பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

மாய வித்தைக்காரனின் புறாக்கள் - கவிதைகள்

மாய வித்தைக்காரனின் புறாக்கள் - கவிதைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
மாய வித்தைக்காரனின் புறாக்கள் - கவிதைகள்

கவிதை: சுகுணா திவாகர், ஓவியம்: ரமணன்

மாய வித்தைக்காரனின் புறாக்கள்

ந்த மேஜிக் நிபுணர்
எப்போதும் வெள்ளைக் கைக்குட்டையைத்
தன் தொப்பிக்குள் நுழைத்து
புறாக்களை வெளியே எடுப்பார்.
தாங்கள் பிறந்ததே இந்தத் தொப்பிக்குள்தான்
என்று நம்ப ஆரம்பித்தன புறாக்கள்.
கொறித்துக்கொண்டிருந்த தானியங்களில் எல்லாம்
கீறிக்கீறி மேஜிக் நிபுணரின் பெயரை எழுதிவைத்தன.
பிறகு அவர் கைவித்தை அனைத்திலும்
ஊடாடிப் பறந்து திரிந்தன.
அழகான யுவதியை மேஜையில் கிடத்தி
கத்தியால் இரண்டு துண்டாக்கிப்
பின் ஒன்றாக்கவேண்டும்.
ஆனால், அவள் வயிற்றிலிருந்து
சிறகடித்தபடி புறாக்கள் வந்தபோது
மேஜிக் நிபுணரும் மலைத்துதான் போனார்.
காற்றிலிருந்து பூங்கொத்தை வரவழைக்க முயன்றபோதும்
புறாக்களே தோளில் வந்தமர்ந்தன.
அன்று முக்கியமான நிகழ்வு.
ஒரு யானையை மேடையிலிருந்து மறையச்செய்து
பார்வையாளர்களைக் கவரவேண்டும்.
என்ன முயன்றும்
யானை மறைந்தும் அதன் தந்தங்கள் மறையவில்லை.
வெண் தந்தங்கள் இரண்டும் புறாக்களாய் மாறியபோது
பார்வையாளர்கள் கைதட்டத்தான் செய்தார்கள்.
இனி மீள முடியாது என்று
தன் தொப்பிக்குள் விழுந்து
மறைந்துபோனார் மேஜிக் நிபுணர்.
பதிமூன்றாம்நாள் அந்தப் பிரமாண்டக் கட்டடத்தின் எட்டாவது மாடியில்
ஏ.சி.அவுட்டோருக்குக் கீழ்
தண்ணீர் விழும் என்று
தங்கள் சின்னஞ்சிறு அலகுகள் திறந்தவாறு
காத்து நின்றிருந்தன வெள்ளைப்புறாக்கள்.

மாய வித்தைக்காரனின் புறாக்கள் - கவிதைகள்

காலச்சித்திரம்

காலம் இடதுகண்ணில் புகுந்து
வலதுகண்ணின் வழி வெளியேறியது.
சட்டை பொத்தான்களே கண்களாய் மாற
கழற்றி ஹேங்கரில் மாட்டிவிட்டு
காலத்தின் சித்திரத்தை
வரையத்தொடங்கினார் ஓவியர்.
அரிதாய்ப் பெய்யும் ஆலங்கட்டி மழையில்
தெறித்து விழுந்த பனிக்கட்டிகளால்
பூமி நடுங்கத் தொடங்கியிருந்தது.
முன்னும் பின்னுமாய்த் துடித்துக்கொண்டிருந்த
பனிக்கட்டியொன்றை உள்ளங்கையில் ஏந்தியபோது
ரத்தச் சொட்டுகளோடு விழித்துப் பார்த்தன கண்கள்.
ஓவியத்துக்கு வெளியிலும் பெய்த மழையால்
அறையெங்கும் நிரம்பிய நீரும்
துடித்துக்கொண்டிருந்த ஆலங்கட்டி விழிகளும்.
மழையை நிறுத்த முடியாதபோது
கண்களைப் பிடுங்கி
ஓவியத்தின் மேற்கு மூலையில் பொருத்தினார்.
இப்போது மழை நின்றிருக்கலாம்.

சமனற்ற விகிதங்கள்

ல்லூரியின் கடைநிலைப் பணியாளர்
தனசேகர் அண்ணாவுக்கு வலது கை சூம்பியிருந்தது.
கக்கத்தில் இடுக்கிய குடையைப்போல
அவர் சூப்பிய கையுடன் எதிர்ப்படுவார்.
இடது கையையும் கொஞ்சம் எக்கித்தான்
கல்லூரி மணியை அடிப்பார்.
கோயில் மணியில் தொங்கும் நாக்கைப்போலவே
சற்று முன்பின்னாய் ஆடிக்கொண்டிருக்கும்
அவரது சூம்பிய வலது கை.
ஒருநாள் வலது கை கொண்டு
இடது கையை அளந்து பார்த்தார்.
பின் முழங்கால் வரையிலும் கணுக்கால் வரையிலும்
பிறகு முழு உடலையும் தன் வலது கை கொண்டு
அளந்து பார்த்தார்.
‘இந்த இடது கை ஏன் இவ்வளவு நீளமாக இருக்கிறது?’
என்பதைத் தவிர
இப்போது அவருக்கு எந்தக் குறையுமில்லை.