மற்ற எபிசோடுகள்
Published:Updated:

‘மழை தன்னந்தனியே பாடிக் கொண்டிருக்கிறது’ - தமிழ்நதி

‘மழை தன்னந்தனியே பாடிக் கொண்டிருக்கிறது’ - தமிழ்நதி
பிரீமியம் ஸ்டோரி
News
‘மழை தன்னந்தனியே பாடிக் கொண்டிருக்கிறது’ - தமிழ்நதி

படங்கள் : ஆர்.ஆர்.சீனிவாசன்

கோடையின் வெம்மை தணிந்து, மண்ணில் இறங்கவா வேண்டாமா என்று மழை போக்குக் காட்டிக்கொண்டிருந்த ஒரு ஜூன் மாத முற்பகலில், நேர்காணலொன்றின் பொருட்டு குட்டி ரேவதியை முதன்முதலாகச் சந்தித்தேன். அப்போது - ‘பூனையைப் போல் அலையும் வெளிச்சம்’, ‘முலைகள்’, ‘தனிமையின் ஆயிரம் இறக்கைகள்’ஆகிய அவருடைய மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளியாகியிருந்தன. கவிதைகளால் மட்டுமே ரேவதியை அறிந்திருந்தேன் என்பதால், உள்ளூற ஒரு தயக்கம். அவரோ தனது கலகலப்பான பேச்சால் அந்தத் தயக்கத்தைப் போக்கினார். பதில்களில் வெளிப்பட்ட தெளிவும் தீர்க்கமும் எனக்குப் பிடித்திருந்தது.

‘கவிதை எனப்படுவது இலக்கியத்துள் மட்டும் அடங்காது. அதுவோர் இயக்கம்’ என்றார். இலங்கையிலிருந்து வெளியாகும் ‘வீரகேசரி’யின் வார இதழில் இரண்டு பகுதிகளாக அந்த நேர்காணல் பிரசுரிக்கப்பட்டது.

‘மழை தன்னந்தனியே பாடிக் கொண்டிருக்கிறது’ - தமிழ்நதி

2006-ம் ஆண்டு, இலங்கையில் போர்நிறுத்தம் முறிவடைந்த கையோடு சென்னைக்குக் குடிபெயர்ந்து புதிய நிலத்தில் வாழப் பழகிக்கொண்டிருந்த காலம் அது. முதலில் நாங்கள் தங்கியிருந்த வீடு திருவான்மியூர் கடற்கரையருகில் இருந்தது. கடற்கரையில் அமர்ந்தபடி அக்கரையைப் பார்த்துக்கொண்டிருப்பேன். புகலிடத்தின் உயிர்ப்பற்ற ‘பிளாஸ்டிக்’ தன்மையிலான வாழ்வின் மீது சலிப்புகொண்டிருந்த காரணத்தால் அங்கு திரும்பிச் செல்லவும் மனதில்லை. அப்போதுதான், என் ஆன்மாவை உயிர்ப்போடு வைத்திருந்த இலக்கியத்தின்பால் முழுக் கவனத்தையும் செலுத்துவதற்கு நேரம் அமைந்தது.

தமிழ்நாட்டு இலக்கியவாதிகளுள் எனக்கு முதன்முதலில் கிடைத்த நட்பு குட்டி ரேவதியினுடையதே. இருவரையும் இணைக்கும் கண்ணியாக, தனிமை அமைந்தது. திருவான்மியூரிலும் நீலாங்கரையிலும் வாழ்ந்த நாள்களில், குட்டி ரேவதியின் ரோஜா நிற ஸ்கூட்டி வருவதை எதிர்பார்த்தபடி பால்கனியில் நின்றுகொண்டிருந்த நாட்கள் மறக்க முடியாதவை. சிலவேளை, ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள ‘சேமியர்ஸ்’-ல் சந்தித்து மணிக்கணக்காகக் கதைப்போம்.

இரண்டு  பெண்கள் சந்தித்துக்கொண்டால், அவர்களது பேச்சை ஆடையணிகள், வம்புதும்பு இன்னபிறவே நிறைத்திருக்கும் எனப் பொதுப்புத்தியில் பதிந்திருப்பதற்கு மாறாக  எங்கள் உரையாடல் இலக்கியத்தையே சுற்றிச் சுற்றி வரும்.
அத்தகைய உரையாடல் ஊட்டும் போதை தனியானது. நேரங்காலம் மறந்து நீள்வது. வெளியில் சந்திக்கும் நாள்களில் வீடு திரும்ப இரவு எட்டு மணிக்கு மேலாகிவிடும். மின்விளக்குகள் ஒளிரத் தொடங்கிவிட்ட வீதிகள் வழியே ‘எழுத்து மட்டுமே இந்த உலகில் நித்தியமும் உன்னதமும்’ என்கிற கிறக்க நிலையில் வீடு சென்று சேர்வேன். தமிழிலக்கிய உலகம் குறித்த எனது அப்போதைய ‘அறியாமை’ உண்மையில் அழகாக இருந்தது.

“நமக்கெல்லாம் எழுத்துதான் தமிழ்” இதை ரேவதி அத்தனை நம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் சொல்வார்.

தன்னுடைய கவிதைத் தொகுப்புக்கு ‘முலைகள்’ என்று பெயர் வைத்ததும் வீசிய பிரளயத்திற்குப் பிறகும், எழுத்தைக் குறித்து அத்தனை வாஞ்சையோடு அந்த வார்த்தைகளை ரேவதியால் சொல்ல முடிந்தது எங்ஙனம் என்பதுதான் ஆச்சர்யம்.

அந்தத் தொகுப்பு வெளிவந்த பிறகே, இந்தச் சமூகம் பெண்களை எப்படிப் பார்க்கிறது என்பதை, தன்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிந்ததாக அவர் கூறினார். ‘சோ கால்டு’ கலாசாரக் காவலர்கள் அந்தப் பெயரைச் செவியுற்றதும் எப்படிக் கொதித்தெழுந்தார்கள், அடையாளமாக மாற்றினார்கள், கூட்டங்களுக்குக்கூட அழைக்காமல் புறக்கணித்தார்கள், இருட்டடிப்புச் செய்தார்கள், ‘பிரதிகளை வாங்கி எரிப்போம்’ என்று கொந்தளித்துக் கூவினார்கள்… என அவர் விவரித்ததைக் கேட்டபோது வேதனையாக இருந்தது. அதிர்ச்சி மதிப்பீட்டுக்காகவே ரேவதி அந்தச் சொல்லைத் தலைப்பாகச் சூட்டினார் என்றொரு விமர்சனம் எழுந்ததைப் பற்றிக் கேட்டபோது, ‘ஓர் ஆண் அந்தச் சொல்லைத் தனது தொகுப்புக்குச் சூட்டியிருந்தால் இப்படியோர் ஆவேசம் ஏற்பட்டிருக்காதல்லவா?’என்று வினவினார். நிலைமையைத் துணிவோடு எதிர்கொண்டிருந்தாராயினும், அதன்போது எழுந்த எதிர்ப்புகளும் வன்மமும் அவருக்கு மனவுளைச்சலை அளித்திருந்தது பேச்சினிடை புலப்பட்டது. எழுத்து, வாசிப்பின் மீது தனக்கு இருந்த தீராத காதலே அத்தகைய எதிர்ப்புகளைத் தாங்கும் பலத்தைத் தந்ததென அவர் சொல்வார்.

‘மழை தன்னந்தனியே பாடிக் கொண்டிருக்கிறது’ - தமிழ்நதி

தற்காலத் தமிழிலக்கியச் சூழலில் நிலவும் பெண்வெறுப்பு, காழ்ப்புஉணர்வு, குழுவாதம், இருட்டடிப்பு, பாராமுகம் இவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ரேவதி போன்றோர் எழுதவந்த காலகட்டத்தில் அவற்றின் அடர்த்தி எவ்வளவு கடுமையாக இருந்திருக்கும் என்பதை அனுமானிக்க முடியும். அத்தகைய ஆண் மைய இலக்கியச் சூழலை தன்னூக்கத்தினாலும், ஆளுமையின் பலத்தாலும் அவர் கடந்து சென்றார். ஆனால், அதுவே நாளடைவில் அவர் குறித்த எதிர்மறையான மதிப்பீட்டுக்கும் இட்டுச் சென்றது. ஏனெனில், நெளிந்து குழைந்து வளைந்து பேசும் ‘உருவாக்கப்பட்ட’ பெண்களே இலக்கிய மேட்டிமைவாதிகளுக்கு அணுக்கமானவர்கள். நான் குட்டி ரேவதியின் தோழி என்றறிந்ததும், இலக்கியக்காரர்களில் சிலர் கேட்கிற முதல் கேள்வி, ‘அவரோடு உங்களுக்கு எப்படி அணுக்கமாகிறது?’ என்பதாகவே இருந்தது. காலம் குறித்த பிரக்ஞையற்று ரேவதியோடு உரையாடுபவளாகிய எனக்கு அத்தகைய கேள்விகள் அபத்தமாகவே தோன்றின!

‘மழை தன்னந்தனியே பாடிக் கொண்டிருக்கிறது’ - தமிழ்நதி


உற்சாகமாகக் கதைத்துக்கொண்டிருக்கும் அவர் திடீரென “இந்தச் சூழல்ல இருந்து விலகி எங்கையாச்சும் வெளிநாட்டுக்குப் போய் அங்க இருந்து எழுதலாமானு தோணுது” என்பார். “அந்தத் தனிமையை உங்களால தாங்க முடியாது. அது இதைவிடக் கொடுமையா இருக்கும்” என்று பதிலளிப்பேன். சில நிமிடங்களிலேயே அவருடைய அந்த உரத்த சிரிப்புக்கும் பேச்சுக்கும் மீண்டுவிடுவார்.

எத்தகைய தருணங்களிலும் சுயமதிப்பு குறித்து ரேவதி கவனத்தோடு இருப்பார். தோல்விகளையோ, அலைக்கழிப்புகளையோ, போராட்டங்களையோ பொதுவெளியில் காட்டிக்கொள்ள மாட்டார். அவற்றை அடுத்தவர் பார்வைக்கு வைக்கும்போது எதிர்மறையான விளைவுகளே ஏற்படும் என்பதை அறிந்தவராக இருந்தார். மேலும், ஆட்களைப் பயன்படுத்திக்கொள்ளாத ரேவதியின் குணம் எனக்குப் பிடிக்கும். சிக்கலில் இருக்கிறார் என்பதை அவருடைய முகக் குறிப்பிலிருந்து புரிந்துகொண்டு உதவி வேண்டுமா என்று கேட்கிறபோதெல்லாம் உடனடியாக மறுத்துவிடுவார். ஆனால், எங்கள் இருவருக்கும் நெருக்கமான சில நண்பர்கள் சிரமதசையில் இருந்தபோது, அவர்களுக்கு எவ்வகையிலேனும் உதவி செய்ய வேண்டுமென ஆதங்கப்பட்டிருக்கிறார். தன்னால் இயன்றதைச் செய்துமிருக்கிறார். 

பெண்களின் படைப்புகளை மட்டுமே தாங்கிய ‘பனிக்குடம்’ சஞ்சிகை ரேவதியை ஆசிரியராகக்கொண்டு அப்போது வெளிவந்துகொண்டிருந்தது. தவிர, அதே பெயரில் பதிப்பகமும் நடத்திக்கொண்டிருந்தார். ஆனால், தமிழிலக்கியச் சூழலில் பதிப்பாசிரியராக நின்றுபிடிக்கத் தேவையான ‘தகைமை’கள் அவரிடம் இருக்கவில்லை. தனக்குச் சரியெனத் தோன்றுவதை முகத்திற்கெதிரில் சொல்லிவிடும் சமரசமற்ற தன்மையாலும், பொருளாதாரச் சிக்கலாலும் பதிப்பகத்தைத் தொடர்ந்து நடத்துவதற்குச் சிரமப்பட்டார். பதிப்பகத்தை இடைநிறுத்துவதற்கிடையில், ‘பனிக்குடம்’ வழியாகப் பத்து புத்தகங்கள் வெளியாகின. அவை ஒவ்வொன்றும் வடிவ நேர்த்தியால் தனித்துத் தெரியக்கூடியவை. அந்த நேர்த்திக்காக குட்டி ரேவதியும் அவருடைய தோழிகளாகிய நந்தமிழ்நங்கையும் மிதிலாவும் உழைத்த உழைப்பு கொஞ்சநஞ்சமல்ல. பதிப்பு விஷயத்தில் எதிர்பார்க்கும் திருப்தி கிடைக்கும் வரை ரேவதி ஓயமாட்டார் என்பதை, எனது முதல் கவிதைத் தொகுப்பான ‘சூரியன் தனித்தலையும் பகல்’ புத்தக உருவாக்கத்தின்போது உடனிருந்து பார்த்திருக்கிறேன். நந்தமிழ்நங்கை தங்கியிருந்த பல்கலைக்கழக விடுதி முற்றத்தின் கல்லிருக்கைகளில் வைத்தே எனது கவிதைகளைப் பிழை திருத்தினோம். தொகுப்புக்கான தலைப்பு கையில் சிக்க மாட்டேனென்று வெகுநேரமாகக் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தது. தொகுப்பின் முதல் கவிதையில் அது எங்களுக்காகக் காத்திருந்ததை ரேவதிதான் கடைசியில் கண்டுபிடித்தார்.

நேற்றிரவையும் குண்டு தின்றது
மதில் விளக்கு அதிர்ந்து சொரிந்தது
சூரியன் தனித்தலையும் இன்றைய பகலில்
குழந்தைக்குப் பாலுணவு தீர்ந்தது
பச்சைக் கவச வாகனங்களிலிருந்து நீளும்
முகமற்ற சுடுகலன்கள் வீதிகளை ஆள
வெறிச்சிடுகிறது ஊர்


எனத் தொடங்கும் கவிதையும் வேறிரண்டு கவிதைகளும் ஆனந்த விகடனில் வெளியாக இருப்பதைச் சொல்லி, என்னிடம் புகைப்படம் அனுப்பிவைக்கும்படி கேட்டார்கள். திருவான்மியூர் கடற்கரைக்குக் கூட்டிக்கொண்டு போய் ரேவதி எடுத்த புகைப்படங்கள்தாம் அந்தக் கவிதைகளோடு வெளியாகின. ஆனந்த விகடனில் பிரசுரிக்கப்பட்ட என்னுடைய முதற் படைப்பும் அதுதான்.

பொதுவில், பதிப்பாசிரியருக்கும் எழுத்தாளருக்கும் இடையில் இருக்கும் கண்ணுக்குப் புலப்படாத அகழிகள், ரேவதிக்கும் பனிக்குடத்தில் புத்தகம் போட்ட பெண்களுக்குமிடையில் இருக்கவில்லை. இப்போது, பெரும்பாலான பதிப்பாசிரியர்கள் அட்டைப்படங்களை இணையத்தில் தேடிப் பிடிக்கிறார்கள். ரேவதி, கிருஷ்ணப்பிரியா என்ற ஓவியரைக்கொண்டு எனது தொகுப்புக்குப் பொருத்தமான ஓவியத்தை வரையவைத்தார். கவித்துவம் மிக்க நவீன ஓவியம் அது. பத்தாண்டுகளுக்கு முன்பு, அதாவது, 2007-ல் அந்தத் தொகுப்பு வெளியானது. இப்போது அந்தப் புத்தகத்தைக் கையிலெடுத்துப் பார்த்தாலும் அதன் வடிவ நேர்த்தி எனக்கு வியப்பூட்டுகிறது. கலை மீதான அந்த ஓர்மம்தான் இன்று வரை ரேவதியை இயக்குகிறது என எண்ணுகிறேன். கலைசார் கனவுக்கும் பொருளாதாரப் பற்றாக்குறை மற்றும் அன்றாட அலைக்கழிப்புகளுக்கு மிடையிலான இழுபறிகளால் ‘பனிக்குடம்’ சஞ்சிகையும் பதிப்பகமும் இடையில் நின்றுபோயின. அண்மையில் அவரைச் சந்தித்தபோது அவற்றை மீளத் தொடங்குவதற்கான தேவை இருப்பதாகக் குறிப்பிட்டார்.

‘மழை தன்னந்தனியே பாடிக் கொண்டிருக்கிறது’ - தமிழ்நதி

கொஞ்சகாலம் ரேவதியைச் சந்திக்க முடியவில்லை. தொலைபேசியில் பேசியபோது, திரைத்துறையில் பணியாற்றுவதாகக் கூறினார். நெடுநாள் கழித்துச் சந்தித்தோம். இயக்குநர் பரத் பாலாவின் அறிமுகம் கிட்டியதையும், அவர் மூலமாக ஏ.ஆர்.ரஹ்மானின் அறிமுகமும் நட்பும் வாய்த்ததையும் மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டார். இலக்கியத்தினுள் வருவதற்கு முன்னரே ‘காஞ்சனை’ சீனிவாசனோடு ஆவணப் படங்களில் சேர்ந்து பணியாற்றிய அனுபவம் ரேவதிக்குக் கைகொடுத்தது. ‘மரியான்’ படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றியதோடல்லாமல், ‘நெஞ்சே எழு’ என்ற பாடலையும் எழுதினார். ஆண்களே பெருவாரியாகக் கோலோச்சும் சினிமாவில், ரேவதி தனித்துவத்தோடு மிளிர வேண்டும் என விரும்பினேன். விரும்புகிறேன். ‘நெஞ்சே எழு’ பாடலின் ஆரம்ப வரிகளைக் கேட்கிறபோதெல்லாம் அது குட்டி ரேவதி என்ற கவிஞர் இந்தச் சமூகத்தின் பாரபட்சங்களால், காயமுற்றுக்கிடக்கிற பெண்கள் எல்லோருக்குமாக எழுதியதாகத் தோன்றும்.

கவிதை சோறு போடும் என்று அவர் என்றைக்கும் நம்பியவரில்லை. ஆனாலும், இலக்கியத்தை ரேவதி எவ்வளவு நேசிக்கிறார் என்பதை ஒரு தோழியாக அறிவேன். இயக்குநர், பாடலாசிரியர், வசனகர்த்தா, புகைப்படக் கலைஞர், பதிப்பாசிரியர், களப்பணியாளர் எனப் பன்முகங்கள் அவருக்கு உண்டெனினும், அடிப்படையில் தான் ஒரு கவிஞர் என்பதிலேயே பெருமிதங்கொண்டிருப்பவர் ரேவதி.

“திரைத் துறையில் வேலை செய்வது பிடித்திருக்கிறதா? சந்தோசமாக இருக்கிறீர்களா?” என்று, மீண்டும் சந்தித்தபோது கேட்டேன்.

“இலக்கியத்தோடு ஒப்பிடும்போது சினிமாவில் படைப்பாற்றலுக்கு மரியாதை இருக்கிறது” என்றார். 

பொதுவில் ஈழத்துக் கவிதைகளைப் பற்றி ரேவதி நல்லபிப்பிராயம் கொண்டவர். ஓர் ஈழத்துக்காரியாக எனக்கு அதில் உள்ளார்ந்த பெருமிதம் உண்டு. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்னால் ‘முள்ளிவாய்க்காலுக்குப் பின்’ என்றொரு கவிதைத் தொகுப்பைக் கொண்டுவந்தார். புலம்பெயர்ந்து உலகெங்கும் வாழும் கவிஞர்களின் கவிதைகளை அத்தொகுப்பு உள்ளடக்கியிருந்தது. இனப்படுகொலையின் இலக்கிய ஆவணங்களில் அதுவுமொன்றாகும்.

சஞ்சிகைகளில் வெளியாகும் கவிதைகளையெல்லாம் ரேவதி உடனுக்குடன் வாசித்துவிடுவார். குறிப்பாகப் புதிதாக எழுத வருகிற பெண் படைப்பாளிகளின் ஆக்கங்களைத் தேடித் தேடி வாசிப்பார். அவற்றில் பொங்கும் ஆற்றல் தன்னை உத்வேகம் கொள்ளத் தூண்டுவதாகக் கூறுவார்.

கவிஞர்கள் தேவதேவனதும் பிரமிளினதும் பெயர்கள், பேச்சினிடை அடிக்கடி உச்சரிக்கப்படுவனவாக இருக்கும். அதிலும் குறிப்பாகப் பிரமிளது கவிதையியல் பற்றிய கட்டுரைகள் எக்காலத்திற்கும் பொருந்தும்படியாக அமைந்து பிரமிப்பூட்டுவதாகச் சொல்வார். ஒரு சமயம், பிரமிளின் கட்டுரைகள் அடங்கிய புத்தகமொன்றை எனக்கு அன்பளிப்பாகத் தந்தார். தேவதேவனின் இயற்கையோடான உரையாடலும், பிரமிளின் கவித்துவச் செறிவும் ரேவதியில் நேர்மறைச் செல்வாக்கு செலுத்துவதை அவதானித்துள்ளேன்.

‘மழை தன்னந்தனியே பாடிக் கொண்டிருக்கிறது’ - தமிழ்நதி

ரேவதி, பயணங்களின் காதலி! ‘எங்கே இருக்கிறீர்கள்?’ என்ற கேள்வியுடனேயே அலைபேசி உரையாடலைத் தொடங்குவேன். ஏதாவதோர் இடத்தின் பெயரைக் கூறுவார். ஒருபோதும் கேட்டறியாத பெயராக இருக்கும். தான் செல்லும் நிலவெளிகளை அலைபேசி விவரிப்பினூடே காட்சிப்படுத்திவிடுவார். ஒருதடவை, இருவருமாகத் திட்டமிட்டு ஒரு வார காலம் தமிழகத்தில் சுற்றினோம். ராமேஸ்வரம், மண்டபம் அகதி முகாம், திருச்சி, சேலம் என நீண்டது பயணம். மண்டபம் அகதி முகாமினுள் தொடர் பிரயத்தனங்களின் பின் செல்ல முடிந்தது. ஆனாலும், நாங்கள் இருவரும் அங்கு சுதந்திரமாகச் சுற்றித் திரியவோ ஆள்களுடன் உரையாடவோ முடியாதபடி காவல் கண்களால் தொடரப்பட்டோம்.

முகாமிலிருந்து வெளிவரும்போது, ரேவதியின் முகத்தில் வேதனை மண்டிக்கிடந்தது. “இதற்கு இவர்கள் தங்கள் ஊரிலேயே இருந்திருக்கலாம்” என்றார். புதையுண்ட பெருங்கனவாம் தனுஷ்கோடியில் ரேவதி என்னை எடுத்த புகைப்படத்தில் சிதிலங்களின் பின்னணியில் நானும் ஓர் ஆட்டுக்குட்டியும் காலங்களைக் கடந்து நிலைத்திருக்கிறோம். அந்தப் பயணத்தின் வழித் தடத்தில் ‘மணல் வீடு’ ஹரிகிருஷ்ணனின் ‘களரி’ நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டோம். எழுத்தாளர்கள் க.சீ.சிவகுமார், ஷாஜகான், பிரபஞ்சன் ச.விசயலட்சுமி, நாஞ்சில் நாடன், ச.தமிழ்ச்செல்வன், லக்ஷ்மி சரவணகுமார், வே.பாபு, ஆதவன் தீட்சண்யா, இசை, இளங்கோ கிருஷ்ணன் இன்னும் பல இலக்கியவாதிகள் அந்நிகழ்வில் கலந்துகொண்டார்கள். மார்கழி மாதத்துக் குளிர்ந்த இரவும், தூய்மையான காற்றும், கட்ட பொம்மலாட்டமும், ஆலமரமும், அய்யனாரும் அந்த இரவை என்றும் மறக்கமுடியாதபடி ஆக்கியிருந்தன.  

எனக்கும் ரேவதிக்குமிடையில் இருந்தாற்போல சிறு முரண்பாடு. சொற்களை நேசித்த இருவரும் சொற்களாலேயே விலகினோம். ஏறத்தாழ ஓராண்டு காலம் இருவரிடையேயும் பேச்சுவார்த்தை இல்லை. பிரியத்திற்குரிய நட்பைப் பிரியும் வலி இலகுவானதில்லை. பிறகொரு நாள் சந்தித்தபோது இருவருமே மாறியிருந்தோம். நடந்ததைப் பற்றி நான் பேச விழைந்தபோது, ‘நமக்குள் என்ன தமிழ்’ என்றார். நீர் விலகிக் கூடிய தருணம் போலொன்று. பிறகு அதன் தடயமுமில்லை.

சாதி, மதம், பண்பாடு இன்னபிறவற்றின் பெயரால் பிரயோகிக்கப்படும் அழுத்தங்கள், குடும்பம் என்ற பாரபட்சமான அமைப்பில் எதிர்நோக்கும் சிக்கல்கள், பொருளாதார நெருக்கடிகள் இவற்றையெல்லாம் கடந்துதான் பெண்கள் எழுதுகிறார்கள். உண்மையிலேயே இலக்கியத்தை நேசிக்கும் பெண்கள், தமது பாலினத்தின் பொருட்டு சிறப்புச் சலுகைகளைக் கோருவதில்லை. அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் சக உயிரியின் மீது செலுத்தப்பட வேண்டிய மரியாதையையே! ஆனால், அஃது அளிக்கப்பட்டாலும் இல்லாதுபோனாலும் ஓர்மமுள்ள பெண்கள் எழுதுவதை நிறுத்தப்போவதில்லை! 

‘முலைகள்’ கவிதைத் தொகுப்பு வெளியாகிப் பதினைந்து ஆண்டுகளாகிவிட்டன. அந்தச் சர்ச்சைகளுக்குப் பிறகு, ரேவதியின் பதினைந்து புத்தகங்கள் வெளியாகிவிட்டன. எழுத்தின் மீதான காதல் அவரை இயக்காதிருந்தால் இது சாத்தியப்பட்டிராது!

நிலா நிழல் கோலமிடும், வேம்பின் கிளைகள் தரையைத் தழுவும், காலந்தாழ்த்திக் கூடடையும் பறவைகளின் கெச்சட்டங்கள் வந்தடையும் நீலாங்கரை வீட்டின் பால்கனியில், கோப்பை நிறைய சங்கரா மீன் பொரியலோடும், வைன் குவளைகளோடும் அமர்ந்து ரேவதியும் நானும் கதையாடிய முன்னிராப் பொழுதுகள் என்றென்றும் மறக்கமுடியாதவை. இனியொரு நிலா நாள் அதுபோல் வாய்க்குமெனில், ரேவதி எழுதிய ‘நெஞ்சே எழு’ பாடலை இருவருமாகச் சேர்ந்து கேட்க வேண்டும். இத்தனை கசப்பான அனுபவங்கள், ஆண்டுகளுக்குப் பிறகும் உயிர்ப்புடனும் இன்னுமின்னும் கனவுகளைத் தொடர்பவர்களாகவும் நாங்கள் நீடித்திருப்பதை அவ்வண்ணம் கொண்டாடுவதே பொருந்தும்!