
சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,
கொற்றவைக்கூத்து நடைபெறும் பெரும் மரப்புதரின் பின்புறம் நோக்கி ஓடினான் தேக்கன். எவ்வியூரின் பாதியளவு பரப்பைக்கொண்ட அடர்மரத்தோப்பின் பின்வட்டத்தை வேகமாகக் கடந்துகொண்டிருந்தன அவனுடைய கால்கள். மரத்தோப்பு முடிந்து காட்டின் சரிவுப்பகுதி தொடங்குமிடம் மிகக்குறுகிய அளவினைக் கொண்டது. அதில் ஓடிக்கொண்டிருந்த தேக்கனின் வேகம் யாரும் பார்த்தறியமுடியாத ஒன்று.
தேக்கன் ஓடத்தொடங்கியபொழுது மாணவர்கள் சிலர் உடனெழுந்து பின்னால் ஓடினர். சிலர் மட்டும் கீதானிக்கு உதவிசெய்துகொண்டிருந்தனர். கீதானி சற்றே மூச்சுவாங்கி இளைப்பாறினான். அவனது வாய் முணுமுணுக்க நினைத்தது. ஆனால், கசப்பு அதனை அனுமதிக்கவில்லை. ஆனாலும், சொற்கள் உள்ளுக்குள் உருண்டுகொண்டே இருந்தன. `அவர்கள் நம்மைப்போன்ற மனிதர்கள் அல்ல; பார்க்கவே அச்சந்தரும் உருவத்தினராக இருந்தனர்.’

இங்குமங்குமாக ஓடிய தேக்கனால், அவர்கள் தோப்பைவிட்டு எப்பக்கம் வெளியேறினார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. ‘யார் அவர்கள்? எத்தனை பேர்? பறம்புமலையில் இவ்வளவு தொலைவு அவர்களால் எப்படி ஊடுருவ முடிந்தது? ஏன் இங்கு வந்தார்கள்?’ வினாக்கள் மண்டையைத் துளைத்துக் கொண்டிருந்தன. பதற்றம் அதிகமாகிக் கொண்டிருந்தது. வெளியேறிய தடம் எதுவும் மண்ணில் தெரியவில்லை. ‘மீண்டும் கீதானியை விசாரிக்கலாமா’ என்று தோன்றியது.
சட்டென பிடிபட்டவனாய் அருகிலிருந்த நாங்கில் மரத்தின் மீது ஏறினான். கொப்புகளைப் பிடித்து வேகவேகமாக உச்சிக்கிளைக்குப் போனான். நார்ச்சத்து அதிகமுள்ள மரமாதலால் தேக்கனை, கிளையின் நுனிவரை அது அனுமதித்தது. மர இலைகளைத்தாண்டி அவன் தலை வெளியில் நீண்டது. கண்ணெதிரே மலைச்சரிவின் பள்ளம் முடியுமிடத்தில் சிற்றாறு ஓடிக்கொண்டிருந்தது. அதனைக் கடந்தால் ஆதிமலையின் தொடக்கம். நான்கு மடிப்புகளைக்கொண்டது ஆதிமலை.
மரத்தோப்புக்குள் இருந்து வெளியேறியவர்கள் சிற்றாற்றைக் கடந்திருக்க முடியாது. பொழுது மறைய இன்னும் சிறிதுநேரமே இருந்தது. அவர்கள் சிற்றாற்றைக் கடந்து ஆதிமலைக்கு உள்ளே நுழைவதை இங்கிருந்து துல்லியமாகப் பார்த்துவிடலாம். அவர்கள் எத்தனை பேர் என்பதனை அறிய தேக்கனின் கண்கள் அலைமோதிக்கொண்டிருந்தன. ஆற்றின் ஒருமுனையில் இருந்து மறுமுனை நோக்கி கண்களை ஓடவிட்டுக்கொண்டிருந்தான். மெல்லிய காற்றில் மரக்கொப்பு அசைந்தாடியது. மிகக்கவனமாக நுனிக்கொப்பில் நின்று கொண்டிருந்தான். கொப்பின் கவட்டையை விரல்கள் பற்றியிருக்க, உடலின் எடையை காற்றில் ஏற்றி கண்களை ஓடவிட்டுக் கொண்டிருந்தான்.
அவர்கள் இங்கிருந்து போனால், ஆற்றின் எவ்விடத்தைக் கடப்பார்கள் என்று அவன் எதிர்பார்த்த இடத்தைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். ஆனால், வேறுதிசையில் சிலர் ஆற்றைக் கடப்பது தெரிந்தது.
தேக்கனின் கண்கள் உற்றுநோக்கின. வந்துள்ளவர்கள் ஐந்து பேர். ஒவ்வொருவரும் முதுகுக்குப் பின்னால், நீள்வடிவில் குழல்போன்ற நரம்புக் கூடையைக் கட்டியிருந்தனர். அதனைச் சுமந்தபடி படுவேகமாக ஆற்றைக்கடந்து ஆதிமலையின் முதற்குன்றுக்குள் நுழைந்தனர்.

மரத்திலிருந்து தாவிக்குதித்து அவர்களைக் கொன்று வீசவேண்டும் என்று மனம் துடித்தது. ஆனால், பதற்றப்படாமல் கவனமாகப் பார்த்தான். வேறு யாரும் பின்தொடர்கிறார்களா என்று சிறிதுநேரம் கவனித்தான். யாரும் பின்தொடரவில்லை. வெறும் ஐந்து பேர் இத்தனை மலைகளைக் கடந்து இவ்விடம் வந்து உயிரோடு திரும்பிச்செல்கின்றனர். கண்கள் பார்ப்பதை மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. ஆனாலும், நம்புவதைத் தவிர வேறுவழியில்லை. மரத்திலிருந்து வேகமாக நழுவியபடி கீழிறங்கினான். பொழுது சாய்ந்துகொண்டிருந்தது.
மாணவர்கள் எல்லோரும் மர அடிவாரம் வந்து அண்ணாந்து பார்த்தபடி நின்றிருந்தனர். எல்லோர் கண்களிலும் பெரும்பதற்றம் இருந்தது. ஆசான் சொல்லப்போகும் வார்த்தையை எதிர்பார்த்திருந்தனர்.
இறங்கிய வேகத்தில் தேக்கன் சொன்னான், ``அவர்கள் ஆதிமலையின் வலப்புறம் நோக்கி ஓடுகிறார்கள். பறம்பு மலையின் தன்மை அவர்களுக்குத் தெரியவில்லை. வலப்புறம் நோக்கி ஓடும் அவர்கள் மச்சக்கடவின் வழியாகத் தான் முதற்குன்றைத் தாண்ட வேண்டும். இங்கிருந்து குறுக்குவழியிற்போனால், அவர்களுக்கு வெகுமுன்னரே நாம் போய்விடலாம். கடவைத் தாண்டும்பொழுது ஒருவனின் உடலிலும் உயிர் மிஞ்சக் கூடாது” என்று சொல்லியபடி வெறிகொண்டு கிளம்பினான் தேக்கன். மாணவர்கள் அவனோடு ஓடத்தொடங்கினர். ஓடிக்கொண்டே தேக்கன் கேட்டான், ``மச்சக்கடவுக்குச் செல்லும் வழி யாருக்குத் தெரியும்?”
``எனக்குத் தெரியும்” என்றான் முடிநாகன். அவசரத்தில் வாய்திறந்ததால், குடம் நஞ்சு உள்ளே கொட்டியது. தாங்கமுடியாமல் ஓடிக்கொண்டே காறித்துப்பினான்.
``கீதானியும் அலவனும் என்னைப் பின்தொடர முயலுங்கள். மற்றவர்கள் முடிநாகனோடு இணைந்து வாருங்கள். நீங்கள் வரும்பொழுது அவர்களை மண்ணோடு மண்ணாகச் சாய்த்து வைத்திருப்போம்” என்று அவன் சொல்லிய பொழுது கால்கள் புரவியின் வேகங்கொண்டன.
காட்டில் ஓடுவது சிறந்த கலை. கொடிகளைத் தாண்டவும், முன்காலை மட்டும் ஊன்றவும், படர்தாவரங்களின் மீது குத்துக்காலை பயன்படுத்தவும், பாதமறியா வேகம்கொண்டு ஓடவும் இணையற்ற பயிற்சி வேண்டும். செத்தைகளும் சருகுகளும் கால்களை எளிதில் ஏமாற்றக்கூடியன. பாறைகளும் பாசிகளும் பாதத்தின் மீதான பகையைக் காலங்காலமாக வளர்த்துவருவன. கோரைகளின் வகைகளையும் புற்களின் குணங்களையும் பகுத்தறிய முடியாதவன், பத்தாவது அடியில் மண்டியிட்டு விழுவான். தண்டிலும், இலையிலும், கணுவிலும் நஞ்சை வைக்காமல் உடலெங்கும் இருக்கும் சுனைகளில் நஞ்சை வைத்துள்ள செடிகொடிகளை அவற்றின் வாசனை வழியே கண்டறிந்து விலகத்தெரிந்தவன் மட்டுமே காட்டில் ஓடி இலக்கை அடைய முடியும்.
மூக்கின் மோப்ப ஆற்றலும், கண்பார்வையின் கூரிய கவனிப்பும் கால்களை இறகுகள்போல வீசியெறியும் பயிற்சியும் கொண்ட ஒருவனால்தான் காட்டை ஓடிக் கடக்க முடியும்.
வேட்டை விலங்குகளின் நான்கு கால் பாய்ச்ச லுக்குத் தப்பித்துத்தான் மனிதன் பறம்புநாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறான். எனவே, அதனுடைய நான்கு கால் வேகத்தையும் மிஞ்சுவதாக மனிதக்கால்கள் வளம் பெற்றுள்ளன. தேக்கனின் கால்கள் அதனையும் மிஞ்சி ஓடிக்கொண்டிருந்தது.
பொழுது மறைந்து நிலவின் ஒளி படரத்தொடங்கியது. தேக்கனின் ஓட்டத்தை எப்படியாவது நெருங்கிவிட வேண்டும் என்று ஆத்திரங்கொண்டு பின்தொடர்ந்தான் கீதானி. அவனைவிட வயதிலும் உருவத்திலும் இளைத்தவனான அலவன் பல இடங்களில் கீதானியைக் கடந்து ஓடிக்கொண்டிருந்தான்.
நேரம் கூடக்கூட தேக்கனின் வேகம் கூடிக்கொண்டிருந்தது. அவனது மனதில் கேள்விகள் அடுக்கடுக்காக மேலெழுந்து கொண்டிருந்தன. கீதானி மரப்புதருக்குள் இருந்து வந்து, அவர்கள் வெளியேறிவிட்டார்கள் என்று சொன்ன பொழுதுக்கும் அவர்கள் சிற்றாற்றைக் கடக்கும் நேரத்திற்கும் இடையுள்ள நேரத்தைக் கணக்கிட்டபொழுது மனம் முதல் அதிர்ச்சியை அடைந்தது. `இவ்வளவு குறுகிய நேரத்தில் அவ்வளவு தொலைவு எப்படிப் போயிருக்க முடியும்?’ என்று வியந்தான். அவர்களின் வேகம் பிடிபடத் தொடங்கியது. ‘அது வழக்கமான வேகமல்ல’ என்று மனம் கணித்தது.
ஓடிக்கொண்டே கேட்டான், ``அந்தக் கூடையில் என்ன கொண்டுபோகிறார்கள்?”
மிகத்தொலைவில் வந்துகொண்டிருந்த இருவரின் காதுகளிலும் வினா சரியாக விழவில்லை. ``என்ன கேட்கிறீர்கள்?” எனக் கத்தினான் அலவன்.
தேக்கன் மீண்டும் கத்திச் சொன்னான். கீதானி இன்னொருமுறை வாய்திறந்து சொல்லி நஞ்சுக்கசப்பை விழுங்க ஆயத்தமாக இல்லை. ‘நான் ஓடியாக வேண்டும். அதுதான் இப்போதைய தேவை’ என எண்ணியபடியே வேகமாக ஓடினான்.
முன்னால் போய்க்கொண்டிருந்த அலவன் அதே வேகத்தில் பின்னால் திரும்பி, தேக்கன் கேட்டதை மீண்டும் கேட்டான். கீதானி கையசைவாற் சொல்ல, அதனைப் புரிந்துகொண்ட அலவன் மீண்டும் முன்புறம் திரும்பி ஓடியபடி கத்திச் சொன்னான், ``அவர்கள் தேவவாக்கு விலங்கைப் பிடித்துக்கொண்டு போகிறார்களாம்.”
அலவன் சொன்ன சொல் பெரும்மரம் சாய்வதைப்போல தேக்கனின் மீது சாய்ந்தது. அதிர்ந்தான் தேக்கன். ‘ஓடுவதா, நிற்பதா?’ மனம் தள்ளாடியது. ‘நம்பமுடியாத சொல். என்ன நடக்கிறது இங்கு? எப்படி நடந்தது?
பறம்பு மலையை வேற்று மனிதர்கள் கடந்துவந்து தேவவாக்கு விலங்குகளை எப்படிப் பிடித்துக்கொண்டு போகமுடியும்?’ சிந்திக்கச் சிந்திக்க விடை கிடைக்காமல் வெறி கூடிக்கொண்டிருந்தது. முன்னிலும் வேகங்கொண்டு ஓடினான் தேக்கன்.

அவனுக்குப் பின்னால் வெகுதொலைவில் அலவன் வந்துகொண்டிருந்தான். புதர்கடந்து அடர்மரங்களுக்குள் நுழைந்தான் தேக்கன். அவனை இனி கண்ணிற்பார்க்க இயலாது. குறிப்பின் அடிப்படையில்தான் போக முடியும். எனவே, அடுத்ததாக வந்துகொண்டிருந்த அலவன் ஓட்டத்தின் வேகத்தைக் குறைத்தான். நேரங்கழித்து கீதானி வந்து சேர்ந்தான். இருவரும் இணைந்து அடர்காட்டுக்குள் நுழைந்தனர்.
தேக்கனின் ஓட்டம் அதிவேகமாக இருந்தது. காரணம், எதிரிகளின் ஓட்டத்தைக் கணக்கிட்டதால், மச்சக்கடவிற்குத் தான் போகும் முன், அவர்கள் அதனைக் கடந்துவிடக் கூடாது என்பதால், இன்னும் வேகமாக ஓடினான்.
நான்கில் ஒரு பங்கிற்கும் குறைவான குறுக்குவழியில் தேக்கன் ஓடிக்கொண்டிருந்தான். அதே நேரத்தில், நான்கு பங்கு அதிகமான சுற்றுவழியை எளிதாகக் கடந்து எதிரிகள் வந்துகொண்டிருந்தனர்.
நிலவு ஏறியிருந்தது. காடெங்கும் ஒளி படர்ந்தது. மேல்மூச்சும் கீழ்மூச்சும் வாங்க மச்சக்கடவினை அடைந்தான் தேக்கன். வந்த வேகத்தில் சற்றும் இளைப்பாறாமல், பாறையின் மீதேறிக் கண்களை ஓடவிட்டான். இருளில் எதுவும் பிடிபடவில்லை. மூச்சுவாங்கி ஆசுவாசப்பட்டான். மீண்டும் தலைநீட்டி முன்புறம் சரிந்துள்ள காட்டைப் பார்த்தான். வெகுதொலைவில் பறவைகள் கலைந்து பறந்ததைக் கவனித்தான். வருவது அவர்கள்தான் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டான். அவர்கள் வந்துகொண்டிருக்கும் இடத்தைக் கணித்தான்.
இக்கடவினை நோக்கித்தான் வருகிறார்கள். அப்படியென்றால், போகும்பொழுதும் இவ்வழியாகத்தான் போயிருப்பார்கள். இக்கடவு அவர்களுக்கு நன்கு தெரிந்த ஒன்று. மனம் அவர்களின் திசைவழியையும்
எண்ணவோட்டத்தையும் கணித்துக்கொண்டிருந்தது. மாணவர்கள் இருவரும் கீழ்ப்புறம் இருந்து வரவேண்டும். எதிரிகள் வருவதற்குள் வந்து விடுவார்களா என எண்ணிக்கொண்டிருக்கையில் இருவரும் வந்து சேர்ந்தனர். ஒருவகையில் மாணவர்கள் நிகழ்த்தியது வியப்பிற்குரிய ஓட்டந்தான். தேக்கனின் கண்கள் ஆசானாய் இருந்து பெருமைப்பட நேரமற்று இருந்தன.
தேக்கன் தாக்குதலுக்கான வழிவகைகளைச் சிந்தித்தான். கடவின் விளிம்புப்பகுதியில் இருவரையும் மறைந்து நிற்கச் சொன்னான். ``கடவின் வழியாக முதலில் வருபவனை நான் அடித்துத் தூக்கிய கணத்தில் பின்னால் வருகிறவர்கள் சுதாரித்துவிடுவார்கள். உள்ளே ஆட்கள் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரிந்துவிடும். உடனே கடவின் பிளவுக்குள் வராமல் சுற்றிவர முடிவுசெய்வார்கள். அப்பொழுது நீங்கள் விளிம்புப் பகுதியில் ஈட்டிகள் மட்டும் வெளியே தெரிவதுபோல நீட்டிப்பிடியுங்கள். எல்லாபுறமும் ஆட்கள் இருக்கிறார்கள் என்று அறிந்துகொண்டபின் அவர்கள் பதற்றத்தில் திசை தடுமாறுவார்கள்.
வேறுவழியில்லாமல் துணிந்து கடவினைக் கடக்க முயல்வார்கள் அல்லது திசைக்குழப்பத்தில் பின்வாங்க நினைப்பார்கள். ஒருபோதும் விளிம்பில் தெரியும் ஈட்டி முனைகளை நோக்கி வர மாட்டார்கள்.
அவர்கள் கடவினைத் தாண்ட நினைத்தாலோ, பின்வாங்கி நின்றாலோ நான் பார்த்துக்கொள்வேன். அக்கணம் அவர்களுக்குள் முளைக்கும் அச்சமே அவர்களை அழித்துவிடும். அவர்கள் சுதாரிப்பதற்கு முன்பே அழிவின் கொடூரத்தை அவர்களின் கண்களுக்குக் காட்டுவேன்” என்றான் தேக்கன்.
மூக்கு விடைத்து, மேல்மூச்சும் கீழ்மூச்சும் வாங்கிய இருவரையும் தேக்கனின் ஆவேசம் இறுகப்பற்றியது. ஈட்டியை உறுதிகொண்டு பிடித்தனர். கீதானி வலப்புறமும் அலவன் இடப்புறமுமாக விளிம்பு நோக்கிப் போனார்கள். தேக்கன் முதல் ஆளை அடித்துத் தூக்கும்வரை ஈட்டியை வெளிநீட்டிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தனர்.
கடவின் ஒரு பகுதியில் மெல்ல தலைதூக்கி எட்டிப்பார்த்தான் தேக்கன். அவர்கள் வரும் நேரத்தை மனம் கணித்தபடி காத்திருந்தது. காலடித்தடங்கள் கேட்கின்றனவா என்று கூர்மையாகக் கவனித்தான். முன்புறமிருக்கும் பாறைகளிலிருந்து பறவையொன்று குரல் எழுப்பியது. அவர்கள் நெருங்கிவிட்டார்கள் என்பது தெரிந்தது. ஓடிவரும் அசைவில் தேவவாக்கு விலங்குகள் ஓசை எழும்பியவண்ணம் இருந்தன. தேக்கன் கடவுக்குள் நுழைபவனைத் தோதான திசையிலிருந்து தாக்க, கால்கள் இரண்டையும் பாறையின் செதில்களுக்கு ஏற்ப இறுக அமுக்கிக்கொண்டிருந்தான்.
கீதானியும் அலவனும் தேக்கனை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தனர். தேக்கனின் கைகள் இரண்டும் பன்றிக்கொம்பினை உள்ளங்கைக்குக் கொண்டு வந்தன. முதல் ஆள் கடவினை நோக்கி முன்னேறி வரும் ஓசை கேட்டது. தேக்கன் பாறையோடு பாறையாக சாய்ந்து அடித்துத்தூக்க ஆயத்தமாக இருந்தான். பாறையில் காலடியோசை கேட்ட கணத்தை மனம் கணிக்கும் முன் கடவின் பிளவை ஓர் உருவம் பாய்ந்து கடந்தது. கணிக்க முடியாத வேகத்தில் நிகழ்ந்த இச்செயலை விட்டுவிடாதபடி அவன் முதுகுப்புறத்தை நோக்கி மின்னல்வேகத்திற் பாய்ந்தான் தேக்கன்.
கடவின் பிளவுக்குள் கால் நுழைத்த கணத்திலேயே ஆளிருப்பதை ஓடிவருபவன் கவனித்துவிட்டான். தன்னைத் தாக்கப்போகிறான் என அறிந்தவுடன் முழுவேகத்தோடு வலக்கையைத் திருப்பிச் சுழற்றினான். முதுகுத்தண்டை நொறுக்கும் வேகத்தோடு பாய்ந்த தேக்கனை, சுழன்ற அவனது வலக்கை அடித்துத் தூக்கியது. இருளுக்குள் பாறையோடு சரிந்தான் தேக்கன்.
அவன் சரிந்து உருளும் ஓசை கேட்பதற்குள் மற்ற நால்வரும் கடவினைக் கடந்தனர். கீதானிக்கு எதுவும் பிடிபடவில்லை. இருளுக்குள் படுவேகமாக உருவங்கள் மறைவதும் யாரோ தூக்கி வீசப்பட்டதும் தெரிந்தது. ஆனால், யார் என்ன என்று தெரியவில்லை. ‘ஒருவன் விழுந்துவிட்டான். வெளியில் ஈட்டியை நீட்டலாம்’ என அவன் எண்ணிக்கொண்டிருக்கையில் இடப்புற விளிம்பில் நின்றிருந்த அலவன் கடவினை நோக்கி ஓடிவந்தான்.
ஈட்டியை வெளிப்புறம் நீட்டாமல் ஏன் கடவினை நோக்கி ஓடிவருகிறான் என்று கீதானிக்குப் புரியவில்லை. ஆனால், அலவனின் கண்கள் நடந்ததைத் துல்லியமாகப் பார்த்தன. அவர்கள் தாக்கிய வேகத்தில் ஆசான் மேற்பாறையில் மோதிக் கீழே விழுந்ததைப் பார்த்த கணம் உறைந்து நின்ற அலவன், சற்றுநேரம் கழித்துத்தான் ஆசானை நோக்கி ஓடிவந்தான். அதன்பிறகுதான் கீதானி ஓடிவந்தான்.
வந்தவுடன் ஆசானின் தலையை ஏந்திப்பிடிக்க கையைக்கொண்டுபோனான் அலவன். அவன் கைப்படுவதற்குள் ஆசான் தானே தலையைத் தூக்கினான். அந்த வேகத்துக்கு உடல் ஒத்துழைக்கவில்லை. வலக்கையை ஊன்றியே நிமிர வேண்டியிருந்தது. பின்மண்டையிற்பட்ட அடி சிறுமயக்கத்தை உருவாக்கியது. கண்களை இறுக மூடித்திறந்தான்.
சற்று ஆசுவாசப்பட்டபின், ``சுனையில் நீரள்ளி வா” என்றான். கீதானி ஓடினான். யானை தாக்கியதைப்போல் உணர்ந்தது தேக்கனின் உடல். எழுந்து உட்கார்ந்தான். கீதானி கை நிறைய நீரள்ளி வந்தான். முகத்தில் அறைந்தும் குடித்தும் தெளிச்சி கொண்டான் தேக்கன். கீதானி மீண்டும் மீண்டும் நீரள்ளி வந்தான்.
வலதுகை கொண்டு இடது தோள்பட்டையை இழுத்து அமுக்கிப்பார்த்தான். மாணவர்களிடம் எதுவும் காட்டிக்கொள்ளக் கூடாது என மனம் போராடியது. கண்கள் மேல்சொருக, மூச்சு வாங்கியது.
கால்களை மெல்ல இழுத்து ஊன்றி எழுந்தான். எலும்புகள் எங்கும் உடைந்துவிடவில்லை. தோள்பட்டையில்தான் நல்ல அடிபட்டிருக்கிறது. அது பாறையிற்போய் தாக்கியதால், ஏற்பட்ட அடியல்ல; அவன் கைவீசி தாக்கியதால், ஏற்பட்டது. `ஓடிக்கொண்டிருக்கும் ஒருவன் எதிர்பாராத கணத்தில் பின்புறம் திரும்பி, இவ்வளவு ஆற்றலோடு தாக்குகிறான் என்றால், அவனது வலு எவ்வளவு? அவனது உடலுறுதியின் தன்மை என்ன? யார் இவர்கள்?’ தேக்கனின் மனம் பிடி கிடைக்காமல் போராடியது.

கீதானி மெல்ல வாய்திறந்து சொன்னான், ``அவர்களை நான் நன்றாகப் பார்த்தேன். பார்க்கவே அச்சந்தரும் உடல்வாகு கொண்ட வர்களாக இருந்தனர்” சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது கசப்பின் சுரப்பைத் தாங்கமுடியாமல் பெரும்பாடுபட்டான். தொண்டைக்குழியை அழுத்திய அவனது கை, சொற்களை இடைமறித்து நிறுத்தியது.
மூச்சுவாங்கியபடி தேக்கன் சொன்னான், ``அப்பேர்பட்டவனை வீழ்த்திவிட்டேன்.”
கீதானியும் அலவனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். தேக்கன் என்ன சொல்கிறான் எனப் புரியவில்லை.
தேக்கன் மீண்டும் சொன்னான், “அவனது ஓட்டத்தின் வேகத்தை நான் தவறாகக் கணித்துவிட்டேன். நான் நினைத்தைவிட இருமடங்கு வேகம்கொண்டிருந்தான். ஆனாலும், தப்பிச்செல்லவிடாமல் பாய்ந்தடித்தேன். துல்லியமாக அவனது பின்கழுத்து நரம்பை அடித்துவிட்டேன். அது அறுந்துவிட்டதை எனது உள்ளங்கை நன்கு உணர்ந்தது. இனி அதிகத்தொலைவு அவனால் ஓட முடியாது. சிறிது தொலைவிற்குள் விழுந்துவிடுவான்.”
மாணவர்கள் வியந்து பார்த்தனர்.
``மீதமுள்ள நால்வரை வீழ்த்தியாகவேண்டும்” என்று சொல்லியபடி எழுந்து கவனமாகப் பாறையின் மீது ஏறினான். குன்றின் சரிவு அடர்காடுகளைக்கொண்டது; அதற்குள் அவர்கள் நுழைந்து போய்க்கொண்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.
தேக்கன் பாறையைவிட்டுக் கீழ் இறங்கினான். ``நீங்கள் வந்தவழியே திரும்பிப்போங்கள். முடிநாகன் மற்றவர்களை அழைத்துக்கொண்டு எதிரே வந்துகொண்டிருப்பான். கவனமாக இங்கே அழைத்து வாருங்கள். வேகமாக ஓடுங்கள்” என்றான்.
கீதானியும் அலவனும் மீண்டும் ஓடத் தொடங்கினர். முன்பிருந்த அதே வேகம் உடலில் இருந்தது. மனம் சற்றே குழம்பி இருந்தது. ‘தேக்கனையே தூக்கியடிக்கும் வலு கொண்டவர்களா அவர்கள்?’ என்று அலவன் சிந்தித்துக்கொண்டிருக்கையில், ‘அவ்வளவு பெரிய மனிதனை தேக்கன் எப்படி துல்லியமாக அடித்து நரம்பை அறுத்தார்!’ என வியந்தபடியே ஓடினான் கீதானி.
அவர்கள் சிற்றோடையைத் தாண்டும்பொழுது தேக்கன் கத்தும் ஓசையைக் கேட்டு நின்றனர் இருவரும். ‘அவரது இடதுகை இறங்கிவிட்டது. நம்மிடம் அதனைக் காட்டிக்கொள்ளாமல் சரிப்படுத்துவதற்காகத்தான் இருவரையும் அனுப்பிவைத்துவிட்டு அவரே தூக்கிவைத்து அதனைச் சரிப்படுத்துகிறார்’ என்பதை இருவராலும் புரிந்துகொள்ள முடிந்தது.
சிற்றோடையைக் கடந்ததும் மாணவர்கள் எதிர்ப்பட்டனர். ‘பிடித்துவிட்டீர்களா அவர்களை? எங்கே வைத்திருக்கிறீர்கள்? எல்லோரையும் கொன்றுவிட்டீர்களா? யாராவது உயிரோடு இருக்கிறார்களா?’ என்னும் வினாக்கள் எல்லோர் மனதிலும் மேலெழுந்தபடி இருந்தன. ஆனால், கசப்புக்கு அஞ்சி யாரும் வாய் திறக்கவில்லை. வினாக்கள் எதற்கும் சொல்ல விடையின்றி இருந்த கீதானிக்கும் அலவனுக்கும் கசப்பே கைகொடுத்தது. அவர்களை அழைத்துக்கொண்டு விரைவாக மச்சக்கடவுக்கு வந்து சேர்ந்தனர்.
இடக்கையின் தோள்பட்டையை ஒடங்கொடிகொண்டு இடைவிடாது சுற்றி இறுகக் கட்டியிருந்தான் தேக்கன். உள்ளுக்குள் பச்சிலையை வைத்திருக்க வேண்டும். தோள்பட்டைக்குக் கவசம் அணிவிக்கப்பட்டது போல் இருந்தது. என்ன ஆனாலும் உடனடியாக அதனைச் சரிசெய்வதற்கான ஆற்றல் அவற்றுக்கு உண்டு.
முடிநாகனும் மற்றவர்களும் வந்தவுடன் வீழ்ந்துகிடப்பவர்கள் எங்கே என்று தேடினர். யாரும் அங்கு இல்லை. மாறாக ஆசானுக்குத்தான் இடதுதோளில் கட்டுப்போடப்பட்டிருந்தது. என்ன நடந்ததென்று தெரியாமல் விழித்தனர்.
அவர்களின் வரவை எதிர்பார்த்து ஆயத்தமாக இருந்தான் தேக்கன். வந்ததும் சொன்னான், ``கீதானி, அலவன், மடுவன், அவுதி, வண்டன், பிட்டன் ஆகிய ஆறுபேரும் என்னுடன் வாருங்கள். மீதி நான்கு பேரும் முடிநாகனோடு சேர்ந்து எவ்வியூருக்குப் புறப்படுங்கள். நம் எதிரிகள் தென்கிழக்குத் திசைநோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆதிமலையின் மிகக்கடினமான அடர்காடு நிறைந்த பகுதிக்குள் அவர்கள் நுழைந்துவிட்டனர். எளிதில் அவர்களால் வெளிவரமுடியாது. நாம் இடப்புறமாக நடந்தால், வெகுவிரைவாக மேலே இருக்கும் எலிவால்முகட்டிற்குப் போய்விடலாம். அவர்கள் அங்கே வரும்பொழுது அவர்களை அழித்தொழிப்போம்.
நீங்கள் எவ்வியூர் சென்று பாரியிடம் கூறி உடனடியாக ஆதிமலையின் எலிவால்முகட்டிற்கு அழைத்துவாருங்கள். எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாகச் செல்லுங்கள்” என்றான்.
தேக்கனின் வேகம் உச்சரிக்கும் சொல் முழுவதும் ஏறியிருந்தது. தன்னால் மட்டும் முடியாது என்றுணர்ந்த கணத்தின் அதிர்ச்சியை வெளிக்காட்டாமல், அதே நேரத்தில் மாணவர்களை நம்பிக்கையோடு இயக்க, சொற்களை மனம் தேடியது. உள்ளுக்குள் ஊறிப்பெருகும் வெறி கணநேரத்தையும் வீணாக்கவிடவில்லை.
``எந்த வழி போவீர்கள்?”
``வந்த வழி.”

``இல்லை. மிகவும் நேரமாகிவிடும். சிற்றோடையின் இடப்புறமாகவே சென்றால், சிறிது தொலைவில் அருவி வரும். அவ்விடத்தில் சிற்றோடையைக் கடந்து மேலே ஏறுங்கள். நேராகச் சென்றால், எவ்வியூர் போய்விடலாம்” என்றான்.
மாணவர்கள் சரியென்று தலையாட்டிச் சொன்னார்கள். அவ்வழி பற்றிய ஐயங்களுக்கு, விளக்கங்கள் தேவைப்பட்டன. ஆனாலும் கசப்பை மீறிப் பேச யாரும் தயாராக இல்லை.
முடிநாகனின் மனதுக்குள் தினவு ஏறியது. தன்னிடம் கொடுக்கப்பட்ட இப்பணியைச் சிறப்பாகச் செய்யவேண்டும். ஆபத்து வரும்பொழுது அதனை எதிர்கொள்ளும் இடத்தில் ஒருவன் இருப்பதுதான், வீரம் அவனுக்கு வழங்கும் வாய்ப்பு. அதனை வெற்றியாக முடிக்கவே ஒவ்வொருவனும் ஆசைப்படுகிறான்.
வலிமையான ஆயுதங்களை முடிநாகன் குழுவிற்கு வழங்கிய தேக்கன், “ஓடுங்கள்” என்று கத்தினான். பாறைப்பொடவுக்குள் இருந்த பறவையொன்று படபடத்தது. முடிநாகனும் மற்றவர்களும் அடுத்த அடி எடுத்துவைக்கும் முன் தேக்கன் சொன்னான், “ஈன்ற புலி உங்களை விரட்டுகிறது. இருளைக் கிழித்து நகரும் கால்களின் வேகம் மட்டுமே உங்களைக் காப்பாற்றும் என்ற எண்ணத்தோடு ஓடுங்கள்.”
தேக்கன் சொல்லி முடிக்கும்முன் பாறையின் கீழ்ப்புறம் நோக்கிப் பாய்ந்தனர் ஐவரும்.
- பறம்பின் குரல் ஒலிக்கும்...