மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கடல் தொடாத நதி - 32 - எல்லா கதைகளும் தொடர்கதைகள்தான்...

கடல் தொடாத நதி - 32 - எல்லா கதைகளும் தொடர்கதைகள்தான்...
பிரீமியம் ஸ்டோரி
News
கடல் தொடாத நதி - 32 - எல்லா கதைகளும் தொடர்கதைகள்தான்...

அன்னக்கிளி ஆர்.செல்வராஜ்

டல் தொடாத நதி வைகை. ராமநாதபுரம் மாவட்டத்தைத் தொட்ட திருப்தியோடு நின்றுவிடும். வாழ்க்கைப் பயணமும் ஒரு இலக்கை அடைந்துவிடுவதற்கானது அல்ல. பயணிப்பதில் இருக்கிற சுகம், அடைந்து விடுவதில் இருப்பதில்லை. முழுமை என நாம் சொல்வது எல்லாம் ஒரு வசதிக்காகத்தான். ஒன்று முடியும் இடத்தில் இன்னொன்று தொடங்குகிறது. கற்றது கைம்மண் அளவு. எல்லாவற்றையும் படித்துவிட முடியாது. எல்லாவற்றையும் குடித்துவிட முடியாது. எல்லாவற்றையும் நாமே வாழ்ந்துவிடவும் முடியாது.

ஒரு நாள் மாலை. கொடைக்கானல் மலையில் படப்பிடிப்பு. இரவு நெருங்கியதும் எல்லோரையும் கிளம்பிப் போகச் சொல்லி விட்டு, காலாற நடந்து மலைச் சரிவின் ஓரிடத்தில் இருந்து கீழே பார்க்கிறேன். பூமியில் நட்சத்திரங்கள் இறைந்துகிடப்பது போன்ற அழகு. விளக்கு வெளிச்சங்கள் எல்லாம் விண்மீன்களாக மின்னுகின்றன. அதன் அழகிலே லயித்துப் போய் ஒரு பாறை மீது அமர்கிறேன். ‘இறைவனின் காலடியே இவ்வளவு அழகாக இருக்கிறதே... அவனுடைய மணிமுடி எத்தனை அழகாக இருக்கும்?’ என்று அந்தப் பாறையிலே யாரோ எழுதியிருந்த வாசகம் கண்ணில் படுகிறது. இங்கிருந்து பூமியின் அழகைப் பார்த்த யாரோதான் அதை எழுதியிருக்கிறார்கள். அந்த வாக்கியம் ஒரு தத்துவார்த்த தரிசனமாகத் தோன்றுகிறது.

‘நினைவுகள் முதியவர்களுக்குச் சொந்தம். கனவுகள் குழந்தைகளுக்குச் சொந்தம்’ என்று சொல்வார்கள். காலத்தை எழுபது ஆண்டுகளுக்குப் பின்பக்கமாக சுருட்ட முயல்கிறேன். அப்போது நான் கற்றது நினைவுக்கு வந்தது. காலம் இல்லா காலம்... Time in a Timeless Environment. இந்தப் பேரண்டத்தில் எதுவுமே நிலையானதில்லை எனும்போது காலம் எப்படி நிலையானதாகும்? கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் எல்லாமே நாம் வகுத்துக்கொண்ட வீட்டுக் கணக்கு. கண்ணுக்குத் தெரிந்த புழு, பூச்சிகளையும், கண்களுக்குத் தெரியாத கிருமிகளையும் ‘நுண்ணுயிரிகள்’ என்று ஒரே வார்த்தையில் அடக்கிவிடுகிறோம். முப்பதாயிரம் கோடி சூரியன்கள் என முழுமையடையாத கணக்குகளுடன் விரிந்துகொண்டே இருக்கும் இந்த மாபெரும் பிரபஞ்சத்தில், பூமியே கடுகைவிட சிறிதாகிவிட, அதில் வாழும் நாமும் நுண்ணுயிரி ஆகிவிட்டோம்.

கடல் தொடாத நதி - 32 - எல்லா கதைகளும் தொடர்கதைகள்தான்...

இந்த விஞ்ஞானப் பேருண்மையைத் தெரிந்து கொள்ளாமல், சீனப் பெருஞ்சுவரைவிட பெரிய சுவரை, நம் ஒவ்வொருவர் மனதிலும் கட்டிக்கொண்டு... குடும்பமாய் பிரிந்து கிடக்கிறோம். ஊராய், உலகமாய்ப் பிரிந்து கிடக்கிறோம். குறுவாளும் கத்தியும் இனம், மதம் என்று பூமியைக் கீறி பெருங்காயப் படுத்திவிட்டது. விளைநிலங்களில் விவசாயிகள் வீசும் விதை நெல்லைப் போல பாசம், அன்பு, காதல், காமம், கோபம், பகை என்று ஏராளமான உணர்வுகள் நம் மனத்துக்குள் பதிந்துகொண்டன. பூமிக்குள் எது புகுந்தாலும் மக்கிப் போய்விடும். ஆனால், விதை நெல் மட்டும் வீரியத்துடன் முத்துக்கதிர்களாக முளைத்து வரும். மனதுக்குள் மாறுவேடம் போட்டு ஒளிந்திருக்கும் உணர்வுகளும் அப்படித்தான்.

காலப்படகு என்றுமே படைப்பாளிகளை ஏற்றிச் செல்லாது. படைப்புகளை மட்டும்தான் ஏற்றிச் செல்லும். பாற்கடலில் கிடைத்த அமிர்தத்தைக் கடவுளர்கள் குடித்தார்களோ, இல்லையோ... படைப்பாளிகள் குடிக்கவில்லை. தங்களுக்குக் கிடைத்த அமிர்தத்தை மயிலிறகால் தங்கள் படைப்புகள் மீது மட்டும் தடவி விட்டார்கள். அதனால்தான் வால்மீகியின் ராமாயணம், வியாசரின் மகாபாரதம், திருவள்ளுவரின் திருக்குறள் போன்றவை இன்றும் நம்மோடு உரையாடி வருகின்றன.

1946-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் நாள் நான் பிறந்தேன். தந்தை எஸ்.என்.ராஜமாணிக்கம் - தாயார் மதுரவல்லி அம்மாள். என் தாயாருக்கு இசையில் ஈடுபாடு. ‘ஒவ்வொரு ஸ்வரத்துக்கும் நடுவே வரும் மௌனம்தான் சிறந்த இசை’ எனச் சொல்வார். எனக்கு மகாலட்சுமி, ஜெயலட்சுமி என்ற இரண்டு சகோதரிகளும், வீரராகவன், கண்ணன் என்ற இரண்டு சகோதரர்களும் உண்டு. என் மனைவி பெயர், சாவித்திரி. நான் வைகை ஆற்றங்கரையில் வளர்ந்தவன். பிறந்தது சிவகங்கை. மருது பாண்டியர் பூமி. தாயாரின் பிறந்த வீடு அங்கேதான் இருந்தது.

எல்லாக் குழந்தைகளின் தாய் வழி உறவுகள் போலவே என் தாத்தாவும் பாட்டியும் உள்ளங் கையில் சுமந்து என்னை வளர்த்தார்கள். தாத்தா கோதண்டராம நாயுடுவுக்கு இலங்கையின் கண்டி பகுதியில் வியாபாரம். சகோதரர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையால் இந்தியா வந்துவிட்டார். சிவகங்கை ஜென்ம பூமியாகிவிட்டது. என் பாட்டி நிறைய சகோதர, சகோதரிகளோடு பிறந்தவர்; மூத்தவர். நிலாவில் பாட்டி வடை சுட்ட கதையை ஆயிரக்கணக்கான முறை வாய் வலிக்காமல் சொல்வார். அதைத் தொடர்ந்து, காட்டில் வடை சுட்ட பாட்டியைக் காக்கா ஏமாற்றிய கதை.

இப்படி இசையும் கதையும் அரசியலும் கலந்த குடும்பத்தில் நான் வளர்ந்தேன். நான் ஒரு கதாசிரியனாக வளர்ந்தது காலத்தின் கட்டாயமாகி விட்டது. சமீபத்தில் ஒரு சிறுவர் கதை படித்தேன். காட்டில் சுயம்வரம். மயில், தன் மணவாளனைத் தேர்வு செய்ய வேண்டும். எல்லா மிருகங்களும் கலந்துகொண்டன. மாலையோடு ஒவ்வொரு விலங்காகப் பார்த்தபடி வருகிறது மயில். சுயம்வரத்தில் காகம் வெற்றி பெற்றது. மயில் அதற்கு மாலைசூடும் வேளை. போலீஸ் ஜீப் ஒன்று காட்டுக்குள் நுழைகிறது. காகத்தைப் பார்த்து ‘‘யூ ஆர் அண்டர் அரெஸ்ட்’’ என்கிறார் போலீஸ்காரர். ‘‘ஏன்... ஏன்?’’ என்கின்றன எல்லா விலங்குகளும். ‘‘பாட்டியிடம் வடை திருடிய குற்றத்துக்காக இவ்வளவு நாட்களாக இந்தக் காகத்தைத் தேடிக்கொண்டிருந்தோம். கைது செய்கிறோம்’’ என்கிறார் போலீஸ்காரர்.

நம்மோடு சேர்ந்து கதைகளும் இப்படித்தான் வளர்கின்றன. வாசிக்கும் பரவசத்தைத் தருகின்றன.

எல்லாக் கதைகளும் தொடர்கதைகள்தான்... வாழ்வினைப் போலவே. எல்லா வாழ்வும் கடல் தொடாத நதிதான்... கதைகளைப் போலவே!

சந்திப்பு: தமிழ்மகன்

(இப்போதைக்கு நிறைவு!)

பினாமி குயின்!

விட்டா... அர்ஜென்டினா நாட்டு அரசியல் பின்னணியில் எடுக்கப்பட்ட பரபரப்பான படம். அதிபரின் மனைவியும், நாட்டின் முதல் பெண்மணியுமான ஈவிட்டா, 33 வயதில் இறந்துபோனதாக செய்தி ஒலிபரப்பாகும். மக்கள் எல்லாம் துயரக் கடலில் கலங்கி நிற்பார்கள். ‘யார் அந்த ஈவிட்டா... ஏன் மக்கள் கலங்கி நிற்கிறார்கள்’ என ஃப்ளாஷ்பேக்கில் கதை நகரும்.

கடல் தொடாத நதி - 32 - எல்லா கதைகளும் தொடர்கதைகள்தான்...

ஒரு சிறுநகரத்தின் அடித்தட்டுக் குடும்பத்தில் பிறந்த ஈவிட்டா, நல்ல வாழ்க்கைக்காகப் போராடுகிறாள். 15 வயதில் ஒரு பாடகனோடு நட்பு. அவன் உதவியோடு தலைநகரம் பியூனஸ் அயர்ஸ் வருகிறாள். அடுத்தடுத்து பிரபலமானவர்களின் தொடர்பு கிடைக்க, அவளும் பிரபலமாகிறாள். ஒரு மாடலாக, ஒரு நடிகையாக புகழும் பணமும் சேரத் தொடங்கும். ஒரு நிலநடுக்கப் பாதிப்புக்கு நிதி திரட்டும் பொறுப்பு அவளிடம் வருகிறது. பெரோன் என்ற அரசியல் தலைவரோடு சேர்ந்து இதைச் செய்கிறாள். ஈவிட்டாவால் அவருக்குப் புகழ் கிடைக்கிறது. நாட்டின் அதிபர் மிரண்டு போய் பெரோனைச் சிறையில் அடைக்கிறார். ஈவிட்டா மக்களைத் திரட்டி, பெரோனை விடுவிக்கப் போராட்டம் நடத்துகிறாள். தொடர்ந்து தேர்தல் நடக்க, பெரோன் ஜெயிக்கிறார். ஈவிட்டாவைத் திருமணம் செய்துகொள்கிறார்.

ஆடம்பரமான ஆடைகள், அணிகலன்கள், சொகுசு கார்கள் என வாழ்க்கை நடத்தும் ஈவிட்டா, ஒரு கட்டத்தில் அதிபருக்கு பினாமியாக நாட்டையே ஆள்வாள். ஒரு கட்டத்தில் அவளுக்குப் புற்றுநோய் வர, அது அவளுடைய வாழ்க்கையையே மாற்றிப்போடும். மக்கள் நலனில் நிஜமாகவே அக்கறை செலுத்துவாள். மெல்ல மெல்ல மக்கள் மனதில் மகத்தான இடத்தைப் பிடிப்பாள். நாடே கொண்டாடும் நேரத்தில், தன் இளம் வயதில் நோய் தாக்கி இறந்துபோவாள். அரசியலுக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத ஒரு பெண், எப்படி வேக வேகமாகக் காய்களை நகர்த்தி நாட்டின் அதிகார சக்தியாக மாறுகிறாள் என்பது ஆக்‌ஷன் படத்தைவிட பரபரப்பாக இருக்கும். மடோனா நடித்த படங்களில் வசூல் சாதனை படைத்த படமும்கூட.

‘கடல் தொடாத நதி’ தொடர் வெளிவந்ததில் அளவற்ற மகிழ்ச்சி. பழைய நினைவுகள் புதுப்பிக்கப்பட்டதோடு, புதிதாய் ஏராளமான நண்பர்கள்... மிக்க நன்றி. என் நினைவுகளின் எல்லைக்குள் வராமல் யார் பெயராவது விடுபட்டிருந்தால், மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். தமிழ்மகன் மென்மையானவர் மட்டுமல்ல... மேன்மையான படைப்பாளி. அவருக்கு என் வாழ்நாள் அன்பு. ஆமைகள், நத்தைகள் போல் முதுகில் வீடுகளைச் சுமக்காமல், கனவுகளை மட்டுமே சுமந்தபடி நகர்ந்துகொண்டே இருக்கும் எனக்குப் புதிதாய் ஒரு சுவாசம்.