மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!
பிரீமியம் ஸ்டோரி
News
அனுபவங்கள் பேசுகின்றன!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 200ஓவியங்கள்: ராமமூர்த்தி

வழிகாட்டும் பள்ளி!  

அனுபவங்கள் பேசுகின்றன!

ன் மகன் படிக்கும் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளிக்கிழமையன்று பள்ளி நூலகத்திலிருந்து அவர்கள் படிக்கும் வகுப்புக்குத் தகுந்தவாறு ஒரு புத்தகம் கொடுக்கின்றனர். வரலாறு, அறிவியல், தலைவர்களின் வாழ்க்கைச் சரித்திரம் போன்ற அந்தப் புத்தகங்களை சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் படித்துவிட்டு திங்கட்கிழமையன்று திருப்பிக்கொடுக்க வேண்டும். மாரல் பீரியடில் மாணவர்கள் அவர்கள் படித்த புத்தகத்தைப் பற்றி சொல்கின்றனர்.

இதனால், பள்ளிப்பாடத்தோடு முடங்கிப்போகாமல், பல்வேறு புத்தகங்களைப் படிப்பதால், மாணவர்களின் அறிவுத்தேடல் விரிகிறது. இப்படி எல்லா பள்ளிகளிலும் நூலகத்தை நல்லமுறையில் செயல்படச் செய்து வாசிக்கும் பழக்கத்தைப் வளர்க்கலாமே!

- எஸ்.சித்ரா, சிட்லபாக்கம்

தித்திக்கும் திருவிழா!    

அனுபவங்கள் பேசுகின்றன!

மீபத்தில் மதுரைக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்துக்குக் கோயில் திருவிழாவைக் காணச் சென்றேன். அவ்வூரில் நிகழ்ச்சிகள் சற்று வித்தியாசமாக இருப்பதைக் கவனித்தேன். காலை முதல் மாலை வரை பள்ளி மாணவ - மாணவியர் கிராமத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகளை நட்டுக்கொண்டிருந்தார்கள். அருகிலுள்ள குளம், குட்டைகளைத் தூர்வாரிக்கொண்டிருந்தார்கள். இரவில் கரகாட்டம், பாட்டுக் கச்சேரி என்று குதூகலம். நிகழ்ச்சி தொடங்கும்முன் அதே பிரமாண்ட மேடையில் மரம் நட்ட, தூர்வாரிய மாணவ மாணவியரைப் பாராட்டி,  கிராமத்தின் சார்பில் நினைவுப்பரிசும் வழங்கினர். இதைக் கண்டு என் மனம் மகிழ்வடைந்தது.

அரசுதான் எல்லாமே செய்ய வேண்டும் என்பதில்லை. நாமே பொதுப் பணிகளைக் கையில் எடுத்துச் செய்தால்  வளமும் நலமும் நமக்குத்தானே!

- இல.வள்ளிமயில், திருநகர்

கண்டிப்பு முக்கியம் தோழிகளே..!    

அனுபவங்கள் பேசுகின்றன!

ன் தோழி மிகவும் வசதிபடைத்தவள். ப்ளஸ் டூ படிக்கும் அவள் மகள் அண்மையில் தனது பிறந்த நாளன்று உடன் படிக்கும் தோழிகளுக்கு ட்ரீட் கொடுக்க வேண்டுமென்று பத்தாயிரம் ரூபாய் கேட்டு அடம்பிடித்தாள். தோழி கொடுக்கவில்லை. அருகிலிருந்த நான், ‘உன்னுடைய வசதிக்கு இதெல்லாம் சாதாரணம். அதைக் கொடுக்காமல், வீணாக ஏன் அவளை அழ வைக்கிறாய்?' என்று கேட்டேன். அதற்கு அவள், `பணம் இருக்கிறது என்பதற்காக அவள் இஷ்டப்படி விடுவது சரியாகுமா? அவள் தோழிகளைப் பிறந்த நாளன்று வீட்டுக்கு அழைத்து வரட்டும். நான் இருபதாயிரம் ரூபாய்கூட செலவழித்து ஜாம் ஜாம் என்று ட்ரீட் கொடுக்கிறேன்' என்றாள். வேறு வழியின்றி அவள் மகளும் அதற்குச் சம்மதித்தாள்.

வசதி இருக்கிறது என்பதற்காக பிள்ளைகள் கேட்கும் நேரத்திலெல்லாம் பணம் கொடுப்பது நாமே அவர்களைக் கெடுப்பது போலாகிவிடும்; பிள்ளைகளின் நடவடிக்கைகளைச் சீர்செய்வது பெற்றோரின் கடமை என்பதை தோழியின் செயல்பாட்டின்மூலம் உணர்ந்துகொண்டேன்.

- பி.கவிதா, கோயம்புத்தூர்

பெரியவங்க பெரியவங்கதான்!    

அனுபவங்கள் பேசுகின்றன!

திருமணமான புதிதில் ஆசீர்வாதம் வாங்க என் மாமியார் மாமனார் காலில் விழுந்தபோது, மாமியார் `உன் பொட்டு கலைய சீக்கிரம்’ என்றார்கள். எனக்கு அழுகை வந்தது. அப்போது `ஏன் அப்படிச் சொன்னீர்கள்?’ என்று கேட்க தைரியம் இல்லை. இதைப் பெரிதுபடுத்த விரும்பாததால் யாரிடமும் சொல்லவில்லை. ஆனால், உறுத்தலாகவே இருந்தது.

சில ஆண்டுகளுக்குப் பிறகு என் மகன் குழந்தை யாக இருந்த நேரத்தில், பால் குடிக்கும்போது திருமாங் கல்யத்தைப் பிடித்து இழுப்பதும், பொட்டை எடுப்பதுமாக இருப்பான். சரியாக அந்த நேரத்தில் முன்பு சொன்னதை நினைவுபடுத்தி, `இந்த மாதிரி குழந்தை பிறந்து உன் பொட்டுடன் விளையாடணும் என்ற அர்த்தத்தில்தான் கூறினேன்' என்று சொன்னார். `அந்த வார்த்தைகளுக்கு இப்படியும் ஓர் அர்த்தமா’ என வியந்தேன். அவர் என் மனதில் பல படிகள் உயர்ந்து நின்றார்.

- கே.சரண்யா, திருச்சி - 19