
எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி
‘‘நிகழ்காலக் குழப்பவாதி பைத்தியங்களுக்கு எதிர்காலத் தேர்தல்தான் வைத்தியம் செய்யவேண்டும்’’ - ஜெயலலிதா
‘‘ஜெயலலிதா எப்படியோ அப்படித்தான் ஜானகியும். நடிகைகள் ஒழுக்கத்தைப் பற்றி ஆராய முடியுமா?’’ - நெடுஞ்செழியன்
- இவை 1988 மார்ச் மாத அரசியல் முழக்கங்கள்.
நெடுஞ்செழியனோடு ஜெயலலிதாவுக்கு மோதல் உண்டான தருணம் அது. ஜெயலலிதா அணிக்குப் பலம் சேர்த்த நெடுஞ்செழியன், திருநாவுக்கரசர், கே.கே.எஸ்.எஸ்.ஆர், சேலம் கண்ணன் போன்றவர்களுக்கு, நடராசன் - சசிகலா ஆதிக்கத்தால் மரியாதை குறையத் தொடங்கியது. எம்.ஜி.ஆர் காலத்திலேயே ‘ஜெயலலிதா ஆதரவாளர்’ எனப் பெயரெடுத்தவர் சேலம் கண்ணன். ஜெயலலிதாவோடு எம்.பி-யாக இருந்தபோது டெல்லியில் ஜெயலலிதா புராணம் பாடிய கண்ணனை எம்.ஜி.ஆர் ஓரம் கட்டினார். அப்படிப்பட்ட ஜெயலலிதா விசுவாசியான கண்ணனைப் பந்தாடினார்கள். ஜெயலலிதாவோடு யாரும் நெருக்கமாகிவிடக் கூடாது என்ற அச்சத்திலேயே பலரையும் வேரறுத்தார்கள். அதில் கண்ணனுமே தப்பவில்லை. கண்ணனுக்கு சேலத்திலேயே அவமரியாதை நடந்தது. மாவட்டச் செயலாளரான கண்ணனிடம் சொல்லாமலே அங்கே கூட்டம் போட்டார்கள். 1988 ஜூன் 11-ம் தேதி நடைபெற்ற அந்தக் கூட்டத்தில், ஜெயலலிதாவோடு மேடையில் இருந்த கண்ணனை யாருமே மதிக்கவில்லை. அவரோடு ஜெயலலிதா பேசவில்லை. அவரின் பெயரையும் உச்சரிக்கவில்லை.

இதே நிலைதான் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு ஏற்பட்டது. காங்கிரஸ் கூட்டணியை ஏற்படுத்த அவர் டெல்லியில் மூவ் நடத்திக்கொண்டிருந்த நேரத்தில்தான், சசிகலா குடும்பத்தினரால் முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. இதனால் கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் முடங்கிப் போயின. உடனே அதைச் சமாளிக்க நினைத்தார் ஜெயலலிதா. டாக்டர் பட்டம் பெற்றதற்காக அரங்கநாயகத்துக்குப் பாராட்டுக் கூட்டம் (1988 ஏப்ரல் 6), சென்னை பனகல் பூங்காவில் நடைபெற்றது. அதில் பேசிய ஜெயலலிதா, ‘‘பண்ருட்டி ராமச்சந்திரனை டெல்லிக்கு நான்தான் அனுப்பினேன்’’ என்றார். ‘‘கருணாநிதியை எதிர்ப்பதில் நம்மோடு ஒத்த கருத்தைக் கொண்டிருக்கிற காங்கிரஸோடு உறவு விட்டுப் போய்விடக் கூடாது என நாங்கள் நினைக்கிறோம்’’ என இறங்கிப் பேச ஆரம்பித்தார் ஜெயலலிதா.
தனது ஆட்சியைக் காப்பாற்ற உதவி செய்யாதபோதும், கருணாநிதியை ஜானகி பாராட்டிப் பேசியிருந்தார். இதுவும் பனகல் பார்க் கூட்டத்தில் எதிரொலித்தது. ‘‘புரட்சித் தலைவரின் எதிரியான கருணாநிதியை ஜானகி அம்மாள் பாராட்டிப் பேசுகிறார். ராமாவரம் தோட்டத்தை மீட்பதற்கு இது ஒன்றே போதும்’’ எனப் பேசிய ஜெயலலிதா அதோடு நிற்கவில்லை. அதன்பிறகு அவர் பேசிய பேச்சுகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவை. ‘‘இன்னும் ஓராண்டு உயிரோடு இருப்பார் என்று டாக்டர் ப்ரீட்மென் சொன்ன மூன்றாவது நாளே புரட்சித் தலைவர் மரணமடைந்தார். ஜானகி அம்மையாருக்கு வேண்டிய டாக்டர்கள்தான் அவருக்குச் சிகிச்சை அளித்தனர். அவர் மரணத்தில் எங்களுக்குச் சந்தேகம் இருக்கிறது. இதனுடைய சூத்திரதாரி யார்? சூழ்ச்சிக்காரர் யார்? ஈரோட்டில் இருந்த கருணாநிதிக்கு முதலில் தகவல் சொன்ன கருங்காலி யார்? எம்.ஜி.ஆரின் பெயரில் போலி கையெழுத்துப் போட்டது யார்? புரட்சித் தலைவரின் மரணத்தில் இருக்கும் மர்மங்களை மக்கள் அறிய விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும். அதனை அமைக்காவிட்டால் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நிச்சயம் அமைப்போம்’’ என வீராவேசமாக கொதித்தார் ஜெயலலிதா.
எம்.ஜி.ஆரின் மரணத்துக்கு அன்று நியாயம் கேட்ட ஜெயலலிதாவின் மரணமே மர்மம் நிறைந்ததாகிவிட்டது. எம்.ஜி.ஆரின் மரணம் பற்றி ஜெயலலிதா எழுப்பிய கேள்விகள், அப்படியே அவருடைய மரணத்துக்கும் பொருந்தின. ஜெயலலிதாவின் அதிகாரத்தைச் சுவைத்து சொத்துக்களை வாங்கிக் குவித்த சசிகலா குடும்பம், ஜெயலலிதாவின் மரணம் குறித்த ‘கொலைப் பழி’யை சுமந்து நிற்கிறது. அப்போலோவில் யாரையும் விடாமல் ராஜாஜி ஹாலில் உடலைச் சுற்றி அரண் அமைத்து, ஜெயலலிதா போல் மேக்கப் போட்டு, கட்சியின் பொதுச்செயலாளர் மகுடம் சூட்டி, கூவத்தூரில் திட்டம் தீட்டி, ஆட்சியில் அமர நடத்திய வித்தைகள்... சாணக்கியனின் இன்னொரு அர்த்த சாஸ்திரம்.
(தொடரும்)
‘‘நம்பிக் கெட்டவர்கள் யாருமில்லை!’’
‘‘சிலர் (ஜெயலலிதா) யாரையும் முழுவதுமாக நம்புவதில்லை. ஏன்... அவர்கள் அவர்களையே நம்புவதில்லை. நான் யாரை எதற்காகச் சொல்கிறேன் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். ‘கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களிடம் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது’ என்று எழுதப்படாத சட்டத்தைப் போடுகிறார்கள். பெரயார் பிறந்த மண்ணில், நவீனத் தீண்டாமை, கட்சிகளின் பெயரால் நடக்கிறது. என்னை நம்பாமல் கெட்டவர்கள் உண்டே தவிர, நம்பிக் கெட்டவர்கள் இன்றுவரை யாரும் இல்லை. என்னை நம்பியவர்களுக்காக உயிரைக் கொடுத்து உழைத்து இருக்கிறேன். என்னை நம்பி இருந்தவர்களுக்கு எதுவும் செய்ய முடியாத நிலையில் வருத்தப்பட்டு இருக்கிறேன். இங்கே வந்தால் வம்பு வந்துவிடும் என்பதால் வீட்டில் வந்து பார்த்தவர்களின் பெயர்களை எல்லாம் இங்கே சொல்லக்கூடாது. போனில் வாழ்த்திய கவர்னர்களும் இருக்கிறார்கள்’’ - தனது 70-வது பிறந்த நாள் விழாவில் நடராசன் பேசியது இது.