
சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,
நேற்று மாலை ஓடத்தொடங்கியவர்கள் இன்னும் நின்றபாடில்லை. தேக்கன் வழக்கம்போல் முன்னால் ஓடிக்கொண்டிருந்தான். மாணவர்கள் வரவேண்டும் என்பதற்காகச் சற்றே வேகம் குறைத்து ஓடினான். அவர்கள் விடாப்பிடியோடு ஓடிவந்தனர். அவர்களின் பிரச்னை ஓடுவதில் இல்லை. ஓடிக்கொண்டே இருப்பதால், தண்ணீர் தாகமெடுத்தது. நீர் குடித்துக் கசப்பை விழுங்கும் துணிவு யாருக்கும் இல்லை.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் சாமப்பூ, கார்காலத்தில்தான் பூக்கத் தொடங்கும். அதன் பிறகே மாணவர்களை அழைத்துக்கொண்டு காடறியப் புறப்படும் சடங்குகள் தொடங்குகின்றன. குலநாகினி மலைவேம்பின் இலையில் சாறெடுத்து அடித்தொண்டையில் ஊற்றும் நிகழ்வுதான் காடறிதலின் தொடக்கம்.
காட்டின் ஆதிக்கசப்பு அது. நஞ்சினும் மேலான கசப்பு அது. அக்கசப்பினைப்பற்றி எவ்வியூரில் யாரும் எப்போதும் பேசவே மாட்டார்கள். வாரக்கணக்கில் விடாது சுரக்கும் கொடுங்கசப்பை விழுங்கவேண்டியதிருக்கும் எனத்தெரிந்தால் சிறுவர்கள் காடறியப் புறப்படவே தயங்குவார்கள். எனவே, இதுபற்றிப் பேசுவதேயில்லை.
கொற்றவையை வழிபட்டபின் ஆதிமலையின் செங்குகையை அன்றிரவே அடைவார்கள். அதன்பின் சில மாதங்கள் அங்குதான் தங்குவார்கள். மழைக்காலமாதலால், அதிகம் தாகமெடுக்காது. உணவு வழக்கம்போல் உண்ணும் முறையில் இருக்காது. நாள்தோறும் ஒரே ஒரு காய் மட்டுமே தரப்படும். கடித்தும் சுவைத்தும் உண்ணவேண்டியிருப்பதால், விழுங்கும் தேவை மிகமிகக் குறைவே. காயின் துவர்ப்பு, தேங்கி நிற்கும் கசப்பை இறுகப்பிடித்து இறங்கும். கசப்பும் துவர்ப்பும் சுவைநாளங்களின் அடிவேரில் நிலைகொள்ள வைக்கப்படும்.
காயின் அளவும் நாளாக ஆகச் சிறிதாகிக்கொண்டே இருக்கும். இறுதியில் நெல்லிக்காய் அளவேயுள்ள கனி மட்டுமே ஒரு நாளைக்குப் போதுமானதாக மாறிவிடும். பிறந்ததில் இருந்து நன்றாக உண்டு வளர்ந்த அவர்களின் உடல் இறுகுவதற்கான பயிற்சி அது. தசைகள் எலும்புகளோடு ஒட்டிப் பாறையின் இறுக்கம் உடலுக்கு வாய்க்கும். அதன்பிறகு, செங்குகையிலிருந்து வெளியேறுவார்கள்.

குகைவாழ்க்கை முடியும்போது கசப்பு மட்டுமன்று, எல்லா சுவைகளும் நாக்கிலிருந்து வடிகட்டப்பட்டுக் கீழிறக்கப்பட்டிருக்கும். மேல்தாடை மட்டுமே சற்று சுவை உணர்வுகொள்வதால், நடுவில் தாழ்ந்திருக்கும் மனித நாக்கு மேல்நோக்கி உயரவே தொடர்ந்து முயலும்.
தலைகீழாகப் புரண்டிருக்கும் யானை நாக்கினைப் போன்ற வடிவம் அது. இம்மாற்றம் நிகழும்போது, பேச்சுக்குழன்று பின் கொஞ்சம் கொஞ்சமாகச் சரியாகும். காட்டின் மொழி விதவிதமான ஓசைகளைக்கொண்டது. அந்த ஓசைகளை எழுப்ப மனித நாக்கின் இயல்பான வடிவத்தால் முடியாது. பறவைகளும் விலங்குகளும் எழுப்புமோசைக்கு எதிரோசை கொடுக்க மேல்தாடையைத் தொட்டுக்கிடக்கும் நடுநாக்கே அடிப்படை ஆதாரம்.
ஓசையெழுப்பும் முழுத்திறனும் ஒருவனுக்கு வரும்வரை ஒற்றைக் கனியின்றி வேறு உணவு உண்ண அவனை அனுமதிப்பதில்லை. காடறிதலின் முதற்பயிற்சி காட்டின் மொழியைக் கற்றுக்கொள்ளுதல்தான். அதற்கான தொடக்கத்தைத்தான் குலநாகினி அடிநாக்கில் வைத்து அனுப்புகிறாள். அங்கிருந்து தொடங்கி மரநாயில் வந்து முடிகிறது அது.
காட்டு விலங்குகளின் ஓசையை அறிவதில் மிகக்கடினமானது மரநாய் ஓசைதான். மரமேறி விலங்குகளின் வகையிலும் சேராத, மண்மீது நடக்கும் விலங்கின் வகையிலும் சேராத மரநாய் எழுப்பும் ஓசை, முற்றிலும் மாறுபட்ட தன்மையைக்கொண்டிருக்கும். அதனைத் துல்லியமாகக் கவனித்து அறிதல் எளிதன்று. அவ்வோசையின் முடிப்பில் இருக்கும் சிறுசுழிவை நுட்பமாகக் கவனித்து அறியவில்லையெனில் எளிதில் ஏமாற்றமடைவோம். ஓசையின் முடிப்பில் இருக்கும் அச்சுழிவை மீண்டும் மீண்டும் எழுப்பிப்பார்த்தே உணரவும் அறியவும் முடியும்.
கீழ்வளைந்திருந்த நடுநாக்கு இப்பயிற்சியினால் மேல்நோக்கி எழுந்து பின் சமதளமடையும். இவை நிகழ்ந்து முடியும்போது, உள்ளுக்குளிருந்து விடாது சுரந்துகொண்டிருந்த கசப்பு எப்போது, எங்கே மறைந்ததென்ற நினைவே இருக்காது.
இப்பயிற்சிகள் எதுவும் நிகழாமல், அடித்தொண்டையில் வைக்கப்பட்ட கொடுங்கசப்பு உள்ளிறங்கியபடியே இருக்க மாணவர்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். ஓட ஓட தாகமெடுக்கிறது. நீரை அருந்தவோ, வேறு உணவை உண்ணவோ முடியவில்லை. ஒரு மிடறு எச்சில் உள்ளே போனாலே, கொடுங்கசப்பு உள்ளிறங்கும் என்பதை நினைத்து தேக்கன் மிகவும் கவலைகொண்டிருந்தான். ‘அவர்களின் தொண்டைக்குழி முழுவதும் இந்நேரம் புண்ணாகியிருக்கும். இதுவரை காடறியப்போன மாணவர்கள் யாரும் கண்டிராத கொடிய சோதனையை இவர்கள் கண்டுகொண்டிருக்கின்றனர். இவர்களின் ஓட்டத்தை நிறுத்தச் சொல்லவும் முடியாது. ஓடியபடியே இருந்தால் இவர்கள் என்ன ஆவார்கள் என்றும் தெரியவில்லை’ எனச் சிந்தித்தபடியே தேக்கன் ஓடினான். ஆனாலும் அவனது கவனம், வேகத்தைக் கூட்டும் செயலோடு தன்னையறியாமலே இணைந்திருந்தது.
அடர்காட்டினுள் புகுதல் எளிதல்ல. செடிகொடிகளை விலக்கியும் அறுத்தும் முன்னகர நினைத்து எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியும் நகரமுடியாத பெரும்புதரை நோக்கியே நகர்த்திச்செல்லும் ஆபத்துண்டு. இயற்கையின் தன்மைகளைத் துல்லியமாக அறிந்தவர்களாகத் தான் அவர்கள் இருந்தனர்.எனவே, எக்காட்டுக்குள்ளும் நுழைந்து வெளியேறும் திறன் கொண்டிருந்தனர்.

காலம்பன், சரிவுகளில் கற்கள் உருளாமல் சரசரவென மேலேறிக்கொண்டிருந்தான். அடிபட்டவனால் வேகமாக நடக்க முடியவில்லை. மற்றவர்கள் உதவிசெய்தாலும் அவனால் ஒத்துழைக்க முடியவில்லை. ஆனாலும், அவனை விட்டுவிடக் கூடாது என்பதில் நால்வரும் உறுதியாக இருந்தனர்.
நன்றாக விடிந்துவிட்டது. பின்னிக்கிடக்கும் மரங்களுக்கிடையில் ஊடுருவிக் கதிரவனின் ஒளிக்கதிர்கள் கீழிறங்கிக்கொண்டிருந்தன. ‘நம்மை அவர்கள் பார்த்துவிட்டார்கள். எனவே, விரைவாகச் செல்ல வேண்டும். காட்டை அவர்கள் அளவுக்குப் புரிந்தவர்கள் யாருமில்லை. எனவே, அவர்களின் தாக்குதல் எப்படி இருக்குமெனக் கணிக்க முடியாது. எப்படி இருந்தாலும் நம்மைக் காட்டுக்குள் வைத்து ஒன்றும் செய்ய முடியாது’ என்று உள்ளுக்குள் எண்ணங்கள் ஓடியபடி இருக்க, காலம்பன் வேகத்தைக் கூட்டிக்கொண்டேயிருந்தான்.
வழியமைத்தபடி முன்னால் ஓடிக்கொண்டிருந்த காலம்பனுக்கு இக்காட்டில் ஏதோ ஒரு தன்மை வேறுபட்டிருப்பதாகத் தோன்றியது. என்ன என்பது புலப்படவில்லை. பின்னால் வருபவனின் முனங்குதல் சற்றே அதிகமானபடி இருந்தது. நூலாம்படையைக் கிழித்து விலக்குவதைப்போல கைவிரல்களால் எவ்வளவு பெரிய மரக்கொடிகளையும் எளிதில் விலக்கி முன்னேறினான்.
நேரமாகிக்கொண்டிருந்தது. காலம்பனின் கவனம் கூர்மைகொண்டதாக இருந்தது. மேலேறிக்கொண்டிருந்தவன் சட்டென நின்றான். “பொழுது விடிந்ததிலிருந்து பறவைகளின் குரலோசை எதுவும் கேட்கவில்லை என்பதைக் கவனித்தீர்களா?”
மற்றவர்களுக்கும் அப்போதுதான் அது பிடிபட்டது. மேலே அண்ணாந்து பார்த்தபடி பார்வையை அங்குமிங்குமாக ஓடவிட்டனர். ‘செடிகொடிகளை விலக்கியும், செத்தைகளை மிதித்தும் வேகவேகமாக வந்துகொண்டிருந்ததால், பிற ஓசைகளைக் கூர்ந்து கவனிக்காமல் இருந்துவிட்டோம்’ என்று தோன்றியது. ‘பறவைகள் ஏன் காட்டின் இப்பகுதியில் இல்லை’ என்று சிந்தித்த கணத்தில் காலம்பன் சொன்னான், “ஒருவேளை, இது இரத்தச்சிலந்திகள் இருக்கும் காடாக இருக்கலாம். அதனால்தான், பறவைகள் தங்கவில்லை.”
ஒருகணம் திகைத்து நின்றனர். “இக்காட்டின் நடுப்பகுதியில் நாம் நிற்கிறோம். எவ்வளவு விரைவாக வெளியேற முடியுமோ அவ்வளவு விரைவாக வெளியேற வேண்டும்” என்றான்.
அடிபட்டவன் சொன்னான், “என்னைத் தூக்கிச் செல்வதன் மூலம் எல்லோரின் ஓட்டமும் தடைபடும். நாம் கொண்ட உறுதி நிறைவேறாமற் போய்விடும். எனவே, என்னை விட்டுவிட்டு இக்கூடையைக் கொண்டுசெல்லுங்கள். விரைந்து இக்காட்டைவிட்டு வெளியேறுங்கள்.”
காலம்பனாலும் மற்றவர்களாலும் இப்போது அவன் சொல்வதை மறுக்க முடியவில்லை. கூடையைத் தோள்மாற்றினர். சற்றுக் குறைந்திருந்த தேவாங்கின் சத்தம் மீண்டும் கூடியது. தோள்களில் பற்றியிருந்த அவன் கைகளை விலக்கமுடியவில்லை. அவர்களின் தயக்கத்தை உணர்ந்த அவன் வலியை மீறிய திறன்செலுத்தி கைகளைத்தூக்கி அவர்களிடமிருந்து விலக்கிக்கொண்டான்.
அவர்களைப் பார்த்தபடி அருகிருந்த ஈருவல்லி மரத்தின் ஓரம் சரிந்து உட்கார்ந்தான். அவர்கள் மீண்டும் முழுவேகத்தோடு ஓடத்தொடங்கினர். அவர்களைவிட விரைவாக அவை மரத்தின் மேலிருந்து இறங்கத்தொடங்கின.
ஆதிமலையின் இரண்டாம் மடிப்பை அடையும் வரை அவர்கள் ஓட்டம் குறையவே இல்லை. எரிவண்டுகளின் தாக்குதலைப் பாரி எப்படிச் சமாளிக்கப்போகிறானோ என்று நினைத்தபடி முன்னால் ஓடினர். ஒருமுறைகூட திரும்பிப் பார்க்கவில்லை. கொப்புகளைப் போகிறபோக்கிலே உடைத்து, கிட்டநெருங்கும் வண்டுகளை அடித்து விலக்குவது, முன்னால் செல்பவனுக்குப் பாதையின் திசையைச் சொல்வதென்று பாரியெழுப்பிய ஓசைகள் மட்டுமே ஆங்காங்கே கேட்டுக்கொண்டிருந்தன.
பாரி சொல்லும் திசை எங்கு போகிறது என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியவில்லை. ஈன்ற புலியல்ல, அதனைவிட வேகமாகப் பறக்கும் எரிவண்டு துரத்துகிறது; தப்பிக்க மட்டுமல்ல, எதிரிகளைத் தாக்கவும் நிகழும் ஓட்டமிது. உச்சவேகத்தில் ஓடிக்கொண்டிருந்தனர் மாணவர்கள். ‘நாள்முழுவதும் ஓடினாலும் எரிவண்டுகள் விரட்டுவதை விடாது. மாணவர்கள் இன்னும் சிறிதுநேரத்தில் சோர்ந்து விடுவார்கள். என்ன செய்யலாம்’ என்று சிந்தித்த பாரி, வழியைச் சற்றே மாற்றி சரிவுப்பாறைகளுக்கு அருகிலிருக்கும் விருகமரத்தை நோக்கி அவர்களை ஓடவிட்டுக்கொண்டிருந்தான்.

முன்னால் ஓடிக்கொண்டிருந்த முடிநாகன் விருகமரத்தைக் கடந்தபோது, பாரி ஓட்டத்தை நிறுத்தாமலேயே குனிந்து கற்களை எடுத்தான். எரிவண்டின் ஓசை காதைவிட்டு அகலாமல் துரத்தியபடியே இருந்தது. முடிநாகன் மரத்தை ஒட்டி இடப்புறம் திரும்பும்போது பாரி, கல்லை எடுப்பதை ஓரக்கண்ணால் பார்த்தான்.
‘விரட்டிவரும் இத்தனை வண்டுகளைக் கல்லால் அடித்து வீழ்த்திவிட முடியுமா? அதுவும் பறக்கும் வண்டுகளை ஒவ்வொன்றாய்க் கல்லெறிந்து வீழ்த்துவதென்பது முடிகிற செயலா? அதற்குள் வண்டு எத்தனை பேரைக் கடிக்குமோ? இன்னும் எவ்வளவு நேரத்துக்கு இவ்வளவு வேகமாக ஓடமுடியும்? அவசரப்பட்டுக் கூட்டைக் கலைத்துவிட்டோமோ?’ என்று சிந்தித்தபடியும் பாரியின் செயலைப் புரிந்துகொள்ள முடியாமலும் ஓடினான் முடிநாகன்.
எடுத்த கல்லை முழுவிசையோடு குறிபார்த்து எறிந்தான் பாரி. அவனது இலக்கு எரிவண்டல்ல; பாறையின் பொடவு. அப்பொடவுகளுக்குள் என்ன இருக்கிறது எனப் பாரிக்குத் தெரியும். அவன் எறிந்த கல், பொடவின் விளிம்பில்பட்டுத் தெறித்தது. கற்கள் சிதறிச் சரிந்தன. கல்லோசை கேட்டதும் பொடவுக்குள் இருந்து கருங்கொண்டை வல்லூறுகளின் நீள்கழுத்துகள் எட்டிப்பார்த்தன. பார்த்த கணத்தில் அவை சிறகு விரித்து இறங்கத் தொடங்கின. சிறுபூச்சிகளை விட்டில் வேட்டையாடுவதைப் போல எரிவண்டுகளை வேட்டையாடத் தொடங்கின கருங்கொண்டை வல்லூறுகள்.
சடசடக்கும் வல்லூறுகளின் இறகுகள் குறுக்கும் நெடுக்குமாகப் பறந்தன. ஓடிக்கொண்டிருந்த கால்களின் வேகத்தைத் தளர்த்துவதற்குள் காற்றில் எரிவண்டுகளின் ஓசை எதுவும் மிச்சமில்லை. இறங்கிய வல்லூறுகள் வேலையை முடித்துவிட்டு மீண்டும் மலைப்பொடவை நோக்கி மேலேறின.
வல்லூறு ஒன்றின் அலகிலிருந்து உதிர்ந்த எரிவண்டின் இறகு ஒன்று முன்னால் ஓடிக்கொண்டிருந்த குறுங்கட்டியின் தோளிலே விழுந்தது. ஓடியபடியே அதனை எடுத்தான் உளியன். ‘இன்னும் சிறிதுநேரத்தில் பாரியின் வேட்டையும் இப்படித்தான் நிகழப்போகிறது. காற்றிலிருந்து கணநேரத்தில் எரிவண்டுகள் அகற்றப்பட்டதைப்போல, இக்காட்டிலிருந்து எதிரிகள் அகற்றப்படுவார்கள்’ என எண்ணியபடி ஓடினான். எரிவண்டு விரட்டியபொழுதைவிட கூடுதல் வேகங்கொண்டன மாணவர்களின் கால்கள்.
பின்னால் நடப்பது மட்டுமல்ல, முன்னால் தங்களை எப்படி நடத்திக்கொண்டிருக்கிறான் பாரி என்பதும் மாணவர்கள் அறியாததுதான். ஒரு கல் எறிந்து முடிநாகன் கூட்டைக் கலைத்தான். மறு கல் எறிந்து அந்த ஆபத்தைக் களைந்தான் பாரி. காட்டில் பிற எந்த ஆயுதத்தையும்விட வலிமைமிக்கது காடு பற்றிய அறிவுதான். அதில் பாரிக்கு இணைசொல்ல யாருமில்லை.

இடைநில்லாது ஓடிவந்தவர்கள் ஆதிமலையின் இரண்டாம் மடிப்பை அடைந்தனர். கால்களுக்குச் சற்று ஓய்வு தேவைப்பட்டது. இளைப்பாறலாம் என நினைத்து மூச்சிரைக்க நின்றனர். ‘முடிநாகன் ஏன் இவ்வாறு நடந்துகொண்டான், மாணவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்’ என்ற எண்ணம் பாரியின் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. ‘எதிரிகள், தேக்கன், மச்சக்கடவு, எலிவால் முகடு என்று தனித்தனியாக அவர்கள் சொல்ல முயலும் முழுமையற்ற சொற்கள் எதைக் குறிக்கின்றன என்று சிந்திக்கும்போதெல்லாம் தேக்கன் கொடுக்கும் பயிற்சியின் எண்ணற்ற உத்திகள் எல்லாவற்றையும் விழுங்கி நிற்கின்றன.’
மாணவர்கள் இளைப்பாறட்டும் என்று நின்றுகொண்டிருந்த பாரி, நாற்புறக் காட்டையும் சுற்றிப் பார்த்தான். ஏதோவொரு திசையிலிருந்து மாறுபட்ட ஓசை கேட்டது. மூன்றாம் மடிப்பின் இடப்புற மூலையில்தான் அது கேட்கிறது என்பதை அறிய முடிகிறது. என்ன ஓசை என்று கூர்ந்து கவனித்தான். `அது அழுகுரற் பறவையின் ஓசை. குத்துக்கல் பொடவுகளில்தான் அது தங்கும். அதனை யாரோ கலைத்துள்ளனர். இல்லையென்றால் இவ்வளவு ஓசை எழுப்பாது’ என எண்ணிய பாரி, ஓசையைக் கேட்டபடி அந்தத் திசையைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.
‘மூன்றாம் மடிப்பு முழுவதும் இருப்பது இரத்தச்சிலந்திகளின் காடு. எனவே, தேக்கன் இதற்குள் போயிருக்க மாட்டான். இக்காட்டைக் கடக்க வலப்புற ஓரத்தைப் பயன்படுத்த முடியாது. பெருஞ்சரிவுகளையும் பள்ளங்களையும் கொண்டது அவ்வோரம். இடப்புற ஓரத்தை மட்டுமே பயன்படுத்த முடியும். அப்பகுதியை நடந்து கடந்தால், அழுகுரற் பறவை ஏன் இப்படி கலைந்து கத்துகிறது?’ என்ற வினா தோன்றியபோது இன்னோர் எண்ணமும் தோன்றியது. ‘இரவுப் பயணத்தில் மாணவர்களில் யாரேனும் ஒருவன் குத்துக்கல் பொடவில் சரிந்து விழுந்திருப்பானோ? என்னவாயிருக்கும்? பெரும்பெரும் பிளவுகளைக்கொண்ட பள்ளமல்லவா?’ என்று எண்ணியபடி, “நீங்கள் இளைப்பாறிவிட்டு வாருங்கள், நான் முன்னே செல்கிறேன்” என்று சொல்லிவிட்டு ஓடத்தொடங்கினான் பாரி.
பாரியின் கால்களைப் பார்த்தபடி இருந்த முடிநாகனின் முகத்தில் இதுவரை இல்லாத மகிழ்வு பூக்க ஆரம்பித்தது. குனிந்து கால்முட்டியில் கை வைத்து மூச்சிரைத்தபடியே முணுமுணுத்தான், “தேக்கன் சொன்னதைச் செய்து விட்டேன்.”
தேக்கன் கணிப்பு மிக நிதானமாக இருந்தது. ‘அவர்கள் இரத்தச்சிலந்திகளின் காட்டுக்குள் இருந்து எளிதில் தப்பி வெளிவரமுடியாது. தன்னால் தாக்கப்பட்டவன் செயலற்றுப்போயிருப்பான். மீதமுள்ள நான்குபேரில் குறைந்தது இருவராவது சிலந்திகளால் தாக்குண்டு வீழ்ந்திருப்பர். அதற்குத் தப்பி ஒருவனோ, இருவரோதான் வெளியேற முடியும். அப்படி அவர்கள் வெளியேறும்போது மேற்பகுதியின் முனையில் வைத்து அவர்களை மறித்தடிக் கலாம். ஆனால், அவர்களின் உடல்வாகு பெரும்பலத்தோடு இருக்கிறது. எனது இடதுகை சேதமடைந்து இருக்கிறது. மாணவர்கள் எவ்விதப் பயிற்சியும் அற்றவர்கள். இந்நிலையில் அவர்களை வீழ்த்த வழியென்ன?’ என்று யோசித்துக்கொண்டே ஓடியவனுக்கு கருஞ்சுரைக் காயின் நினைவு வந்தது.
‘மாணவர்கள் வேறு எந்த ஆயுதத்தையும் பயன்படுத்து வதைவிட கவண் சுற்றி அடிப்பதைத் திறமையுடன் செய்பவர்களாக இருப்பார்கள். சிறுபிள்ளையிலிருந்து கவண் அடித்துப் பழகுவதால், மிக இயல்பாக அதில் தேர்ச்சி இருக்கும். கருஞ்சுரையைக் கவணில் வைத்து அடித்தால் என்ன?’ என்ற சிந்தனை தோன்றிய கணமே தேக்கனின் நம்பிக்கை பெருகத்தொடங்கியது. கருஞ்சுரைக்காய்க்குள் இருக்கும் பால், துளியளவு கண்ணில்பட்டாற்போதும்; கருவிழி உருகி ஓடிவிடும். மாணவர்களை, எதிரிகளின் முகம்நோக்கி அடிக்க வைத்துவிட முடியும் என்ற நம்பிக்கை வலுப்பெற்றது.
குத்துக்கல் பொடவுக்குள் கருஞ்சுரைக்கொடி படர்ந்துகிடப்பதைப் பலமுறை தேக்கன் பார்த்துள்ளான். அதனால்தான், அங்கு வந்து நின்று பிளவுகளை நோக்கி எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தான்.
பார்க்கவே அச்சங்கொள்ளவைக்கும் பெரும்பிளவுகள். பார்ப்பவனின் தலைசுற்றி உள்ளிழுக்கும் தன்மைகொண்டவை. ஏற்கெனவே ஓட்டத்தாலும், தாங்கிக்கொள்ள முடியாத கசப்பாலும் சற்றே மயக்க நிலையில்தான் மாணவர்கள் இருந்தனர். சிறிதுநேரம் இளைப்பாறவிட்டு எட்டிப்பார்க்க வைத்தான். காலைக்கதிரவனின் ஒளி பாறைப்பிளவுகளுக்குள் இன்னும் முழுமையாக ஊடுருவவில்லை. ‘ஆசான் ஏன் இதனைப் பார்க்கச் சொல்கிறார்?’ என்று புரியாமல் திகைத்தனர். அவரின் கண்கள் பொடவின் இடுக்குகளை அங்குமிங்குமாக உற்றுப்பார்த்துத் தேடிக்கொண்டிருந்தன. சற்றுநேரத்தில் அது கண்ணுக்குத் தட்டுப்பட்டது.
மாணவர்களை அழைத்துக் காண்பித்தார். “அதோ,அந்தப் பிளவுக்குக் கீழே பாறைவெடிப்புகளில் படர்ந்து கிடக்கிறதே, அதுதான் கருஞ்சுரைக்காய்க் கொடி. யாராவது ஒருவன் கீழே இறங்கி அதில் உள்ள காய்களைப் பறித்து வரவேண்டும்” என்றார்.
எல்லோருக்குள்ளும் தயக்கம் இருந்தது. ஆனாலும், தயக்கத்தை மீறி கீதானி தயாரானான். அருகில் விளைந்துகிடந்த கட்டுக்கொடியின் தூரை அறுத்து அவன் பிடித்து இறங்க வழிசெய்தனர். கீதானி உள்ளிறங்கினான். மேலே இருந்து அனைவரும் கொடியை இறுகப்பிடித்து இருந்தனர். தேக்கன் சற்றுத் தள்ளிநின்று பள்ளத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
கீதானி, பாறையின் செதில் பார்த்துக் கால்களைக் கவனமாகத் தூக்கிவைத்து இறங்கிக்கொண்டிருந்தான். சட்டென பொடவுக்குள் இருந்த அழுகுரற் பறவை ஒன்று சடசடத்து வெளியேறியது. ஒருகணம் கீதானி திடுக்கிட்டு மீண்டான். எழுந்த வேகத்தில் மேற்சென்ற அதன் அழுகுரல் எங்கும் கேட்டது. எளிதில் அது ஓய்வதாகவும் இல்லை. நடப்பதை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த தேக்கன் ஒரு கட்டத்தில் கீதானியைப் பார்த்துக் கையை மேல்நோக்கி அசைத்தார். மாணவர்கள் புரியாமல் விழித்தனர். ``அவன் மேலேறட்டும்” என்றார்.
‘பறவை எதிர்பாராமல் பறந்தபோது அவன் திடுக்கிட்டு அஞ்சியதால், தேக்கன் இம்முடிவெடுத்துவிட்டாரோ?’ என்று அவர்கள் நினைத்தனர். கீதானி இறங்குவதற்காகக் கால்தொடையில் கொடுத்திருந்த வலுவை கைப்பிடிக்கு மாற்றி உன்னியபடி மேலேறி வந்தான்.

அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்தித்துக்கொண்டிருந்தார் தேக்கன். அவர் என்ன சிந்திக்கிறார் என்பது அலவனுக்கு மட்டும் புரிந்தது.
`கீழே கருஞ்சுரைக்காய்க்கொடி படர்ந்து கிடக்கும் இடமெல்லாம் ஈயல் புற்று கிடக்கிறது, தேக்கன் இப்போதுதான் அதனைப் பார்த்துள்ளார். நான் கீதானி இறங்குமுன்பே பார்த்துவிட்டேன்’ என்று மனதில் சொல்லிக்கொண்டான் அலவன்.
ஈயல் என்பது சிறகு முளைத்த மலையெறும்பு. மற்ற எறும்புகள் மண்ணுக்குள் துகள் எடுத்துப் புற்று உருவாக்குவதைப்போல, இது பாறைகளின் மேற்பரப்பை உரித்துப் புற்றமைக்கும். அதன் கொடுக்குகள் அவ்வளவு வலிமைமிக்கவை. அதுவும் ஏழுகண் வைத்துப் புற்றுக்கட்டக்கூடியவை. எந்த உயிரினமாவது அதற்கு ஆபத்து விளைவிக்கப்போகிறது என்று தெரிந்தால், ஒரே நேரத்தில் புற்றின் ஏழுகண்களிலும் இருந்து அவை பீச்சியடித்துக்கொண்டு வெளியில் வரக்கூடியவை. `ஸ்ஸ்ஸ்ஸ்’ என்று பாம்பின் சீற்றம்போல இறகடித்து வந்து மொய்க்கத் தொடங்கினால், உயிரினங்கள் எவையும் தப்பித்து வெளியேற முடியாது. பாறைகளையே உரிக்கும் கொடுக்குகளுக்குச் சதைகளைச் சிதைத்தெடுக்க அதிகநேரம் தேவைப்படாது.
கருஞ்சுரைக்காய் இப்போது அவசியத்தேவை. ஆனால், அதனைச்சுற்றி ஈயல் புற்று இருக்கிறது. என்ன செய்யலாம் எனத் தேக்கன் சிந்தித்தபோது கொடியைத் தனது இடுப்பிலே கட்டிக்கொண்டிருந்தான் அலவன்.
அவன் நஞ்சுமுறி உள்ளவன். ஈயலின் நஞ்சு அவனை ஒன்றும் செய்யாது. ஆனால், மிகக் கவனமாக எடுத்துவிட்டு வெளியேற வேண்டும். ஏனென்றால், அதன் கொடுக்கின் தாக்குதலுக்கு அலவனும் தப்பிக்க முடியாது. அதனால்தான், அலவனைக் கீழே இறக்க தேக்கன் தயங்கினான். ஆனால், வேறுயாரும் நெருங்கக்கூட முடியாத நிலையில், தான் இறங்குவதுதான் பொருத்தம் என முடிவுசெய்து கீழிறங்கினான் அலவன்.
இரத்தச்சிலந்திகளின் கால்கள் மனித உடலில் பட்டால் போதும்; பட்ட இடமெல்லாம் கணநேரத்தில் கொப்புளங்கள் பெருகத் தொடங்கும். அதன் காற்கொடுக்குகள் உள்ளேறி துடிதுடிக்க வைத்துவிடும்.
வேகமாக ஓடுவது முக்கியமல்ல, கவனமாக இதனிடமிருந்து தப்பிப்பதுதான் முக்கியம். காலம்பன், செடிகொடிகளை விலக்குவதை மிகக் கவனமாகச் செய்துகொண்டிருந்தான்.
“அவர்கள் நம்மைப் பார்த்துவிட்டார்கள். இவ்வளவு மெதுவாகச் சென்றால் வெளியேறும்போது சூழ்ந்துவிட மாட்டார்களா?” என்றான் மற்றொருவன்.
அடங்காச் சினத்தோடு இருந்த காலம்பன் சொன்னான், ``தனிமனிதர்கள் நம்மை என்ன செய்துவிடமுடியும்? அதுவும் குருதிநாளங்களில் வெறியேறியிருக்கும் இந்த நிலையில்.”
மிகக் கவனமாகக் கருஞ்சுரையின் மூன்று காய்களைப் பறித்தான் அலவன். பாறையின் மீதிருந்து கண்ணிமைக்காமல் உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தனர் அனைவரும்.
ஈயல்கள் அங்குமிங்குமாக ஒன்றிரண்டு பறந்துகொண்டிருந்தன. சில ஈயல்கள் புற்றுகளுக்கு உள்ளே போவதும் வெளியேறுவதுமாக இருந்தன. பறித்த காயைக் கவனமாக இடுப்புத்துணியிலே கட்டியபடி புற்றின் அப்பக்கம் எட்டிப்பார்த்தான் அலவன். அதன் ஒரு கண்ணுக்குள் பாம்பொன்று நுழைந்துகொண்டிருந்தது. ‘ஈயல் புற்றுக்குள் பாம்பு போகாதே, இது எப்படிப் போகிறது?’ என்று யோசிக்கும்போதுதான் அவனுக்குப் பிடிபட்டது, ஈயல் தனது இரைக்காகப் பாம்பைக் கொன்று உள்ளே இழுத்துச்செல்கிறது என்று. ஒருகணம் மனம் அதிர்ந்தது. அவன் கண்களில் நீல வளையங்கள் பூத்து அடங்கின. ‘விரைவாக மேலேறுவோம்’ என முடிவுசெய்து கையைக் காட்டியவுடன் மேலே இருந்தவர்கள் கொடியை சரசரவென இழுக்கத் தொடங்கினர்.
அவன் மேலேறிய வேகத்தில் இன்னோர் அழுகுரற் பறவை கத்திப் பறக்கத் தொடங்கியது. இதன் குரல் முன்னதைவிட அதிகமாக இருந்தது. அழுகுரற் பறவையின் ஓசையினாலோ, வேறுகாரணத்தினாலோ ஒன்றிரண்டு ஈயல்கள் மேல்நோக்கி வரத்தொடங்கின. அலவன் படுவேகமாக மேலேறி வந்துகொண்டிருந்தான்.
பாரி, குத்துக்கல் பொடவை நோக்கி ஓடிவரும்போது அழுகுரற் பறவையின் ஓசை மீண்டும் கேட்டது. “ஏன் மீண்டும் மீண்டும் இது கத்துகிறது? அங்கு என்னதான் நடக்கிறது” எனக் குழம்பிக்கொண்டிருக்கையில் வலப்புறக்காட்டுக்குளிருந்து உயிர் போக ஒரு மனிதன் கத்தும் ஓசை கேட்டது.
ஓடிவந்துகொண்டிருந்த பாரி இருபுறமுமிருந்து வந்த ஓசைகளைக் கேட்டு திகைத்து நின்றான். அழுகுரற் பறவையின் குரலைவிட கதறும் மனிதக்குரல் அவனது கவனத்தை ஈர்த்தது.
- பறம்பின் குரல் ஒலிக்கும்...