
நடிகர் சத்யராஜ்
‘‘சாமி நான் பரீட்சையில பாஸாகிட்டா பழனிக்கு வந்து மொட்டை போட்டுக்கிறேன். ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸாகிட்டா, பழனி அண்டு திருப்பதினு ரெண்டு மொட்டை போட்டுக்கிறேன்...’’
பி.யு.சி பரீட்சைக்கு முன்பு சாமியோடு நான் போட்டுக்கொண்ட அக்ரிமென்ட் இது. ஃபர்ஸ்ட் கிளாஸில் பாஸானதும் அடுத்தடுத்து ரெண்டு தடவை மொட்டை போட்டுவிட்டு, கோவை அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்சி சேர்ந்தேன். அங்கே என் மொட்டையைப் பார்த்த கெமிஸ்ட்ரி புரொபஸர் ராமலிங்கம், ‘‘என்னடா ரங்கராஜ்... மொட்டை அடிச்சிருக்கே! என்ன மேட்டர்?’’ என்றார்.
‘‘பரீட்சையில பாஸானா மொட்டை அடிச்சிக்கிறதா சாமிகிட்ட வேண்டியிருந்தேன் சார்...’’
‘‘ஏன் பரீட்சைக்குப் படிக்கலியா?’’
‘‘இல்ல... படிச்சேன் சார்!’’
‘‘படிச்சே... அப்புறம் ஏன் அடிச்சே?’’ என்று பளீரென அவர் ரைமிங்கில் கேட்கவும், எனக்குள் மின்னல் அடித்தது. வீட்டுக்கு வந்த பிறகும், ‘நாமதான் நல்லா படிச்சிருந்தோமே... அப்புறம் ஏன் சாமிகிட்ட அப்படி வேண்டிக்கிட்டோம்?’ என்ற கேள்விக்கு விடை தேடி யோசித்துக்கொண்டே இருந்தேன். ஒன்றும் சிக்கவில்லை.
அடுத்த சில நாட்களில், நான் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது அந்த வழியாகப் போய்க்கொண்டிருந்த அதே கெமிஸ்ட்ரி புரொபஸரைப் பார்த்ததும், வணக்கம் வைத்தேன்.
‘‘ஆங்... என்னடா பண்ணிக்கிட்டிருக்கே இங்கே?’’

‘‘இல்ல சார்... நான் எம்.ஜி.ஆர் ரசிகன். வாத்தியார் மாதிரி உடம்பைக் கட்டுக்கோப்பா வெச்சுக்கணும்னு எக்சர்சைஸ் பண்ணிக்கிட்டிருக்கேன் சார்...’’
‘‘உடம்பைக் கட்டுக்கோப்பா வெச்சுக்கணும்னா நீ கோயிலுக்குத்தானே போவோணும்... ‘ஜிம்’முக்கு வந்து என்ன பண்ணப்போறே...?’’ என்று கேட்டவர், தொடர்ந்து ‘‘ஓ... உடம்பை ஏத்திக்கணும்னா ‘ஜிம்’முக்குத்தான் போவோணும்... கோயிலுக்குப் போய்ப் பிரயோசனமில்லைனு உனக்கே தெரியுது. கடவுள்மேல நம்பிக்கையில்ல? ஆங்... நல்ல பையன்’’ என்று சொல்லி முதுகைத் தட்டிக்கொடுத்துவிட்டுப் போனார்.
அதுவரையிலும் என் மண்டைக்குள் உறைந்து கிடந்த கடவுள் நம்பிக்கையின் மேல் ஆணியடித்துச் சுக்குநூறாக உடைத்தவர் அவர்தான். ‘எந்தவொரு பெரிய மாற்றமும் சின்னதொரு முயற்சியாகத்தான் ஆரம்பமாகிறது’ என்பார்கள். ‘படிச்சே... அப்புறம் ஏன் அடிச்சே?’ என்று அன்றைக்கு அவர் கேட்ட கேள்வி, மிகச் சாதாரணமானதுதான். ஆனால், அந்த வார்த்தைகளில் பொதிந்திருந்த அர்த்தம் அசாதாரணமானது. அதுவரையிலும், நான் கொண்டிருந்த நம்பிக்கைகள் மீது என்னையே கேள்வி கேட்க வைத்து, என் சுய சிந்தனையைத் துளிர்விட செய்த வரிகள் அவை.
‘முன்னோர்களின் நம்பிக்கை’ என்ற புனிதம் ஏற்றப்பட்டதாலேயே, ‘ஏன், எதற்கு, எப்படி’ என்று எந்தக் கேள்வியும் கேட்காமல் மூட நம்பிக்கைகளுக்குள் சிக்குண்டு கிடக்கும் சமூகம் இது. ஆண்டாண்டு காலமாகப் புரையோடிப் போயிருக்கும் இதுபோன்ற மூட நம்பிக்கைகளை, வேரோடு வெட்டிச் சாய்க்கும் வலிமையான வரிகளைப் பகுத்தறிவுப் பாதை நெடுகப் படித்தும் கேட்டும் வந்திருக்கிறேன். ஆனால், ஆரம்ப காலத்தில் என் சிந்தனையைத் தட்டியெழுப்பி என்னை மடை மாற்றியது இந்த வரிதான்!
நான் நடிகனான பின்பும்கூட, முற்று முழுதாகக் கடவுள் நம்பிக்கையை விட்டுவிட முடியவில்லை. ‘எல்லாவற்றுக்கும் மேலான ஒரு சக்தி இருக்கவேண்டுமல்லவா?’ என்ற கேள்விக்கு விடை காணும் முயற்சியாக நண்பர்களோடு விவாதிப்பதுண்டு. அந்த வகையில், கடவுள் மறுப்புக் கொள்கை குறித்து விவாதிப்பதற்கு எனக்குக் கிடைத்த நண்பர்கள் நடிகர் கமல்ஹாசனும் இயக்குநர் மணிவண்ணனும்தான்; நிறைய விவாதிப்போம்.
‘பிக் பாக்கெட்’ பட ஷூட்டிங்கின்போது, பெரியார் எழுதிய ‘கடவுள்’ புத்தகத்தையும், ‘பக்தர்களுக்கு 100 கேள்விகள்’ என்ற இன்னொரு புத்தகத்தையும் கொடுத்துப் படிக்கச் சொன்னார் இயக்குநர் வேலு பிரபாகரன். அதை முழுவதுமாகப் படித்து முடித்தேன். அதன்பிறகும் பூமி, விண்மீன், பிரபஞ்சம்... என இயற்கையின் அத்தனை நிலைகள் குறித்தும் தேடித்தேடிப் படித்து முடித்துவிட்டு, நன்றாகச் சிந்தித்தபிறகே ‘கடவுள் என்ற கற்பனைக் கருத்தியலில் உண்மை இல்லை’ என்ற திடமான முடிவுக்கு வந்தேன்.
ஆன்மிகம் ‘எல்லாவற்றையும் நம்பு’ என்று நம்பிக்கைகள் சார்ந்தே தன் இருப்பைக் கட்டமைக்கிறது. ஆனால், விஞ்ஞானம் ‘எல்லாவற்றையும் சந்தேகி’ என்று விடை தேடச் சொல்லி ஊக்கப்படுத்துகிறது. சிந்தித்துப் பார்த்தால், இந்தச் சந்தேகமும் தேடலும் தான் மனிதனைக் கற்காலத்திலிருந்து கம்ப்யூட்டர் காலத்துக்கு நகர்த்திக்கொண்டு வந்திருக்கிறது. பெரியாரும்கூட, ‘நான் சொல்கிற கருத்துகள் எல்லாம் சரியா, தவறா என்று உனது புத்தியைக் கொண்டு சிந்தித்து முடிவெடு’ என்று சுய சிந்தனையைத்தான் ஊக்கப்படுத்துகிறார்.
எல்லோருமே மகிழ்ச்சியைத் தேடித்தான் பயணப்படுகிறோம். அந்த வகையில், நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வையும் பகுத்தறிவோடு ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளும்போது, மனதுக்கு நல்ல தெளிவும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது; நேற்றைய நாளைவிட இன்றைக்கு நான் கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கிறேன்... நாளை இன்னும் மகிழ்ச்சியாக இருப்பேன்!
சந்திப்பு: த.கதிரவன்
படம்: கே.ராஜசேகரன்