Published:Updated:

வெள்ளி நிலம் - 18

வெள்ளி நிலம் - 18
பிரீமியம் ஸ்டோரி
News
வெள்ளி நிலம் - 18

ஜெயமோகன் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

வெள்ளி நிலம் - 18

முன்கதை: இமயமலைப்பகுதியில் இருக்கும் ஒரு மடாலயத்தில், பராமரிப்புப் பணி நடைபெறும்போது கிடைக்கும் மம்மி ஒன்றைக் கடத்திச்செல்ல சிலர் முயல்கிறார்கள். அதைத் துப்புதுலக்க காவல்துறை அதிகாரி பாண்டியன் வருகிறார். அவருடன் நரேந்திர பிஸ்வாஸும் நோர்பாவும் சேர்கிறார்கள். இந்த விசாரணைக்காக இவர்கள் பூட்டான் செல்கிறார்கள். இவர்களின் ஹெலிகாப்டர் பழுதடைய, பனிச்சிகரத்தில் தவிக்கிறார்கள். அங்கிருந்து மீண்டு, புலிக்குகை என்னும் ஒரு மடாலயத்துக்குச் செல்கிறார்கள். பல புத்தர் சிலைகளைப் பார்க்கிறார்கள். அந்த மடாலயத்தின் தலைமை லாமாவைச் சந்தித்து, அவரிடம் ஒரு படத்தைக்காட்டி விசாரிக்கிறார்கள்...

வெள்ளி நிலம் - 18

டாக்டர் நரேந்திர பிஸ்வாஸும் பாண்டியனும் பேசியபடி முன்னால் செல்ல, அவர்களுக்குப்பின்னால் நோர்பாவும் நாக்போவும் நடந்தார்கள்.

அவர்கள் மடாலயத்தை விட்டு வெளிவரும்போது நன்றாக இருட்டியிருந்தது. அந்திபோலவே தோன்றியது. அலையலையாகக் கருமேகங்கள் வந்து வானத்தை நிறைத்திருந்தன. அந்த மேகங்களுக்குள் சிறிய மின்னல்கள் வெட்டின.

‘‘இங்கும் ஒரு நல்ல பனிமழை அடிக்கப்போகிறது” என்றான் பாண்டியன்.

“இல்லை. கடுமையான காற்றும் மழையும்தான் இருக்கும்” என்று நோர்பா சொன்னான்.

“ஏன்?” என்றான் பாண்டியன்.

“காற்று கடுமையாக இருந்தால் பனியைச் சிதறடித்து மழையாகவே பெய்ய வைக்கும்.”

“கடுங்குளிர் இருக்குமோ?” என்றான் பாண்டியன்.

“இருக்காது. பனியைவிட மழையில் குளிர் குறைவு” என்றான் நோர்பா.

“அப்படியா?” என்று பாண்டியன் வியந்தான்.

வெள்ளி நிலம் - 18



“ஆம், நீர்த்துளிகள் உரசிக்கொள்வதனாலேயே கொஞ்சம் வெப்பம் உருவாகும். நீர் உறையாமலிருந்தால் அது பூஜ்யம் டிகிரி வெப்பத்துக்குமேலேதான் என்று பொருள் அல்லவா?” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

‘‘நாம் என்ன செய்வது?” என்று பாண்டியன் கேட்டான். “இப்பகுதியைத் துல்லியமாகச் சுற்றிப்பார்க்கலாமென நினைத்தோம்.”

குளிர்காற்று வீசத்தொடங்கியது. விரைவிலேயே காற்று வலுத்தது. அவர்களின் மழைச்சட்டைகள் புடைத்து அதிரத் தொடங்கின. நாக்போவின் உடலில் மயிர்ப்பரப்பு புல்வெளிபோல அலையடித்தது.

‘காற்றில் இருமடங்கு குண்டாக ஆகிவிட்டார்கள்’ என்று நாக்போ நினைத்தது. ‘அதோடு தொப்பையை ஆட்டி நடனமும் ஆடுகிறார்கள்.’

எதிரே மிலரேபாவின் குகை என்று அறிவிப்புப் பலகை தெரிந்தது. “நாம் அங்கே சென்று ஒதுங்குவோம். நாம் பார்க்கவேண்டிய இடம் அது. மழை நின்றதும் மேற்கொண்டு தேடிப்பார்ப்போம்” என்றான் பாண்டியன்.       

வெள்ளி நிலம் - 18

அவர்கள் மிலரேபாவின் குகை நோக்கிச் சென்றார்கள். மலைமேலிருந்து வெண்ணிறமான சால்வை போல அருவி விழுந்துகொண்டிருந்தது. அருவியின் சாரல்வழியாக ஒரு சிறிய நடைபாதை சென்றது. அந்தப்பாதை வழுக்கியது. அவர்கள் கவனமாகக் கால்வைத்துச் சென்றனர். குறுகலான படிகளின் மேல் ஏறி குகையை அடைந்தார்கள்.

அது மலைப்பாறையில் இயற்கையாக அமைந்த ஒரு சிறிய குகை. அதன் வாயிலில் நிலைச்சட்டம் இட்டு கதவு அமைக்கப்பட்டிருந்தது. அவர்கள் சென்றபோது ஓர் இளம்துறவி அந்தக்கதவை மூடப்போனார். அவர்கள் கைகாட்டியபடி அருகே சென்றனர். அவர்கள் உள்ளே சென்றதும் அவர் கதவை மூடினார்.

“பெரிய மழை வரப்போகிறது. உள்ளே வாருங்கள்” என்றார் அந்த இளம் பிட்சு.

வெளியே மழை வந்து கதவை அறைந்த ஓசை கேட்டது. அவர்கள் மழைச்சட்டையை உதறி நீர்த்துளிகளை உதிர்த்துக் கொண்டார்கள்.

அக்குகைக்குள் ஆளுயரத்தில் பொன்னிறமான புத்தர்சிலை இருந்தது. அது அமுதகலத்தை மடியில் வைத்திருந்தது. அதன் முன் மெழுகுவிளக்குகள் அமைதியாக எரிந்தன. அந்தச் சிவப்பு நிற ஒளியில் புத்தரின் பொன்னிற உடல் தழல்போலத் தெரிந்தது

புத்தரின் வலப்பக்கம் தாராதேவியின் சிறிய சிலை இருந்தது. இடப்பக்கம் மிலரேபாவின் சிலை தியான நிலையில் அமர்ந்திருந்தது. சுவர்களில் புத்தரின் படங்கள் கொண்ட டோங்காக்கள் தொங்கின.

வெளியே கடுமையான காற்றும் மழையும் சுழன்று அடிக்கும் ஓசை கேட்டது. உள்ளே அந்தச் சுடர்கள் மலரிதழ்கள்போல அசைவில்லாமல் நின்றன. அவர்கள் புத்தர்முன் கைகட்டி அமர்ந்து தியானம் செய்தனர். அந்தச் சுடர்தான் தன் மனம் என்று நோர்பா நினைத்தான்.

அவர்கள் எழுந்து வணங்கினர். பாண்டியன் இளம் பிட்சுவிடம் “இங்கே வேறு குகைகள் உள்ளனவா?” என்றான்.

இளம் பிட்சு “இங்கே பயன்படுத்தப்படாத சிறிய குகைகள் சில உள்ளன. இந்தப் புலிக்கூடு மடாலயத்துக்கு திபெத்திலிருந்து ஞானிகள் தியானம் செய்ய வருவதுண்டு. மிலரேபாவும் அப்படி வந்தவர்தான்” என்றார்.

“ஏதாவது பெரிய குகை உள்ளதா? திபெத்திய தெய்வத்தின் சிலை உள்ள குகை?” என்றான் பாண்டியன்.

“அப்படி ஏதும் இல்லை” என்று பிட்சு சொன்னார். “மிலரேபா இங்கே வந்து தியானம் செய்தபோது அவருக்குக் காவலாக டோர்ஜே லெக்பா என்னும் தெய்வம் இருந்தது. அந்த தெய்வத்தை மலைமேல் எங்கோ ஒரு குகையில் வைத்து வழிபட்டார்கள். அங்கே இப்போது எவரும் செல்வதில்லை.”

பாண்டியன் “அது எங்கிருக்கிறது என்று தெரியுமா?” என்றான்.

“தெரியாது. நான் இதை மூத்த பிட்சு ஒருவர் சொல்லிக் கேள்விப்பட்டேன்” என்றார் இளம்பிட்சு.

பாண்டியன் அவருக்கு வணக்கம் சொன்னான்.

மழை நின்றுவிட்டது ஓசையிலிருந்து தெரிந்தது. பிட்சு கதவைத் திறந்தார். வெளியே இருந்த வெளிச்சம் ஒரு வெண்ணிறத் துணிபோலத் தெரிந்தது.

அவர்கள் வெளியே வந்தனர். கண்கள் கூசின. கண்ணீர் கொட்டியது. அவசரமாகக் கறுப்புக்கண்ணாடிகளை எடுத்து அணிந்துகொண்டார்கள்.

‘‘காற்று மேகங்கள் அனைத்தையும் கொண்டுசென்றுவிட்டது. வானம் வெளுத்துவிட்டது” என்றான் பாண்டியன்.

“அடுத்த மேகம் வரும்வரை வெளிச்சம் இருக்கும்” என்றான் நோர்பா.

‘‘மிலரேபா பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

“இல்லை” என்றான் பாண்டியன்.

‘‘திபெத்திய பௌத்த மரபில் உள்ள முக்கியமான ஞானி அவர். கி.பி. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவர் சிறுவனாக இருந்தபோது அவரின் அப்பா இறந்துவிட்டார். அவரின் சித்தப்பாவின் குடும்பம் வீட்டையும் சொத்துகளையும் கைப்பற்றிக்கொண்டு அவர்களைத் துரத்திவிட்டது. அநாதையாக ஆன மிலரேபாவின் அம்மா தன் மகனுடன் ஒரு மலைக்குகையில் சென்று தங்கினார். அங்கே வாழ்ந்த எலிகளைப் பிடித்து மகனுக்கு உணவாக அளித்தார். அவர்கள் குளிர் தாங்காமல் மண்ணில் கழுத்துவரை உடலைப் புதைத்துக்கொண்டு தூங்கினார்கள்” என்று டாக்டர் சொன்னார்.

டாக்டர் தொடர்ந்து சொன்னார், “தன்னையும் மகனையும் அந்த கதிக்கு ஆளாக்கியவர்களைப் பழிவாங்கவேண்டும் என அன்னை சபதம் இட்டார். தன் மகனை அவர் நூறு மலைகளுக்கு அப்பால் மலை உச்சியில் குகைகளில் வாழ்ந்த சில மந்திரவாதிகளிடம் அனுப்பி மந்திரவித்தை கற்றுவரச் சொன்னார்.”

பாண்டியன் ஆர்வத்துடன் அவர் சொல்வதைக் கேட்டான். டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் தொடர்ந்து சொன்னார். “மிலரேபா மந்திரவித்தை கற்றுத் தேர்ந்து திரும்பி வந்தார். அவரின் சித்தப்பா புதுவீடு கட்டியிருந்தார். அதற்காக ஒரு விருந்து அளித்தார். மிலரேபா மந்திரவித்தையால் ஒரு மலைத்தெய்வத்தின் அருளைப் பெற்றிருந்தார். அந்த வித்தையால் அவர் பனிப்புயலை வரவழைத்தார். புயல் வீசி அந்த வீடு இடிந்தது. பனிமூடியது. அங்கிருந்த முப்பத்தைந்து பேர் இறந்தார்கள்.”

“அடாடா” என்றது நாக்போ. அது முனகுவதாக டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் நினைத்தார். திரும்பிப் பார்த்தபின் மேலும் சொன்னார் “மிலரேபாவிடமிருந்து அந்த தெய்வத்தை அழைக்கும் மந்திரத்தை அவர் அம்மா கற்றுக்கொண்டார். மிலரேபாவையும் அவர் அம்மாவையும் ஊர்க்காரர்கள் துரத்தினார்கள். அவர் அம்மா மந்திரத்தால் இடிமின்னலை வரவழைத்தார். மலை பிளந்து விழுந்து நூறு பேர் செத்தார்கள்.”

‘‘கெட்டவள்” என்று சொல்லிவிட்டு நாக்போ நாக்கால் மூக்கை நக்கிக்கொண்டது.

“மக்கள் இறந்ததைக் கண்டு மிலரேபா மனம் உடைந்தார். அவர் அம்மாவிடம் மந்திரத்தை விட்டுவிடும்படி சொன்னார். அம்மா அவர் சொன்னதைக் கேட்கவில்லை. ஆகவே அவர் அம்மாவை விட்டுவிட்டுத் தனியாகக் கிளம்பினார். ஆனால், அவர் மந்திரத்தால் தன்னுடன் சேர்த்துக்கொண்ட மலைத்தெய்வம் அவரை விடவில்லை. அவர் மார்ப்பா என்னும் ஞானியிடம் மாணவராகச் சென்று சேர்ந்தார். மார்ப்பா மிகக் கடுமையான பயிற்சிகளை அவருக்கு அளித்தார்.”

“என்ன பயிற்சிகள்?” என்று ஆவலாக நாக்போ கேட்டது.

அதைத் திரும்பிப்பார்த்த டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் அதன் மொழியைப் புரிந்துகொள்ளாமல் “என்ன சொல்கிறது?” என்று கேட்டார்.

“கதைகேட்கிறது” என்றான் நோர்பா.

டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் மேலும் சொன்னார் “மண்ணால் ஒரு வீட்டைக் கட்டும்படி அவர் மிலரேபாவிடம் சொல்வார். கட்டி முடித்ததுமே வந்து இடித்துவிடுவார். இப்படிப் பலமுறை அவர் அந்த வீட்டைக் கட்டிக்கொண்டே இருந்தார். உணவே கொடுக்காமல் தனக்கு அடிமைவேலை செய்யச்சொன்னார் மார்ப்பா. மிலரேபா காட்டுக்கீரைகளைத் தின்றபடி ஆசிரியருக்குப் பணிவிடை செய்தார். அவர் உடல் மிகவும் மெலிந்து தோல் உரிந்து வந்தது. பற்கள் எல்லாம் உதிர்ந்தன. அப்படிக் கடுமையாகத் துன்பங்களை அடைந்து தன் பாவங்களை மிலரேபா கழுவிக்கொண்டார். தன் துன்பங்களை மிலரேபா பாடல்களாக எழுதினார். மிலரேபாவின் பாடல்கள் திபெத்திய பௌத்தத்தில் மிகவும் புகழ்பெற்றவை.”       

வெள்ளி நிலம் - 18

“சரி, அவர் ஏன் இங்கே வந்தார்?” என்று பாண்டியன் கேட்டான்.

‘‘அதைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ். ‘‘அவர் கடைசியாக இங்கே வந்தார். இங்கே வந்தபின்புதான் அவருக்கு முழுமையான ஞானம் கிடைத்தது.”

நோர்பா “அவர் மந்திரத்தால் அருள் பெற்றது எந்த தெய்வத்திடமிருந்து?” என்றான்.

டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் “அது கதைகளில் சொல்லப்படவில்லை” என்றார்.

“புயலையும் இடிமின்னலையும் உருவாக்கும் சக்தி உள்ள தெய்வம் ஒன்றே ஒன்றுதான்” என்றான் நோர்பா “ஷென்ரோப் மிவோச்சே.”

“ஆம்! இதை எப்படி மறந்தேன்?” என்று டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் கூவினார்.

“மிலரேபா பான் மதத்தின் மந்திரவாதிகளிடம்தான் சென்று மந்திரவித்தை கற்றுக்கொண்டாரா?” என்றான் பாண்டியன்.

“ஆம், சந்தேகமே இல்லை. நூறு மலைகளுக்கு அப்பால் அவர் சென்றார் என்று கதைகள் சொல்கின்றன. அப்படியென்றால் அது ஏன் பூட்டானாக இருக்கக் கூடாது?”

“அப்படியும் யோசிக்கலாம்” என்றான் பாண்டியன்.

“மிலரேபாவின் காலகட்டத்தில் இங்கே பௌத்தம் போதிய அளவு வேரூன்றவில்லை. பான் மதம் வலுவாக இருந்திருக்கலாம். இங்கு பான்மதத்தின் மந்திரவாதிகள் இருந்திருக்கிறார்கள்”என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

“ஆம், பத்மசம்பவர் இங்கே வந்தபோது இந்தக் குன்றில் நூற்றெட்டு பூதங்கள் இருந்தன என்று கதைகள் சொல்கின்றன அல்லவா? பான் மதத்தின் தெய்வங்களைத்தான் அப்படிச் சொல்கிறார்கள் என நினைக்கிறேன்” என்றான் பாண்டியன்.

“அந்தத் தெய்வங்களெல்லாம் பௌத்த மதத்துக்குள் இணைக்கப்பட்டன. பான் மதத்தின் கொலைத்தெய்வம் ஷென்ரெப் மிவோச்சே ஆக மாற்றப்பட்டிருக்கவேண்டும். அதைத் தேடித்தான் மிலரேபா வந்திருக்கிறார்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

பாண்டியன் “இங்கே ஷென்ரெப் மிவோச்சேக்கு ஆலயம் ஒன்று இருக்கவேண்டும்” என்றான்.

“அந்த இளம்பிட்சு சொன்ன ஆலயம் அதுதானா? அதை நாம் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

‘‘இந்த மலைப்பகுதி மிகப்பெரியது. இங்கே எப்படிக் கண்டுபிடிப்பது?” என்றான் நோர்பா.

“அதற்கு நவீனத் தொழில்நுட்பத்தின் உதவியைத் தேடுவோம்” என்றான் பாண்டியன்.

(தொடரும்...)    

வெள்ளி நிலம் - 18

திபெத்தும் மொழிபெயர்ப்பும்

ந்தியாவில் பழங்காலத்தில் எழுதப்பட்ட ஏராளமான நூல்கள் காலப்போக்கில் அழிந்துவிட்டன. அன்றெல்லாம் பனையோலைகளிலும் பூர்ஜ மரப்பட்டையிலும் நூல்களை எழுதினார்கள். அந்த ஏடுகள் அழிவதற்குள் அவற்றை மீண்டும் பிரதி எடுத்துக்கொள்ளவேண்டும். இல்லையேல் அவை அழிந்துவிடும்.

அப்படி அழிந்துவிட்ட பல நூல்களை ஆய்வாளர்கள் திபெத்திலிருந்து கண்டுபிடித்தார்கள். திபெத்திலிருந்து பௌத்த பிட்சுக்கள் தொடர்ச்சியாக இந்தியாவுக்குள் வந்து நூல்களைக் கொண்டுசென்றனர். அவற்றை திபெத்திய மொழியில் மொழிபெயர்த்தார்கள்.

திபெத்திய மடாலயங்களில் நூல்களைப் பட்டுத்துணிகளிலும் செம்புத்தகடுகளிலும் பொறித்துப் பாதுகாத்தனர். ஓலைகளிலும் எழுதிப் பாதுகாத்தார்கள். அங்கே கடுங்குளிர் இருந்தமையால் பூச்சிகள் குறைவு. ஓலைகள் உளுத்துப்போவதுமில்லை. ஆகவே அவை அழியாமல் கிடைத்தன. இன்றும் திபெத்திய பௌத்த மடாலயங்களில் பெரிய சுவடிச்சேகரிப்பு உண்டு.

மிலரேபாவின் ஆசிரியர் மார்ப்பா. அவர் ஒரு மொழிபெயர்ப்பாளர். மொழிபெயர்ப்பாளர் என்பது திபெத்தில் மிகப்பெரிய மதிப்பு. மார்ப்பா எல்லா நூல்களிலும் மொழிபெயர்ப்பாளரான மார்ப்பா என்றே சொல்லப்படுகிறார்.