச் வைத்தார் கவிஞர் நந்தலாலா. கவிஞர் கிருதியாவோ, ‘‘உன் வீட்டில் எப்போதும் ‘ஜெ.ஜெ’ எனக் கூட்டம் களைகட்டும். அப்படி வருகிறவர்களைக் காப்பாற்றும் புத்த தேவன் நீ. உன்னைச் சீண்டுவோருக்குப் பூலித்தேவன்’ எனச் சீறினார். ‘ஏ.டி.எம் எந்திரம் நீ. உன்னைச் சொருகுகிறவர்களுக்குக்கூட பணத்தைத் தருகிறாய்’ என்றார் கவிஞர் இனியவன்.