
ஜெயமோகன் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

முன்கதை: இமயமலைப் பகுதியில் மிகவும் பழங்காலத்திய மம்மி கிடைக்கிறது. மம்மியின் சிறப்பை உணர்ந்த கும்பல் ஒன்று அதைத் திருட முயல்கிறது. மம்மியைத் திருட வந்தது யார், அவர்களின் பின்னணி என்ன என்பதைக் கண்டுபிடிக்க பாண்டியன் என்ற விசாரணை அதிகாரி வருகிறார். மம்மியைத் திருட வந்த கும்பலை நேரில் பார்த்த நோர்பாவும் அவனது செல்ல நாய் நாக்போவும் பாண்டியனுடன் சேர்கிறார்கள். இவர்கள் மூவரும் விஞ்ஞானி நரேந்திர பிஸ்வாஸை சந்தித்து அவரிடம் தங்களின் விசாரணைக்கு அவரையும் உதவிக்கு அழைக்கிறார்கள். இந்த நிலையில் இவர்களுக்குக் கிடைத்த தகவலை ஆய்வு செய்ய பூட்டான் செல்கிறார்கள். இவர்கள் பயணிக்கும் ஹெலிக்காப்டர் பழுதடைகிறது. ஹெலிகாப்டரிலிருந்து பனிச்சிகரத்தில் குதித்துத் தப்புகிறார்கள். இன்னொரு ஹெலிகாப்டரில் பூட்டானை அடைகிறார்கள். அங்குள்ள புலிக்குகைகளில் ஏதேனும் தடயம் கிடைக்கலாம் என்று முடிவு செய்கிறார்கள்...

காலையிலேயே பாண்டியனும் நோர்பாவும், டாக்டர் நரேந்திர பிஸ்வாஸும் நாக்போவும் புலிக்குகை மடாலயத்துக்கு ராணுவ ஜீப்பில் கிளம்பினார்கள். அவர்களுடன் ஒரு ராணுவ ஓட்டுநர் மட்டும் வந்தார். தொலைவிலேயே புலிக்குகை மடாலயத்தை நோர்பா பார்த்துவிட்டான். ஒரு கூம்புவடிவ மலைக்கு சிவப்பு நிறத்தில் மகுடம் சூட்டியதுபோல அது தெரிந்தது. அதற்குப் பின்னால், பெரிய மலைமடிப்புகள் எழுந்து நின்றன. அவையெல்லாம் வெண்ணிறப் பனி படிந்த முகடுகள் கொண்டிருந்தன. வெண்ணிற முக்காடு போட்ட தாயின் மடியில், ஒரு குழந்தை சிவப்புக் குல்லாய் போட்டுக்கொண்டு அமர்ந்ததுபோல அவனுக்குத் தோன்றியது.
கீழே வண்டியை நிறுத்திவிட்டு, தோளில் பைகளை மாட்டிக்கொண்டு அவர்கள் கிளம்பினார்கள். குளிர்காலம் என்பதனால் பயணிகள் மிகக்குறைவாகவே இருந்தார்கள். அனைவரும் வெள்ளையர்கள். பனியில் வழுக்காத முள்போன்ற அடிப்பரப்புகொண்ட காலணிகளை அவர்கள் அணிந்துகொண்டார்கள். குளிருக்கான ஆடைகளையும் கையுறைகளையும் அணிந்துகொண்டு மேலே சென்றனர். மேலே செல்வதற்கு சாலை ஏதுமில்லை. நடந்தோ குதிரைமேல் ஏறியோதான் செல்லமுடியும்.
புலிக்குகை அமைந்த மலை தனியாக நின்றது. அதற்குப் பின்னாலிருக்கும் மலையின் சரிவில் மேலே ஏறிச்சென்று, ஒரு பாலம் வழியாக புலிக்குகை மடாலயத்துக்குச் செல்ல வேண்டும். அவர்கள், குதிரைகளை அமர்த்திக்கொண்டார்கள். நாக்போ, “நான் குதிரைமேல் ஏறுவதில்லை” என்றது.
நோர்பா, “அது தெரியாதா என்ன?” என்றான்.
“ஆனால், நான் ஏற விரும்புகிறேன்” என்றது நாக்போ.
“குதிரை அதை விரும்பாது” என்றான் நோர்பா.
“ஏன்? குதிரை என்னைவிடக் கீழான பிராணிதானே?” என்றது நாக்போ.
“உன்னைவிட மேலான பிராணி எது?” என்றான் நோர்பா.
“இன்னொரு நாய்தான்…” என்றது நாக்போ.
“மனிதர்கள்?” என்று நோர்பா கேட்டான்.
நாக்போ பேசாமல் வந்தது.
“சொல்.”
“நீ வருத்தப்படுவாய்” என்றது நாக்போ.
நோர்பா சிரித்துக்கொண்டு “நீ என்ன சொல்வாய் என்று தெரியும்” என்றான்.
“பிறகு ஏன் கேட்கிறாய்? நான் எத்தனை எளிதாக மலையில் ஏறுகிறேன். குதிரைமேல் ஏறி அமர்ந்து மூச்சுவாங்குகிறேனா என்ன?” என்றது நாக்போ.

டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் பாண்டியனிடம், “இந்த மலைக்கு திபெத்திய மொழியில் பாரோ த்ஸோங்கா என்று பெயர். இந்தச் சமவெளியின் பெயர், பாரோ. ‘புலியின் கூடு’ என்று பொருள். இந்த மடாலயத்தை இப்போதிருக்கும் வடிவில் 1692-ல்தான் பூட்டான் மன்னர் டென்சிங் ரப்கே கட்டினார். அதற்கு முன்பு, அங்கே ஒரு குகை மட்டும்தான் இருந்தது. அதற்கு, தக்த்ஸங் என்று பெயர். அங்குதான் பத்மசம்பவர் வந்து மூன்றாண்டுக் காலம் தவம்செய்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. அவர் ஏறி வந்த பறக்கும் பெண்புலி, அவருடைய திபெத்திய மனைவியாகிய யேஷீதான் என்று சொல்லப்படுவதுண்டு.”
கூரிய இரும்பு முனைகள்கொண்ட மெல்லிய மூங்கில்கழிகளை ஊன்றியபடி, வெள்ளையர்களும் ஜப்பானியர்களும் மலைப்பாதையில் ஏறிக்கொண்டிருந்தார்கள். இரு பக்கமும் வெண்பனி குவிந்துகிடந்தது. வழி முழுக்க குதிரைக் குளம்புகளால் மிதிபட்டு, பனி உடைந்து உருகியது. குதிரைச் சாணியும் சேறும் கலந்து நாற்றமடித்தது.
நாக்போ ஓர் எலும்பை வாயில் எடுத்தபடி ஓடியது.
“நில், என்ன அது?” என்றான் நாக்போ.
“மாட்டேன்” என்றது நாக்போ.
“கீழே போடு அதை… அது ஏதோ பழைய எலும்பு” என்றான் நோர்பா.
“பழைய எலும்புதான் சுவையானது… நீங்கள் மட்டும் பழைய விஷயங்களைத் தேடிச் செல்லவில்லையா?” என்றது நாக்போ.
“கீழே போடுகிறாயா இல்லையா?” என்றான் நோர்பா
முனகியபடி அதைக் கீழே போட்டது. ‘‘முட்டாள், நான் சொன்னால் அவனுக்குப் புரியாது” என்றபின் திரும்பிப் பார்த்து, “பாவம் அவனும் ஓர் எளிய மனிதன்தானே?” என்று நினைத்துக்கொண்டது.
பெரிய மலைக்கு மேலிருந்து ஓர் அருவி ஓசையுடன் கீழே கொட்டியது. அதன்மீது நடந்துசெல்ல, தொங்குவதுபோல ஒரு பாலம். பாலத்தின் மேல் அருவியின் தூறல் பொழிந்தது. குதிரைகள் ‘பர்ர்’ என்று கனைத்துக்கொண்டு உடலைச் சிலிர்த்தபடி நடந்தன. அவற்றின் குளம்புகள் மரத்தாலான பாலத்தில் ஓசையிட்டன.
அவர்கள், மறுபக்கம் மடாலயத்துக்குள் சென்றார்கள். நாக்போ உடலைப் படபடவென்று சிலிர்த்து நீர்த்துளிகளை உதறியது.
பூட்டானிய முறைப்படி சிவப்பு, வெண்மை ஆகிய நிறங்களில் அமைந்த கட்டடம் அது. கூரைக்கு அடியில் சுள்ளிகளை அடுக்கி, கூரையிலிருந்து குளிர் கீழே வராமலிருக்கும்படி அமைக்கப்பட்டிருக்கும். சுள்ளிகளின் விளிம்புகளைக் கட்டம் கட்டமாக சிவப்புச் சாயமிட்டிருப்பார்கள். சுவர்கள் கையால் வழிக்கப்பட்டதுபோல சொரசொரப்பாக இருந்தன. மூலைகளும் மடிப்புகள் நேர்கோடாக இல்லாமல் சற்று வளைந்தே இருக்கும்.
அவர்கள் சென்றபோது, அங்கே இளம் பிட்சுக்கள் சிலர் மட்டும் இருந்தனர். அவர்கள் எளிமையான கம்பளி ஆடைகள் அணிந்திருந்தார்கள். ஒரு பெரிய இரும்புக் கலத்துக்குள் கரியைப் போட்டு எரித்து, அந்தக் கனலைச் சுற்றி அமர்ந்திருந்தனர். கூரையிலிருந்து பனி நனைந்த பஞ்சுபோல உதிர்ந்தது. சுவர்களின் ஓரமாகப் பனி குவிந்துகிடந்தது.
மடாலயத்துக்குள் அந்தத் தொன்மையான புலிக்குகை அப்படியே இருந்தது. ‘‘இங்கே புலி இருந்திருக்க வாய்ப்பு உண்டா?” என்று நோர்பா கேட்டான்.
“இந்தக் குளிரில் புலி வாழ முடியாது. இமாலயப் பனிச்சிறுத்தை மட்டும்தான் பனி பெய்யும் உயரத்தில் வாழமுடியும்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ். “புலி வெப்பமான இடத்தில்தான் வாழும். புலியின் உடலில் இருக்கும் கோடுகள், தீப்போலத் தெரிகின்றன. ஆகவே, இவர்கள் புலியைத் தீவிலங்கு என நினைக்கிறார்கள்.”
புலிக்குகை மடாலயம் உண்மையில் நான்கு வெவ்வேறு கட்டடங்களால் ஆனது. அவை ஊடுபாதைகளால் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரே கட்டடமாக இருந்தன. ஒவ்வொரு கட்டடமும் ஒவ்வொரு உயரத்தில், வெவ்வேறு பாறைகள் மேல் இருந்தது. அவை ஒவ்வொன்றிலும் கருவறைகள் இருந்தன.
மையமாக இருந்த கருவறை, உண்மையில் ஓர் இயற்கையான குகையைச் சற்று செதுக்கி அமைக்கப்பட்டது. அதுதான் பத்மசம்பவர் வந்து தங்கிய குகை. அதில் அவலோகிதேஸ்வர புத்தரின் சிலை இருந்தது. வலப்பக்கம் புலிமேல் நின்றிருக்கும் வடிவில் பத்மசம்பவரின் சிலை. அந்த இரு சிலைகளும் மரத்தால் செய்யப்பட்டு, பொன்னால் ரேக்கு போடப்பட்டவை. இன்னொரு புத்தர் கன்னங்கரிய நிறத்தில் இருந்தார். அந்தக் கருவறைக்குள் நான்கு வெள்ளையரும் ஒரு ஜப்பானியரும் கண்களை மூடி தியானத்தில் இருந்தார்கள்.
பாண்டியன், “கரிய புத்தரா?” என்றான்.
டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ், “ஆம், இவரைக் காலாபுத்தர் என்கிறார்கள். காலத்தின் வடிவமான புத்தர் இவர். மரணமும் காலமும் ஒன்றுதானே!’’ என்றார்.
அவர்கள் இன்னொரு அடுக்குக்குச் சென்றார்கள். அங்கே ஏராளமான சிலைகள் இருந்தன. “திபெத்திய பௌத்தத்தில் மூன்று வகையான தெய்வங்கள் உண்டு. ஒன்று, புத்தரின் வெவ்வேறு வடிவங்கள். இரண்டு, போதிசத்வர்களின் வடிவங்கள். மூன்று, காவல் தெய்வங்களின் வடிவங்கள். இங்கே, முன்னர் இருந்த மலைத் தெய்வங்களை எல்லாம் காவல்தெய்வங்களாகவோ, போதிசத்வர்களாகவோ, புத்தரின் வடிவங்களாகவோ ஆக்கிவிட்டார்கள்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.
சில சிலைகளைக் கண்டு பாண்டியன் பிரமித்து நின்றான். ஒரு புத்தருக்கு 100 தலைகளும் 100 கைகளும் இருந்தன. கன்னங்கரிய நிறமும் சிவந்த வாயில் வெண்ணிறமான பற்களும் கொண்டிருந்தார். கைகளில் ஆயுதங்கள். பார்க்கவே பயங்கரமாக இருந்தது.
“இதையெல்லாம் எப்படி வழிபடுகிறார்கள்?” என்றான் பாண்டியன்.
“காலையில் பனிமலைகளில் சூரியன் எழும் அழகைக் கண்டிருக்கிறீர்களா?” என்றான் நோர்பா.
“ஆம், தெய்வத்தை நேரில் கண்டதுபோல இருக்கும்” என்றான் பாண்டியன்.
“அது தெய்வமேதான். சரி, அப்படியென்றால் நேற்று நாம் பார்த்த பனிப்புயலும் தெய்வம்தானே?” என்றான் நோர்பா.
பாண்டியன் திகைத்தான்.
டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் சிரித்தபடி, “நல்லவை எல்லாம் தெய்வம் என்றும் கெட்டவை எல்லாம் தெய்வத்துக்கு எதிரானவை என்றும் நம்பும் மதங்கள் உண்டு. பௌத்தம் தத்துவார்த்தமான மதம். நல்லவை கெட்டவை என்று எதைக்கொண்டு நாம் பிரிக்கிறோம்? நம்முடைய ஆசைகளைக்கொண்டு. அல்லது நமது அச்சங்களைக்கொண்டு. நாம் நம்மை விலக்கிப் பார்த்தால், எதை நல்லது என்று சொல்லமுடியும்? எதைக் கெட்டது என்று சொல்லமுடியும்? நல்லதோ கெட்டதோ, இங்கே இருக்கும் எல்லா நிகழ்ச்சிகளும் தெய்வச்செயலே என்று நம்புவதுதான் பௌத்தர்களின் வழி. ஆகவேதான், புத்தரை அழகான வடிவத்திலும் கோரமான வடிவத்திலும் வழிபடுகிறார்கள்.”
அவர்கள் அந்த மடாலயத்தைச் சுற்றிச்சுற்றி வந்தார்கள். பாண்டியன் அங்கிருந்த இந்திய ராணுவக் காவலர்களின் தலைவனிடம் தன் அடையாள அட்டையைக் காட்டினான். அவன் சல்யூட் அடித்தான். “இங்குள்ள தலைமை லாமாவிடம் நான் பேச வேண்டும்” என்றான் பாண்டியன்.
அவர்களை, அவன் தலைமை லாமாவிடம் அழைத்துச்சென்றான். அங்கே, அப்போது 32 பௌத்தத் துறவிகள் தங்கியிருந்தார்கள். 20 பேர் மிகவும் இளைஞர்கள். நான்கு பேர் சிறுவர்கள். தலைமை லாமா அவருடைய அறைக்குள் புலித்தோல் இருக்கைமேல் அமர்ந்திருந்தார். அந்த அறையில், ஒரு பொன்னிறமான புத்தர் சிலை இருந்தது. மடியில் அமுதகலசம் வைத்திருந்தது. வலக்கையால் அறிவுறுத்தல் முத்திரை காட்டியது. அதன்முன் மெழுகுவிளக்குகள் எரிந்தன. காற்று இல்லாததால், அவை முத்துக்கள்போல அசைவில்லாமல் இருந்தன.
லாமா தன் மடிமேல் கனமான சிவப்புக் கம்பளியை மடித்துப் போட்டு கைகளைக் கோத்தபடி அமர்ந்திருந்தார். விளிம்பு இல்லாத கண்ணாடி அணிந்திருந்தார். சிறிய கண்கள் சிரிப்பவை போலத் தெரிந்தன. மொட்டையடிக்கப்பட்ட தலை செம்புக்கலசம்போல ஒளிவிட்டது. அவர்கள் உள்ளே சென்று அவரை வணங்கினார்கள்.
“நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும்?” என்று லாமா கேட்டார்.
“இங்கே மூடப்பட்டுக்கிடக்கும் தொன்மையான குகை ஏதாவது இருக்கிறதா?” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.
“இங்கே உள்ள எல்லா குகைகளும் இன்று வழிபாட்டுக்கும் தியானத்துக்கும் திறக்கப்பட்டுள்ளன. வேறு எதுவும் இல்லை” என்றார் லாமா.
“நீங்கள் ரகசியமாக தியானம்செய்யும் குகை ஏதேனும் உண்டா?” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ். “ஏனென்றால், வஜ்ராயன பௌத்ததில் ஏராளமான மறைமுகமான சடங்குகள் உள்ளன என்று தெரியும். எவருக்கும் தெரியாமல் செய்யப்படும் யோகப் பயிற்சிகளும் உள்ளன.”
“இங்கே, திறந்திருக்கும் குகைகளை மாலையில் மூடிவிடுவோம். அதன் பின்னர், அங்கேதான் அந்தச் சடங்குகளைச் செய்வோம். அப்போது, இங்குள்ள இளம் துறவிகளைக்கூட உள்ளே விடுவதில்லை” என்று லாமா சொன்னார்.
“நான் கேட்பது வேறு. அதற்காக தனியான குகைகள் உள்ளனவா?” என்றார் பிஸ்வாஸ்.
“இல்லை. வெளியே வேறு சில குகைகள் உள்ளன. அவற்றில் சில பழுதடைந்தவை. அவற்றைப் பூட்டிப்போட்டிருக்கிறார்கள். அவை ராணுவக்கட்டுப்பாட்டில் உள்ளன. மில ரேபாவின் குகை அருவிக்கு அப்பால் உள்ளது. அதை வேண்டுமென்றால் நீங்கள் பார்க்கலாம்” என்றார் லாமா.
டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ், தன் செல்பேசியை எடுத்து அதிலிருந்த – தெய்வத்தின் படத்தைக் காட்டி, “இந்தத் தெய்வம் இங்கே எங்காவது குகைக்குள் இருக்கின்றதா?” என்றார். அவர்கள் இமையமலையின் உச்சியிலிருந்த குகையில் கண்ட தெய்வத்தின் படம் அது.
லாமா நோக்கியபின், “இது பௌத்த தெய்வம் அல்ல. பான் மதத்தின் பழைய தெய்வம்போல இருக்கிறது” என்றார்.

“ஆம், இதுதான் பௌத்தத்தின் தொன்மையான வடிவம்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.
“நான் இதை ஒரு பழைமையான டோங்காவில் பார்த்திருக்கிறேன். எங்கே எடுத்தீர்கள் இந்தப் படத்தை?” என்றார் லாமா.
“இதை ஒரு அமெரிக்க அருங்காட்சியகத்தில் படம்பிடித்தேன்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.
“இந்த மாதிரியான சிலைகளை நாங்கள் இங்கே வைப்பதில்லை. எங்கள் தியானத்துக்கு இதைப் போன்ற கடுமையான சிலைகள் உண்டு. ஆனால், எல்லாரும் அவற்றை தியானிக்கக்கூடாது. அதற்கென்று ஒரு மன முதிர்ச்சி வரவேண்டும். நோன்புகள் இருக்க வேண்டும். அதன் பின்னர்தான் இந்த மாதிரி தெய்வங்களை தியானிக்க வேண்டும்.”
“இந்த மாதிரியான கொடூரதெய்வங்களை ஏன் தியானிக்க வேண்டும்?” என்றான் பாண்டியன்.
“உன்னிடம் ஒரு பித்தளைப்பாத்திரம் இருக்கிறது, மாறவே மாறாத அழுக்கும் களிம்பும் அதில் படிந்திருக்கிறது. என்ன செய்வாய்?” என்றார் லாமா.
“தேய்த்துக் கழுவுவேன்” என்றான் பாண்டியன்.
“நூறுமுறை தேய்த்தாலும் கொஞ்சம் அழுக்கு மிஞ்சியிருக்கும். முற்றிலும் அழுக்கே இல்லாமல் ஆக்க ஒரு வழி இருக்கிறது. அந்தப் பாத்திரத்தைத் தீயிலிட்டுக் கொதிக்கவைப்பது. அதன்பின் எடுத்துத் தேய்த்தால், பொன்போல ஆகிவிடும். அழுக்கே இருக்காது. புத்தம்புதியதுபோலத் தோன்றும்” என்றார் லாமா.
பாண்டியன் “ஆம்” என்றான்.
“அதேபோலத்தான் நம் மனமும். அதில் நிறைய அழுக்கு இருக்கிறது. காமம், கோபம், பேராசை, வெறுப்பு என்று பல களிம்புகள் படிந்திருக்கின்றன. நல்ல செயல்களாலும் நோன்புகளாலும் அதையெல்லாம் கழுவலாம். ஆனால், முழுமையாகத் தூய்மைசெய்ய வேண்டும் என்றால், தீயில் இடுவதுபோல கடுமையான வழிமுறைகள் தேவை. இந்தக் கொடூரதெய்வங்கள் தீப்போல. அவை நம்மை எரித்து நம் அழுக்கைக் களைகின்றன. ஆனால், கவனமாகச் செய்யவில்லை என்றால் நாமே அழிந்துவிடுவோம்” என்றார் லாமா.
அவர்கள், அவரை வணங்கி வெளியே சென்றனர். டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ், “இங்கே ஒரு குகை இருக்கிறது. அதில் இந்தச் சிலையும் இருக்கிறது” என்றார்.
“என்ன சொல்கிறீர்கள்?” என்றான் பாண்டியன்.
“லாமா நம்மிடம் மறைக்கிறார். அவர் நாம் கேட்ட கேள்விக்கு இயல்பாகப் பதில் சொன்னார். நான் சட்டென்று இந்தப் படத்தைக் காட்டினேன். அவர் கண்களில் ஒரு திகைப்பு வந்தது. உடனே அவர் அதை மறைத்துக்கொண்டார்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.
(தொடரும்...)

பட்டினி புத்தர்
புத்தரின் பல வகையான சிலைகளை நாம் பார்த்திருப்போம். பட்டினி புத்தரின் சிலையைப் பார்த்திருப்பவர்கள் மிகச் சிலர்தான். புத்தர் முதலில் சமண மதத்தினருடன் சேர்ந்துகொண்டு தவம்செய்தார். உணவும் நீரும் இல்லாமல் கடுந்தவம் புரிந்தார். அவர் உடல் மெலிந்தது. பற்களும் நகங்களும் உதிர்ந்தன. உடல் மெலிந்தபோது, உள்ளம் ஆற்றல் இழந்தது. அப்போது அவரால் சிந்திக்க முடியாமல் ஆகியது. தீய எண்ணங்கள் எழுந்தன.
ஆகவே, அவர் கண்களைத் திறந்தார். அந்த வழியாக சுஜாதா என்ற இடையப் பெண் செல்வதைக் கண்டார். அவள் கையில் பால் நிறைந்த குடம் இருந்தது. ‘பாலைக் கொடு’ என்று புத்தர் கேட்டார். அவள், பாலை அவர் கைகளில் ஊற்றினாள். அவர் அதைக் குடித்து ஆற்றலைத் திரும்பப் பெற்றார். உள்ளமும் உரம்பெற்றது, மீண்டும் தவம் செய்தார். ஞானத்தை அடைந்தார்.
‘உடலை வருத்தி ஒடுக்குவது தவறு. உடலைப் பேணிக் கொழுக்க விடுவதும் தவறு. இரண்டுக்கும் நடுவே உள்ள பாதைதான் சரியானது’ என்பதை புத்தர் கண்டுபிடித்தார். எந்த விஷயத்திலும் நடுவே செல்வதுதான் நல்லது. இதை அவர், ‘மத்திம மார்க்கம்’ என்று அழைத்தார். ‘நடுப்பாதை’ என்று பொருள்.
புத்தர் பட்டினிகிடந்து மெலிந்த கோலத்தில் இருப்பதைச் சிலையாக வடித்திருக்கிறார்கள். இந்தியாவில் மதுரா அருங்காட்சியகத்தில் ஒரு சிலை உள்ளது.