மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சசிகலா ஜாதகம் - 62 - “நடராசனும் சசிகலாவும் என் குடும்ப நண்பர்கள்!” - ஜெயலலிதா ஸ்டேட்மென்ட்

சசிகலா ஜாதகம் - 62 - “நடராசனும் சசிகலாவும் என் குடும்ப நண்பர்கள்!” - ஜெயலலிதா  ஸ்டேட்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா ஜாதகம் - 62 - “நடராசனும் சசிகலாவும் என் குடும்ப நண்பர்கள்!” - ஜெயலலிதா ஸ்டேட்மென்ட்

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி, ஓவியம்: கோ.ராமமூர்த்தி

நெடுஞ்செழியன் - ஜெயலலிதா சந்திப்புக்குப் பிறகு ஜெயலலிதா மாறிவிடுவார் எனப் பலரும் நினைத்தார்கள். ஆனால், போயஸ் கார்டன் புதுப் பூசாரிகள், சமரசத்துக்குச் சம்மட்டி அடி கொடுத்தார்கள்.

ஜெயலலிதாவிடம் சமரசம் பேசப் போனவர்களையும் சந்திக்க விடாமல் தடுத்தார்கள்.   கே.கே.எஸ்.எஸ்.ஆர், திருச்சி செளந்தரராஜன், எஸ்.டி.உக்கம்சந்த் என நிர்வாகிகள் யாரும் ஜெயலலிதாவைப் பார்க்க முடியவில்லை. நெடுஞ்செழியன் - ஜெயலலிதா சந்திப்பில் வைக்கப்பட்ட முக்கியமான கோரிக்கை, ‘கிச்சன் கேபினெட் கலைக்கப்பட வேண்டும்’ என்பதுதான். தங்களுக்கே உலை வைக்க நினைப்பவர்களைச் சசிகலா குடும்பத்தினர் விட்டுவைப்பார்களா? ஜெயலலிதாவையே கரைத்தார்கள். ‘நால்வர் அணி’க்கு வழி வகுத்தார்கள். ‘‘வெளியே குரைக்கும் நாய்களுக்குப் பதில் சொல்லத் தேவையில்லை’’ என்கிற ஆக்ரோஷத்தை ஜெயலலிதா காட்டியதற்குக் காரணமே சசிகலா குடும்பம்தான். இந்த ‘நாய் பேச்சு’தான் நாவலரைக் கொதிக்கவைத்து ‘நால்வர் அணி’யை உருவாக்கக் காரணமாக அமைந்தது.

இப்படி நடராசனின் ஆதிக்கம்  ஜெயலலிதாவிடம் மேலோங்கி இருந்ததற்கு ஆதாரமாக அமைந்தது, அப்போது ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை. கட்சியில் நடராசனின் தலையீடு பற்றி திருநாவுக்கரசர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டி, ‘தி.மு.க-வின் கையாள் நடராசன்’ எனப் பரபரப்பைக் கிளப்பினார். அதற்குப் பதிலடி கொடுப்பது போல இருந்தது ஜெயலலிதாவின் அறிக்கை. நெடுஞ்செழியன் - ஜெயலலிதா சந்திப்புக்குப் பிறகு வெளியிடப்பட்ட அந்த அறிக்கை, தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. (தமிழக அரசியலில், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் அதிகார மையமான) சசிகலா குடும்பத்தைப் பற்றி முதன்முறையாக அந்த அறிக்கையில்தான் ஜெயலலிதா மனம் திறந்தார். 1988 ஜூலை 2-ம் தேதி வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் ஜெயலலிதா அப்படி என்னதான் சொல்லியிருந்தார்?   

சசிகலா ஜாதகம் - 62 - “நடராசனும் சசிகலாவும் என் குடும்ப நண்பர்கள்!” - ஜெயலலிதா  ஸ்டேட்மென்ட்

‘நடராசனும் சசிகலாவும் என் குடும்ப நண்பர்கள். இவர்களுக்கும் அரசியலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அது கட்சியின் கொள்கை விவகாரம் அல்ல. என் சொந்த விஷயம். இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. நடராசனும் சசிகலாவும் எம்.ஜி.ஆர் காலத்திலேயே அவருடைய பூரண ஆதரவுடன் எனக்கு உதவியாக இருந்தவர்கள். இதில் எவரும் தலையிடவோ, என்னை நிர்பந்திக்கவோ முடியாது. நடராசனைப் பற்றி திருநாவுக்கரசர் சொல்லியிருக்கும் விஷயங்கள் என்னைத் தாக்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கை’ எனச் சீறியிருந்தார் ஜெயலலிதா.

இந்த அறிக்கைக்கு எதிர்வினை ஆற்றினார் திருநாவுக்கரசர். 1988 ஜூலை 4-ம் தேதி கூட்டிய பிரஸ் மீட்டில் திருநாவுக்கரசர் தீ கங்குகளை வீசினார். ‘‘விடுப்பில் இருந்தபடி கட்சி நடவடிக்கையில் தலையிடும் அரசு அதிகாரி நடராசன் மட்டும் போதுமா? அல்லது கட்சியின் மூத்த தலைவர்கள், மாவட்ட, ஒன்றியச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சித் தொண்டர்கள் வேண்டுமா?’’ எனக் கேள்வி எழுப்பிய திருநாவுக்கரசர், ‘‘ஜெயலலிதாவின் மாவட்டச் சுற்றுப் பயணங்களின்போதும் பொதுக் கூட்டங்களின்போதும் தி.மு.க-வுடன் தொடர்புள்ள நடராசன் உடன் வந்தார். கட்சி நிர்வாகிகள் நியமன அறிவிப்பை எங்களுக்குத் தொலைபேசி மூலம் அவர்தான் தெரிவித்தார். சிவாஜி கணேசனின் கட்சியில் இருந்து வெளியேறிய எம்.பி.சுப்பிரமணியத்தை இரண்டு முறை சந்தித்து, இந்த இயக்கத்துக்கு வருமாறு நடராசன்தான் அழைப்பு விடுத்தார். அந்த அளவுக்கு நடராசனின் தலையீடு கட்சியில் இருந்தது. எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்தபோது எனக்குத் தெரிந்து ஜெயலலிதாவின் வீட்டுக்கு நடராசன் சென்றதில்லை. நடராசனின் மனைவி சசிகலா, எம்.ஜி.ஆர் உயிருடன் இருக்கும்போதே ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்திருக்கலாம். நடராசன், தன்னை ‘ஜெயலலிதாவின் குடும்ப நண்பர்’ என்ற அளவில் நிறுத்திக் கொண்டிருந்தால் பிரச்னைகளே ஏற்பட்டிருக்காது.

பொதுச் செயலாளரின் கட்டுப்பாட்டில்தான் கட்சி இருக்க வேண்டும். பொதுச் செயலாளரே இன்னொருவரின் கட்டுப்பாட்டில் இருப்பதைக் கழகத் தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள். பொதுச் செயலாளருக்கு மேல் இன்னொரு தலைமை இருப்பதைப் போலக் கருதிக்கொண்டு நடராசன் இயக்கத்தை நடத்த முயற்சி செய்வதும், அரசியல் ஆலோசனைகளை வழங்க முயல்வதும், வேட்பாளரைத் தேர்வுசெய்வதும் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத அபத்தமான காரியங்கள்.
நடராசன் தனது சம்பளத்துக்குச் சற்றும் பொருத்தமில்லாத வகையில் ஆடம்பரச் செலவுகளை மேற்கொள்வதும் கூத்தாநல்லூரில் மருத்துவமனை விரிவாக்கப் பணிகளைச் செய்வதும் எப்படி சாத்தியமாகும்? (சசிகலாவின் அண்ணன் விநோதகன், கூத்தாநல்லூரில் ஏற்கெனவே நடத்திக்கொண்டிருந்த மருத்துவமனை அது) கட்சியின் பொதுச் செயலாளரை அந்த ஊருக்கு அடிக்கடி அழைத்துச் செல்வது நடராசனுக்குப் பெருமை தரலாம். ஆனால், கட்சியின் தலைமைக்கு எவ்வளவு கெட்ட பெயர் என்பதை நடராசன் எண்ணிப் பார்க்க வேண்டும்.

சசிகலா ஜாதகம் - 62 - “நடராசனும் சசிகலாவும் என் குடும்ப நண்பர்கள்!” - ஜெயலலிதா  ஸ்டேட்மென்ட்

நடராசனைப் பற்றி நான் சொன்ன விஷயங்கள் தன்னைத் தாக்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கை என ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். ஏற்கெனவே புண்பட்ட எங்கள் இதயத்தை இது மேலும் புண்படுத்துகிறது. நாங்கள் ஜெயலலிதாவைத் தாக்க வந்தவர்கள் அல்ல... காக்க வந்தவர்கள். பொதுச் செயலாளர் என்ற நிலையை ஜெயலலிதா அடைய நாங்கள் பல வகையான கஷ்ட நஷ்டங்களைக் கடந்து தியாகங்களைச் செய்திருக்கிறோம். பொதுச் செயலாளர் தனது முடிவை மறுபரிசீலனை செய்து நல்ல முடிவை எடுக்க வேண்டும்’’ எனத் திருநாவுக்கரசர் சொன்னார்.

அப்போது நிருபர்கள் குறுக்கிட்டு, ‘‘அரசுப் பணி நன்னடத்தை விதிகளின்படி நடராசன் மீது கவர்னரிடம் (அப்போது தமிழகத்தில் கவர்னர் ஆட்சி நடந்தது) புகார் தெரிவிப்பீர்களா?’’ எனக் கேட்டனர். அதற்கு திருநாவுக்கரசர், ‘‘அப்படி எந்த வேண்டுகோளும் வைக்க விரும்பவில்லை. எல்லோருக்கும் தெரிந்த விஷயத்தைத்தான் சொல்லியிருக்கிறேன். ‘நடராசனைத் தாக்கி, பின் தம்மைத் தாக்க வருகிற முயற்சி’ என்று ஜெயலலிதா வருத்தப்படும் சூழ்நிலை இருக்கிறபோது ‘நடவடிக்கை எடுங்கள்’ என்று நான் எப்படிக் கேட்க முடியும்? அது என்னுடைய வேலை அல்ல’’ எனச் சொன்னார். இந்தப் பேட்டியைத் திருநாவுக்கரசர் கொடுத்தபோது அவருக்கு அருகே, சினிமா தயாரிப்பாளர் ஆர்.எஸ்.சோமநாதனும் முன்னாள் அமைச்சர் ரகுபதியும் சாட்சிகளாக இருந்தார்கள்.

(தொடரும்)