
அன்னக்கிளி ஆர்.செல்வராஜ்
நெல்லையில் என் தாத்தாவுக்குச் சொந்தமான கரும்பு ஆலை ஒன்று இருந்தது. வெள்ளைக்காரர்கள் நம் நாட்டை ஆண்ட நேரத்தில் அவர்களுக்கு எதிராகத் தொழில் நடத்திய தீரர் அவர். செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் வெள்ளையனுக்கு எதிராகக் கப்பல் ஓட்டிய நிகழ்வு நமக்குத் தெரியும். பங்குதாரர்களாக இருந்த இந்தியர்களே அவருக்குத் துணை நிற்காமல், அந்தக் கப்பல் வெள்ளையர்கள் கைக்குப் போன துயரம் நிகழ்ந்தது. என் தாத்தாவுக்கும் அப்படியான வேதனையே மிஞ்சியது. இறுதியில் ஆலையை நடத்தமுடியாமல் மூட வேண்டியதாகி விட்டது. அந்த ஆலையின் நினைவுகளாகக் காலம் விட்டுவைத்த மிச்சம் மட்டுமே இன்னும் சாட்சியாக இருக்கிறது.
என் தமக்கையை மணம் செய்துகொடுத்த அலங்காநல்லூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கரும்பு ஆலைகள் நிறைய உண்டு. அந்த ஆலைகளைப் பார்க்கும்போது என் தாத்தா நடத்திய ஆலை நினைவில் சப்தமிட்டு இயங்கும். இந்தக் கரும்பு ஆலை நினைவுகள் என் மனதில் ஓடிக்கொண்டே இருந்தன. கூடவே, இந்தக் கரும்பு ஆலைகள் பின்னணியில் ஒரு திரைக்கதையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் வளர்ந்தபடி இருந்தது. அலங்காநல்லூர் போகும்போது அந்த ஆலைகளின் பின்னணிகளை, அந்த மக்களின் பழக்க வழக்கங்களைக் கவனிப்பேன்.

சுடச்சுட வெல்லம் காய்ச்சி எடுக்கும் அந்தப் பகுதிகளில், இட்லிக்கு வெல்லப்பாகு வைத்துச் சாப்பிடும் பழக்கம் உண்டு. அந்தப் பகுதி திருவிழாக்களில் இன்னொரு காட்சியைப் பார்த்திருக்கிறேன். திருவிழா நேரத்தில், திருமண வயதில் பெண்கள் இருக்கும் வீடுகளின் வாசலில் கொலு போல ஒரு காட்சி இருக்கும். அதாவது, அந்தப் பெண்ணின் திருமணத்துக்காக வைத்திருக்கும் சீர்வரிசைப் பொருட்களை அங்கு காட்சிக்கு வைப்பார்கள். பெண்ணுக்குச் சீராகக் கொடுக்க இருக்கும் பசு மாடும் வாசலில் கட்டப்பட்டிருக்கும். பெண் எடுக்க நினைக்கும் மாப்பிள்ளை வீட்டார், திருவிழாவுக்கு வந்தது போன்ற பாவனையில் ஊரை வலம் வந்து, தங்களுக்குத் தகுதியான சீர்வரிசை உள்ள வீட்டைப் பார்ப்பார்கள்.
அந்தச் சீர்வரிசைக் கொலுவில் இருக்கும் குத்துவிளக்குக்கு அவ்வப்போது எண்ணெய் ஊற்றிவிட்டுப் போவது அந்த மணப்பெண்களின் வேலை. மாப்பிள்ளை வீட்டார் அந்தத் தருணத்தில் பெண்ணையும் பார்க்க முடியும். சீர், பெண் எல்லாம் பிடித்துப்போனால், அதன்பின் நிச்சயம் செய்ய வருவார்கள். பஜ்ஜி, சொஜ்ஜி சாப்பிட்டுவிட்டு, பெண்ணை நடந்துவரச் சொல்லி, மாடு பிடிக்க வந்தது போல பார்க்கும் சடங்காக இல்லாமல் நடக்கிற கவித்துவமான கலாசாரம் அது.
இதையும் சினிமாவில் பயன்படுத்த விரும்பினேன். விஜயகாந்த் நடித்த ‘சக்கரை தேவன்’ படத்தில் இந்தக் காட்சியை எழுதினேன். ‘சின்ன கவுண்டர்’ படத்துக்குப் பிறகு, நானும் இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரும் இணைந்து விஜயகாந்துக்காக உருவாக்கிய கதை இது. கவித்துவமும் கலாசாரமும் இணைந்த அருமையான கதையாக இதைச் செழுமைப்படுத்த முடிந்தது.
படத்தில் வெல்ல மண்டியில் பல ஊர்களிலிருந்தும் வெல்லம் வந்து மூட்டை மூட்டையாகக் குவியும். ஈ மொய்க்காமல் இருக்க வெல்ல மூட்டைகளை வேப்பிலை வைத்து விசிறுவார்கள். அப்படி வந்துகுவியும் வெல்ல மூட்டைகளில், ஒருவருடைய வெல்லம் மட்டும் வந்ததும் விற்றுப் போகும். காரணம், அதனுடைய சுவை. கரும்புச் சாறு பிழியும் இடத்தில் படத்தின் நாயகனின் பாட்டும் பிறந்து சாறோடு கலக்கும். அதனால்தான் அந்த வெல்லத்தில் மட்டும் அப்படி ஒரு இனிப்பு என ஊரே கொண்டாடும். இப்படித்தான் படத்தின் காட்சி ஆரம்பமாகும். சுகன்யா, கனகா கதாநாயகிகளாக நடிக்க, இளையராஜாவின் இசையில் பாடல்கள் மனதை வருடின. சில காரணங்களால் அந்தப் படத்தை ஆர்.வி.உதயகுமார் இயக்க முடியாமல் போனது. படமும் நாங்கள் உருவாக்கி வைத்த ரசனையோடு வராமல் போய்விட்டது.
முதன்முதலில் நான் டி.வி பெட்டியைப் பார்த்தது மதுரை சித்திரைத் திருவிழாவில். அந்த நேரத்தில் பொருட்காட்சி ஒன்றும் நடக்கும். அதில்தான் பார்த்தேன். தூரத்தில் நடக்கும் நடனத்தை அருகே பார்ப்பதற்கு வசதியாக ஒரு குளோஸ்டு சர்க்யூட் டி.வி வைத்திருந்தார்கள். நாட்டியம் பார்க்க கூட்டம் அலை மோதியதால், அந்த டி.வி ஏற்பாடு. அந்த டி.வி பெட்டியில் முதன்முதலாக நான் பார்த்தது, பழநி தெய்வ குஞ்சரி என்ற நாட்டியத் தாரகையை. அடுத்த சில ஆண்டுகளிலேயே ‘கற்பகம்’ படத்தில் கதாநாயகியாக உச்சம் தொட்டார் அந்த நாட்டிய நாயகி. அவர்தான், கே.ஆர்.விஜயா.
அந்த மதுரை சித்திரைத் திருவிழாவில் என்னைக் கவர்ந்த இன்னொரு விஷயம், என்.சி.பி.ஹெச் புத்தக நிறுவனம் போடும் புத்தகக் காட்சி. ரஷ்ய நூல்கள் எல்லாம் மலிவான விலையில் அங்கே கிடைக்கும். புத்தகக் கடையில் வாலன்டையராக வேலை பார்த்தால் சுகமாகப் புத்தகங்கள் படிக்க முடியும். அங்கே சுகுமாரன் என்ற தோழர் எனக்குக் கிடைத்தார். ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ போன்ற நூல்களை எல்லாம் அங்கேதான் பார்த்தேன். என் வாழ்க்கையின் தடத்தையே மாற்றிப்போட்ட நூல் அது. ‘ஜமீலா’ போன்ற அற்புதமான காவியங்களை அங்கே படித்தேன். புத்தகக் கடையில் அமர்ந்து படித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து, சில நூல்களைப் பழுதடைந்த நூல்களாகக் கணக்கில் காட்டி எனக்குத் தருவார் சுகுமாரன். ரஷ்ய இலக்கியங்கள் மனத்தில் நங்கூரம் பாய்ச்சி அமர்ந்தததற்கு, எங்கள் குடும்பம் கம்யூனிஸ பின்னணியில் இருந்தது ஒரு காரணம் என்றாலும், அந்தப் புத்தகக் கடையில் அந்த நூல்களுடன் நெருக்கமாக இருக்க முடிந்தது இன்னொரு காரணம் என்றே சொல்லுவேன்.
சந்திப்பு: தமிழ்மகன்
(ரீல் அல்ல ரியல்)

கனவுகளைச் சுமக்கும் பெண்கள்!
ஒன்பது வயது மகளுடன் தன் புதிய கணவனின் நகரத்துக்குக் கடலில் பயணித்து வந்து இறங்குகிறாள் ஒரு தாய். அவள் பேச இயலாதவள். அவளுடைய மொழியே பியானோ இசைதான். கடற்கரையில் இறக்கிவிடப்படும் அவளுடைய பொருள்கள் அனைத்தும் கணவனின் வீட்டுக்குப் போய்ச் சேர்கின்றன. அவள் உயிருக்கு உயிராக நேசிக்கும் பியானோ மட்டும் கடற்கரையிலேயே இருக்கிறது. அந்தப் பியானோவை வைக்க கணவன் வீட்டில் இடம் இல்லை. கொட்டும் மழையில் பியானோ மட்டும் கடற்கரையில் அனாதையாகக் கிடக்கிறது. அந்தப் பியானோவை வாங்கிக்கொள்ள விரும்புகிறான் அந்த நகரத்து இளைஞன் ஒருவன். மனைவியின் விருப்பத்துக்கு மாறாக அதை அவனுக்கு விற்பதோடு, அவனுக்கு பியானோ கற்பிக்குமாறும் வற்புறுத்துகிறான் கணவன். வேறு வழியில்லாமல் கற்பிக்க சம்மதிக்கிறாள்.
அவளுக்கு பியானோ மீது உயிர். கற்க வந்தவனுக்கோ அவள் மீது உயிர். பியானோவில் எத்தனைக் கட்டைகள் உள்ளனவோ, அத்தனை முறை அவள், அவன் வீட்டுக்கு வந்து கற்பித்தால் அந்த பியானோவைத் திருப்பித் தந்துவிடுவதாகச் சொல்கிறான். பியானோவுக்காக அவளையே அவனுக்குத் தருகிறாள். ‘ஒவ்வொரு பெண்ணும் கணவன் வீட்டுக்கு அவளுடைய ஒரு கனவையும் சுமந்துசெல்கிறாள்’ என்பதைச் சொல்லும் காவியம் ‘தி பியானோ’ என்ற அந்தப் படம்.
நியூஸிலாந்து நாட்டைச்சேர்ந்த பெண் இயக்குநரான ஜேன் காம்பியன் இயக்கினார். 1993-ம் ஆண்டில் வெளியாகி, கேன்ஸ் படவிழாவில் ‘தங்கப் பனை’ விருது பெற்றது. சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது உள்பட பல விருதுகளைப் பெற்ற படம் இது.