மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தமிழ்த் தேசியத்தின் தூரிகை - கவிதாபாரதி

தமிழ்த் தேசியத்தின் தூரிகை - கவிதாபாரதி
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழ்த் தேசியத்தின் தூரிகை - கவிதாபாரதி

படங்கள் : அமரதாஸ், கே.ராஜசேகரன்

வீர சந்தானம் என்பது ஒரு தனி மனிதனின் பெயரன்று...

ஒரு தமிழ்தேசிய இயக்கத்தின் பெயர்.

நான் அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெரியார் மாவட்டக் குழுவில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். தோழர் சி.மகேந்திரன் கட்சியின் இளைஞர் பெருமன்றப் பொறுப்பாளராக இருந்தார். அவரது முயற்சியால் கே.ஏ.குணசேகரன் அவர்களின் பாடல்களைத் ‘தன்னானே பாடல்கள்’ எனும் பெயரில் இளைஞர் மன்றம் வெளியிட்டது. அதன் அட்டைப்படத்தை வீர.சந்தானம் வரைந்திருந்தார். அந்த நேரத்தில் அது எங்களுக்குப் புது வடிவமாக இருந்தது. சி.மகேந்திரன்தான் சந்தானத்தின் ஓவியங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

அதன்பின், நான் ‘பொய் சொன்னது பெளர்ணமி’ என்னும் எனது கவிதைத் தொகுப்பை வெளியிட்டேன். அண்ணன் அறிவுமதி அதைப் புத்தகமாக்கிக் கொடுத்தார். அதற்கும் அட்டைப்படம் வரைந்து கொடுத்தவர் வீரசந்தானம். அப்போது அவருக்கு என்னைத் தெரியாது. எனக்கும் அவரைத் தெரியாது. பின்னொரு நாளில் அறிவுமதியைப் பார்க்கப் போனபோது ஓவியர் வீரசந்தானத்தைப் பார்க்க வேண்டுமென்றேன். தேனாம்பேட்டை, திருவள்ளுவர் சாலையில் மரங்கள் சூழ்ந்த அந்த வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றார். அங்குதான் அவரை முதன்முதலாகச் சந்தித்தேன். அதன் பிறகான ஏறத்தாழ 25 ஆண்டுகளிலும் என் சென்னை வாழ்க்கையின் தவிர்க்கவியலாதவர்களில் வீரசந்தானம் மிக முக்கியமானவர்.

தமிழ்த் தேசியத்தின் தூரிகை - கவிதாபாரதி

வீரசந்தானம், அப்போது மத்திய அரசு நிறுவனமான நெசவாளர் சேவை மையத்தில் வடிவமைப்பாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். அவரைச் சந்திப்பதற்காக நான் அவரது அலுவலகத்துக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். காரணம், அங்கு எப்போதும் ஒற்றைக் கைத்தறியில் ஒருவர் நெய்துகொண்டே இருப்பார். தறி நாடாச் சத்தம் கேட்டே வளர்ந்த எனக்கு அங்கு ஒலித்துகொண்டே இருக்கும் தறிச்சத்தம் மிகுந்த ஆறுதலாக இருந்தது. அதே மையத்தில் பணிபுரிந்த ஆதிமூலம், டிராட்ஸ்கி மருது ஆகியோரையும் வீரசந்தானம்தான்  அறிமுகப்படுத்திவைத்தார். இந்த மூவரும் இலக்கிய இதழ்கள், புத்தக அட்டைகள் எனத் தமிழ் அடையாளங்களுடன் நவீன ஓவியத்தை முழு வீச்சோடு மக்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்துக்கொண்டிருந்த நேரம் அது. இதை அவர்கள் எந்த வணிக நோக்கமும் இல்லாமல் செய்துவந்தனர் என்பது இங்கே குறிப்பிட வேண்டிய முக்கியமான விஷயம். மத்திய அரசு அலுவலகம் என்பதற்கான அடையாளங்கள் எதுவுமில்லாமல் ஓர் ஓவியப்பட்டறையாகவே அது இயங்கிக்கொண்டிருந்தது.

தமிழ்த் தேசியத்தின் தூரிகை - கவிதாபாரதி


பின்னாள்களில் ஆதிமூலமும் மருதுவும் வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுச் சென்றுவிட்டனர். சந்தானம் மட்டுமே அங்கு பணிபுரிந்துவந்தார். அவரது இலக்கிய, அரசியல் பணிகளுக்கான இடமாகவே அது அவருக்குப் பயன்பட்டது. எந்த அரசியல் கட்சியோடும் தலைவரோடும் அவர் தன்னைப் பிணைத்துக் கொள்ளவில்லை. தமிழ், தமிழர் நலன் என்பது மட்டுமே அவரது அரசியலாக இருந்தது. கலைஞர், வை.கோ, ராமதாஸ் என யாராக இருந்தாலும் நேரில் போய்ச் சந்தித்துப் பேச வேண்டியதைப் பேசிவிடுவது அவரது இயல்பு. “உங்களை விட்டா தமிழனுக்கு வேறு நாதி இல்லீங்க... நீங்களும் கைவிட்டுட்டா நாங்க எங்க போறது” என்னும் வார்த்தைகளைக் கொண்டே அவர் சாதித்த அரசியல் ஏராளம்.

 சந்தானம் அண்ணனின் வீட்டில் ஒரு விழா. வை.கோ, எஸ்.வி.ராஜதுரை ஆகியோர் கூடியிருக்கின்றனர். சுப்பிரமணியன் சுவாமி, தமிழர்கள் பற்றித் தரக்குறைவாகப் பேசியது அன்றைய நாளிதழ்களில் வெளியாகியிருந்தது. எஸ்.வி.ஆர் அதைப்பற்றிச் சொல்ல, “தமிழனைத் தப்பா பேசினவனைச் சும்மா விடலாமாண்ணே...” என்றார் சந்தானம். “நாளைக்குப் பாராளுமன்றம் கூடுது, நான் பாத்துக்கறேன்’’ என்றார் வை.கோ. அடுத்தநாள், சுப்பிரமணியன் சுவாமி ‘வை.கோ தன்னை மிரட்டியதாக’  சபாநாயகரிடம் புகார் செய்யுமளவுக்கு இதன் விளைவு இருந்தது.

புலிகளுக்கு நிதி திரட்டுவதற்காகக் காசி ஆனந்தனின் கவிதைகளைச் சந்தானத்தின் ஓவியத்துடன் வெளியிடுவது என்று பிரபாகரன் முடிவெடுத்து அதுவும் அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு, அவர் புலிகளுக்காகச் செய்துகொடுத்த சுவரொட்டிகள், புத்தகங்கள் ஏராளம். மேலும், புலிகளுக்காக நிதி திரட்டிக் கொடுத்திருப்பாரே தவிர, ஒற்றைப் பைசாவைத் தனது பணிகளுக்கான சம்பளமாக அவர் எப்போதும் பெற்றதில்லை.

தமிழ்த் தேசியத்தின் தூரிகை - கவிதாபாரதி

அவரது ஓவியங்களைப் பிரதியெடுத்தவர்களெல்லாம் உலகத் தமிழர்களிடம் அவற்றை விற்றுக் காசாக்க முடிந்தது. ஆனால், ஒருபோதும் சந்தானம் அதைச் செய்ததில்லை. அறிவுமதி, சீமான், பழநிபாரதி, அரசு, திருமாவேலன், ஆசு, அருள்மொழி, விடுதலை, செல்வபாரதி செளந்தர், அண்ணன் கிள்ளிவளவன், எஸ்.சண்முகம் என ஒரு பெருங்கூட்டம் எப்போதும் அவரைச் சுற்றி இயங்கிக்கொண்டே இருந்தது. தன்னைச் சார்ந்தவர்களை உற்சாகமூட்டி இயங்கவைக்கும் உந்துசக்தியாக அவர் இருந்தார்.

‘அரங்கேற்றம்’, ‘தோழமை’, ‘இனி’ எனச் சிறுபத்திரிகைகளுக்கும் அவர் மூல ஆதாரமாக இருந்தார். திராவிடம், மார்க்ஸியம், தலித்தியம், தமிழ்த் தேசியம் என எல்லா இயக்கங்களோடும் அவர் தோழமையோடு இருந்தார். எந்தத் தலைவரையும் நல்லதைப் பாராட்டவும், முரண்பாடுகளை நேருக்குநேர் ஆரோக்கியமாக விமர்சிப்பதுவுமான நேர்மை அவரிடமிருந்தது. தமிழ், தமிழர் பற்றிய எந்தக் கூட்டத்திலும் தோளில் ஒரு பையை மாட்டிக்கொண்டு தவறாமல் கலந்துகொள்வார். அரசுப் பணிக்குப் பயந்து ஒருபோதும் அவர் தனது புலிகள் ஆதரவு நடவடிக்கைகளைக் கைவிட்டதில்லை.

ஒரு கட்டத்தில், அவர் பணிநீக்கம் செய்யப்படலாம் எனும் சூழல் வந்தபோது, அவர்பால் அக்கறைகொண்ட நண்பர்கள் அவருக்கு நாகாலாந்துக்கு மாறுதல் பெற்றுக் கொடுத்தனர். அங்கும் அவர் நீண்ட நாள் பணியில்  நீடிக்கவில்லை. `தமிழ்நாட்டை விட்டு என் பிழைப்புக்காகப் பிரிந்திருப்பது எனக்குக் குற்றஉணர்ச்சியை ஏற்படுத்துகிறது’ என்று சொல்லி மீண்டும் தமிழ்நாட்டுக்கே மாறுதல் பெற்று வந்துவிட்டார்.

திரைப்படங்களில் நடிப்பதையும் அவர் தனது பிரசாரத்திற்கே பயன்படுத்தினார். “நான் காசுக்காக நடிக்க வரல, என் மூஞ்சி கொஞ்சம் பிரபலமாச்சுன்னா, நான் பேசுறதைக் கேட்கிறதுக்கு இன்னும் கொஞ்சம் பேர் வருவாங்க. அவங்ககிட்ட ‘தமிழனா நீ இதையெல்லாம் செய்’யின்னு சொல்றதுக்கு வசதியாக இருக்கும்” என்று சொல்லித்தான் அவர் நடிகனாகத் தன்னை நிலைநிறுத்த விரும்பினார்.

நாங்கள் எடுக்கவிருக்கும் ஒரு தொலைக்காட்சித் தொடரில் அவரை நடிக்கவைப்பது பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். ஆனால், கதைப்படி பத்தாவது அத்தியாயத்தில் அவரது கதாபாத்திரம் இறந்துபோகும். கதைப்படி ‘நீங்கள் இறந்துபோவீர்கள்’ என்று அவரிடம் எப்படிச் சொல்வது எனத் தயங்கிக்கொண்டிருந்தேன். அன்று மாலையில் அவரின் மரணச் செய்தி வந்தது.

வீர சந்தானத்தின் மரணம் ஒரு குடும்பத்தின் இழப்பு அல்ல, ஒரு தமிழ்த் தேசிய இயக்கத்தின் பேரிழப்பு!