
சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,
பின்னிரவு கடந்தது. எவ்வியூருக்குள் நுழைய இன்னும் எவ்வளவு நேரம் ஆகுமோ தெரியவில்லை. இரவும் புதிதல்ல, காடும் புதிதல்ல. ஆனால், இரவில் காட்டுக்குள் பெரியவர்களின் துணையின்றிப் பயணித்தல் புதிது. காட்டில் கண்களைக்கட்டி விளையாடும் பேராபத்து நிலத்தில் இருக்கிறது. அந்த நிலத்தின் வாகும் வடிவும் தெரியாமல் நடப்பது, மீள முடியாத ஆபத்தை அடுத்த அடியில் நமக்குத் தந்து முடிக்கும்.
முடிநாகன் அச்சமின்றி வழிநடத்திச் சென்றான். குறுங்கட்டிக்கு, இந்தப் பகுதிக் காட்டைப் பற்றி நன்கு தெரியும். அவன் பெரிய கிழவியோடு சேர்ந்து இரு மாதங்களுக்கு முன் இந்தக் காடு முழுவதும் அலைந்து திரிந்தான். எவ்வியூரில் இரவுகளில் ஏற்றப்படும் கொம்பன் விளக்குக்கு ஒவ்வொரு பருவகாலத்துக்கும் ஏற்ப நாகக்கழிவும் நச்சுப்பிசினும் மாற்றிப் பூசப்படும். மழைக்காலத்தில் விளக்குகளை நோக்கி எண்ணிலடங்கா பூச்சியினங்கள் வந்து குவியும். அவற்றை விரட்ட புதிய சேர்மானத்தோடு கொம்பன் விளக்கை உருவாக்க வேண்டும்.
அதற்கு மிக அதிகளவு தேவைப்படுவது, செவ்விரியனின் கழிவும் மலைநாகத்தின் கழிவும்தான். அவற்றைக் காடுகளுக்குள் சேகரிக்கும் வேலையை முதுபெண்கள் செய்கின்றனர். குறுங்கட்டி, தன் கிழவியோடு இந்தக் காடு முழுவதும் அலைந்தான். பாறை இடுக்குகளிலும், மரத்தின் ஓரங்களிலும், மக்கிய செத்தைகளுக்குள்ளும் அவற்றைத் தேடினர். மண்புழு அளவு கனம்கொண்ட காய்ந்த குச்சியைப் போன்று கிடக்கும் செவ்விரியனின் கழிவை எடுத்து இச்சிமரப் பிசினைக் கலந்து கொம்பன் விளக்கின் மேல் மெழுக வேண்டும். அந்தச் சேர்மானத்தில் விளக்கின் சுடர்பட்டுக் கருகி மேலெழும் புகையும் வாசனையும் காட்டின் எந்தப் பூச்சியையும் நெருங்கவிடாது.

இந்த மழைக்காலம் தொடங்கும் முன்பிருந்தே கிழவியோடு சேர்ந்து இந்த மலையெங்கும் அலைந்து திரிந்தான் குறுங்கட்டி. எனவே, அவனுக்கு இந்தக் காடு மிக நன்றாக வசப்பட்டிருந்தது.
சிற்றாற்றைக் கடந்து மேலே ஏறியவுடன் முடிநாகனை முந்திக்கொண்டு பாய்ந்தன குறுங்கட்டியின் கால்கள். சிறு இடறும் இல்லாமல், மிகத்தெளிவாக வளைந்து, நெளிந்து, பாறைகளைக் கடந்து பாய்ந்து கொண்டிருந்தான் அவன். இளமனும் உளியனும் ஆயுதங்களைக் கவனமாக ஏந்திப் பிடித்தபடி ஓடிவந்துகொண்டிருந்தனர். தங்களுக்குள் ஒரு சொல்கூட பேசிக்கொள்ளாதபோதும் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றில் கவனம் செலுத்தினர். எல்லோரையும் ஓடவிட்டு, கடைசி யாக வந்துகொண்டிருந்தான் முடிநாகன். அவனின் கண்கள் விலங்குகள் ஏதேனும் தெரி கின்றனவா எனத் துழாவின. பின்னிரவின் சரிபாதி நேரத்தில் அவர்கள் எவ்வியூருக்குள் நுழைந்தனர்.
பாரியை எழுப்பிய வீரர்கள், “மாணவர்கள், அவசரமாகப் பார்க்க வந்துள்ளனர்” எனச் சொன்னார்கள்.
பாரிக்குக் காரணம் புரியவில்லை. ஆனாலும், அவர்களிடம் விளக்கம் கேட்பதைத் தவிர்த்தபடி எழுந்து வெளிவாசலுக்கு வந்தான். மாணவர்கள் ஆளுக்கு ஒரு பக்கம் மூச்சிரைத்தபடி கைகால்களை நீட்டிக் கிடந்தனர். பாரி வந்ததும் சட்டென எழுந்திருக்க நினைத்தனர். முடியவில்லை.

ஐவரையும் பார்த்தான் பாரி. முடிநாகன் மெள்ள எழுந்தான். ‘பேசப்போகும் வார்த்தை, தொண்டைக்குழிக்குள் எவ்வளவு கசப்பைக் கொட்டப் போகிறதோ?’ என்ற அச்சம் மேலெழுந்தது. பாரியை எழுப்பும்படி வீரர்களுக்குச் சொல்லிப் புரியவைக்கும் முன்பே, இருமுறை வயிறு குமட்டி வாந்தி எடுத்துவிட்டான். உதவி செய்யவந்த இளமனால், ஒற்றைச் சொல்லுக்குமேல் பேச முடியவில்லை. ஓடிவந்த களைப்பும் தாகமும் தொடர்ந்தன; எச்சில் ஊறுவதால், கசப்பு நிற்காமல் சுரந்துகொண்டிருந்தது. அவற்றையும் மீறி சிறு சொல் பேசினாலே, உமட்டலால் குடல் வெளிவருவதைப்போல அடிவயிறு பிரட்டிக்கொண்டு வருவதை மாணவர்களால் தாங்க முடிய வில்லை. “ஏதோ சொல்ல வருகிறார்கள். என்னவென்று புரியவில்லை” என்றுதான் வீரர்கள் பாரியிடம் சொன்னார்கள்.
முடிநாகன் எழுந்து நின்று மீண்டும் கசப்பை விழுங்க முடிவுசெய்தபடி சொன்னான், “தேக்கன் உங்களை அழைத்துவரச் சொன்னார்.”
முடிநாகனின் முகத்தை உற்றுப் பார்த்தான் பாரி. ஊறிப்பெருகும் கசப்பு அவனின் நாக்கைப் பிடுங்கிக் கொண்டிருந்ததை அந்த முகம் வெளிப்படுத்தியது. ‘தேக்கன் ஏன் என்னை அழைத்துவரச் சொல்ல வேண்டும்... இரவோடு இரவாக இவர்களை மட்டும் ஏன் அனுப்பியுள்ளான்?’ எனச் சிந்தித்தபடியே ஒவ்வொருவரையும் பார்த்தான். கைகால்கள் எல்லாம் இழுபட்டு, ஆங்காங்கே குருதி கசிந்தபடி கிடந்தனர்.
‘வழக்கமாகக் காடறிய உள்ளே அழைத்துச் சென்றுதான் பயிற்சி கொடுப்பான் தேக்கன். இம்முறை உள்ளே அழைத்துச் செல்லவே பயிற்சி தேவை என முடிவுசெய்துவிட்டான்போலும்’ எனத் தோன்றியது.

‘கேள்வி கேட்டு இவர்களை மேலும் கசப்பை விழுங்கவிட வேண்டாம்’ என்று முடிவுசெய்த பாரி, “ஓய்வெடுங்கள். காலையில் போவோம்” என்று சொல்லிவிட்டு, மாளிகை நோக்கித் திரும்பினான். திரும்பிய அவனின் கையை, சற்றும் எதிர்பாராமல் இறுகப் பற்றினான் முடிநாகன்.
உடன் இருந்த வீரர்களுக்கு என்னவெனப் புரியவில்லை. முடிநாகனின் கழுத்து நரம்பெல்லாம் விடைத்து, கண்கள் பிதுங்கின. அவனின் தோள்பட்டைகள் ரத்தவிளாறாக இருந்தன. அவனின் முகம் சொல்லவருவது என்னவெனப் புரியவில்லை. ஆனால், மாணவர்கள் மன்றாடுகிறார்கள் என்பது மட்டும் புரிந்தது.
‘தேக்கன், முதல் நாளிலேயே பயிற்சியை இவ்வளவு கடுமையாக ஏன் தொடங்கினான்?’ எனச் சிந்தித்தபடியே “சரி, புறப்பட்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றான் பாரி. மாணவர்கள் சற்றே நிம்மதி அடைந்தனர்.
சிறிது நேரத்தில் வெளியேறி வந்தான். குளிர் நடுக்கம் குறைவாகத்தான் இருந்தது. இருளின் கடைசி முடிச்சு அவிழ இன்னும் நேரம் இருந்தது.
“தேக்கன் எங்கே வரச்சொன்னார்?” எனக் கேட்டான் பாரி.
``ஆதிமலையின் எலிவால் முகட்டுக்கு” எனப் பதில் சொன்னது உளியன். `எப்படி இவ்வளவு துணிவு அவனுக்கு வந்தது?’ என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்க, கைகளால் தொண்டைக்குழியைப் பிய்த்து எடுப்பதைப்போல நெரித்தான். அதையும் மீறி குமட்டல் வெளிவந்துகொண்டிருந்தது.
பாரிக்கு வியப்பு அதிகமானது. `பயிற்சியின் முதல்நாளே இரவு முழுவதும் ஓடவிட்டு, மறுபடியும் அவ்வளவு தொலைவு ஏன் வரச்சொல்ல வேண்டும்?’ பாரி குழம்பியபடியே நின்றுகொண்டிருந்தான். பொழுதாகிக் கொண்டிருந்தது. மாணவர்களின் பதற்றம் அதிகமானது. இவ்வளவு நேரமும் பேசுவதைப்பற்றி நினைக்கவே முடியாமல் இருந்த ஆயன், சூழலைப் புரிந்துகொண்டு சொன்னான். “எதிரிகள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.”
சின்ன புன்முறுவலோடு அவனைப் பார்த்தான் பாரி.
‘தேக்கன் சொன்ன கதையை உண்மை என நம்பியே இவர்கள் இவ்வளவு தொலைவு வந்துள்ளனர். தேக்கனின் பயிற்சி உடலுக்கும் அறிவுக்கும் சமஅளவு முக்கியத்துவம் உள்ளதாக இருக்கும். இவர்கள் ஒன்றில் வெற்றிபெற, இன்னொன்றில் தோற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
குதிரைப் பாதைகள் எல்லைப்புற மலைகளுக்குத்தான் இருக்கின்றன. `எலிவால் முகட்டுக்கெல்லாம் மனிதர்கள் நடந்து போவதே கடினம். முதல்நாளே இந்தக் கடினப் பயிற்சியை ஏன் கொடுத்தான் தேக்கன்? அதுவும் ஐந்து பேருக்கு மட்டும். இவர்களை மட்டும் சோதித்துப்பார்க்க சிறப்புக் காரணம் என்னவாக இருக்கும்?’ என எண்ணிய கணத்தில் மறுசிந்தனை வந்தது... ‘மற்ற அறுவரும் எந்தத் திசை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்களோ?’
`தேக்கனின் நோக்கம் எதுவாகவும் இருக்கட்டும். மாணவர்களை மீண்டும் தேக்கனிடம் கொண்டுசேர்க்கும் வரை நாம்தான் அவர்களுக்கு ஆசானாக இருக்க வேண்டும்’ என்று மனதுக்குள் முடிவுசெய்துவிட்டு, மாளிகைவிட்டு வெளியேறி வந்தான் பாரி. உடன் வீரர்களும் வந்தனர்.

“இவர்களே இருள் அப்பிக்கிடக்கும் இந்தக் காட்டுக்குள் தனியாக வந்துள்ளனர். நான் வீரர்களோடு போனால், நன்றாகவா இருக்கும்?” என்றான்.
வீரர்கள் நின்றுகொண்டனர். பின்னால் வந்துகொண்டிருந்த மாணவர்கள் இந்த உரையாடலை அறியவில்லை.
எவ்வியூரின் எல்லை தாண்டிக் காட்டுக்குள் இறங்கும்போது மீண்டும் மாணவர்களின் கால்கள் வேகமெடுத்தன. பாரி, அவர்களின் செயல்களை உன்னிப்பாகக் கவனித்தபடி வந்தான். ‘தேக்கன் நடத்தும் இந்தச் சோதனை ஓட்டம் மாணவர்களுக்கானதாக மட்டும் தெரியவில்லை. சேரர்கள் எந்நேரமும் போர்தொடுக்கும் வாய்ப்புள்ள இந்த வேளையில், எனக்குவரும் செய்திகளை விழிப்போடு கேட்டு நான் எப்படி முடிவெடுக்கிறேன் என என்னையும் சோதிக்கிறாரா? வீரகுடி ஆசானின் மனதில் என்னதான் இருக்கிறது?’ எனப் பாரி குழம்பினான்.
பாரி சிறுவனாக இருந்து காடறியச் செல்லும்போது தேக்கனாக இருந்தது இவரேதான். பகரியை வேட்டையாடி முதன்முறையாக தேக்கனாகி மாணவர்களை அழைத்துச்சென்றது அப்போதுதான். ஒரே காலத்தில் தேக்கன் மூலம் மாணவர்களும், மாணவர்கள் மூலம் ஆசானாகத் தேக்கனும் பயிற்சிபெற்றனர். ஆசானுக்கே முதன்முறையாக இருந்ததால், பயிற்சி இளகுத்தன்மையற்று மிகக் கடுமையாக இருந்தது. அந்த ஆழ்மனப்பதிவே இப்போதும் பாரியை அவ்வாறு சிந்திக்கவைத்தது.
தேவாங்கு தன் கால்களால் பற்றி நிற்பதற்கு ஏற்ப, கூடை முழுவதும் குறுக்குக்குச்சிகள் செருகப்பட்டிருந்தன. சிற்றுருளைப்போல் நீள்வடிவுகொண்ட ஒரு கூடையில் பத்திலிருந்து இருபது தேவாங்குகள் வரை இருந்தன. ஒன்றின் மேல் ஒன்று அமுக்கி நசுங்கிவிடாதபடி குறுக்குக்குச்சியைக் கொடுத்து அந்தக் கூடை பின்னப்பட்டிருந்தது. எவ்வளவு வேகமாக ஓடினாலும், எந்தப் புதருக்குள் நுழைந்தாலும் தேவாங்குக்கு எந்தச் சேதாரமும் ஆகாதபடி அதை வடிவமைத்திருந்தனர்.
இந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கியவன் காலம்பன். இவன் பறம்பு மலையைப் பார்த்ததில்லை. ஆனால், பலரும் சொன்ன குறிப்புகளைக்கொண்டு இந்தத் திட்டத்தை வடிவமைத்தான். மொத்தம் முப்பது பேர் வந்துள்ளனர். காரமலையின் முகட்டில் பத்து பேர் நின்றுகொண்டனர். நடுமலையின் முகட்டில் எட்டு பேர் நிற்கின்றனர். ஆதிமலையின் முகட்டில் ஏழு பேர் நின்றுகொண்டனர். ஐவர் மட்டும் கொற்றவைப் புதர் நோக்கி உள்ளே நுழைந்தனர்.
வரும்போது யார் கண்ணிலும் பட்டுவிடாமல் படுவேகமாக வந்துவிட முடியும் என அவர்கள் உறுதியாக நம்பினர். ஆனால், தேவாங்கைப் பிடிக்கும்போது காவல் வீரர்கள் பார்த்துவிட்டால் தப்பிச் செல்லுதல் எளிதல்ல. பறம்புநாட்டு வீரர்களின் ஆற்றல் இணையற்றது. எனவே, ஆங்காங்கே தங்கவைக்கப்பட்டுள்ள வீரர்களிடம் கூடையைக் கைமாற்றி எப்படியாவது பறம்புமலையை விட்டுக் கீழிறக்க வேண்டும் என்பதுதான் திட்டம்.
அவர்கள் எதிர்பார்த்ததைப்போலவே, கொற்றவையின் கூத்துக்களத்துக்கு வந்தடைவது வரை யார் கண்ணிலும் படவில்லை. அங்கே காவல் வீரர்கள் இல்லாதது அவர்களின் வேலையை மேலும் எளிதாக்கியது.
தேவாங்கைப் பிடிக்க மூங்கில் குச்சியை வெட்டி, முனையில் தோற்பை போன்ற சுருக்குத் துணியைச் செருகினர். நீள்குச்சிகளைக்கொண்டு மிக விரைவாக அவற்றைப் பிடித்தனர். ஆனால், எதிர்பாராதவிதமாக சிறுவர்களை அழைத்துக்கொண்டு கிழவன் ஒருவன் வந்து நின்றதை அவர்களின் கூட்டத்தில் ஒருவன் பார்த்தான். சிறிது நேரத்தில் அந்தச் சிறுவர்கள் கூட்டம் போய்விட்டது. பிறகு எப்படி மீண்டும் வந்து கடவின் பின்னால் இருந்து தாக்குதல் தொடுத்தார்கள் என்பதுதான் காலம்பனுக்குப் புரியவில்லை.
அவன்தான் முன்னால் ஓடிக்கொண்டிருந்தான். தங்களை எப்படி அவர்கள் கண்டறிந்தார்கள் எனச் சிந்தித்தபடியே அவன் ஓடினான். இருளுக்குள் எளிதில் நுழைய முடியாத அடர்காட்டுக்குள் அவர்கள் நுழைந்துவிட்டதால், விரைவாக முன்னகர முடியவில்லை.
கூடையைச் சுமந்து சென்ற ஒருவன், மெள்ள முனகத் தொடங்கினான். “என்னால் முடியவில்லை” சத்தம் மட்டும் வெளிவந்தது. மற்ற நால்வரும் ஓடுவதை நிறுத்தி அவன் அருகில் வந்தனர். அவன் தளர்ந்தான். “என்ன ஆனது?” என்று மற்றவர்கள் விசாரிக்க, ``கடவின் மறைவிலிருந்து தாக்கியவனின் அடி நரம்புகளை ஏதோ செய்துவிட்டது. என்னால் கால்களை முன்னகர்த்த முடியவில்லை” என்று சொல்லிக்கொண்டே மண்டியிட்டான்.

காலம்பன் அவனைத் தாங்கிப் பிடித்தான். மற்றவர்கள் அவன் முதுகில் இருந்த கூடையைக் கழற்றினார்கள். ``நாங்கள் தோள்களில் தாங்கலாக உன்னைத் தூக்கிக்கொண்டு போய்விடுகிறோம். கவலைப்படாதே” என்றனர்.
இருவர் அவனின் கைகளைத் தங்களின் தோள்களின் மேல் போட்டபடி அவன் நடந்துவர உதவி செய்தனர்.
பொழுது விடிந்துகொண்டிருந்தது. கதிரவன் கண்ணில் படவில்லை. ஆனால், காடு முழுவதும் ஒளி ஊடுருவிக்கொண்டிருந்தது. தேக்கன், அடர்காட்டுக்குள் போகாமல் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்துப் போனான். அது சற்று அதிகத் தொலைவுதான். ஆனால், அந்த அடர்காட்டைக் கடப்பதற்கான நேரத்தில் பாதி நேரமே ஆகும்.
மாணவர்கள் களைத்துப்போயினர். ஆனாலும், `நாம் சென்றுவிடலாம்’ என்ற நம்பிக்கையோடு போய்க்கொண்டிருந்தனர். ‘சரியான நேரத்துக்குள் பாரி வந்து சேர்ந்தால், மீதமுள்ள நால்வரையும் எலிவால் முகட்டிலேயே வெட்டிச்சாய்க்கலாம்’ என்ற வெறி ஏறிக்கொண்டிருந்தது. ‘மாணவர்கள் என்ன சொல்லி பாரியை அழைப்பார்கள்? அங்கு கேட்கப்படும் கேள்விக்கு இவர்கள் கசப்பை விழுங்கிப் பதில் சொல்லியிருப்பார்களா? என்ன சொல்ல வேண்டும் என்பதை நாம் சொல்லி அனுப்பியிருக்கலாமோ?’ எனத் தோன்றியது. இந்த எண்ணங்களோடு ஓடிக்கொண்டிருந்த தேக்கனுக்கு, சிற்றாற்றின் வலதுகரையில் சுண்டாப்பூனை ஒன்று இருப்பதாக இரு நாள்களுக்கு முன் வீரன் ஒருவன் சொன்னது சட்டென நினைவுக்கு வந்தது. `நாம் அதை இவர்களிடம் சொல்லாமல் அனுப்பி விட்டோமே, தீங்கு ஏதும் நேர்ந்திருக்குமா!’ என்று எண்ணிய கணத்தில் பதற்றம் கூடியது.
மாணவர்கள், பாரியுடன் சிற்றாற்றைக் கடந்தனர். நேற்று மாலை ஓடத்தொடங்கிய அவர்கள், இன்னும் நின்றபாடில்லை. தேக்கன் சொல்லி அனுப்பிய சொல் அவர்களை நிற்கவிடாமல் துரத்தியது.
மாணவர்களின் ஓட்டத்துக்கு ஈடுகொடுத்தபடி சற்றே பெருநடை நடந்துவந்தான் பாரி. ஒவ்வொருவனின் நடையையும் வேகத்தையும் கவனித்தான். முடிநாகனின் பாதம் முழுவதும் மண்ணை அப்பி எழுந்தது. இளமனின் கால்விரல்கள் விரிவுகொள்ளாமல் இருந்தன. உளியன் தேவைக்கு அதிகமான உயரத்துக்குக் காலைத் தூக்குகிறான். ஆயனின் நடைதான் ஒப்பீட்டளவில் சரியாக இருந்தது. அதனால், மற்றவர்களைவிட அவனால் வேகமாகப் போக முடிந்தது.
கால்களில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் பிரச்னையைச் சொன்ன பாரி, காட்டு விலங்குகள் ஒவ்வொன்றின் நடையைப் பற்றியும், கால் அமைப்பைப் பற்றியும் விளக்கத் தொடங்கினான். அவற்றின் வேகத்துக்கும் பாதத்தை அவை பயன்படுத்தும் உத்திக்கும் உள்ள உறவை அவன் விளக்கிச் சொல்லும்போது மாணவர்கள் சற்றே எரிச்சலோடு அதைக் கேட்டு நடந்தனர்.
எவ்வளவு முறை சொற்களாலும் சைகையாலும் சொல்லியும் பாரியைவிட முன்னால் ஓடிவிட முடியவில்லை. களைத்துப்போன தங்களின் ஓட்டத்துக்கு ஈடுகொடுத்தே வருகிறான் என்ற கோபம் எல்லோருக்கும் இருந்தது. என்ன செய்வது எனத் தெரியவில்லை.
இந்நிலையில்தான் பாரியின் கண்களுக்கு அந்தச் சுருள்வால் தெரிந்தது. தலை சாய்த்து உற்றுப்பார்த்தான். புற்களுக்குள்ளே தடித்த செங்காவிநிறச்சுருள் தனித்துத் தெரிந்தது. அவனின் ஐயம் உறுதியானது. அவனை அறியாமலே கால்கள் நின்றன. சின்னதாக ஒலியெழுப்பி மாணவர்களை நிற்கச் சொன்னான். யாரும் அதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. தளர்ந்தபடி நடந்தனர். சற்றே சத்தமாகச் சொன்னான், “அங்கே நிற்பது சுண்டாப்பூனை; அப்படியே நில்லுங்கள்.”
சுண்டாப்பூனையின் வால், மேல் நோக்கிச் சுருண்டுதான் இருக்கும்; ஒருபோதும் கீழே தொங்காது. அதன் பற்கள் பன்றியின் பற்களைப் போன்றது. கடவாயில் இருந்து உதடு பிளந்து மேல் நீண்டிருக்கும். மனிதனை அதன் முகம் உரசிப் போனாலே, வாள்கொண்டு சீவிப் போனதைப்போல் ஆகிவிடும். அது நீளத்திலும் உயரத்திலும் புலியைவிட சற்றே குறைவு. ஆனால், வேகமும் தாக்கும் திறனும் புலியைவிட அதிகம். சுண்டாப்பூனையைக் கண்டால் புலி ஒதுங்கிப்போகும் என்பார்கள்.
மனிதர்கள் இதைப் பார்த்துவிட்டால் அப்படியே நின்றுவிட வேண்டும். அது சில நேரம் பக்கத்தில் வந்து முகர்ந்து பார்த்துவிட்டுப் போகும். சில நேரம் தொலைவில் இருந்தபடியே போய்விடும். ஆனால், அதைப் பார்த்தபிறகு ஓடத் தொடங்கினால், அவ்வளவுதான். அதன் வேட்டையிலிருந்து ஒருபோதும் தப்பிக்க முடியாது. இந்தக் காட்டில் அதற்கு இணையாக ஓடும் இன்னோர் உயிரினம் கிடையாது.
அதைப் பார்த்த கணம் அப்படியே நின்றான் பாரி. மாணவர்கள் நிற்காமல் நடந்தனர். தொலைவில் செடிகளுக்கு இடையில் தெரியும் சுருள்வாலை அவர்கள் பெரிதாகக் கருதவில்லை. பாரிக்கு, சின்னதாகப் பதற்றம் வரத் தொடங்கியது. “நில்லுங்கள்” என்று மீண்டும் மெள்ளக் கத்தினான். முடிநாகனுக்கு தேக்கன் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது, `உன் பின்னால் ஈன்ற புலி துரத்துகிறது என நினைத்துக்கொண்டு ஓடு’ என்ற வார்த்தைகள் எதிரொலித்தபடி இருந்தன. ‘எதையோ விளக்குவதற்காக நிற்கச் சொல்கிறார் பாரி’ என்று நினைத்தபடி எரிச்சலில் சற்றே வேகத்தை அதிகப்படுத்தினான் முடிநாகன்.
“என்ன செய்கிறாய் நீ?” என்று பாரி குரல் உயர்த்திக் கத்தியபோது மற்றவர்களும் முடிநாகனைத் தொடர்ந்து ஓடத் தொடங்கினர். கண நேரத்தில் ஏதேதோ நடப்பதுபோல் ஆனது. ஈட்டியை இறுகப் பிடித்தான் பாரி. ‘அது நமக்கு அருகில் வந்தால் மாய்த்துவிடலாம். முன்னால் போகிறவனை ஓர் அடி அடித்துவிட்டு பாய்ந்து ஓடினால் போதும். முதுகுக்கறி எதுவும் மிஞ்சாது. ஏன் இவர்கள் நாம் சொல்வதைக் கேட்க மறுக்கின்றனர்?’ என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கும்போது, மாணவர்களின் எண்ணம் வேறொன்றாக இருந்தது. பதறி ஓடவேண்டிய நேரத்தில் நிற்கச் சொல்லிக் கத்தும் பாரியின் சொல்லை மறுப்பதன் மூலம் தங்களின் கோபத்தை வெளிக்காட்டினர்.

அது இவர்களை நோக்கி வரத் தொடங்கியது. `நாம் எவ்வளவு போராடினாலும், அதனுடைய ஓர் அடி எவன்மீதாவது பட்டால் போதும். அவன் சாவதைத் தவிர வேறு வழியில்லை’ எனப் பாரியைப் பதற்றம் சூழ்ந்தது. கண நேரத்தில் பாய்ந்து முன்னால் போன பாரி, முடிநாகனின் கழுத்தைப் பிடித்து இழுத்துவிட்டான். அவன், பின்னால் சாய்ந்த வேகத்தில் நான்கு மாணவர்களும் மிரண்டு நின்றனர். விரல்களை ஓங்கியபடி “அமைதியாய் நில்லுங்கள்” என்றான் பாரி. அவர்கள் அப்படியே நின்றனர்.
சுண்டாப்பூனையும் சிறிது நேரம் தொலைவில் இருந்தபடியே பார்த்தது. பின்னர் வேறு பக்கம் சென்று மறைந்தது. அது போனதை உறுதிப்படுத்திக்கொண்டபிறகு சொல்லத் தொடங்கினான் பாரி. சுண்டாப்பூனையைப் பற்றிக் கேள்விப் பட்டிராத அவர்களுக்கு அதன் தன்மையை விளக்கினான். அவர்கள் அதைக் கவனித்ததுபோல் தெரியவில்லை. அவர்களின் கவனம் முழுவதும் ஆசானிடம் இருந்தது.
பாரியின் மனதில் சின்னதாக வருத்தம் எழுந்தது. `மாணவர்களை இழுத்து நிறுத்த வேண்டியதாகிவிட்டதே!’ என நினைத்துக் கொண்டே அவர்களோடு சேர்ந்து பேசியபடி ஓடினான்.
கண்ணில் படும் ஒவ்வொன்றைப் பற்றியும் சொல்லிக்கொண்டே வந்தான். “எங்களால் வேகமாக ஓட முடியவில்லை. நீங்களாவது முன்னால் போங்கள்” என்று முடிநாகன் அரைகுறை வார்த்தைகளிலும் கை அசைவிலும் சொல்லிப்பார்த்தான். ஆனால், பாரி அதைப் பொருட்படுத்தவில்லை. மாணவர்களுக்குச் சொல்லித் தருவதிலே கவனமாக இருந்தான். ஏதோ ஒருவகையில் தேக்கன் தனக்கு வைக்கும் சோதனையாக அவன் மனதில் பதிந்தது.
`மலையின் மேற்குப் பக்கக் காட்டுக்குள் கடந்த மாதம் முழுவதும் அலைந்தோம், கீழ்த் திசையின் உள்காடுகளுக்குள் நான் வந்து நீண்டகாலமாகி விட்டது. சேரனோடு போர் தொடங்கிவிட்டால் மேற்குப் பக்கமிருந்து நம் கவனம் திசை திரும்ப நெடுங்காலமாகிவிடும். எனவே, கீழ்த் திசைக் காட்டின் இண்டு இடுக்குகளுக்குள் அலைந்து திரிவது அவசியம் எனத் தேக்கன் கருதியிருக்கலாம். மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் வாய்ப்பாகவும் இது அமையும் எனக் கருதியிருப்பார்’ என்று நினைத்துக்கொண்டான் பாரி.
ஒரு பாறையின் வளைவில் கடந்ததும் எதிரில் குத்துக்கோரை முளைத்துக்கிடந்தது. “அதில் மிதித்து நடக்கக் கூடாது. அதன் முனைகள் கால்விரல்களின் இடைவெளிகளை எளிதில் அறுத்துவிடும்” என்று சொல்லியபடி சற்று விலகி ஓட வழி காட்டினான். சிறிது தொலைவில் சங்கஞ்செடி பெரும்புதர்போல் கிடந்தது. “அதில் மிதித்து நடந்தால், இலையில் உள்ள பால் நம்மீது பட்டவுடன் அரிக்கத் தொடங்கும். எனவே, மிதிக்காமல் விலகிச் செல்லுங்கள்” என்றான். போகும் வேகம் கூடவில்லை. மேலும் கீழுமாக அலைக்கழிப்பதே அதிகமாகிக்கொண்டிருந்தது.
மாணவர்கள், மனதுக்குள் பொருமிக் கொண்டிருந்தனர். பின்னால் வந்த பாரி, “நில்லுங்கள்” என்று சத்தம் கொடுத்தான். கோபம் மேலிட நின்றனர். அருகில் மிகப்பெரிய செங்கிளுவை மரம் இருந்தது. அதன் கிளை இடுக்கில் எரிவண்டின் கூடு அப்பியிருந்தது. மாணவர்களுக்கு அதைக் காட்டியபடி பாரி சொன்னான், “மரத்தின் முண்டுபோல பெரியதாக இருக்கிறதே, அதுதான் எரிவண்டுக் கூடு. அந்தக் கூட்டைத் தொந்தரவு செய்தால் அவ்வளவுதான்; நம்மை விரட்டி விரட்டிக் கொத்தும். எவ்வளவு விரைந்து ஓடினாலும் அதனிடமிருந்து தப்பிப்பது எளிதல்ல.”
பாரி சொல்லி முடிக்கும்போது, முடிநாகன் விட்டான் ஒரு கல்லை. அது எரிவண்டின் கூட்டைப் பிய்த்துக்கொண்டு போனது. ``என்ன செய்கிறாய் நீ?” என்று பாரி கேட்டு முடிக்கும் முன், படை திரட்டி வந்தது எரிவண்டுக் கூட்டம். மாணவர்கள் வெறிகொண்டு ஓடினர். செடி, கொடிகளில் முண்டியும் புதருக்குள் நுழைந்தும் ஓடிய அவர்களின் கால்கள் பலமடங்கு வேகம்கொண்டன. எரிவண்டின் சத்தம் கேட்கக் கேட்கக் கால்கள் காற்றைக் கிழித்துக் கொண்டிருந்தன.
‘என்ன ஆனாலும் பாரி நம்மைக் காப்பாற்றுவான்’ என்று அவர்களுக்குத் தெரியும். எனவே, அவர்களின் கால்கள் பதற்றமின்றிப் பறக்க முயன்றுகொண்டிருந்தன. முன்னால் ஓடிக்கொண்டிருந்த முடிநாகன் மனதில் எண்ணிக்கொண்டான், `தேக்கனின் சொல்லைக் காப்பாற்றுகிறேன். பாரியையும் சேர்த்து வழிநடத்துகிறேன்.’
- பறம்பின் குரல் ஒலிக்கும்...