மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கடல் தொடாத நதி - 29 - செக் கொடுத்தார்... செக் வைத்தார்!

கடல் தொடாத நதி - 29 - செக் கொடுத்தார்... செக் வைத்தார்!
பிரீமியம் ஸ்டோரி
News
கடல் தொடாத நதி - 29 - செக் கொடுத்தார்... செக் வைத்தார்!

அன்னக்கிளி ஆர்.செல்வராஜ்

வாழ்க்கை பல திருப்பங்களைக் கொண்டது. சினிமா வாழ்க்கை மட்டும் என்ன... அது பல அதிரடித்  திருப்பங்களைக் கொண்டதாகவே இருக்கிறது. 230 திரைப்படங்களுக்குமேல் பணியாற்றிவிட்டேன். எத்தனை சம்பவங்கள், எத்தனை பிரபலங்கள், எத்தனை வெற்றிகள், எத்தனை சறுக்கல்கள்... காலச் சுவற்றில் கணக்குக் கரிக்கோடுபோல நினைவுக்கீறல்களின் வடுக்கள் ஏராளம் இருக்கின்றன.

ஒருமுறை திருவனந்தபுரம் சென்றிருந்தபோது ஒருவர் என்னைப் பார்க்கக் காத்திருந்தார். தன்னை கேமரா மேன் என அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், தனக்குத் தமிழ்ப் படத்தில் பணியாற்ற விருப்பம் இருப்பதாகத் தெரிவித்தார். பயன்படுத்திக்கொள்வதாகச் சொல்லிவிட்டு வந்தேன்.

என்னுடைய ‘பகவதிபுரம் ரயில்வே கேட்’ என்ற படத்துக்கு அவரையே கேமரா மேனாக நியமித்தேன். ரயில் வரும் நேரங்களில் சாலையின் குறுக்கே கேட் மூடப்படும். அப்போது, அதன் இருபுறங்களிலும் நிற்கும் பேருந்துகளில் காத்திருக்கும் பயணிகளிடம் பூ, பழம், தின்பண்டங்களை விற்பவர்களைப் பார்த்திருப்போம். ‘பகவதிபுரம் ரயில்வே கேட்’ படத்தின் கதைமாந்தர்கள் அவர்கள்தான்.

கடல் தொடாத நதி - 29 - செக் கொடுத்தார்... செக் வைத்தார்!

பேசும் கிளியுடன் அந்தச் சிறு வணிகத்தில் பங்கேற்கும் ‘சங்கராபரணம்’ ராஜலட்சுமிதான் படத்தின் நாயகி. எளிய மனிதர்கள் வாழும் சின்னஞ்சிறிய அந்தக் கிராமத்துக்கு முதல்முறையாக வரும் பேருந்து இன்னொரு முக்கியமான பாத்திரம். அதன் நடத்துநராகக் கார்த்திக் படத்தின் நாயகன். தியாகராஜன், வடிவுக்கரசி, வினோத் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

படத்தின் சில காட்சிகளை விகடன் சேர்மன் பாலசுப்ரமணியன் சாரின் படப்பை பண்ணை வீட்டில் ஷூட்டிங் நடத்த அனுமதி கேட்டேன். உடனே அனுமதி தந்தார் அந்த மாபெரும் மனிதர். அடுத்தவர்களின் கஷ்டம் தெரிந்தவர். படப்பிடிப்பு சம்பந்தமாக எங்களிடம் பேசிய ஒருவர், ஒரே ஒரு கண்டிஷன்தான் வைத்தார். ‘‘ஐயா நிறைய பறவைகள் வளர்க்கிறார். அவற்றுக்குப் பாதிப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள் போதும்’’ என்றார். வாடகை எவ்வளவு தர வேண்டும் என நானும் கேட்கவில்லை; அவரும் சொல்லவில்லை. ஷூட்டிங் முடிந்து, ‘‘எவ்வளவு வாடகை’’ எனக் கேட்டேன். ‘‘ஐயா வாடகை வாங்க வேண்டாம் எனச் சொல்லியிருக்கிறார்’’ என்று கூறிவிட்டார், அந்தத் தோட்டத்தை நிர்வகிப்பவர். எவ்வளவு வற்புறுத்திக் கொடுத்தபோதும் வேண்டவே வேண்டாம் என மறுத்துவிட்டார்.

படத்தில் ஒரு காட்சி... தியாகராஜன், தன் மைத்துனியை இரண்டாம் திருமணம் செய்வதற்காகத் தன் மனைவி வடிவுக்கரசியிடம் மிரட்டல் தொனியில் பேசுவார். ‘‘பஞ்சாயத்து கூட்டுவேன். நீ ஒரு மலடின்னு சொல்வேன்’’ என ஆவேசமாகக் கிளம்புவார். வடிவுக்கரசி பொங்கிவிடுவார். ‘‘நில்லுய்யா. பஞ்சாயத்து என்றால் பத்து ஆம்பளைங்க இருப்பாங்கதானே? அதில ‘யாராவது ஒருத்தன் வாங்க. பத்து மாசத்தில புள்ள பெத்துக்கொடுக்கிறேன்’னு சொல்வேன். பரவாயில்லையா?’’ என்பார். கைதட்டலில் தியேட்டரே அதிர்ந்த காட்சி அது.

மதுரைக்குப் பக்கத்தில் ஒரு கிராமத்தில் கடைசி நாள் ஷூட்டிங். ‘சேர்ந்தே இருப்பது’ என இன்றைய நாளில் சிவபெருமானிடம் தருமி கேள்வி கேட்டால், ‘சினிமாவும் பண நெருக்கடியும்’ என்று பதில் வரும். பணியாற்றிய அனைவருக்கும் கடைசி நாள் ஷூட்டிங்கில் பணம் செட்டில் செய்ய வேண்டும். ஒரு ஃபைனான்சியர் வந்தார். நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எல்லோருக்கும் சேர வேண்டிய பணத்துக்குச் சரக் சரக் என செக் போட்டுக்கொடுத்தார். எல்லோரும் திருப்தியாக ஷூட்டிங் முடிந்து கிளம்பினோம். சென்னைக்குப் புறப்படுவதற்காக, மதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தோம். அந்த ஃபைனான்சியர் ஈயத்தைக் காய்ச்சிக் காதில் ஊற்றியது மாதிரி ஒரு வரி சொன்னார்: ‘‘இந்த எல்லா செக்கும் பாஸ் ஆகணும்னா, படத்தை என் பெயருக்கு மாத்திக் கொடுத்துடுங்க.’’

கடல் தொடாத நதி - 29 - செக் கொடுத்தார்... செக் வைத்தார்!

கடனைத் திருப்பித் தருவது வேறு... படத்தின் அத்தனை லாபத்தையும் கேட்பது வேறு. என்ன செய்வது எனப் புரியவில்லை. அத்தனை பேருக்கும் செக் கொடுத்தாகிவிட்டது. செக் திரும்பினால் கேவலமாகப் போய்விடும். இப்படிச் சிக்க வைத்துவிட்டாரே எனக் கோபம் பொங்கியது. என்னுடைய நண்பரான வழக்கறிஞர் முத்துகிருஷ்ணனுக்கு போன் செய்தேன். ‘‘ஒன்றும் கவலைப்படாதீர்கள். அவர் கேட்டபடி எழுதித் தந்துவிடுங்கள்’’ என்று யோசனை சொன்னார். நல்லவேளையாகப் பிறகு கரூர் சுப்பிரமணி, போன்ற நண்பர்கள் வந்து அவரிடம் வாங்கிய கணக்கை செட்டில் செய்துவிட்டனர்.

‘சினிமாத் தொழில், சினிமாவில் வருகிற காட்சிகளைவிட அதிகத் திருப்பங்கள் கொண்டது’ என்பதற்காக அந்தச் சம்பவத்தைச் சொன்னேன்.

தொடக்கத்தில் கேமரா மேன் வாய்ப்புக் கேட்ட இளைஞனைப் பற்றிச் சொன்னேன் அல்லவா? அவர் பெயர் தினேஷ் பாபு. நான் இயக்கிய அடுத்த படத்துக்கும் அவரையே கேமரா மேனாகப் பயன்படுத்தினேன். ‘தேசிய நெடுஞ்சாலை’ என்ற அந்தப் படம் பெட்ரோல் பங்கை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. பூனா இன்ஸ்டிட்யூட் மாணவர் ஹீரோவாக நடித்தார்.

வேகமாகப் படம் வளர்ந்தது. இன்னும் இரண்டு பாடல் காட்சிகளும் சில காட்சிகளுமே பாக்கி. சில காரணங்களால் அந்தப் படம் தள்ளிக்கொண்டே போனது. ஒரு நாள் தினேஷ் பாபு வந்தார். ‘‘சார், எனக்குக் கன்னடத்தில ஒரு படம் பண்ற சான்ஸ் கிடைச்சிருக்கு. ‘தேசிய நெடுஞ்சாலை’ கதையை நான் பண்ணட்டுமா சார்?’’ என்றார்.

‘‘அதற்கென்னப்பா... பண்ணு’’ எனச் சொல்லிட்டேன்.

அந்தப் படம் ரிலீஸ் நேரத்தில் எனக்கு ஒரு தகவல் வந்தது... படத்தின் டைட்டில் கார்டில் ‘கதை, திரைக்கதை தினேஷ் பாபு’ எனப் போட்டு வெளியாகப் போவதாக. கொந்தளித்துப் போனேன். படத்தை ரிலீஸ் பண்ணக் கூடாது எனச் சொல்லிவிட்டேன். தினேஷும் அவருடைய அப்பாவும் வந்தனர்.

‘‘நீங்க அனுமதி கொடுத்ததால்தானே என் பையன் படத்தை எடுத்தான்?’’ என்றார், பையனின் அப்பா. ‘‘என் கதையை உன் கதைனு போட்டுக்கோன்னா சொன்னேன்? உங்க கதையைப் பண்ணட்டுமான்னு கேட்டான்... பண்ணுப்பான்னு சொன்னேன். என் கதையை அவன் டைரக்ட் செய்வதாகத்தானே அர்த்தம்?’’ என்றேன்.

அப்பாவும் மகனும் மன்னிப்புக் கேட்டனர். அதுவும் இல்லாமல், நான் முன்னர் சொன்னேனே என் தோழி பிரபா... அவர்தான் அந்தப் படத்தின் தயாரிப்பாளர். வேறு வழி? மன்னித்து அனுப்பிவிட்டேன். சினிமாவில், ஒரு வார்த்தைக்கு ஒரு கோடி அர்த்தமல்ல... ஒரு கோடி ரூபாய் அர்த்தம். எந்த அளவுக்குத் திறமையாக இருக்க வேண்டுமோ, அந்த அளவுக்கு எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.

சந்திப்பு: தமிழ்மகன்

(ரீல் அல்ல ரியல்)

கடல் தொடாத நதி - 29 - செக் கொடுத்தார்... செக் வைத்தார்!

வாழ விரும்பியபோது...

‘ஐ
வான்ட் டு லிவ்’ என்ற ஆங்கிலப் படம். சின்னச் சின்ன குற்றங்களில் சம்பந்தப்பட்ட ஓர் அப்பாவிப் பெண். அவள் செய்யாத குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்படுகிறது. நகரத் தந்தை ஒருவரைக் கொன்ற பழி அவள் மீது விழுகிறது. வழக்கின் விபரீதம் புரியாமல் அவள் விளையாட்டுத்தனமாக இருக்கிறாள். காவல் துறையும் நீதித் துறையும் அவளுடைய மரண தண்டனையை உறுதி செய்கின்றன. அவளைப் பற்றித் தெரிந்த ஒரு பத்திரிகையாளன், அவளை மீட்க ஆதாரங்கள் தேடுகிறான். தண்டனையை நிறைவேற்றும் நாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது. அவள் வாழ ஆசைப்படுகிறாள். அவள் கொலைகாரி இல்லை என்ற ஆதாரத்தைப் பத்திரிகையாளன் கண்டுபிடித்து, காப்பாற்ற ஓடோடி வருகிறான். அதற்குள் அவளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிடுகிறது. ஒரு உண்மைக் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட பரபரப்பான படம். சூசன் ஹேவர்டின் அற்புதமான நடிப்பில், அந்த உண்மையைக் கதையாக தரிசிக்க முடியும்.