
அன்னக்கிளி ஆர்.செல்வராஜ்
பஞ்சு சாரின் தம்பி லட்சுமணன் ‘பிலிமாலயா’ என்ற சினிமா இதழை ஆசிரியர் பொறுப்பில் இருந்து நடத்திவந்தார். ராமச்சந்திரன் என்பவர் அந்தப் பத்திரிகையின் முதலாளி. சில காரணங்களால் ஆசிரியர் பொறுப்பிலிருந்து லட்சுமணன் விலகிக்கொண்டார். அப்போது, ‘பேசும் படம்’, ‘பொம்மை’ என இன்னும் இரண்டு சினிமா இதழ்கள் வந்துகொண்டிருந்தன. அவற்றுக்குப் போட்டியாக இதழை நடத்துவதற்கு ஓர் ஆசிரியர் கிடைக்காமல், ராமச்சந்திரன் யோசனையில் இருந்தார்.
‘பேசும் படம்’ இதழின் ஆசிரியர் குழுவில் இருந்த எம்.ஜி.வல்லபனை எனக்கு நன்றாகத் தெரியும் என ஏற்கெனவே சொல்லியிருந்தேன். அவர் பெயரை, பஞ்சுவிடம் சிபாரிசு செய்தேன். ‘‘நீங்களே ராமச்சந்திரனை வல்லபன் சந்திக்க ஏற்பாடு செய்துவிடுங்கள்’’ எனப் பஞ்சு சொன்னார். நான், ‘‘நீங்கள் ஒருமுறை பார்த்துப் பேசிவிடுங்கள்.பிறகு அவரிடம் சொல்லிக்கொள்ளலாம்’’ என்றேன். பஞ்சுவும், எம்.ஜி.வல்லபனும் சந்தித்துப் பேசினர். அவர், இதழ் வளர்ச்சிக்குச் சில யோசனைகளைச் சொன்னார். அதில் முக்கியமானது, ‘ஆண்டுதோறும் சினிமாக் கலைஞர்களுக்கு விருது வழங்கி, விழா எடுக்கலாம்’ என்ற யோசனை.

சித்ரா ராமு, சித்ரா லட்சுமணன் இருவரும் அன்றைக்குப் பரபரப்பான சினிமா பி.ஆர்.ஓ-க்கள். எல்லா சினிமா நட்சத்திரங்களின் அன்புக்கும் பாத்திரமாக இருந்தவர்கள். அவர்களை அழைத்துப் பேசினோம். விழாவுக்குப் புகைப்படக் கலைஞர் சுபா சுந்தரத்தின் ஒத்துழைப்பும் தேவை என முடிவெடுத்து, அவரைச் சந்தித்தோம். அவர், தமிழகத்தின் பல பிரபலங்களைப் படம் எடுத்தவர்; தமிழகத்தில் பல புகைப்படக் கலைஞர்களை உருவாக்கியவர். அவரும் மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டார். அவருடைய வீட்டுக்குப் போய்விட்டால் காபி, மசால் வடை என வந்துகொண்டே இருக்கும். தவிர, அமீன் ஓட்டலிலிருந்து சமோசாவும் டீயும் வரும்.
நாங்கள் விவாதித்துக்கொண்டிருந்தோம். சினிமா நட்சத்திரமாகவும் இலக்கிய ஆர்வலராகவும் உள்ள கமல்ஹாசன் விழாவுக்கு வந்தால், விழா களை கட்டும் என்று முடிவுசெய்தோம். ‘ஒரு நாடகம் எழுதி, அதில் கமலை நடிக்குமாறு கேட்கலாம்’ என்ற யோசனையைச் சொன்னார்கள். அது, நல்ல யோசனையாகப் பட்டது. உடனே, நான் ஓர் ஓரங்க நாடகம் எழுதினேன். ‘பவர் கட்’ என்பது நாடகத்தின் தலைப்பு. நாடக ஸ்கிரிப்ட்டோடு நானும் சித்ரா லட்சுமணனும் கமலைச் சந்தித்தோம்.
ஒரு வீட்டில், பவர் கட் ஏற்பட்டுவிடுகிறது. வீடே இருளில் மூழ்கிக்கிடக்கிறது. அந்த வீட்டில் ஒரு கணவன் - மனைவி. அவசரமாக எலெக்ட்ரீஷியனை அழைக்கிறார்கள். எலெக்ட்ரீஷியன் வருகிறார். வந்த கொஞ்ச நேரத்தில், அந்த மனைவிக்கும் எலெக்ட்ரீஷியனுக்கும் ஒரு கெமிஸ்ட்ரி உருவாகிவிடுகிறது. படு காமெடி. நாடகத்தைச் சொல்லும்போதே கமல் ரசித்து ரசித்துச் சிரித்தார். அவர் ஒரு மகா கலைஞர் அல்லவா? சொல்லிக்கொண்டிருக்கும்போது காமெடியை டெவலப் செய்தபடியே இருந்தார். அரை மணி நேர நாடகம், ஒரு மணி நேர நாடகமாக மாறிவிட்டது.

அரங்கம் வெளிச்சமாகத்தான் இருக்கும். ஆனால், இருட்டில் நடப்பது மாதிரி, எல்லோரும் தடுமாறுவது போல நடிக்க வேண்டும். அத்தனை நகாசுகளையும் கமல் பார்த்துக்கொண்டார். மனைவி கேரக்டரில் ஒய்.விஜயா நடித்தார். ‘‘என்னப்பா, கனெக்ஷன் கொடுத்திட்டியா?’’ என்று இருட்டில் கணவர் கேட்பார். ‘‘இதோ... இன்னும் கொஞ்ச நேரத்தில கொடுத்துடுவேன்... ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன்’’ என்பார் எலெக்ட்ரீஷியன். வசனத்தின் இன்னோர் அர்த்தம், அரங்கத்தை அதிரச் செய்யும்.
அந்த நாடகம், விழாவையே சிரிப்பலையில் ஆழ்த்தியது. விழாவுக்குத் தமிழகம் முழுவதுமிருந்து கமல் ரசிகர்கள் வந்திருந்தனர். அதனால் இந்த நாடகம், தமிழகம் முழுவதுமே பிரபலமாகிவிட்டது.
சில நாள்கள் கழித்து, தென்காசி பக்கம் ஒரு ரயில்வே கேட்டில் காரில் காத்திருந்தபோது, அந்த ஊர் திருவிழாவில் ‘பவர் கட்’ நாடகம் நடத்தப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். பல கோயில் திருவிழாக்களில் ‘பவர் கட்’ நாடகம் அப்போது பிரபலம். அது, செல்வராஜ் எழுதிய நாடகம் என்பதுபோய், பொதுவுடமையாகிவிட்டது.
கமல் பற்றி சொல்வதற்கு நிறைய விஷயங்கள் உண்டு. சினிமாவையே சிந்தித்து, சினிமாவையே கண்டு, சினிமாவுக்காகவே வாழும் கலைஞர் அவர். சென்னையின் எல்டாம்ஸ் ரோட்டில், ஒரு முனையில் அவர் வீடு; மறுமுனையில் என் வீடு. முதலில் தூர நின்று பார்த்து, பிறகு நெருங்கிப் பழகி, அவருடன் பணியாற்றி பிரமித்துக் கொண்டிருப்பவன் நான். அவரைப் பற்றி எழுத வேண்டுமானால் ஒரு புத்தகம் அளவுக்கு எழுத வேண்டும். அதுதான் அந்தக் கலைஞனுக்குச் செய்யும் சிறப்பு. ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால், இந்தியாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவராகப் புகழப்படும் பாரதிராஜாவை அடையாளம் கண்ட கண்கள் அவருடையவை.
சந்திப்பு: தமிழ்மகன்
(ரீல் அல்ல ரியல்)

சாம்பியனின் நிராசை!
தாய்ப் பாசம்தான் கறுப்பு-வெள்ளை கால தமிழ் சினிமாவின் சென்டிமென்ட். அந்த நேரத்தில் சக்கை போடு போட்ட ‘தி சேம்ப்’ என்ற ஹாலிவுட் படம், தந்தை பாசத்தைச் சொன்னது. ஒரு முன்னாள் குத்துச்சண்டை சாம்பியன், குதிரைப் பயிற்சியாளராக அமைதியான வாழ்க்கை நடத்துகிறான். மனைவி பிரிந்து போய் வேறொரு திருமணம் செய்துகொள்ள, சிறு வயது மகனோடு தனியாக வசிக்கிறான்.
மகனுக்கு நல்ல எதிர்காலம் தரவும், கடன்களை அடைக்கவும், மீண்டும் ஒரு பந்தயத்தில் பங்கேற்று பரிசு பதக்கத்தை வெல்லவும் நினைக்கிறான் அவன். இதற்காக அவன் பயிற்சியில் இறங்கும் நேரத்தில், பிரிந்து சென்ற மனைவி வந்து மகனைத் தன்னிடம் தருமாறு கேட்கிறாள். இப்போது வசதியாக வாழும் அவள், காஸ்ட்லி பரிசுகளால் சிறுவனை அசத்துகிறாள். தான் உயிர்வாழ ஒரே காரணமாக இருக்கும் மகனை இழந்துவிடுவோமோ என்று தவிக்கிறான் அந்த முன்னாள் சாம்பியன். கவலையோடும் குழப்பத்தோடும் பயிற்சி எடுத்தாலும், தன்னைவிட வலுவான ஒரு குத்துச்சண்டை வீரனிடம் போராடி போட்டியில் ஜெயிக்கிறான் அவன். மகன் உற்சாகத்தோடு வந்து அரவணைக்கும் நேரத்தில் அந்தச் சோகம் நிகழ்கிறது. போட்டியில் ஜெயித்தாலும், வாங்கிய குத்துகள் அந்த முன்னாள் சாம்பியனைச் சாகடித்துவிடுகின்றன.
நேசிப்பவர்களோடு வாழ முடியாமல் போகும் நிராசை துயரமானது!