பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

சொல்வனம்

கானல் நீரலைகள்

நதியே! திரவத்தமிழே!
என்று பாடினேன்.
என்னை மிகவும் பிடித்துவிட்டது
நதிக்கு.
பேச்சு வாக்கில்,
தன் முதுகில் ஏழெட்டு லாரிகள்
மணல் அள்ளிய புண்களை
திருப்பிக் காட்டியது.
புண்களின் கானல் நெடியில்
மயக்கமே வந்துவிட்டது எனக்கு.
மணல் என்பது மணல் மட்டுமல்ல
அது சிறிய வடிவிலான
பூமி உருண்டை என்றது.
நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோதே,
எங்களைக் கடந்துபோனது
ஏழெட்டு மணல் லாரிகள்.
எத்தனையோ உலகங்களின் கண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது வழி எங்கும்.
கானல் நீரலைகள்
நாய்களைப்போல
விரட்டிக் குரைத்தன லாரிகளை...

-கார்த்திக் திலகன்

சொல்வனம்

ஃப்ளாஷ்பேக்

இரக்கமற்ற அந்த ஃப்ளாஷ்பேக்கிற்கும்
எனக்குமான WWF
இறுதிக்கட்டத்தை எட்டுகிறது
முகத்தில் மூன்று உதை
வயிற்றில் எட்டு மிதி வாங்கியபின்
அந்த ஃப்ளாஷ்பேக்கின் முன்
திராணியற்றவனாக நிற்கிறேன்.

இவனை எளிதில் வென்றுவிடலாம்
என்று தெரிந்துகொண்ட அது
கயிற்றின் மீது ஏறி
என் கழுத்தில் குதித்து கீழே தள்ளுகிறது
என்மீது ஏறி அமர்ந்துகொண்டு
என் கால்களை மடக்கிப் பிடித்துக்கொள்கிறது.

சர்ர்ர்ர்ர்ரென்று சறுக்கி வந்த அம்பயர்
அதன் வெற்றியை உறுதிசெய்ய எண்ணுகிறார்.

ஒன்...

உலகின் இரக்கமற்ற எல்லா மனிதர்களும்
அவருடன் சேர்ந்து எண்ணுகிறார்கள்.

டூ...

அந்த ஃப்ளாஷ்பேக்
மெல்ல என் காதருகில் வந்து கேட்கிறது
‘இந்த முறையாவது திருந்துறியா!?’

நான் த்ரீ...எண்ணுவதற்குள்
என் கால்களை உதைத்து
போட்டியைத் தொடர விரும்பவில்லை
நான் அந்த ஃப்ளாஷ்பேக்கிடம்
தோற்றுப்போகவே விரும்புகிறேன்.

- தி.விக்னேஷ்

மைக் டெஸ்டிங் 1...2...3...

சிட்டு பாட்டியோட
மூணாவது பொண்ணு வைரம்
இந்தக் கிணத்துலதான் மிதந்துச்சுன்னு
சொல்லிட்டுப்போன தங்கப்பாண்டி
எடுத்துட்டுப்போனது
கோடையோட குளியல் கொண்டாட்டத்த.

மாந்தோப்புக்குள்ள
ஏதோ ஒரு மரத்துலதான்
பானு அத்தை கயித்துல தொங்குச்சுன்னு
ராஜதுரை சொன்னதுக்குப்பிறகு
யாருக்குத்தான் தோணும்
திருட்டு மாங்கா திங்க.

பூட்டியே கெடக்குற
மஞ்சகலர் வீட்ல
சாந்தி அக்கா விஷம் குடிச்சு
செத்துட்டாங்கனு
வினோத் மூலமா கேள்விப்பட்டதிலிருந்து
எடுக்கவே போனது இல்ல
காம்பவுன்ட்டுக்குள் விழுந்த பந்துகள.

முத்துவிஜயன் ஞாபகப்படுத்தினதுக்குப் பிறகு
அவுட்டானாலும் பரவாயில்லப்பானு
தீக்குளிச்ச தோழி
அன்புச்செல்வி வீட்டு
சந்துப்பக்கம் ஒளியவே மாட்டோம்
ராத்திரி விளையாடும்போது.

தண்டவாளத்துல வெச்ச காசு
தங்கமாகும்னு சொன்னாலும்
யாரும் போறதா இல்ல
பொட்டல் ஸ்டேஷன் பக்கம்
கோகிலாவ ரெண்டு துண்டா
பிரபு பார்த்ததுலயிருந்து.

மழைக்குறியோடு
பாதிக்கப்பட்டவங்களுக்கு
நீதி உண்டு
பழிவாங்குவேன் ஒருநாள்னு
அருள் வந்து ஆடும்
ஊர்க் குலசாமி
இன்னைக்கு வரைக்கும் மலையேறுவது
சுருட்டோடு வேண்டியதை
மட்டுமே வாங்கிக்கிட்டு.

-கார்த்தி