மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சசிகலா ஜாதகம் - 60 - ட்ரைடென்ட் ஹோட்டலும் செலவுக் கணக்கும்!

சசிகலா ஜாதகம் - 60 - ட்ரைடென்ட் ஹோட்டலும் செலவுக் கணக்கும்!
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா ஜாதகம் - 60 - ட்ரைடென்ட் ஹோட்டலும் செலவுக் கணக்கும்!

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

சென்னை விமான நிலையம் எதிரே அப்போதுதான் கட்டி முடிக்கப்பட்டிருந்தது, ‘ட்ரைடென்ட்’ என்கிற ஸ்டார் ஹோட்டல். அங்கே ஒரு அறையை நிரந்தரமாக புக் செய்திருந்தது சசிகலா குடும்பம். ஜெயலலிதா அணியின் பொருளாளர் திருநாவுக்கரசர் என்றபோதிலும், கட்சியின் வரவு செலவுகளைச் சசிகலா குடும்பம்தான் பார்த்துக் கொண்டிருந்தது. மாவட்டந்தோறும் திரட்டப்பட்ட தேர்தல் மற்றும் கட்சி நிதி எல்லாம் சசிகலா குடும்பத்தினரால்தான் நிர்வகிக்கப்பட்டன.

சசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்தையும், அவர்கள் சொல் பேச்சு கேட்டு நடக்கும் கிளிப் பிள்ளையாக ஜெயலலிதா மாறியதையும், நாவலர் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசர், சேலம் கண்ணன் போன்ற சீனியர்கள் ரசிக்கவில்லை. அதனால், இவர்களை ஓரம் கட்டும் பணிகளையும் சத்தமில்லாமல் செய்து கொண்டிருந்தது சசிகலா குடும்பம். இந்தநிலையில் கட்சி நிதி தொடர்பாகவும் பிரச்னைகள் முளைத்தன.

‘‘நாம் ஒரு சட்டத்தை வகுத்துவிட்டால் பண்ருட்டியாக இருந்தாலும் சரி, திருநாவுக்கரசராக இருந்தாலும் சரி, செல்வி ஜெயலலிதாவாக இருந்தாலும் சரி, அனைவரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. எச்சிலைக் கீழே துப்பியாச்சு. இனி என்ன செய்ய முடியும்?’’ என நொந்து போய்ச் சொன்னார் நெடுஞ்செழியன். முதல்வர் பதவியில் இருந்த தன் பேச்சையே ஜெயலலிதா கேட்கவில்லை என்பதுதான் நாவலர் நெடுஞ்செழியனின் பேச்சில் எதிரொலித்தது.

சசிகலா ஜாதகம் - 60 - ட்ரைடென்ட் ஹோட்டலும் செலவுக் கணக்கும்!

இந்த நிலையில்தான் 1988 ஜூன் 21-ம் தேதி, ஜெயலலிதா அணியின் அரசியல் விவகாரக் குழுவைக் கூட்டுவதற்குத் தேதி குறித்திருந்தார்கள். ‘‘தேர்தலில் காங்கிரஸ் உறவு நிச்சயம் தேவை’’ என சீனியர்கள் சொல்லி வந்தநிலையில், அரசியல் விவகாரக் குழுக் கூட்டத்தில் ‘காங்கிரஸ் கூட்டணி கிடையாது’ என்பதை அறிவிக்க ஜெயலலிதா முடிவு செய்திருந்தார். ‘காங்கிரஸ் கூட்டணி தேவையில்லை’ என்பது சசிகலா குடும்பத்தின் முடிவு. அதில் அரசியலும் பொதிந்திருந்தது. ‘கூட்டணி சேர்த்தால் காங்கிரஸுக்குப் பெரும்பாலான தொகுதிகள் போய்விடும். கட்சி வேட்பாளர்களிடம் பணம் வசூலிக்க முடியாது, முதல்வர் வேட்பாளர் உரிமை காங்கிரஸுக்குக் கை மாறும்’ என்கிற அச்சங்கள் எல்லாம் அவர்களுக்கு இருந்தது. அதனால் ஜெயலலிதாவைப் பின்னால் இருந்து இயக்கிக் கொண்டிருந்தார்கள். ‘‘சீனியர்கள் பலரும் ‘காங்கிரஸுடன் கூட்டணி வைக்க வேண்டும்’ என வற்புறுத்துவது, உங்கள் செல்வாக்கையும் புகழையும் மட்டம் தட்டுவதாக ஆகிவிடும்’’ என ஜெயலலிதாவிடம் தூபம் போட்டார்கள். 

இந்த மோதலில்தான் தேர்தல் நிதியில் கணக்கு கேட்கும் கேள்விகளும் எழுந்தன. எப்படி கணக்குக் கேட்டு தி.மு.க-வில் இருந்து எம்.ஜி.ஆர் பிரிந்தாரோ, அதுபோலவே நாவலர் உள்ளிட்ட சீனியர்கள் ஜெயலலிதாவிடம் நிதி தொடர்பான கணக்கைக் கேட்க ஆரம்பித்திருந்தார்கள். இதில் முக்கியமானது, நடராசனால் உருவாக்கப்பட்ட பூனைப் படைக்கான செலவுகள். ஜெயலலிதாவைப் பாதுகாக்க உருவான பூனைப் படைக்கு டிரஸ், தங்கும் இடம், அசைவ உணவு என லட்சங்களில் செலவு பில் எழுதியிருந்தார்கள். இது சீனியர்களைக் கொதிக்க வைத்தது.

‘‘ட்ரைடென்ட் ஸ்டார் ஹோட்டல் அறை எல்லாம் தேவையில்லாத செலவு. எம்.ஜி.ஆர் காலத்தில்கூட இப்படி செலவுகளை நாம் செய்தது கிடையாது. அதுவும் சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்காகக் கட்சியின் பணம் விரயமாவதை அனுமதிக்கவே முடியாது’’ எனச் சீறினார்கள். கட்சியின் பொருளாளராக இருந்த திருநாவுக்கரசருக்குச் செலவு தொடர்பான எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை. அவரின் சம்மதமும் பெறவில்லை. பொருளாளருக்குத் தெரியாமலேயே செலவுகள் செய்யப்பட்டிருந்தன. கட்சிக்கு என்று அலுவலகம் தனியாக இருக்கும்போது, ஜெயலலிதாவின் ஆலோசகராக பட்டம் சூட்டிக்கொண்ட நடராசன், ட்ரைடென்ட் ஹோட்டலில்தான் கட்சிக்காரர்களைச் சந்தித்தார் எனப் புகார்கள் கிளம்பின. அரசியலில் பழம் தின்று கொட்டைப் போட்ட நெடுஞ்செழியன் போன்ற சீனியர்களைத் தொடரவிட்டால் ஆபத்து என எண்ணினார் நடராசன். அவர்களாகவே வெளியேற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து அவர்கள் அவமதிக்கப்பட்டனர்.

இப்படியான கருத்து மோதலில், ஜெயலலிதா அணி பிளவை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. அரசியல் விவகாரக் குழுவில் மொத்த விவகாரமும் வெடிக்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரம் மறைவால், அரசியல் விவகாரக் குழு கூட்டம் நடைபெறவில்லை. ‘அரசியல் விவகாரக் குழுவில் கல்யாணசுந்தரத்துக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது’ என, நடக்காத கூட்டத்தை நடத்தியது போல பத்திரிகைகளுக்குச் செய்தி அனுப்பினார்கள். இந்த ஏமாற்று வேலையைப் பார்த்துக் கொதித்தார்கள் சீனியர்கள். இதனால் அரசியல் விவகாரக் குழுவையே மாற்றி அமைத்தார் ஜெயலலிதா. சீனியர்களை நீக்கிவிட்டு ஜெயலலிதாவுக்கு... சாரி, நடராசனுக்கு ‘ஆமாம்’ போடுகிறவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

அரசியல் விவகாரக் குழுவின் தலைவர் நெடுஞ்செழியன். தலைவரை மீறி ஜெயலலிதா அந்தக் கூட்டத்தைக் கூட்டுவதாக அறிவித்தது நெடுஞ்செழியனைக் கோபம் அடைய வைத்தது. நாவலர் தலைமையில் நால்வர் அணி உருவானது!

(தொடரும்)