
எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜானகி, ஜெயலலிதா என அ.தி.மு.க இரண்டு அணிகளாகப் பிரிந்து கிடந்த நேரத்தில், ஜெயலலிதா அணிக்குள்ளேயே புகைச்சல்கள் கிளம்பின. பிளவுபட்டுப் பிரிந்து வந்த ஜெயலலிதா அணியே இன்னொரு பிளவை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. அதற்கு முன்பு வரையில் காங்கிரஸ் கூட்டணிக்கு வீராப்பு காட்டிக் கொண்டிருந்த ஜெயலலிதா, காங்கிரஸ் தயவுக்காக வேறுவழியில்லாமல் காத்திருந்தார். இந்த எல்லாக் குழப்பங்களுக்கும் காரணகர்த்தா நடராசன்.
‘‘ஜேப்பியார், காளிமுத்து போன்றவர்களுக்கு ஜெயலலிதா வீட்டு வாட்ச்மேன் ஆகக்கூடத் தகுதியில்லை’’ என ஜெயலலிதா அணியின் பிரமுகர் ஒருவர் சொல்ல... ‘‘ஆமாம். எங்களுக்கு அந்தத் தகுதியெல்லாம் கிடையாது. அதெல்லாம் வாட்ச்மேனுக்கு ஏற்ற தோற்றப் பொலிவு கொண்ட நெடுஞ்செழியன், அரங்கநாயகம் போன்றவர்களுக்குத்தான் உண்டு’’ எனப் பதிலடி கொடுத்தார் ஜானகி அணியில் இருந்த காளிமுத்து.
இப்படியான வார்த்தைப் போர்களில் ஜெயலலிதா அணியின் நெடுஞ்செழியன் சொன்ன ஒரு விஷயம் முக்கியமானது.

‘‘எம்.ஜி.ஆர் அமெரிக்கா சென்ற போதெல்லாம் நான் முதலமைச்சராக இருந்தேன். அப்போ ஏத்துக்கிட்டவங்க, சகிச்சுகிட்டவங்க, அவர் மறைந்தவுடனே ‘ஜானகிதான் முதல்வர்’ என்று கூறுகிறார்களே? நீங்கள் உருப்படுவீர்களா? நாடு உருப்படுமா?’’ எனக் கொதித்தார்.இந்தக் கொதிப்பு ஜானகி அணியின் மீது என்றாலும், ‘ஜெயலலிதாவை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துகிறார்களே’ என்கிற ஆதங்கமும் அடங்கியிருந்தது. ஜெயலலிதா அணியில், முதல்வர் வேட்பாளராக ஆரம்பத்தில் பேசப்பட்ட நெடுஞ்செழியன், பிறகு சசிகலா குடும்பத்தினரால் புறந்தள்ளப்பட்டார். அந்த ஆதங்கத்தைத்தான் கொஞ்சம் கொஞ்சமாக வெளிக்காட்டிக் கொண்டிருந்தார் நெடுஞ்செழியன்.
ஜானகி ஆட்சி கவிழ்ந்த பிறகு மாவட்டங்களுக்கு டூர் போய்க் கொண்டிருந்தார் ஜெயலலிதா. அவை தேர்தல் நிதியளிப்புக் கூட்டங்களாக மாறின. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் டார்கெட் தொகை நிர்ணயித்தார்கள். ‘‘நிதி குறைவாகத் தரும், அல்லது தராத மாவட்டங்களுக்கு ஜெயலலிதா வர மாட்டார்’’ என அடித்துச் சொன்னார் நடராசன். 1988 மார்ச் 23-ம் தேதி திருச்சி கூட்டத்துக்குத் தேதி குறித்திருந்தார்கள். பத்து லட்ச ரூபாய் நிதி தர முடியாத காரணத்தால் ஜெயலலிதா, அந்தக் கூட்டத்துக்குப் போகவில்லை. பேரம் முடிந்தபிறகே ஏப்ரல் 4-ம் தேதி, ஜெயலலிதா போனார். திருச்சி ஒத்தக்கடையில் நடந்த பொதுக் கூட்டம், அடிதடி, போலீஸ் தடியடி எனக் களேபரத்துடன் முடிந்தது. அதற்கு முன்பு தூத்துக்குடி பொதுக் கூட்டத்தில் ஆறே நிமிடங்கள்தான் ஜெயலலிதா பேசினார். இதனால் தொண்டர்கள் வெறுத்துப் போனார்கள்.
மாவட்டங்கள் விசிட்டில் கெடுபிடிகள், தகராறு, மாவட்டச் செயலாளர்களுடன் மோதல் என ஜெயலலிதா அணியில் நிறைய குழப்பங்கள் சசிகலா குடும்பத்தினரால் ஏற்பட்டன. சேலம் கண்ணனைப் பழிவாங்க, சேலம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்தார்கள். பிறகு என்ன நினைத்தார்களோ, அதை மீண்டும் ஒன்றாக்கி சேலம் கண்ணனை மாவட்டச் செயலாளராக நியமித்தனர். இந்தச் சமயத்தில்தான் மாவட்டச் செயலாளர்களுடன் ஜெயலலிதா கூட்டம் போட்டார். அதில், ‘‘யாரும் ஒழுங்காக தேர்தல் நிதியைத் தருவதில்லை. கட்சிக்குப் பணம் தருவதில் மட்டும் பாரபட்சம் காட்டுகிறீர்கள். ஆனால், சொத்துக்களை மட்டும் லட்சக்கணக்கில் வாங்கிக் குவிக்கிறீர்கள். இனிமேல் மாவட்டங்களுக்கு நான் வருவதாக இருந்தால் ஒரு லட்சம் ரூபாய் அட்வான்சாகத் தர வேண்டும்’’ எனக் கறாராகச் சொன்னார் ஜெயலலிதா. பண விஷயத்தில் இப்படி ஜெயலலிதா கிடுக்குப்பிடி போட்டதற்குக் காரணமே சசிகலா குடும்பம்தான். ‘‘தேர்தல் நிதியைத் திரட்டிக் கொடுத்துவிடலாம். ஆனால் ஜெயலலிதா வருகைக்காக மாவட்டங்களில் ஆடம்பர ஏற்பாடுகளைச் செய்ய சொல்லி வற்புறுத்துகிறார்கள்.அதற்கு எங்கே நிதி திரட்டுவது’’ என நொந்து கொண்டார்கள் மாவட்டச் செயலாளர்கள்.
காங்கிரஸ் கூட்டணி தொடர்பான பிரச்னையில் மனக்கசப்போடு இருந்தார் பண்ருட்டி ராமச்சந்திரன். காங்கிரஸ் கூட்டணியை ஏற்படுத்த பண்ருட்டியார் சொன்ன ஆலோசனைகள் ஏற்கப்படவில்லை.அதனால் அவர் ஒதுங்கியிருந்தார்.இத்தனைக்கும் காரணம் நடராசன். டெல்லியில் செல்வாக்குக் கொண்ட பண்ருட்டியாரை டெல்லிக்கு அனுப்பி, காங்கிரஸ் கூட்டணியை பேட்ச்அப் செய்ய நினைத்தார் ஜெயலலிதா. ‘‘பண்ருட்டி ராமச்சந்திரனை டெல்லிக்குப் போகச் சொல்லுங்கள்’’ என நடராசனிடம் ஜெயலலிதா சொன்னார். நடராசனோ, பண்ருட்டியாரை நேரில் சந்திக்க விரும்பாமல் இன்னொரு தூதரை அனுப்பி, தகவல் சொல்லியிருக்கிறார். இது பண்ருட்டியாருக்கு இன்னும் கோபத்தை ஏற்படுத்தியது.
‘‘அன்று பாம்புக்குப் பால் வார்த்தார் எம்.ஜி.ஆர்; இன்று அது படம் எடுத்து ஆடுகிறது. எம்.ஜி.ஆரின் கழுத்தில் கிடந்த பாம்பு ஜெயலலிதா, காலடியில் கிடந்த பாம்பு பண்ருட்டி ராமச்சந்திரன்’’ என அப்போது (ஏப்ரல் 1988) சொன்னார் ஆர்.எம்.வீரப்பன். அந்தக் காலடி பாம்பு, ஜெயலலிதாவின் கழுத்தைச் சுற்ற காலம் பார்த்துக் கொண்டிருந்தது.
(தொடரும்)