
தமிழருவி மணியன்
தமிழ் இலக்கிய உலகில் ‘அ.ச.ஞா’ என்று மிகுந்த பாசத்தோடு அழைக்கப்பட்டவர் மூதறிஞர் அ.ச.ஞானசம்பந்தன். அவர்மீது மிகுந்த பற்று கொண்டிருந்தேன். என்னுள் எழும் இலக்கிய சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் அ.ச.ஞானசம்பந்தனிடம் சென்று விடை தேடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.
அதுபோன்ற அன்பு நிறைந்த ஒரு சந்திப்பின்போது, “மணியன், உனக்குள் சென்று நீ உன்னைப் பார்த்திருக்கிறாயா?” என்று ஆழ்ந்த கரிசனத்துடன் கேட்டார். எனக்கோ ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. பேச்சற்று மெளனமானேன். “உலகத்தை அறிவதல்ல அறிவு. நீ யார் என்று உன்னை முழுமையாக அறிந்துகொள்வதுதான் உண்மையான அறிவு’’ என்றார். மேலும், “திருமந்திரம் வாசித்திருக்கிறாயா?” என்றும் கேட்டார். “பலமுறை வாசித்திருக்கிறேன்” என்றேன். “வாசித்தால் மட்டும் போதாது... வாசித்ததை வரிவரியாக உன்போக்கில் யோசிக்க வேண்டும்” என்று சிரித்தபடி சொன்னார். “திருமந்திரத்தில் திருமூலர் சொன்ன, ‘தன்னை அறிய தனக்கொரு கேடில்லை’ என்ற ஒரு வரியே, ஒவ்வொரு மனிதனின் வாழ்வுக்குரிய மூலமந்திரம். இன்றுமுதல் உன்னை நீ அறிந்து, உள்முகமாகப் பயணம் செய்’’ என்றார் அ.ச.ஞா. அன்றிலிருந்து அவரையே என் ஞானகுருவாக நெஞ்சில் நேர்ந்துகொண்டேன்.
‘தன்னை அறிய தனக்கொரு கேடில்லை’ என்ற திருமந்திரம், என் உள்ளத்தில் ஓயாமல் ஓங்கி ஒலித்தது. தன்னை ஒருவன் அறிய, உள்முகத் தேடலில் தொடர்ந்து ஈடுபட வேண்டும். அன்றுமுதல் நான் தியானத்தில் ஈடுபட்டு, என்னிலிருந்து விடுபட்டு, விலகி நின்று, என்னைக் கண்டறியத் தொடங்கினேன். ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ளவற்றையெல்லாம் அறிந்து வைத்திருப்பது அறிவே இல்லை. எனக்குப் புறத்தே உள்ள எவற்றை நான் அறிந்திருந்தாலும், அவை வெறும் தகவல்களே அன்றி, அறிவாகாது. என் அகத்தை நான் முதலில் அறிவது அவசியம். அப்போதுதான் ‘நான் யார்’ என்பது எனக்குப் புலப்படும்.

இருண்டு கிடக்கும் மனக்குகையில் நுழைந்து நடத்தும் தேடலில்தான், என் பலம் எதுவென்றும் தெரியும்; எனக்குள் மறைந்து என்னை அலைக்கழிக்கும் பலவீனம் எதுவென்றும் புரியும். அதனால்தான் விவேகானந்தர், ‘உன்னை நீ அறி’ என்றார். மனம்தான் மனித மாளிகையின் மைய மண்டபம். மனம் சார்ந்தவன் என்பதால்தான், ‘மனிதன்’ என்று அழைக்கப்படுகிறான். மனமே எண்ணங்களின் இருப்பிடம். எண்ணங்களே வார்த்தைகளின் வாழ்விடம். வார்த்தைகளே செயல்களின் உந்துசக்தி. செயலே நம் வாழ்க்கையின் விளைச்சலுக்கான விதை. மனம் இருப்பதனால்தான், மனிதன் சிந்திக்கிறான். மரணிக்கும்வரை சிந்திப்பதை நாம் நிறுத்துவதேயில்லை. மனதில் எழும் சிந்தனைகளைப் பொறுத்தே, நம் வாழ்வின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் அமைகின்றன. இதை நுணுக்கமாக உணர்ந்த வள்ளுவன்தான், உலகத்தின் முதல் உளவியல் அறிஞன். மனம் பற்றி அவன் உரைத்த குறள்களில் ஆழ்ந்த அர்த்தம் உள்ளது.
மாசற்ற மனம் இருந்தால் சொல்லிலும் செயலிலும் இயல்பாகவே தூய்மை துலங்கும்; வாழ்க்கை வளம்பெறும். புத்த மதத்தின் வேதமாகப் போற்றப்படும் ‘தம்மபத’த்தின் முதல் சூத்திரமே மனம் குறித்துதான் பேசுகிறது. ‘மனத்தில் எண்ணங்கள் உருவாகின்றன. எண்ணங்களால் உலகம் உருவாக்கப்படுகிறது’ என்று ‘தம்மபதம்’ அறிவுறுத்துகிறது. ‘தூய்மையற்ற மனம், தீய செயல்களுக்கே துணை போகும். சாலையின் பாதச்சுவடுகளை வண்டிச்சக்கரம் பின்தொடர்வது போல், தவறான மனம் உடையவரின் வாழ்வில் துன்பங்களே தொடர்ந்துவரும். மாசற்ற மனம் இருந்தால் நம் நிழல் நம்மைத் தொடர்ந்து வருவது போன்றே, மகிழ்ச்சியான வாழ்க்கையும் நம்மோடு சேர்ந்தே நடக்கும்’ என்கிறது ‘தம்மபதம்’.
அதனால்தான் திருமூலர், ‘தன்னை அறிய தனக்கொரு கேடில்லை’ என்றார். துடைக்க துடைக்கத்தான் கண்ணாடியில் படிந்திருக்கும் அழுக்கு அகலும். தேய்க்கத் தேய்க்கத்தான் பாத்திரம் பளிச்சிடும். தன்னை அறியும் முயற்சியில் ஒருவன் ஈடுபடும்போதுதான், மாசு முற்றாக மறையும். மாசற்ற மனம் வாழ்க்கையில் கொண்டால், ஈசனைக்கூட கையெடுத்துக் கும்பிடவேண்டிய அவசியமில்லை. ‘தன்னை அறிய தனக்கொரு கேடில்லை’ என்ற திருமூலர், அடுத்த வரியில், ‘தானே தனக்குப் பகைவனும், நண்பனும்’ என்கிறார். என் நண்பன் எனக்குள் இருக்கிறான்; எனது பகையை நானே சுமக்கிறேன். தூய மனமே என் நண்பன்; தீய சிந்தனையே என் பகைவன். நாம் நம்மை அறியாமல் உலகத்தை அறிவதில் ஆர்வமாக இருக்கிறோம். மரத்தின் நோய் தீர, கிளைகளில் மருந்தடித்துப் பயனில்லை. அதன் வேர்களைத்தான் முதலில் விசாரிக்க வேண்டும். நம் வேர்களை இனியாவது நாம் விசாரிப்போம். நம்மை நாம் அறிய முதலில் முயல்வோம்.
‘தன்னை அறிய தனக்கொரு கேடில்லை’ என்ற ஒரு வரியை வாழ்க்கையின் நெறியாக்கிக் கொண்டால், இன்பமன்றி ஒருநாளும் துன்பமில்லை. எனக்குச் சரி என்று படுவது ‘சுதர்மம்’, எல்லோருக்கும் சரி என்று படுவதே ‘சமூக தர்மம்’. என்னை நான் அறியத்தொடங்கிய பின்புதான் இந்த உண்மையை உணரத்தொடங்கினேன்.
சந்திப்பு: சி.மீனாட்சி சுந்தரம்
படம்: கே.ராஜசேகரன்