
இங்கேயும்... இப்போதும்...

த.ஜீவலட்சுமி
“அழகிற்கும் உண்மைக்கும் இடையே உள்ள உறவின் நித்தியத்தைக் கவிதைகள் வழி அடைய முயல்கிறேன். அது போர்ப் பறையாகவோ பூங்குழலாகவோ ஒலிப்பதைத் தீர்மானிப்பது அகத்தில் இயங்கும் புறமே. இந்தச் சமூகத்தில், நான் காண விரும்பும் மற்றும் எனக்குக் காணச் சகியாத மானுட வாழ்வை என் எழுத்து பேச வேண்டும். எனக்குத் தனிமை வேண்டாம். மானுட சமுத்திரத்தில் கரைந்து தன்னுருகொள்ளட்டும் என் கவிதைகள்.”
ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த த.ஜீவலட்சுமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொழிலாளர் உரிமைக்கான வழக்கறிஞராகப் பணிபுரிகிறார். நூல் விமர்சனம், சமூகப் பிரச்னைகள் சார்ந்த கட்டுரைகள் எனத் தீவிரமாக எழுதிவரும் இவர், ‘காதல் அமரும் கிளை’ என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். உருதுச் சிறுகதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.

செங்கவின்

“பெண்களே இந்த உலகைச் சுழற்றும் அச்சாணிகள். அந்தப் பெண்களுக்கு இந்தச் சமூகம் திருப்பியளிப்பது என்ன? பெண் தன்னை விடுதலையானவளாக உணர்வதற்கான ஓர் அம்சத்தையேனும் இந்தச் சமூகம் தன்னகத்தே கொண்டிருக்கிறதா? இப்படிப்பட்ட கேள்விகளே என் எழுத்தின் வேர்கள். நான் சந்தித்த பெண்களின் வலியும், அதனைக் கடந்துவரும் அவர்களின் வைராக்கியமுமே என் எழுத்தின் வெளிப்பாடுகள். பெண்ணின் மீதான வன்முறையும், மண்ணின் மீதான வன்முறையும் நம் காலத்தின் பேரிடர்கள். தாய் வழிச் சமூகமே என் கனவுகளின் உச்சம்.”
பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள தென்சங்கம் பாளையம் என்ற ஊரைச் சேர்ந்த செங்கவின், ‘களையெடுப்பின் இசைக்குறிப்பு’ என்ற கவிதை நூலை வெளியிட்டிருக்கிறார். இவரது இயற்பெயர் சௌரீஸ்வரி. குமரன்கட்டம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். பெண்ணியப் பார்வையில் சமகால அரசியலை முன்வைத்து கட்டுரை நூல் ஒன்றை வெளியிடவிருக்கிறார்.

இரா.பூபாலன்
“உணர்வுகளும் அனுபவங்களுமே என் எழுத்துக்கான களம். மகிழ்விலும், சோர்விலும் கவிதை எனக்குத் துணையிருக்கிறது. ஓட்டமாக ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையைச் சற்று நின்று நிதானித்து ரசிக்கக் கற்றுத் தந்திருக்கிறது கவிதை. வாசிக்கும் கணங்களில் வாழ்க்கை உயிர்ப்புடன் இருப்பதாக உணர்வதாலேயே விடாப்பிடியாகக் கவிதையை இறுகப் பிடித்துக்கொண்டிருக்கிறேன்.”
பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள சூலக்கல் பகுதியைச் சேர்ந்த பூபாலன், கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் முதுநிலை வடிவமைப்புப் பொறியாளராக இருக்கிறார். ‘பொம்மைகளின் மொழி’, ‘பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு’, ‘ஆதிமுகத்தின் காலப்பிரதி’ ஆகிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். இந்த ஆண்டு இறுதியில் புதிய கவிதைத் தொகுப்பு ஒன்று வெளியாகவிருக்கிறது. பொள்ளாச்சி இலக்கிய வட்டம் என்ற அமைப்பின் செயலாளர். இவரது இயற்பெயர் பூபால கிருஷ்ணமூர்த்தி.

வினயன்
“ஈயத் தட்டடித்து காக்கா ஓட்டிய கல்லக்கொல்லை கரம்பாக் கெடக்குது. இடுப்பு ஒசரக் கொழாயில பீச்சிக்கிட்டு அடிச்ச தண்ணிய, இடுப்பளவு குழிதோண்டிப் புடிக்கிற நெலயாப் போச்சு. தாமரக் கெழங்கு நோண்டியாந்து தந்த ஆயா படுத்த படுக்கையா இருக்குது. இடுப்புல தங்காத கால்சட்டைய இழுத்து இழுத்துச் சுருட்டி மடிச்சுவிட்ட நான்கூட கவிதை நூல் போட்டுட்டேன். ஊர் மாறாதா என்ன? அழகியலை மட்டுமே எழுத்து எனக் கொண்டாடும் முரண்பட்ட சமூகத்தில், அசல் மனிதர்களைப் படித்து எழுதி எனது ‘மொழி’யை நான் காப்பாற்றிக்கொண்டிருக்கிறேன். மேற்படி சொல்ல ஒண்ணுமில்ல.”
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தைச் சேர்ந்த வினயன் அப்பகுதியில் மளிகைக்கடை நடத்துகிறார். ‘எறவானம்’ என்ற கவிதை நூலை வெளியிட்டிருக்கிறார். இவரது இயற்பெயர் விஜயகுமார். அரியலூர் வட்டார ஒப்பாரி, தாலாட்டு, கும்மிப் பாட்டு, நாற்றுப் பாடல்களைத் தொகுத்து நூலாக வெளியிடும் முயற்சியில் இருக்கிறார். விவசாயத் தொல்குடிகள் குறித்த குறுநாவல் ஒன்றும் விரைவில் வெளிவரவிருக்கிறது.