
எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி
‘நால்வர் அணி’ என்கிற நாமகரம் தமிழக அரசியல் வரலாற்றில் சூட்டப்பட்டதற்கு சூத்திரதாரி நடராசன். நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசர், அரங்கநாயகம் ஆகியோர் ஜெயலலிதாவிடம் இருந்து விலகி ‘நால்வர் அணி’யாக இயங்க ஆரம்பித்ததற்கு விதைப் புள்ளி சசிகலா குடும்பம். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு இரண்டாக இருந்த அ.தி.மு.க, இவர்களால் மூன்றாக உடைந்தது.
அரசியல் விவகாரக் குழுவைக் கலைத்தது, பண்ருட்டியாருக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டியது, கட்சி நிதியில் மோசடி என ஜெயலலிதா அணியில் ஏற்பட்ட குழப்பங்களால் ‘நால்வர் அணி’ உதயமானது. அதற்கு முன்பே கட்சியில் பிளவு ஏற்பட்டுவிடுமோ என ஜெயலலிதா பயந்தார். சமரச முயற்சியாக நெடுஞ்செழியனை வீடு தேடிச் சென்று பார்த்தார். 1988 ஜூன் 30-ம் தேதி வியாழக்கிழமை அந்தச் சந்திப்பு நடைபெற்றது. ‘சசிகலா குடும்பத்தினரால்தான் பிரச்னை ஏற்பட்டது’ என்பதை அறிந்த ஜெயலலிதா, அவர்களின் பேச்சுகளைப் புறந்தள்ளிவிட்டு தன் ஈகோவையும் ஓரம்கட்டி வைத்துவிட்டு, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள நெடுஞ்செழியன் வீட்டுக்குப் போனார். அவருடன் மற்ற தலைவர்களோ, உதவியாளர்களோ யாரும் வரவில்லை. குறிப்பாக அவரது நிழல் போல வலம் வரும் பூனைப் படையினர் கூட இல்லை. தனி ஆளாக நெடுஞ்செழியன் வீட்டுப் படியேறிப் போய்ப் பார்த்தார் ஜெயலலிதா. அதாவது, நடராசனின் ஆட்கள் யாரும் ஜெயலலிதாவைப் பின்தொடரவில்லை. 15 நிமிடங்கள் வரை நெடுஞ்செழியனோடு தனியாகப் பேசிக் கொண்டிருந்தார். எப்படியும் சமரச உடன்பாடு ஏற்பட்டுவிடும் என்ற நிலையில் குட்டையைக் குழப்பினார்கள் சசிகலா குடும்பத்தினர். விளைவு... ‘நால்வர் அணி’ பிறந்தது.

நெடுஞ்செழியன் - ஜெயலலிதா சந்திப்பு நடந்த அடுத்த நாள் திருநாவுக்கரசர் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டி முக்கியத்துவம் வாய்ந்தது. ‘‘நெடுஞ்செழியனை ஜெயலலிதா சந்திப்பதற்கு முன்பே எங்களிடம் எஸ்.டி.எஸ். போன்ற தலைவர்கள் நேரில் சந்தித்து சமரசம் பேசினார்கள். எங்கள் பிரச்னைகளை ஜெயலலிதாவிடம் அவர்கள் சொல்கிறார்களா எனத் தெரியவில்லை. எங்களிடம் சமரசம் பேசுகிறவர்கள், அதற்கான தீர்வு எதையும் சொல்வதில்லை’’ எனச் சொன்னார் திருநாவுக்கரசர். அதாவது, சமரசப் பேச்சுவார்த்தை விவரங்களை ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டு போகவிடாமல் சசிகலா குடும்பம் தடுத்தது. திருநாவுக்கரசர் அளித்த அந்தப் பேட்டியில்தான் முதன்முறையாக நடராசனைப் பற்றி திருவாய் மலர்ந்தார்.
‘‘எம்.ஜி.ஆரின் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்தி தி.மு.க-வை ஆட்சிக்கு வரவிடக் கூடாது என்பதுதான் எங்கள் மூவரின் (நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசர்) லட்சியம். இதுவே தொண்டர்களின் நோக்கம். இந்த லட்சியத்துக்குத் தடையாக இருப்பவர் நடராசன்தான். தி.மு.க-வின் கையாளாகச் செயல்படும் நடராசன்தான் இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம். விடுப்பில் இருக்கும் அரசு அதிகாரியான அவர், தி.மு.க-வுடன் சேர்ந்துகொண்டு இந்த இயக்கத்தைப் பிளவுபடுத்தத் திட்டமிடுகிறார்’’ என்று பகிரங்கமாக திரி கொளுத்திப் போட்டார் திருநாவுக்கரசர். அப்போது நடராசன், தமிழக அரசில் மக்கள்தொடர்பு அதிகாரியாக இருந்தார்.
ஜெயலலிதாவின் தான்தோன்றித்தனமான பேச்சுகள், அறிக்கைகள், பேட்டிகள் அனைத்தும் காங்கிரஸ் கூட்டணியை உடைத்துப் போட்டதோடு, தொண்டர்களையும் எரிச்சல் அடைய வைத்திருந்தது. ‘‘காங்கிரஸுடன் கூட்டணி வைக்காவிட்டால் தி.மு.க எளிதில் ஜெயித்துவிடும்’’ என நெடுஞ்செழியன் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். ஆனால், ஜெயலலிதாவும் அவரைச் சுற்றியிருந்தவர்களும் கேட்கவில்லை. இப்படியான சூழலில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டினார் ஜெயலலிதா. நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசர் ஆகியோர் அதைப் புறக்கணித்தனர்.
ஜெயலலிதாவால் தயாரிக்கப்பட்டிருந்த தீர்மானத்தை, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கருப்பசாமி பாண்டியன் முன்மொழிந்தார். ‘ஜெயலலிதாவை முதல்வராக ஏற்க ஒப்புக்கொள்ளும் கட்சியுடன்தான் கூட்டணி. இது தொடர்பாகப் பேசும் அதிகாரம் ஜெயலலிதாவுக்கு மட்டுமே தரப்பட்டிருக்கிறது’ எனச் சொன்னது அந்தத் தீர்மானம். அதாவது, ‘பிரதமர் ராஜீவ் காந்தியைச் சந்தித்துப் பேசும் அதிகாரம் பெற்றவர் ஜெயலலிதாதான்’ என மறைமுகமாக உணர்த்தியது. ‘நான்’, ‘எனது’ என்கிற அதிகாரத் தோரணையோடு எழுதப்பட்டிருந்தது தீர்மானம். அதை யார் எழுதியிருப்பார்கள் என்பதை மாவட்டச் செயலாளர்கள் அறிந்திருந்தார்கள். 1988-ம் ஆண்டு ஆரம்பித்த ‘நான்’, ‘எனது’ என்கிற மமதை, ஜெயலலிதாவின் மரணம் வரையில் தொடர்ந்தது.
கட்சிக்காக வசூலிக்கப்பட்ட பணம் தொடர்பான சர்ச்சையும் எழுந்ததால், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், தயாராக அதற்கும் கணக்கு காட்டினார்கள். ‘‘பொருளாளர் திருநாவுக்கரசர், கட்சிக்குக் கோடிக்கணக்கில் பணம் சேர்ந்துவிட்டது போல பேசுகிறார். மொத்தம் சேர்ந்த தொகையே 22 லட்சம் ரூபாய்தான்’’ எனச் சொன்னார் ஜெயலலிதா. பிறகு நடந்த பிரஸ்மீட்டில், ‘‘கூட்டத்துக்கு வராத மூவரிடமும் விளக்கம் கேட்கப்படும்’’ என்றார் ஜெயலலிதா. ‘‘கட்சிக்கு நிதி திரட்டியதில் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறதே...’’ எனச் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘‘வெளியே குரைக்கும் நாய்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை’’ எனக் காட்டமாகச் சொன்னார் ஜெயலலிதா.
(தொடரும்)