பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஆலமரத் துயில் - சிறுகதை

ஆலமரத் துயில் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
ஆலமரத் துயில் - சிறுகதை

சிறுகதை: லஷ்மி சரவணகுமார், ஓவியங்கள்: ஸ்யாம்

காயத்தை விடவும் பரந்து விரிந்த அல்லிகுண்டம் கண்மாய், இப்படி ஒட்டுமொத்தமாய் வறண்டு போகுமென ஊரில் ஒருவரும் நினைத்திருக்கவில்லை. கோடை, மனித உடலின் கடைசி துளிக் குருதியையும் வியர்வையாய்க் குடித்துக்கொண்டிருந்தாலும் இந்த ஒற்றைக் கண்மாயை நம்பி இருக்கும் பதின்மூன்று கிராமங்களின் வயல்களில், சம்சாரிகள் காய்ந்த பயிர்களை இன்னும் நம்பிக்கையோடு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரேயொரு மழை பெய்தாலும் மிச்சம் மீதி இருக்கும் பயிர்கள் பிழைத்துக் கொள்ளும். ஆனால், இறங்கிவர மனமின்றி இயற்கை இறுக்கமாகவே தான் இருந்தது. சதுரகிரி மலையில் துவங்கி மேற்குத் தொடர்ச்சி மலையின் இந்த அடிவார கிராமங்களெங்கும் குட்டை குட்டையாய் நாட்டுக் கருவ மரங்கள் மட்டுமே இப்பொழுது மிஞ்சியிருக்கும் நிலையில் பல வருடங்கள் தாக்குப் பிடித்த பனங்காடுகள்கூட காய்ந்து போய் விட்டன. வெக்கையில் நஞ்சேறிய பாம்புகள் நீரற்ற கண்மாயின் கடைசி ஈரத்தைத் தேடி வெறியோடு அலைய, சம்சாரிகள் ஆடு மாடுகளுக்குப் பசியாறப் புல் கிடைக்காமல் தவித்தார்கள். கோடை தாகத்தோடு சேர்த்து எரிச்சல், கோபம், தவிப்பு, துரோகமென எல்லா விபரீத உணர்வுகளையும் மனிதர் களிடத்தில் கொண்டுவந்துவிடுகிறது.

ஆலமரத் துயில் - சிறுகதை

நிலம் விவசாயத்திற்கானதில்லை என்றாகிப்போன இந்தச் சில வருடங்களில் அக்கம்பக்கத்து கிராமத்து இளவட்டங்கள் எல்லாம் திருப்பூர் மில்களுக்குப் பஞ்சம் பிழைக்கச் சென்றுவிட்டார்கள். நெல்லுக்கஞ்சி ஐயாவின் குடும்பத்திலும் அதுதான் நிலமை. நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்பு பண்டிகை நாட்களில் மட்டுமே நெல்லுக்கஞ்சியைச் சாப்பிடும் ஊர்மக்கள் மற்ற நாள்களில் சாப்பிடுவதெல்லாம் குதிரைவாலியையும்  சோளத்தையும் தான். எல்லா நாளும் ஒருவேளை உணவு நெல்லுக்கஞ்சி இருக்க வேண்டும் என்று வாழ்ந்த குடும்பம் அது. அதனாலேயேதான் அந்தப் பட்டப் பெயர். ஒவ்வொரு பத்து வருடத்திலும் குடும்பச் சூழல் அவரது நிலத்தில் கொஞ்சத்தைக் காவு வாங்கியதில், இப்போது மிச்சமிருப்பதெல்லாம் மலையடி வாரத்தை ஒட்டிய நாலு ஏக்கர் வயல்தான். கடைசித் துண்டு காணி இருக்கும்வரை ஒரு விவசாயிக்குப் பயிர்களைத் தவிர, எதன் மீது காதல் வந்துவிடும். மண்ணில் தன் ஆயுளில் பாதியைச் செலவழித்த அந்த மனிதன் ஒவ்வொரு முறையும் தனது பால்யத்தில் உழுத செழிப்பான அந்தப் பூமி திரும்பக் கிடைக்குமென்கிற நம்பிக்கையில்தான் இருக்கிறார். வயல் முடிந்து மலைக்குச் செல்லும் பாதையில் இவரது நிலத்திற்குக் காவலாக இருப்பதுபோல் நிற்கும் ஆலமரம் மட்டும் பல கோடைகளின் வெக்கையை உள்வாங்கி இறுகிப் போய் நிற்கிறது. பரந்து விரிந்த அந்த மரத்தின் கீழ் அமர்ந்தபடி வெறுமனே தனது நிலத்தைப் பார்ப்பதுதான் இப்போது நெல்லுக்கஞ்சியின் வழக்கமான அலுவல்.

நாற்பது வயதைத் தாண்டிய அவரின் துணைவி மயிலுத்தாய் இத்தனை காலம் சொந்த நிலத்தில் மட்டுமே உழைத்து இப்பொழுது கூலிக்கு வேலைக்குப் போகிறாள். சதுரகிரி மலையின் அடிவாரத்திலிருந்து மலையில் இருக்கும் மகாலிங்கம் கோயிலில் சமைப்பதற்குத் தேவைப்படும் கியாஸ் சிலிண்டர்களைத் தூக்கிச் செல்லும் வேலை. சாதாரணமாக நடப்பதற்கே மூச்சு வாங்கும் அந்த மலைப்பாதையில் ஒடிசலான அந்தப் பெண் இருபது கிலோ சிலிண்டர்களைத் தூக்கியபடி மலையேறுவதைக் கண்டு, கல்லும் கண்ணீர் சிந்தும். பத்து கிலோ மீட்டர்கள் கரடுமுரடான அடர்ந்த வனப்பாதையில் சிலிண்டர் களோடு நடக்கும்போது உடலின் ஒவ்வொரு செல்லும் ஓய்வு கேட்டுத் துடிக்கும். நிலத்தில் விழும் வெயிலுக்கும் மலையின் மீது விழும் வெயிலுக்கும் வித்தியாசம் உண்டு. மலையேறும்போது உடலைத் துளைக்கும் வெயில் நரம்புகளைச் சுருட்டி இழுக்கக் கூடிய அளவிற்குத் தீவிரமானது. அத்தனை வலிகளைத் தாக்குப் பிடித்தால், ஒரு நடைக்கு 300 ரூபாய் கூலி. அதிலும் சிலர் இரண்டு நடைகள் போவதுண்டு. உழைத்தால் மட்டுமே பிழைக்க முடியுமென்கிற நெருக்கடி உள்ள மனிதனின் பசி எத்தனை மலைகளைத் தாண்டி வேண்டுமானாலும் நடக்கச் செய்யும்போல. சதையும், எலும்பும், நரம்பும் மட்டுமல்லாமல் வேறென்ன அவர்களின் சொத்து. ``இப்பிடிக் கஷ்டப்பட்டுத்தான் நாம கஞ்சி குடிக்கணுமா?” முதல் சில நாள்கள் நெல்லுக்கஞ்சி அலுத்துக் கொண்டார். ஆனாலும், வேலைக்குப் போக வேண்டாமென சொல்லக்கூடிய துணிச்சல் அவருக்கில்லை. எது இருக்கோ இல்லையோ ஒவ்வொரு வருசமும் ஊரிலிருக்கும் காளியம்மன் கோயில், கருப்பசாமி கோயில், அழகர்சாமி கோயிலென எல்லா சாமிகளுக்கும் திருவிழா நடத்திப் பூசை கட்ட சனம் தவறுவதில்லை. இந்த ஊரைச் சுற்றிலும் சரி, பக்கத்தில் இருந்த அத்தனை ஊர்களிலும் சரி எத்தனையோ சாமிகள் இருந்தன. ஆனால், எந்தச் சாமியும் மழை தரும் வழியைக் காணோம். இந்த வருஷம் முனகியபடியே ஊர் ஆட்கள் திருவிழாவிற்கான வேலையைப் பார்த்தார்கள். பெருசுகள் சிலர், ``மனுஷனுக்குக் கொற வெச்சாலும் சாமிக்கிக் கொற வெய்க்கக் கூடாதுரா. மனம்போல செய்வோம். மாரித்தாயி மழய குடுக்கட்டும்’’ என உற்சாகப்படுத்த நெல்லுக்கஞ்சி மட்டும், “அது ஒண்ணுதான்யா கொற நம்மளுக்கு. குடிக்கக் கூழு இல்ல. கொப்பளிக்கப் பன்னீர் கேக்குதாம்... நீங்களும் உங்க  திருவிழாவும்” எரிச்சலோடு கூட்டத்திலிருந்து விலகிப் போனார்.

பெரியவன் திருப்பூருக்கு வேலைக்குப் போன இடத்தில் புதுக்கோட்டைக்காரப் பெண் ஒருத்தியைத் திருமணம் செய்துகொண்டான் எனச் சில மாதங்களுக்கு முன்பு வந்த செய்தியோடு, அவன் அனுப்பிய கொஞ்சம் பணமும் வந்தது. பதறிப்போய் அவனுக்கு போன் செய்தார். “எத்தன காலத்துக்குத்தான் நான் குடும்பத்துக்கு உழச்சுக் கொட்டுவேன். என் வாழ்க்கையவும் பாக்கணும்ல… என்னால இவ்ளோதான் முடியும். பேசாம காடு கரைய வித்துட்டு இங்க வந்திருங்க. நான் உக்கார வெச்சு கஞ்சி ஊத்தறேன். ஆனா, இனிமே என்னால பத்து பைசா அனுப்ப முடியாது...” என சடவாய்ப் பேசினான். “எங்க தாத்தன் காலத்துல இருந்து எல்லாருக்கும் சோறு போட்ட நெலம்யா. எங்காலம் வரைக்குமாச்சும் இருக்கட்டும். நீ துட்டு அனுப்பிச் செரமப்பட வேணாம். நாங்க பாத்துக்கறோம்” கோபப்படக்கூட முடியாமல் இணைப்பைத் துண்டித்தவர், சடாரெனத் தன் மகன் யாரோ ஒருவனாகிப் போனதைப்போல் உணர்ந்தார். தனக்காக மட்டுமே சிந்திக்கத் துவங்கும் நொடியிலிருந்து மனிதன் உறவுகளற்ற தனியனாகிறான். மயிலுத்தாயிடம் சொல்லும் போதுகூட, “இந்தப் பய ஊர் உறவு எதுவும் வேணாம்னு சொல்றானே, எப்பிடித்தா நல்லது கெட்டதுக்கு அவனுக்கு நாலு பேர் நிப்பாங்க?” கவலையாகத்தான் வெளிப்படுத்தினார். “விடுங்க, நம்மளுக்குந்தான் சுத்தி சொந்தம் பந்தம்னு எல்லாம் இருக்கு, ஆனா, நம்ம வயித்துக்கு நாம தான உழைக்கிறோம். பசியெடுத்து சாகக் கெடந்தாலும் எள்ளுன்னு எடுத்துப் பாக்க நாதியில்ல, உமின்னு ஊதிப்பாக்க நாதியில்ல. அவனாச்சும் குடும்பம் குட்டின்னு சந்தோசமா இருக்கட்டும்” ஒரு வயதிற்குப்பிறகு, எல்லா இழப்புகளையும் இயல்பாக ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு அந்தம்மா சொன்னது. மனிதன் தன் கவலைகளுக்காக வருத்தப்படுவதென்றால் ஓர் ஆயுசு போதுமா? ஐயாவும் அம்மாவும் அண்ணன்பொருட்டுக் கலங்கி இருப்பதைப் பார்த்து தெய்வானை தானும் வேலைக்குப் போவதாகச் சொன்னாள். ஏற்கெனவே மனைவியை வேலைக்கு அனுப்பிவிட்டோமே எனக் குற்றவுணர்ச்சியிலிருந்த நெல்லுக்கஞ்சிக்கு மகளும் வேலைக்குப் போகிறேனென்று சொன்னதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. “ஏந்தாயி இனி எங்காலத்துல உனக்கு எதுவும் செய்ய முடியாதுன்னு நெனைக்கிறியா? உன்னயவும் வேலைக்கு அனுப்பினா, ஊர்ல யாராச்சும் என்னய மதிப்பாங்களா? வருசத்துக்கு அறுவது கோட்ட நெல்லு அறுப்பு பாத்த குடும்பம் நம்ம குடும்பம்” மகளின் முகத்தைப் பார்க்க முடியாமல் கேட்டார். “சும்மா இருப்பா… வேலைக்குப் போறதுனால ஒண்ணும் கொறஞ்சு போயிராது. சோத்துக்கு நீயும் அம்மாவும் வழி பண்ணிருவீங்க சரி. நாளைக்கு எனக்கு ஒரு கல்யாணம் காட்சி செய்யணும்னா, யார்கிட்டப் போயி நிப்பீங்க? அதுக்காகவாச்சும் கொஞ்ச காலத்துக்கு வேலைக்குப் போறேன்” அவள் சொன்னதை ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார்.

பதினைந்து நாள்களுக்கு முன்பாகத்தான் தெய்வானை, சிங்கப்பூருக்கு வீட்டு வேலைக்கென கிளம்பினாள். பேரையூர் ஏஜென்ட் மூலமாகப் பேசி வீட்டுப் பத்திரத்தை அடமானத்தில் வைத்துதான் எல்லா செலவுகளையும் பார்த்தார்கள். ‘‘கண்காணாத ஊருல போயி பத்திரமா இருந்திருவியாத்தா…” அனுப்ப மனசில்லாமல் புருஷனும் பொண்டாட்டியும் மருக, “நா என்ன சின்னப்புள்ளையா? அதெல்லாம் பாத்துக்குவேன். என்ன ஒண்ணு, வீட்டு வேலைக்குப் போறேன்னு தெரிஞ்சா ஊர்ல ஒரு மாதிரியா நெனச்சுக்குவாங்க. யாரு கேட்டாலும் ஏதாச்சும் கடைல வேல பாக்கறேன்னு சொல்லிருப்பா…” தவிர்க்க வியலாமல் தான் தேர்ந்தெடுத்துக் கொண்ட நிலை குறித்தான கவலை அவளின் குரலில். பிள்ளைகள் இல்லாத வீடு சூன்யம். சேர்த்து வைத்துப் பார்த்துப் பார்த்துச் செய்ய வேண்டிய வயதில், தங்களுக்காகத் திருமண வயது வந்துவிட்ட மகள் வேலைக்குப்போன துக்கம் இருவருக்கும். பேசினால் வெடித்து அழுதுவிடுவோமே என்கிற அச்சத்தில் தவிர்த்துக் கொண்டிருந்தார்கள். விமானம் ஏற்றிவிட்டு வந்த ஏஜென்ட், முதல் மூன்று மாத சம்பளம் அவளுக்குத் தாமதமாகத்தான் வரும் என்று சொன்னதில் முன்னைவிடவும் கவலை அதிகமானது. கடனை முழுதாக அடைக்கமுடியாவிட்டாலும் வட்டியை மட்டுமாவது கட்டலாமென தெம்பாய் இருந்தவருக்கு அதற்கும் வழியில்லை. இப்போதைக்கு பிள்ளை சந்தோசமாயிருந்தால் சரி என மனதைத் தேற்றிக்கொண்டார்.

கிராமப்பஞ்சாயத்தில் கூடி பஞ்சகால நடவடிக்கைகள் குறித்துப் பேசும்போது ஓரமாக நின்றுகொண்டிருந்த நெல்லுக்கஞ்சியும் இன்னும் சில பெரியவர்களும்,  ``என்னத்த பேசி என்னய்யா செய்றது? காஞ்சு கெடக்கற நெலத்துக்கு தண்ணி வேணுமே அதுக்கு என்ன வழி? போதாக்குறைக்கு வாங்குன காசு எப்ப கட்டுவன்னு பேங்க்காரன் கழுத்துல துண்ட போட்டுக் கேக்கிறான். ஊர் உலகத்துல எல்லாம் கோடி கோடியா வாங்கி ஏப்பம் விட்டுட்டு ஓடிர்றானுக. இவனுக நம்ம கிட்ட குடுத்த காலணா கடன வாங்கறதுக்கு படாதபாடுபடுத்துறான்க” என தவதாயப்பட்டார்கள். பஞ்சாயத்துக் கூட்டம் காரசாரமாக இருந்ததே ஒழிய, தீர்வை நோக்கி நகர்வதாய்த் தெரியவில்லை. “நாமளும் காகமா கத்திக் கிட்டுத்தான் இருக்கோம், அதிகாரியும் சரி அரசாங்கமும் சரி மதிக்கிறதா இல்ல. போன வெள்ளாமதான் ஒண்ணும் இல்லாம போச்சேன்னு கடன் வாங்குனோம், இந்த வெள்ளாமைல நாத்து நல்லா வளந்து வர்ற நேரத்துல தண்ணி இல்லாம கருகிப்போச்சு. இது அவங்களுக்கும் தெரியும். ஆனா, கடன தள்ளுபடி பண்ண மாட்றாய்ங்களே. சும்மா மனு குடுத்தெல்லாம் இந்தப் பிரச்னையை முடிக்க முடியாது. எல்லாரும் மொத்தமா கிளம்பி மெட்ராசுக்குப் போவோம். போராட்டம் பண்ணுவோம்… கலகம் பண்ணாத்தானய்யா விடிவு பொறக்கும்” பிரசிடென்ட் எல்லோருக்கும் பொதுவாய் சொன்னதைச் சிலர் ஏற்றுக் கொண்டார்கள்;சிலர் அங்கேயே ஆட்சேபித்தார்கள். ``ஏப்பா துட்டு வெச்சிருக்க ஆளுக போவீங்க… இல்லாதப்பட்ட ஆளுங்க என்ன செய்றது? இது சுத்தப்படாது” என ஒரு பெரியவர் சொல்ல,  ``வார விருப்பம் இருக்கவங்க வாங்க… இதுல கட்டாயம் ஒண்ணுமில்ல” என பிரசிடென்ட்டும் வேறு சிலரும் முடித்துக் கொண்டார்கள். நெல்லுக்கஞ்சி ஐயாவுக்கு இந்தக் கூட்டத்திலோ பேச்சிலோ பெரிதாக நம்பிக்கை இல்லை. பசித்தவர்களின் குரலையோ வலியையோ உணர்ந்த அரசாங்கம் கிடைக்கப்பெற்ற பாக்கியம் சுதந்திர இந்தியாவில் எந்த மாநிலத்துக்காரனுக்கு இருந்திருக்கிறது. சம்சாரி எல்லா ஊரிலும் எல்லோராலும் கைவிடப்பட்டவன் என்பதையே இத்தனை வருடங்களில், தான் கண்ட வாழ்க்கைப் பாடமாய் நினைக்கிறார். 

ஆலமரத் துயில் - சிறுகதை

காடு கரையென எப்போதும் காலில் வயக்காட்டு மண்ணோடு புழங்கிய மனிதனுக்கு எந்த வேலையுமில்லாமல் வீட்டில் இருப்புக் கொள்ளவில்லை. மனம் போனபோக்கில் தினம் ஒரு  திசையிலிருக்கும் ஊர்களுக்குப் போய்வந்தார். எங்காவது நாலு மழை பெய்து பச்சை தழைத்திருக் கிறதா என்கிற ஆசை. பேரையூரிலிருந்து கல்லுப்பட்டிப் போகிற வழியில் தரிசாகிப்போன நிலத்தில் ஒன்றுக்கு மூன்றாக க்ரஷர்கள் வந்து விட்டிருந்தன. சாப்டூர் செல்லும் வழியில் பழையூர் கண்மாய் இன்னும் கொஞ்சம் தாக்குப் பிடித்திருந்ததில் ஆச்சர்யம். ஒன்றுமே இல்லாமல் போனாலும், மொத்த ஊருக்கும் சோறு போடக்கூடிய அளவிற்கு இப்போதும் புளியந்தோப்பு அடர்த்தியாய் இருந்தது. மற்ற பக்கங்களில் நிலமை மோசந்தான். அன்று விடிகாலமே நீச்சத் தண்ணியை மட்டும் குடித்துவிட்டுக் கிளம்பியவர் பெருங்காமநல்லூர் பக்கமாய்க் கிளம்பினார். அங்கிருந்து செக்கானூரணி செல்லும் வழியில் இருக்கும் கிராமங்களில் துவரையும் எள்ளும் போட்டிருப்பார்கள். துளி ஈரம் இல்லாதபோதும், பயிருக்குத் தாக்குப்பிடிக்கும் வளமான கரிசல் நிலம். ஆனால், அங்கும் சொல்லிக் கொள்ளும்படியாய் ஒன்றுமில்லை. சில ஊர்களில் மட்டுமே துவரை தாக்குப் பிடித்திருந்தது. ஒரு சம்சாரி இன்னொரு சம்சாரிக்கு உதவ முடியாத இந்த நாள்கள் சகிக்க வியலாதவை. பெரும்பாலான ஊர்களிலும் விதை நெல்லுக்குக்கூட வழியில்லாமல் கடன் வாங்கிக் கொண்டிருந்தார்கள். நிலம் எரிந்து பயிர்கள் கருகிப்போயிருந்தன. கடன் கொடுத்த எவனும் வாங்கியவனின் கஷ்டம் பார்ப்பதில்லை. தன் பணத்தைத் திரும்ப வாங்குவதற்கான உத்திகளை மட்டுமே யோசிக்கிறான்.

பிற்பகல் நேரமாக வீட்டிற்குத் திரும்பிய போது ஊர் மந்தையில் இரண்டு ஜீப்கள் நிற்பதைக் கவனித்தார். வங்கி ஆட்கள் வந்திருக்க வேண்டும். அவருக்கு இனம் புரியாத ஓர் அச்சமும் தயக்கமும் எழ, வந்த வழியிலேயே வேகமாகத் திரும்பி நடந்தார். காலில் அணிந்திருந்த தோல் செருப்புகள் ஈரமாகி நீராய் வழியும் அளவிற்கு வியர்த்துக் கொட்டியது. தேர்ந்த உடைகளோடு எதிரில் வந்த ஒருவன் ஓங்கி அவரின் காதில் ஓர் அறைவிட்டான்.  இத்தனை வருடத்தில் எந்தவொரு சண்டைக்கும் போயிராத அந்த மனிதன் தனது அறுபத்து மூன்றாவது வயதில் யாரோ முகம் தெரியாத ஒருவனிடம் அடிபட்டுவிட்டோமே என்கிற அவமான உணர்வில் கூனிக் குறுகிப் போனார். “ஏப்பு எங்க ஓட்றீரு… கை நீட்டி துட்டு வாங்கும் போது இனிச்சதுல்ல…  திரும்பக் கொடுக்கணும்னா மட்டும் வலிக்கிதோ…” அவரது கழுத்தை இறுகப் பிடித்து இழுத்தபடி மந்தைக்குத் தள்ளினான். மந்தையில் அதிகாரிகளின் குரல் சத்தமாகவும் பதிலுக்கு சம்சாரிகள் கெஞ்சுவதுமாக இருக்க, இவரை இழுத்துவந்த ஆள் விடாமல் அடித்தபடியே வந்தான். ``தாயலி தப்பிச்சா ஓட்ற… வா” அவர்கள் மந்தையை நெருங்கும் போதும், அடித்ததைக் கண்ட சம்சாரிகள் கொதித்துப்போய் கத்தினார்கள். ``யேய்.. மொதல்ல கைய எடுய்யா… உங்கிட்ட கடன் வாங்கிட்டா, அவர என்ன பிச்சக்காரன்னு நெனச்சிட்டியா..? கைய எடுய்யா...” ஆளாளுக்குக் கத்தியும்கூட அவன் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை. வங்கி அதிகாரிகளுடன் வந்த போலீஸ்காரர்கள் இரு பக்கமும் சமாதானப்படுத்த முயன்றார்கள்.

நெல்லுக்கஞ்சியை அடித்த அதிகாரி, ``யோவ் சும்மா வாய்ச்சவடாலுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல... இங்க நிக்கிற அத்தன பேருந்தான் கடன் வாங்கி இருக்கீங்க. ஒருத்தனுக்கும் திருப்பிக் குடுக்க வக்கில்ல. அப்பறம் எதுக்கு வீராப்பு?” அந்தக் குரலுக்கு பதில் சொல்லும் துணிவற்றவர்களாய் எழுந்த கோபத்தையெல்லாம் முனகலாய் வெளிப்படுத்தியது அந்தக் கூட்டம். ஆறடிக்கும் பக்கமான நெல்லுக்கஞ்சி அத்தனை காலத்தில் தலைபோகும் கஷ்டத்தில் இருந்தபோதுகூட இத்தனை அவமானப்பட்டதில்லை. தன்னைச் சுற்றி இருந்த யாரையும் பார்க்கும் துணிவின்றி தலையைக் குனிந்தபடியே நின்றார்.

இரண்டு வார அவகாசத்திற்குள் பணத்தைக் கட்டாவிட்டால், நிலத்தையோ வீட்டையோ வங்கி எடுத்துக்கொள்ளலாம் என்பதாக முடிவாகி, வங்கி ஆள்கள் கிளம்பும்போது அன்றைய தினத்தின் பகல் கருணையின்றி அந்த ஊரிலிருந்து விலகத் துவங்கி இருந்தது. நெல்லுக்கஞ்சிக்கு யார் யாரோ வந்து சமாதானம் சொன்னார்கள். அவர் மந்தையிலிருந்து நகர்வதாய் இல்லை. காலுக்குக் கீழிருந்த பூமியும் தலைக்கு மேலிருந்த ஆகாசமும் நாம் ஜீவித்திருக்கும் நாளிலேயே நம்மைவிட்டு அகன்று போகும்போது தோன்றும் கைவிடப்பட்ட உணர்வு அவரிடம். அழுது அரற்றி வலி தீர்த்துக் கொள்ள ஏங்கிய மனம் முதுமை காரணமாய் குமுறலை அடக்கிக்கொண்டிருந்தது. யார் யாரின் பசிக்கோ விதைத்த அவரின் கைகளும் கால்களும் கடும் பசியில் இப்போது சுருங்கிப் போயிருந்தன. வாழ்வின் தீர்க்க முடியாத புதிர் ஒன்றிற்குள் அகப்பட்டுவிட்ட குழப்பத்தில் நேரங்காலம் தெரியாமல் அதே இடத்தில் உட்கார்ந்திருந்தவரை வேலை முடிந்துவந்த மயிலுத்தாய்தான் நினைவுக்குக் கொண்டுவந்தாள். மந்தையில் நடந்ததை யாரும் அவளிடம் சொல்லி இருக்கவில்லை. சகலமும் கைவிடப்பட்ட வலியில் மந்தையின் வேப்பமரத்தில் சாய்ந்து கிடந்தவரைத் தட்டிக் கூப்பிட்டவள், ``காச்சுன கஞ்சி அப்பிடியே கெடக்கு, காலைல இருந்து எங்க போன நீயி..?” பதற்றத்தோடு கேட்டாள். ஒன்றுமே பேசாமல் எங்கோ பார்த்தபடி கிடந்தவரை, “இந்த மனுஷனுக்கு என்னாச்சு? ஏன் இப்பிடிப் பேயறஞ்ச மாதிரி கெடக்கே... இந்தா உங்கிட்டதான் பேசிட்டு இருக்கேன்…” எனப் பகலின் எரிச்சலும் மலையேறின அலுப்பிலும் அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போது ஊர் பேருந்து நிறுத்தத்தில் டீக்கடை வைத்திருந்த சுந்தரி அக்காதான் ஓடி வந்து கட்டிக்கொண்டாள். “மயிலு.. உன் புருஷன அடிச்சுப்புட்டாய்ங்கடி அந்த பேங்க்காரனுக… கொஞ்ச நஞ்ச அடின்னு இல்ல” எனக் கவலையும் கதறலுமாய் சொன்னதை முதலில் நம்பமுடியாமல் தான் நின்றாள். விடாப்பிடியாய் அவரை மந்தையிலிருந்து இழுத்துக்கொண்டுவந்து தெருவிளக்கில் நிறுத்திப் பார்க்கும்போதுதான் முதுகிலும் கழுத்திலும் தடித்த விரல்களின் தடங்களைப் பார்க்க முடிந்தது. இந்த மனிதன் எதற்காகக் கடன் வாங்கினான்? பொண்டாட்டி பிள்ளைக்கு நகை நட்டு எடுத்துப் போடவா? வீடு வாசல் வாங்கவா? சாராயம் குடிக்கவா? எதுவுமில்லை. கடந்தமுறை நடவு விளையும் முன்னயே கருகிப்போனது. நல்ல சம்சாரி எவனும் தன் நிலம் மலடாய்ப் போவதை விரும்ப மாட்டான். அதற்காக வாங்கிய கடன்தானே... பிறகு ஏன் அடித்தார்கள்? அவளுக்குள் எழுந்த எந்தக் கேள்விக்கும் அந்த இரவில் பதில் சொல்ல எவருமில்லை. ஊரே கேட்கும்படி கதறி அழுதவளுக்கு ஆறுதல் சொல்ல இன்னும் சிலர் அங்கு வந்தபோது, நெல்லுக்கஞ்சி மெதுவாக வீட்டை நோக்கி நடந்தார்.

ஊர்க்காரர்களின் முகத்தைப் பார்க்க சங்கடப்பட்டதாலேயே எங்கும் போகாமல் வீட்டிற்குள் முடங்கிக் கிடந்தார். தென்னரசுதான் காலையில் வந்து, ``அப்புச்சி எதுக்கு இப்டியே கெடக்க, மெட்ராசுக்குப் போன விவசாயிங்க எல்லாம் தீவிரமா போராடிட்டு இருக்காங்க, எப்படியும் நமக்கு இந்த வாட்டி ஒரு விடிவு வந்துரும்... எந்திரிச்சு வா...” என நம்பிக்கையாக அழைத்தான். அந்த நாளின் சூரிய வெளிச்சம் கலக்கமே இல்லாமல் எத்தனை தீவிரமாய் இருந்ததோ, அத்தனை தீவிரமாய் தங்களுக்கு ஒரு தீர்வு வந்துவிடுமென எல்லா சம்சாரிகளையும்போல் அவரும் நம்பினார். தென்னரசு வீட்டு டி.வி-யில் நிமிசத்துக்கு ஒருமுறை விவசாயிகளின் போராட்டத்தை தான் முக்கிய செய்தியாய் காட்டிக் கொண்டிருந்தார்கள். யார் யாரோ வந்து படமெடுத்தார்கள், யார் யாரோ அவர்களோடு சேர்ந்து படமெடுத்துக் கொண்டார்கள். எல்லா ஊர்ப்பக்கமிருந்தும் கூடியிருந்த விவசாயிகளின் முகத்தில் பசியின் ரேகைகளும் அதைத் தீர்த்துக்கொள்ள முடிந்த வரை தீவிரமாய் அவர்கள் போராடுவதும் தெரிந்தது. தங்களது இறுதி யுத்தமாய் கோவணத்தோடு முழக்கமிடும் அளவிற்கு அவர்கள் வந்திருக்கிறார்கள் என்பதைப் பார்த்தபோது அவர்களோடு கலந்து கொள்ளாமல்போனதில், சின்னதொரு குற்றவுணர்ச்சி வந்தது அவருக்கு. ``எலேய் தென்னரசு... கூடிய சீக்கிரம் ஒரு நல்ல வழி பொறக்கும்டா...” எனச் சந்தோசமாகச் சொல்லிக் கொண்டார். ஊரில் யார்தான் நம்பவில்லை. அடுத்த வெள்ளாமையிலாவது விவசாயம் பிழைத்துக்கொள்ளும் என்கிற சந்தோசத்தில் பருவமழை வந்தால் போதுமென ஒவ்வொருவரும் வேண்டாத சாமியில்லை.

தன்னைத் தொந்தரவு செய்யாதவரை மட்டுமே எந்தப் போராட்டத்தையும் நடத்த அனுமதிக்கும் அதிகாரிகள், போராட்டம் தேசிய அளவிலான செய்தியான மூன்றாவது நாளில், கருணையின்றி அடித்துத் துரத்தினார்கள். பொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்ததாகவும் வன்முறையில் ஈடுபட்டதாகவும் கொத்துக்கொத்தாக நிறைய விவசாயிகளைக் கோவணத்தோடு அள்ளிக் கொண்டுபோன காவல்துறை, அடைத்துவைத்த இடத்தையும் அடித்துத் துவைத்த செய்தியையும் எந்த டி.வி-யும் அவர்களுக்குக் காட்டியிருக்க வில்லை. நம்பிக்கை உடைந்துபோன துக்கத்தை யார்தான் யாரிடம்தான் பகிர்ந்து கொள்ள முடியும். நெல்லுக்கஞ்சி கடைசி முயற்சியாகத் தன் மகனிடம் கொஞ்சம் பணம் கேட்டுப் பார்க்கலாமாவென யோசித்தார். அவரின் மனைவிதான் விடாப் பிடியாய் மறுத்துவிட்டாள். வீட்டுப் பத்திரத்தையும் வைத்துக் கடன் வாங்க முடியாது. ஏதோவொன்று நிரந்தரமாகப் பறிபோய்விடுமோ என்னும் தவிப்பு வயிற்றில் நெருப்பாய் எரிந்து அடங்க மறுத்தது. யாரிடம் யார் கடன் கேட்பதென ஊரே தவித்துக் கொண்டிருந்தது. சிலர் வீட்டை விற்றார்கள், இன்னும் சிலர் ஆடுமாடுகளை விற்றார்கள். வங்கிக்காரர்கள் இன்னொரு முறை ஊருக்குள் வந்து காசு கேட்கும்போது யார்மீது வேண்டுமானாலும், கை நீளக்கூடுமென்கிற அச்சம் ஒவ்வொருவருக்கும் இருந்தது. வேறு யாரையும்விட நெல்லுக்கஞ்சிக்கு அதிகமாக இருந்தது. மயிலுத்தாயிக்கு மலையேறி மலையேறி உடம்பு நோவு கண்டதுதான் மிச்சம். இரவுகளில் அலுப்பின் வேதனையை முனகலாய் அரற்றினாள். இரண்டு நாட்களுக்கு முன் தூக்கத்தில் எழுந்து கொள்ளக்கூட முடியாத வேதனையில் படுக்கையிலேயே சிறுநீர் கழித்துவிட்டதைப் பார்த்தபோதுதான் அவள் உடல் எத்தனை சிதைந்து போயிருக்கிற தென புரிந்துகொண்டார். அந்த ராத்திரி முழுக்க அவர் அழுகுரல் சலனமற்றிருந்த ஊரின் மரங்களையும் கிளைகளையு மெல்லாம் அசைத்துப் பார்த்தது. அடுத்த நாள், ``பேசாம வீட்ல இருத்தா... சாப்பாட்டுக்கு நான் ஏதாச்சும் வழி பாக்கறேன், நீ வேலைக்குப் போகாத” எனக் கண்ணீரோடு சொன்னார். மயிலுத்தாயிக்கு உடனே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஊர்ப்பக்கம் இப்போதைக்கு வேறு வேலையும் இல்லை. ``இருக்கட்டும். இன்னும் ஒரு நாலு நா போறேன். முடியலைன்னா பாத்துக்கலாம்” என சமாதானத்திற்குச் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாள்.

கடன் வசூலிக்க ஆட்கள் வர, நாள்கள் நெருங்கிக் கொண்டிருந்தன. நிலத்தைப் பார்த்து பத்து நாள்கள் பக்கமாய் ஆகிப்போனதை நினைத்துச் சங்கடம் கொண்டவர், வெயிலோடு வெயிலாக வயக்காட்டிற்குச்  செல்லும் பாதையில் இறங்கி நடந்தார். மாடுகள் சரியான தீவனமில்லாமல் மெலிந்துபோய் சுற்றிக் கொண்டிருந்தன. சிறுவர்கள் சிலர் கொடிக்கா மரத்திலிருந்து கொடிக்கா பறித்துக் கொண்டிருந்தார்கள். இவரைப் பார்த்த சிறுவன் ஒருவன், “அப்புச்சி கொடிக்கா திங்கறியா?” என உரிமையாய்க் கேட்டான்.  ``சும்மா ஒரு அஞ்சாறு குட்றா...” எனக் கேட்டவரின் துண்டில் இரண்டு கை நிறைய அள்ளிப் போட்டான். வெயிலுக்குக் கொடிக்காயின் துவர்ப்பு சேரச் சேர தண்ணீர் தாகம் எடுத்தது. மொட்டப்பாறையை ஒட்டிய குட்டையில் மிச்சம் மீதி தண்ணீர் இருந்தால், வாரிக் குடிக்கலாமென நினைத்தபடியே நடந்தார். கண்ணுக்கெட்டிய தூரம்வரை பயிர்களே இல்லாமல், கொஞ்சமே கொஞ்சமான தென்னை மரங்களும் அவர் நிலத்திற்கு அப்பாலிருந்த ஆலமரமும் மட்டுமே மிஞ்சியிருந்தன. கொடிக்காயை ஒரு அளவுக்கு மேல் தின்ன முடியாமல் துண்டில் முடிந்து கொண்டவர், குட்டையில் பாதம் அளவிற்கே இருந்த நீரில் கலங்கல் வராமல் அள்ளிக் குடித்தார். வயிற்றுக்கு ஆறுதலாய் இருந்தது.

மயிலுத்தாய் வீடு திரும்பியபோது, இரவுக்கான சாப்பாட்டை பேரையூர் முக்குக்கடையில் வாங்கி வந்திருந்தாள். இன்னும் மூன்று நாள்களில் பெளர்ணமி. மகாலிங்கம் கோயிலுக்கு வரும் கூட்டம் கொஞ்சநஞ்சமல்ல. ஒரு நாளைக்கு சர்பத் கடை, தேங்கா கடை போட்டாலும் அஞ்சாயிரம் ஆறாயிரம் பார்த்துவிடலாம். போதாக்குறைக்கு கோயில் மடத்தில் சமைக்கப் போனால், கூடுதலாகக் கொஞ்சம் பணம் கிடைக்கும். மிச்சத்திற்குக் கழுத்திலிருக்கும் தாலியையும் வைத்தால், ஒரு தவணையைக் கட்டிவிட முடியும். வேலை  தந்த களைப்பையும் மீறி வந்தவளை ஆளற்ற இருண்ட வீடு எரிச்சலூட்டியது. ``வேல இல்லாட்டியும் இந்த மனுஷன் வீடு அண்ட மாட்டேங்கறானே...” எனப் புலம்பியபடியே மந்தைப் பக்கமாக விசாரிக்கப் போனாள். அன்றைய தினம் முழுக்கவே யாரும் அவரைப் பார்த்திருக்கவில்லை என்பது அவள் விசாரித்த எல்லோருக்குள்ளும் கலவரமான ஒரு சந்தேகத்தை வரவைத்திருக்க, அவர்களும் அவளோடு சேர்ந்து தேடினார்கள். காலையில் கொடிக்கா பறித்துக்கொண்டிருந்த சிறுவர்கள்தான், இறுதியாய் வயக்காட்டுப் பக்கமாய் அவர் போனதைப் பார்த்ததாகச் சொன்னார்கள்.

ஆலமரத் துயில் - சிறுகதை

ஊர்க்காரர்கள் பேட்டரி லைட்டுகளோடு சைக்கிளிலும் பைக்குகளிலும் வயக்காட்டிற்கு விரைந்தபோது, தூரத்தில் காற்றே இல்லாத ஆலமரத்தில் சலனமின்றி ஏதோ ஒரு கனத்த வேர் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தனர். வெளிச்சம் மரத்தை நெருங்க நெருங்கத்தான் அந்த வேர் அத்தனை காலம் அந்த நிலத்தோடு வாழ்ந்த நெல்லுக்கஞ்சி என்பது தெரிந்தது. சரியாகச் சாப்பிடாமல் ஒட்டிப்போயிருந்த அவரது வயிற்றில் கோவணம் கூட இப்பொழுது இறுக்கம் இல்லாமல் போயிருக்க, மிச்சமிருந்த ஒற்றை வேட்டியில் தான் கொண்டிருந்த கடைசி நம்பிக்கையும் தொலைந்துபோன வலியில் அவரின் தலை தொங்கிக்கொண்டிருந்தது. உயிரையே வேரோடு பிடுங்கி எடுத்துவிட்ட வேதனையில் ஊரே கதறியழுதது.

தாதுப் பஞ்சகாலத்தில்கூட எந்தத் தனி மனிதனும் தற்கொலை செய்துகொள்ளாத ஊரது. கைவிடப்பட்ட அநாதைகளாய் தாங்கள் மாறிப்போனோம் என்னும் வேதனையில் அந்த ஊர் சனம் தங்களைப் போன்ற எல்லோருக்காகவும் கதறியழுதது. அக்கம்பக்கத்தில் கிடந்த கட்டைகளை வைத்து சின்னதாகப் பாடைகட்டி அவரைத் தூக்கி ஊரை நோக்கி நடந்தபோது மலைக்கு அப்பாலிருந்து லேசாக இடி இடித்தது. அவர்கள் ஊரை நெருங்கும் நேரத்திற்கெல்லாம் சின்ன சின்னதாய் தூறல்கள் விழுந்தன. இந்த மழை அவரை வழியனுப்பி வைக்கட்டுமென நெல்லுக்கஞ்சியின் வீட்டு வாசலில் கூடியிருந்தோரின் நம்பிக்கை எல்லாம் பொய்யாகும்படி அந்தத் தூறல் மழையாக வலுக்கும் முன்னரே நின்றுபோனது.

ஆனந்த விகடனுக்கான உங்கள் சிறுகதைகளை avstory@vikatan.com என்ற ஐ.டி-க்கு அனுப்பலாம்!