நடப்பு
தொடர்கள்
Published:Updated:

இரட்டை வருமானம்... ஸ்மார்ட்டாக கையாள்வது எப்படி?

இரட்டை வருமானம்...  ஸ்மார்ட்டாக கையாள்வது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
News
இரட்டை வருமானம்... ஸ்மார்ட்டாக கையாள்வது எப்படி?

தினேஷ் ரோஹிரா - நிறுவனர், சிஇஓ, 5nance.com.

முன்பெல்லாம் குடும்பத் தலைவர்தான் குடும்பத்தின் அனைத்து நிதித் தேவைகளையும் சுமக்க வேண்டியிருந்தது. ஆனால், தற்போது குடும்பத்தில் உள்ள பெண்கள் பலரும் வருமானம் ஈட்டத் தொடங்கிவிட்ட நிலையில், குடும்பத்தின் பட்ஜெட்டை ரொம்பவே ஸ்மார்ட்டாகத் திட்டமிட முடியும். எப்படியெல்லாம் குடும்ப பட்ஜெட்டை ஸ்மார்ட்டாகத் திட்டமிடலாம் என்று பார்க்கலாம்.

இரட்டை வருமானம்...  ஸ்மார்ட்டாக கையாள்வது எப்படி?

எந்தச் செலவை, யார் ஏற்பது?

பட்ஜெட் போடுவதற்குமுன் எழுப்ப வேண்டிய கேள்விகள் சில... என்னென்ன செலவுகள், அவற்றில் குடும்பச் செலவுகள் எவை, தனிப்பட்ட செலவுகள் எவை, எந்தச் செலவுகளை யார் ஏற்பது, கடன் தவணைகளை எப்படி கையாள்வது, கிரெடிட் கார்டு கட்டணத்தை யார் செலுத்துவது என இந்தக் கேள்விகளுக்கான பதில்களைக் கலந்தாலோசித்தபின்பு முடிவெடுக்கலாம்.

ஒருவேளை கணவன் அல்லது (மிகச் சில சமயங்களில்) மனைவி அதிக அளவில் கடன் வைத்திருந்தால், நீங்கள் அவருடைய கடனை அடைக்க உதவி செய்யலாம். இதுதான் இணைந்து ஓர் இலக்கை எட்டுவதற்கு உதாரணம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், குடும்ப பட்ஜெட்டை உருவாக்க வேண்டும். இதற்கு ஒரு மாதத்துக்கு மொத்தமாக உங்கள் குடும்பத்தின் வருமானம் மற்றும் செலவுகள் எவ்வளவு என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதன்பிறகு, குடும்பத்தின் பொதுவான செலவுகள், குழந்தைகளுக்கான செலவுகள் போன்றவற்றை பகிர்ந்துகொள்ளலாம். 

நீங்கள் போடும் பட்ஜெட்டின் மூலம் நீங்கள் விரும்பி செய்யும் செலவுகளையும், உங்களுக்குத் தெரியாமல் தானாகவே ஆகும் செலவுகளையும் தெளிவாக அடையாளம் காண முடியும். அதன் மூலம் எந்தச் செலவுகளை யார் ஏற்பது, செலவுத் தொகைகளை எப்படி பகிர்ந்துகொள்வது என்று திட்டமிட்டு ஸ்மார்ட்டான பட்ஜெட்டைப் போட முடியும்.    

இரட்டை வருமானம்...  ஸ்மார்ட்டாக கையாள்வது எப்படி?



பொதுவான இலக்குகள்


திட்டமிடுதல் என்பது உடனடித் தேவை களுக்கானதுல்ல. மாறாக எதிர்காலத்துக்கானது. நீங்கள் இரண்டாவது வீடு வாங்க விரும்புகிறீர்கள் அல்லது குழந்தைகளின் மேற்படிப்பு அல்லது வெளிநாட்டுச் சுற்றுலா செல்ல நீண்ட நாள்களாக காணும் கனவு போன்றவை நனவாக, திட்டமிடுதல் என்பது அவசியம். ஆனால், செலவுகளைப் பகிர்ந்துகொள்வதா அல்லது தனிப்பட்ட ஒருவரே ஏற்றுக்கொள்வதா என்ற கேள்விக்கான பதில்கள் தம்பதிகளின் வருவாயைப் பொறுத்து மாறுபடும். மேலும், உங்களின் தனிப்பட்ட தேவைகளையும் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கும். அது குறித்து கலந்தாலோசித்து, தங்களின் இலக்குகளை அடையும் வகையிலான முடிவுகளை எடுப்பது அவசியம்.

பொன்னான தருணங்களுக்கான சேமிப்பு


ஓய்வுக் காலம் என்பது சற்று சிக்கலானது. எனவே, அதை இப்போதே தம்பதியர் இணைந்து திட்டமிடுவது அவசியம். குடும்பத்தில் ஒரு நபர் எடுக்கும் முடிவு, குடும்பத்தின் வாழ்க்கை முறையில் அந்தப் பொன்னான நாள்களின்போது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. எனவே, ஒவ்வொருவரும் ஓய்வு பெறும்போது, தங்களின் ஓய்வுக் காலத்துக்கான தொகை ஒன்றை  உருவாக்க வேண்டும். அந்தத் தொகையை வைத்துதான் ஓய்வுக் காலத்துக்குப் பிறகான செலவுகளையும், குழந்தைகளின் திருமணம் போன்ற இலக்குகளையும் சமாளிக்க முடியும். 

இவை அனைத்துமே கலந்தாலோசிக்கப்பட வேண்டும். குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களில் ஒருவர் ஓய்வு பெற்றால், குடும்பத்தின் தேவைகளை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்பதைத் திட்டமிட வேண்டும். ஓய்வுக்குப் பிந்தைய காலத்தைக் கழிக்கத் தேவையான வருமானத்தை எப்படிப் பெறுவது, அதற்காக இன்று செய்ய வேண்டிய முதலீடு என்ன என்பவற்றையெல்லாம் முடிவு செய்ய வேண்டும். மேலும், எவ்வளவு காலம் நாம் வாழ்வோம் என்ற எதிர்பார்ப்பையும் கணக்கில்கொள்ள வேண்டும்.

உதாரணத்துக்கு, கணவனுக்கு மனைவியைவிட மூன்று வயது அதிகம். இருவருமே ஒரே வயதில் ஓய்வு பெறத் திட்டமிடுகிறார்கள். எதிர்பார்க்கப்படும் வாழ்நாளும் இருவருக்கும் ஒன்றுதான் என்று வைத்துக்கொள்வோம். கணவன் ஓய்வுபெற்ற பிறகும், மனைவி மூன்று வருடங்களுக்குத் தொடர்ந்து வருமானம் ஈட்டுவார். ஆனால், கணவனைவிட மூன்றாண்டுகள் கூடுதலாக மனைவி வாழ வேண்டியிருக்கும் என்பதால், அந்த மூன்று வருடங்களுக்கான நிதித் தேவைகளுக்கு மனைவிக்கு ஆதரவு தேவைப்படக்கூடும்.

மொத்தத்தில், ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வருமானம் வரும்போது அந்த வருமானத்தைத் திட்டமிட்டுக் கையாள்வதன் மூலம் நமது எதிர்காலத்தை இன்னும் சிறப்பானதாக மாற்றிக்கொள்ள முடியும்!

தொகுப்பு: ஜெ.சரவணன்