மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஒரு வரி... ஒரு நெறி! - 30 - ‘இயற்கை தன்னைத்தானே தற்காத்துக்கொள்ளும்!’

ஒரு வரி... ஒரு நெறி! - 30 - ‘இயற்கை தன்னைத்தானே தற்காத்துக்கொள்ளும்!’
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு வரி... ஒரு நெறி! - 30 - ‘இயற்கை தன்னைத்தானே தற்காத்துக்கொள்ளும்!’

இயற்கை வேளாண் விஞ்ஞானி பாமயன்

ல்லூரி முடித்தபின், வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம் குறித்த ஒரு குறுகுறுப்பும், எந்தத் திசையில் பயணிக்கப் போகிறோம் என்ற தவிப்பும் இருக்குமே... அப்படித்தான் நான் எண்பதுகளின் பிற்பகுதியில் இருந்தேன். அப்போதுதான், என் வாழ்வை திசை மாற்றிய சந்திப்பு நிகழ்ந்தது. சர்வோதயா அமைப்பின் தலைவராகவும், வினோபா பாவேயின் உதவியாளராகவும் இருந்த க.மு.நடராஜனுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.

அந்தச் சந்திப்பின்போது, ஜப்பான் இயற்கை வேளாண் அறிஞர் மசானபு ஃபுகாகோ எழுதிய ‘One Straw Revolution’ என்ற  புத்தகத்தை அவர் கொடுத்தார். அப்போது அது தமிழாக்கம் செய்யப்படவில்லை. உரையாடலில், ‘இயற்கை தன்னைத்தானே தற்காத்துக்கொள்ளும்’ என்கிற மசானபு ஃபுகாகோவின் வரிகளைச் சொன்னார். இந்த வரியின் ஊடாக அவர் விவரித்த அரசியல் வளர்ச்சி, வேளாண்மை, சூழலியல், வாழ்வியல் என அனைத்தும்தான் என்னை மாற்றின. நிறுவனமயமாக்கப்பட்ட அரசின் பார்வையையே கொண்டிருந்த பாலசுப்பிரமணியனை, பாமயனாக மாற்றியது அந்த வரிதான்.

ஒரு வரி... ஒரு நெறி! - 30 - ‘இயற்கை தன்னைத்தானே தற்காத்துக்கொள்ளும்!’

‘இயற்கை தன்னைத்தானே தற்காத்துக்கொள்ளும்’ என்பதை மேலோட்டமாகப் பார்த்தால், இயற்கையின் மீது மனிதனுக்குள்ள பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் விதமான வார்த்தைகளாகத் தெரியலாம். ஆனால், அதன் உள்ளே பொதிந்திருக்கும் அர்த்தம் மிகக் கூர்மையானது. உற்பத்தி, வளர்ச்சி, கட்டற்ற நுகர்வு, அதற்கான சுரண்டல் எனத் தேச எல்லைகள் தாண்டி, மொத்த அரசியல் குறித்தும் ஒரு பார்வையை உண்டாக்க வல்லது.

‘இயற்கை வளங்கள் அனைத்தையும் அழித்துத்தான் நாம் வளர்ச்சியடைய முடியும்’ என்று சுரண்டல் அரசியலைப் பெருநிறுவனங்கள் முன்வைக்கின்றன. இவர்கள் எதை அழித்து முன்னேறத் துடிக்கிறார்களோ, அந்த வளங்கள்தான் பெரும்பான்மையான எளிய மக்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கின்றன. அதாவது, பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து, கபளீகரம் செய்து, ஒரு சிறு குழு மட்டும் சொகுசாக இருப்பதுதான் பெருநிறுவனங்கள் முன்மொழியும் ‘வளர்ச்சி’. இது நேர்க்கோட்டு வளர்ச்சி. ஒரு புள்ளியில் தொடங்கி மற்றொரு புள்ளியில் முட்டி நிற்கும்.

இந்தக் கட்டற்ற சுரண்டலில் இருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ள இயற்கை தன்னைத்தானே தகவமைத்துக் கொள்ளும். அது மனித குலத்துக்கு மோசமான விளைவுகளைத் தரும். ஒரு சிறு குழு தன் சொகுசுகளுக்காகச் சுரண்டுவது, ஒட்டுமொத்த சமூகத்துக்கே பேரழிவைத் தரும். இந்தப் பின்னணியில்தான், ‘இயற்கை தன்னைத்தானே தற்காத்துக்கொள்ளும்’ என்ற வரியைப் புரிந்துகொள்ள வேண்டும்.

‘சரி... இதற்கு மாற்று என்ன?’ என்று தேடியபோதுதான், தமிழரின் திணை வாழ்வியல் குறித்து விரிவாகப் படிக்க நேர்ந்தது. வளர்ச்சியின் பெயரால் இன்று நாம் சந்திக்கும் அனைத்துப் பிரச்னைகளுக்கும், அதில் தீர்வு இருப்பது புரிந்தது. திணைக் கோட்பாடு, நிலத்துக்கு ஏற்ற வேளாண்மையை, வாழ்க்கைமுறையை முன்வைக்கிறது. ஒரு திணை இன்னொரு திணைக்கு இசைவாக இருக்கும் வட்டப்பாதை வளர்ச்சி குறித்துப் பேசுகிறது. இந்த வாழ்க்கைமுறையில், இயற்கையுடன் ஓர் ஒத்திசைவு இருக்கிறது. இந்த வளர்ச்சியே நீடித்ததாகவும் வளம் குன்றாததாகவும் இருக்கும்.

‘திணைக் கோட்பாடு எல்லாம் இந்தக் காலத்துக்குப் பொருந்துமா?’ என்று சந்தேகிக்கவே தேவையில்லை. ‘நிச்சயம் பொருந்தும்’ என்று நிறுவியவர் ஜே.சி.குமரப்பா. அவர் முன்வைத்தது, ‘மண்ணுக்கேற்ற பொருளாதாரம்’. மார்க்ஸும் இதை முன்வைத்திருக்கிறார். ஆனால், ‘இயற்கை வளங்கள் எல்லாம் மனிதனுக்காக மட்டும் என்றே மார்க்ஸ் பேசியிருக்கிறார்’ என நாம் மிகத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம். ‘மூலதனம்’ நூலின் மூன்றாவது தொகுதியில், மிகத் தெளிவாக இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பை விவரித்து இருக்கிறார். ‘இந்தப் புவி, அடுத்த தலைமுறைக்குச் சொந்தமானது’ என்று பேசியிருக்கிறார் கார்ல் மார்க்ஸ்.

தமிழர் திணையியல் கோட்பாடு, மார்க்ஸ் மற்றும் ஜே.சி.குமரப்பா குறித்த தெளிவான புரிதல் ஆகியவைதான் இப்போது நாம் சந்திக்கும் அனைத்துப் பிரச்னைகளுக்குமான தீர்வு.  ஒரு பக்கம் புவி வெப்பமயமாதலால், சூழலியல் சார்ந்த பல சிக்கல்களை எதிர்கொள்கிறோம். நம் காலத்திலேயே இந்தச் சூழலியல் சிக்கல்கள் சமூகச் சிக்கல்களாக மாறி, மனிதர்களிடையே மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகளையும் இடைவெளிகளையும் உண்டாக்கிவிட்டன. இதனால், கலகங்களும் வெடிக்கத் தொடங்கிவிட்டன. நாம் இந்தப் புள்ளியில் நிறுத்திக்கொண்டு, நம் தவறுகளைச் சரிசெய்ய மறுப்போமானால், விளைவுகள் மிக மோசமானவையாக இருக்கும். இதை உணர்ந்ததால் தான், திணைக் கோட்பாட்டையும் குமரப்பா பொருளாதாரத்தையும் பரவலாக்க, மக்களிடம் கொண்டு சேர்க்க அனைத்துத் தளங்களிலும் தீவிரமாக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

சந்திப்பு: மு.நியாஸ் அகமது
படம்: வீ.சதீஷ்குமார்