மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஒரு வரி... ஒரு நெறி! - 31 - ‘காமராஜ் சொல்லாம நெடுமாறன் எதுவுமே செய்யமாட்டார்!’

ஒரு வரி... ஒரு நெறி! - 31 - ‘காமராஜ் சொல்லாம நெடுமாறன் எதுவுமே செய்யமாட்டார்!’
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு வரி... ஒரு நெறி! - 31 - ‘காமராஜ் சொல்லாம நெடுமாறன் எதுவுமே செய்யமாட்டார்!’

ஒரு வரி... ஒரு நெறி! - 31 - ‘காமராஜ் சொல்லாம நெடுமாறன் எதுவுமே செய்யமாட்டார்!’

ருங்கிணைந்த ராமநாத புரம் மாவட்டத்தில் தான் அப்போது விருதுநகர் இருந்தது. அடிதடி வழக்கு ஒன்றில், முதல்வர் காமராசரின் தங்கைப் பேரனின் பெயர் பெரிதாக அடிபட்டது. ஆனால், முதல்வரின் உறவு என்பதால், நடவடிக்கை எடுக்கத் தயங்கியது காவல்துறை. விவரம் கேள்விப் பட்ட காமராசர், ராமநாதபுரம் எஸ்.பி-யைத் தொலைபேசியில் அழைத்து, ‘‘யாரா இருந்தா என்னய்யா? தப்பு செஞ்சா பிடி,வழக்குப் போடு. அதுக்குத்தானே உன்னை வெச்சிருக்கு?’’ என்றார். உடனே காமராசரின் உறவினர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு, மூன்று வருட சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட அந்த நபரின் பெற்றோர்கள், காமராசரின் தாயார் சிவகாமி அம்மாள் மரணப்படுக்கையில் இருந்த நேரத்தில் என்னிடம் வந்தார்கள். ‘பாட்டியைப் பாக்கணும்னு அவன் சொல்றான். ரெண்டு நாளுக்கு பரோல் வாங்கிக் கொடுங்க’ என்றனர். நான் அப்போது இளைஞர் காங்கிரஸில் மதுரை மாவட்டத் தலைவராக இருந்தேன். மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, ‘அந்த நபர் காமராசரின் உறவு’ என்ற தகவலைச் சொல்லாமல், ‘‘எனக்கு வேண்டிய குடும்பத்தைச் சேர்ந்தவர்’’ எனச்சொல்லி பரோல் கேட்டேன். ஆட்சியரும் கொடுத்துவிட்டார். அந்த நபர் சிறையில் இருந்து வெளியே வந்த இரண்டாவது நாள், காமராசரின் தாயார் காலமாகி விட்டார்.

ஒரு வரி... ஒரு நெறி! - 31 - ‘காமராஜ் சொல்லாம நெடுமாறன் எதுவுமே செய்யமாட்டார்!’

விருதுநகர் வந்தார் காமராசர். சுடுகாட்டில், நெய்ப் பந்தத்துடன் பேரப் பிள்ளைகள் சுற்றி வந்துகொண்டிருந்ததைப் பார்த்தவர், ‘‘அந்தப் பய ஜெயில்லதான இருந்தான். எப்படி வெளிய வந்தான்?’’ என்று கேட்டுவிட்டார். உடனிருந்த நண்பரோ, ‘‘நெடுமாறன்தான் பரோல் வாங்கிக்கொடுத்தார்’’ எனப் பெருமையாகக் கூறியிருக்கிறார். சடங்குகளை முடித்துவிட்டு மதுரைக்கு காரில் வந்துகொண்டிருந்தோம். நீண்ட யோசனைக்குப் பிறகு குரலை உயர்த்தி, ‘‘எதுக்கு இந்த வேண்டாத வேலைன்னேன்?’’ என பரோல் சம்பவத்தைப் பற்றிக் கேட்டார் காமராசர். ‘‘ஐயா... உங்க பெயரை நான் சிபாரிசுக்குச் சொல்லலைய்யா’’ என்றேன். ‘‘நான் நம்பறேன். நீங்க சொல்லியிருக்க மாட்டீங்க. ஆனா, ‘காமராஜ் சொல்லாம நெடுமாறன் எதுவுமே செய்யமாட்டார்’னு இந்த ஊருக்கே தெரியுமே!’’ என்றார்.

ஒரு கணம் ஆடிப்போய் விட்டேன். அன்று காமராசர் சொன்ன அந்த வரி, இன்றைக்கும் எனக்குள் உறுத்திக்கொண்டிருக்கிறது. ‘பொறுப்பு மிகுந்த இடத்தில் இருக்கும்போது, சாதாரணமாக நாம் செய்கின்ற ஒரு செயல்கூட எப்படியெல்லாம் சமுதாயத் தால் பார்க்கப்படும்’ என்ற மாபெரும் உண்மையை அந்த ஒரே வரியில் உணர்த்தியிருந்தார்.

1974-ம் ஆண்டு கோவை நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடந்த சமயம். மதுரை கருமுத்து தியாகராச செட்டியார் வீட்டு துக்க நிகழ்வு விசாரிப்புக்காக காமராசருடன் நானும் சென்றிருந்தேன். அப்போது கோவை தேர்தல் குறித்து விசாரித்தார் செட்டியார். பின்னர் நாங்கள் வந்துவிட்டோம். அடுத்த நாள் செட்டியாரின் உதவியாளர் சண்முகசுந்தரம் என்னிடம் வந்து, ‘‘ஐயா, கொடுக்கச் சொன்னாங்க’’ என ஒரு பொட்டலத்தைக் கொடுத்தார். உள்ளே பணக்கட்டுகள். ‘‘கோவை தேர்தல் நிதி’’ என்றார் சண்முகசுந்தரம். இதுபற்றி காமராசர் என்னிடம் தகவல் சொல்லாததால், பணத்தை வாங்க மறுத்துவிட்டேன். தியாகராச செட்டியார் என்னைத் தொலைபேசியில் அழைத்துச் சொன்னபோதும், ‘‘தலைவர் என்னிடம் எதுவும் சொல்லவில்லை’’ எனக் கூறி, பணத்தை வாங்க மறுத்து விட்டேன். சற்று நேரத்தில் கோவையில் இருந்து பேசிய காமராசர், ‘‘செட்டியார் கொடுத்த பணத்தை வாங்க மாட்டேன்னு சொல்லிட்டீங் களாமே. தகவல் வந்துச்சு... வாங்கிக்கோங்க’’ என்றார். இதுமாதிரி ஏராளமான நேரங்களில், ‘காமராஜ் சொல்லாம நெடுமாறன் எதுவுமே செய்யமாட்டார்’ என்ற அந்த வரி என்னை வழிநடத்திச் சென்றிருக்கிறது.       


1978-ம் ஆண்டு இந்திரா காந்தி,மதுரையில் தி.மு.க-வினரால் தாக்கப் பட்டபோது நான் தடுத்துக் காப்பாற்றியிருந்தேன். ஆனால், நான் பலமுறை எடுத்துச் சொல்லியும் 1979-ம் ஆண்டு இறுதியில், தி.மு.க-வுடன் கூட்டணியை அறிவித்தார் இந்திரா காந்தி. ‘‘தி.மு.க மரணப் படுக்கையில் இருக்கிறது. நாம் கூட்டணி வைத்தால் தி.மு.க-வுக்கு உயிர் வந்துவிடும். தயவுசெய்து அந்தத் தவறைச் செய்ய வேண்டாம்’’ என்று அவரிடம் மன்றாடினேன். ஆனால், அவர் என்னைச் சமாதானம் செய்தார். அன்றே என் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன்.

காமராசர் இல்லாத காங்கிரஸில் என்னால் இயங்க முடியவில்லை. பிறகு ஈழ விவகாரங்களில் ராஜீவ் தலைமையிலான காங்கிரஸின் செயல்பாடுகள், மனரீதியாக முற்றிலும் என்னை காங்கிரஸில் இருந்து விடுவித்தது. ஒருகட்டத்தில் தமிழர் தேசிய முன்னணி, ஈழ விடுதலை என இயங்க ஆரம்பித்துவிட்டோம். ஆனால், காமராசர் என்ற அந்த மாமனிதர் எனக்குள் ஏற்படுத்திய தாக்கமும், ‘காமராஜ் சொல்லாம நெடுமாறன் எதுவுமே செய்ய மாட்டார்’ என்ற அவரது வரியும் மனதை இன்னும் பிசைந்து கொண்டிருக்கிறது.

சந்திப்பு: சி.மீனாட்சி சுந்தரம்
படம்: கே.ராஜசேகரன்