
அன்னக்கிளி ஆர்.செல்வராஜ்
பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘புதுமைப் பெண்’ படத்துக்கு ஏற்கெனவே ஓர் அறிமுகம் கொடுத்திருந்தேன். அந்தக் கதையைத்தான் நானும் பாரதிராஜாவும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொல்லியிருந்தோம். சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டது.
ஜெயலலிதாவுக்குச் சொல்லிய அந்தக் கதை, 10 ஆண்டுகளுக்குப் பிறகு ‘புதுமைப் பெண்’ படமாக வந்தது. ரேவதி, பாண்டியன் நடிக்க, ஏவி.எம். தயாரிப்பில் வந்த வெற்றிப்படம். படத்தின் பிரீமியர் ஷோ, நடிகர் சங்கத் திரையரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர், படக் காட்சிக்கு வருவதாகப் பரபரப்பு. ‘படத்தைப் பற்றி எம்.ஜி.ஆர் என்ன சொல்லப் போகிறார்’ என்கிற பதற்றம் எங்கள் எல்லோருக்குமே இருந்தது. கதாசிரியனாக எனக்கு அதிகமாகவே இருந்தது. ‘புரொஜக்டரில் பிரச்னை, ஏ.சி-யில் பிரச்னை என எதுவும் ஆகிவிடக்கூடாதே’ என இயந்திரச் செயல்பாடுகள் பற்றிய கவலை இன்னொரு பக்கம்.

எம்.ஜி.ஆர் வந்தார். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி, அதிலே வெற்றி நடைபோட்டு, அரசியல் தலைவராகவும் தமிழ் மக்களின் நெஞ்சினில் இடம் பிடித்தவர். அவர் வந்து உட்கார்ந்த சில நிமிடங்களில் கரன்ட் கட். முதல்வர் எரிச்சல் அடைந்து, ‘இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலாம்’ எனப் போய்விடுவாரோ என்ற கவலை எங்கள் எல்லோரையும் தவிக்க வைத்தது. அவர் வருவது ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததால், மின் வாரியத்தினருக்கு விஷயம் தெரியாது. அப்புறம் விஷயத்தைச் சொல்லி, அடுத்த சில நிமிடங்களில் மின்சாரம் வந்தது.
எம்.ஜி.ஆர் படம் பார்த்துக்கொண்டிருந்தார். நான் அவரைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவர் எங்கெங்கே சிரிக்கிறார், எங்கெங்கே வியக்கிறார், எங்கெங்கே புன்முறுவல் செய்கிறார் என்பதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். படம் முடிந்ததும், பாரதியிடம் படத்தைப் பாராட்டினார். சரவணன் சாரைத் தட்டிக்கொடுத்தார். ‘கதை எழுதியது யார்’ என விசாரித்து என்னைப் பாராட்டினார். அனைவருக்கும் சந்தோஷம் தாளவில்லை. ‘‘உங்கள் கதையை, வசனத்தைப் பாராட்டி நான் ஒரு கடிதம் எழுதி அனுப்புகிறேன்’’ என்றார். ‘வாயால் பாராட்டினால் அது காற்றோடு போய்விடும். எழுத்து, ஆதாரமாக இருக்கும்’ என்பதற்காக அவர் அப்படிச் சொல்கிறார் என எனக்குப் புரிந்தது.
உடனடியாகப் படத்துக்கு வரிவிலக்கு அறிவித்து முதல்வரின் அறிக்கை வெளியானது. எனக்கு எழுதுவதாகச் சொன்ன கடிதம் மட்டும் வரவில்லை. காத்திருந்தேன். அவருக்கு ஆயிரம் அலுவல்கள் இருக்கும். நிதானமாக எழுதுவார் எனக் காத்திருந்தேன்.சில நாள்களிலேயே எம்.ஜி.ஆருக்குப் பக்கவாதப் பாதிப்பு ஏற்பட்டது. அமெரிக்காவில் வைத்தியம் பார்த்துத் திரும்பி வந்தார். பழையபடி ஆகிவிட்டார் என்றனர். ஆனால், எனக்குக் கடிதம் வந்து சேரவில்லை. 14 ஆண்டுகள் வனவாசம் போன அண்ணன் ராமனுக்குப் பாதுகாப்பாகப் போனான் லட்சுமணன். ஒரு நொடியும் கண்ணுறங்காமல் இருந்து அண்ணனையும் அண்ணியையும் காத்தான். மணமுடித்த மறுநாளே மனைவி ஊர்மிளாவைப் பிரிந்துபோன லட்சுமணன், 14 ஆண்டு வனவாசத்துக்குப் பிறகு, மனைவியிடம் வந்து சேர்ந்தான். தூங்காத அந்த 14 ஆண்டுகளைத் தூங்கியே கழித்தான். ஊர்மிளா, காத்திருந்தாள்... காத்திருந்தாள்... காலத்தின் எல்லைவரை காத்திருந்தாள். எம்.ஜி.ஆரின் கடிதத்துக்காகக் காத்திருந்த என் நிலையும் அப்படித்தான் இருந்தது. 1987-ம் ஆண்டு டிசம்பர் 24-ல் அவருடைய மூச்சு பிரியும் வரை, அந்தத் திரையுலகச் சக்கரவர்த்திக்கு ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் எனக்குக் கொடுத்த வாக்கு நினைவுக்கு வந்துவிடாதா எனக் காத்திருந்தேன். எம்.ஜி.ஆர் எழுத நினைத்த அந்தக் கடிதம் என்னை வந்து சேரவே இல்லை.

பெண் என்பது உண்மை... ஆண் என்பது கற்பனை. இரண்டும் இணைந்தால், கரு உருவாகி கதை பிறக்கும்.
4,000 ஆண்டுகளுக்கு முன் டைக்ரீஸ் நதிக்கரையில் (இன்றைய பாக்தாத்) வாழ்ந்த சுமேரியர்கள்தான் சக்கரத்தைக் கண்டுபிடித்தார்கள். அதன் பிறகுதான் நாகரிகம் வேகமாக வளர்ச்சி பெற்றது. அந்த சுமேரிய மக்கள், களிமண் பலகைகளில் தங்கள் கதைகளை எழுதி, அவற்றைப் பானை ஓடு போல சுட்டு... கதைப் பலகைகளாக அடுக்கி வைத்தார்கள். அந்தக் கதையின் பெயர் ‘கில்காமேஷ்’. மரணமில்லாப் பெருவாழ்வைத் தேடிப் பயணித்த கில்காமேஷ் என்ற மன்னனின் கதை. உலகின் முதல் இலக்கியம் அதுதான்.
நாம் கற்பனை செய்து பார்க்கமுடியாத அளவுக்குச் சாகசங்கள் நிறைந்த கதை அது. மின்னலின் வெளிச்சத்தை வைத்துப் போரிட வருவார்கள் எதிரிகள். விரிந்த பெரிய மீனைத் தயார் செய்து, மின்னலை விழுங்க வைத்துவிடுவார்கள். பூமி இருண்டு போனதால் எதிரிகள் தவித்துப் போவார்கள். மின்னலைத் தேடிக் கண்டுபிடிக்கக் கிளம்புவார்கள். பொன்நிறமாக வயிறு இருக்கும் மீனைப் பார்த்துச் சந்தேகம் வரும். மீனின் வயிற்றைக் கீற... மின்னல் வெளியேறும். பூமிக்கு வெளிச்சம் கிடைக்கும்.
வாழ்க்கைத் தத்துவங்கள் சொல்லும் கதை அது.
நெருப்பில் பாக்கி வைக்காதே... நீறு பூத்த நெருப்பு மீண்டும் ஆவேசமாகத் தாக்கி சாம்பலாக்கி விடும். கடனில் பாக்கி வைக்கக் கூடாது. வட்டிக்கு மேல் வட்டி என்று குட்டி போட்டுக்கொண்டே இருக்கும். கடைசி... பகையில் பாக்கி வைக்காதே. சினிமாவில் மட்டும்தான் ஹீரோ வில்லனை வென்றதும் சுபம் போடுவார்கள். ஆனால், நிஜ வாழ்வில் பல்லாண்டுகள் காத்திருந்து பகை தீர்த்த கதைகள் உண்டு.
கதைகள்... கதைகள்... கதைகள். மனித சமூகமே கதைகளால் ஆனதுதான். மனிதனிடம் இருந்து கதைகளையும் கற்பனையையும் பிரித்துவிட்டால் மனித இனம் விலங்குப் பட்டியலுக்குச் சென்றுவிடும். நான் உருவாக்கிய இருநூத்திச் சொச்சம் கதைகளில், ஒரு கதையையும் பெண்களை இழிவுபடுத்துவதாக அமைக்கவில்லை என்பதைத்தான் பெருமையாக நினைக்கிறேன்.
சந்திப்பு: தமிழ்மகன்
(அடுத்த இதழில் முடியும்)
புதுமைப் பெண்கள்!
புதுமையான கதைக்களம் என்பது, மக்களின் புதிய பிரச்னைகளைச் சொல்லுவதும்தான். பெண்கள், தங்கள் கல்லூரிக் காலங்களில் பையன்கள் பற்றி பேசுவார்கள். ஆனால், கதையின் நாயகி, அடோலுக்கு பையன்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதில் ஆர்வம் இல்லை. இப்படித்தான் ஆரம்பிக்கிறது, 2013-ம் ஆண்டு வெளியான ‘ப்ளூ இஸ் த வா(ர்)மஸ்ட் கலர்’ படத்தின் கதை. அவளுக்குப் பெண்ணின் மீது ஈர்ப்பு. சமுதாயம் சட்டென இதை ஒரு இழிவான உணர்வாகப் பார்க்கும். பெண்ணே பெண்ணை மோகிப்பதா எனக் கேட்கும். அது உடல் சம்பந்தப்பட்டது அல்ல;

மனம் சம்பந்தப்பட்டது என்பதைச் சொல்லும் இந்தப் படம், என் மனதை உலுக்கிய படம். கடலின் நடுவே தாகத்தோடு அலையும் மனநிலை அது. சுற்றிலும் நீர் இருக்கும். அது தாகம் தீர்க்காது. ஆண்களால் கிடைக்காத ஒரு நிறைவை அந்தப் படம் துணிச்சலாகப் பேசியது. தன்னுடைய இணையை ஒரு பெண் எப்படிக் கண்டுபிடிக்கிறாள் என்பதைச் சொல்லும் அந்தப் பிரெஞ்சு படம், பெண் மனதைப் பேசிய புதுமைப் படம்... புரட்சிப் படம்.