மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 42

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

லிவால் முகட்டின் செங்குத்தான ஏற்றத்தில் விரைந்துகொண்டிருந்தன பாரியின் கால்கள். வேட்டைவிலங்கின் காலடியைப்போல மண்ணில் கால்பாவாமல் விரைந்துகொண்டிருந்தன.

எவ்வியூரில் புறப்பட்டதிலிருந்து கற்றுத்தருதலிலேயே கவனம்கொண்டிருந்தான் பாரி. மாணவர்கள் எவ்வளவு முயன்றும் அவனை வேகங்கொள்ளச்செய்ய முடியவில்லை. எரிவண்டைக்கொண்டு அவனது ஓட்டத்தை வேகப்படுத்தினான் முடிநாகன். கருங்கொண்டை வல்லூறுகொண்டு அதனை மட்டுப்படுத்தினான் பாரி. அதன்பின் அழுகுரற் பறவையின் குரல் கேட்டு ஏதோ ஆபத்து என உணர்ந்தான். ஆனால், இப்பொழுதோ அந்த ஆபத்து என்னவென்று கண்ணெதிரே பார்த்துவிட்டான்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 42

தேக்கன் அடித்துத் தூக்கி வீசப்பட்டதைப் பார்த்த கணத்தை இப்பொழுதுவரை நம்பமுடியவில்லை. அவர்களின் தாக்குதல் வேகத்தில் மாணவர்கள் காற்றில் பறந்தார்கள். பெருங்கூடைகளில் தெய்வவாக்கு விலங்கை அள்ளிக்கொண்டு பறம்பின் காடுகளுக்குள் யாரோ ஓடிக்கொண்டிருக்கிறார்கள். கண் பார்ப்பதை நம்பமுடியாத கணத்தில் கால்களின் வேகம் கட்டுக்கடங்காமல் இருந்தது.

அடர்காட்டுக்குள் மனிதக்குரல் கேட்டபொழுது பாரியின் அய்யம் தீர்ந்தது. ‘இரத்தச்சிலந்தி இருக்கும் இக்காட்டுக்குள் தேக்கன் மட்டுமல்ல, பறம்பு மக்கள் யாரும் போக மாட்டார்கள். அதற்குள் மனிதக்குரல் கேட்கிறது என்றால் வெளியில் இருந்து எவனோ உள்ளே நுழைந்திருக்கிறான். வந்தவன் ஒருவனாக இருந்தால் தேக்கன் நம்மை அழைத்துவர மாணவர்களை அனுப்பியிருக்க மாட்டான். அவர்கள் பல பேராக இருக்க வேண்டும்’ என்று நினைத்துக்கொண்டே குத்துக்கல் பொடவை நோக்கி ஓடினான் பாரி.

கருஞ்சுரைக்காயை எடுத்தபின் ஆதிமலையின் முகட்டை அடைந்தான் தேக்கன். அடர்காட்டுக்குள் மாட்டியிருக்கும் எதிரிகள் எப்படியும் இத்திசையில்தான் வெளியேற வேண்டும். வெளியேறிய கணத்தில் மாணவர்கள் அவர்களின் முகம் பார்த்து கவண் எறிய வேண்டும் என்று சொல்லி, ஈட்டியை இறுகப்பிடித்து ஆயத்தமாக இருந்தான். ஆனால், தேக்கனின் அதிர்ச்சி அவர்கள் வெளிவந்த கணத்திலேயே தொடங்கியது. ஒருவனைத் தவிர மற்ற நால்வரும் காட்டைவிட்டு வெளியே வந்தனர். ‘இரத்தச்சிலந்திகள் இருக்கும் காட்டை எப்படி இவர்கள் கடந்தனர்’ என்ற அதிர்ச்சி தேக்கனைச் சற்றே தாமதிக்க வைத்தது.

காட்டைவிட்டு வெளியேறிய கணத்தில் தாக்குதலைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்ற எதிர்பார்ப்போடு வந்த காலபன், தேக்கன் ஈட்டியெறியும் முன் தனது வளைத்தடியைச் சுழற்றினான். கண்ணிமைக்கும் நேரத்தில் அது தேக்கனின் கழுத்துக்கு வந்தது. கவனமாய் அதனைத் தட்டிவிட்டு விலகினான். திசைக்கு ஒன்றாய் நின்ற மாணவர்கள் கவண் வீசத் தொடங்கிய அந்தக் காட்சிதான் தொலைவில் ஓடிவந்துகொண்டிருந்த பாரியின் பார்வையில் முதலில் பட்டது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 42அவர்கள் தேக்கனைத் தாக்கிய வேகத்தையும் மாணவர்களைச் சுழற்றி வீசியதையும் பார்த்தபடியே வெறிகொண்டு ஓடிவந்தான் பாரி. மலைச்சரிவில் பாறைகள் உருண்டன. மடுவன் வீசிய கவணிலிருந்து பறந்த கருஞ்சுரைக்காய் ஒருவனின் முகத்தில் அடித்துத்தெறித்த கணத்தில்தான் அந்த இடத்தை அவர்கள் சூறையாடினார்கள். அடிபட்டவன் முகத்தை மூடியபடி கதறிக்கொண்டு பாறையில் மோதி மண்ணில் உருண்டான்.

பறம்புநாட்டின் ஆசான், பகிரியை வேட்டையாடிய பெருவீரன், எத்தனையோ மாணவர்களைக் காடறிய அழைத்துச்சென்று மாவீரர்களாக உருவாக்கியவன், தனியொருவனாக எவ்விலங்கினையும் வீழ்த்தும் ஆற்றல்கொண்ட தேக்கன் தனது முழு ஆற்றலையும் திரட்டி மோதினான். ஆனால், அவனது ஆற்றல் முழுவதும் தற்காத்துக்கொள்ளவே போதுமானதாக இருந்தது. சூழப்பட்ட எதிரிகளின் வலிமை ஒப்பிட முடியாததாக இருந்தது. அவர்களின் தாக்குதலை உள்வாங்கியபடி மனம் அவர்களின் திறனைக் கணித்துக்கொண்டிருந்தது. ஆனால், உடலோ தூக்கிவீசப்பட்டுக்கொண்டிருந்தது.

பாரி இடம் வந்து சேர்ந்தபொழுது எல்லாம் முடிந்திருந்தது. கருவிழி ஒழுகி துடித்துக் கதறிக்கொண்டிருந்த ஒருவனின் முதுகில் இருந்த பெருங்கூடையை அறுத்து எடுத்தனர் மாணவர்கள். தேவவாக்கு விலங்கின் அடங்காத  கத்தலும், தூக்கிவீசப்பட்ட மாணவர்களின் வேதனைக்குரலும், கருவிழி கலங்கியவனின் கதறலும் எங்கும் எதிரொலித்துக்கொண்டிருந்தன.

ஆதிமலையின் முகட்டைக் கடந்த அவர்கள் சிறிது தொலைவு போவதற்குள், முகட்டின் பின்புறச் சுனையில் பதுங்கியிருந்த ஏழுபேர் அவர்களுடன் இணைந்துகொண்டனர். அவர்களின் ஓட்டம் மர இடுக்குகளுக்குள் மறைந்தது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 42

தாக்குதல் முடிந்ததும் வந்துசேர்ந்த பாரி கணநேரமும் தாமதிக்காமல் துடித்துக் கிளம்பினான். கிளம்பிய வேகத்தில் அவனை இறுகப்பற்றி நிறுத்த முயன்றான் தேக்கன். தேக்கனின் செயலுக்குக் காரணம் புரியாமல் பாரி திகைத்தபொழுது, தேக்கனின் வாய் முணுமுணுத்தது “அவர்கள் பலர், நீ ஒருவனாகப் போகவேண்டாம்.”

தேக்கனின் சொல் பாரியை நிலைகுலையச்செய்தது. “பறம்பின் ஆசானா இப்படிப் பேசுவது? நான் ஒருவனா? இது எனது காடு. மரமும் செடியும் கொடியும் விலங்கும் இருக்கிற இக்காட்டில் நான் எப்படித் தனியனாவேன்?”

பிடித்த கையை உதறித்தள்ளிய பாரியின் ஆவேசம் பார்க்க முடியாத பெருஞ்சினங்கொண்டிருந்தது. ஓடினான் பாரி. காடதிர, காற்றதிர, கண்ணில் வெறிகொண்டு ஓடினான். பறம்பு நாட்டின் தேவவாக்கு விலங்கைத் தூக்கிக்கொண்டு ஆதிமலையை ஒரு கூட்டம் கடந்துவிட்டதென்ற உண்மையைக் கொன்று புதைக்க ஓடினான். எவ்விலங்கின் ஓட்டத்தையும் விஞ்சக்கூடியவன் வேள்பாரி. காட்டின் எத்தரையிலும் முழுவேகத்தோடு ஓடக்கூடிய விலங்கு எதுவுமில்லை. ஒவ்வொரு விலங்குக்கும் ஓட்டம் உச்சங்கொள்ளும் இடமும் உண்டு; ஊனங்கொள்ளும் இடமும் உண்டு.

எவ்வளவு வேகமாக பாய்ந்து வந்தாலும் கமரிப்புல் இருக்கும் காட்டில் வரிப்புலி காலடி எடுத்து வைக்காது. முக்கொற்றிக்கோரை முளைத்துக்கிடக்கும் தரையில் வேங்கைப்புலி கால் பதிக்காது. முசுறுப்புல் காட்டில் பாம்பு நகராது. வாட்கோரைக்குள் மான் ஓடாது. ஒவ்வொரு விலங்கின் ஓட்டத்துக்கும் நகர்வுக்குமான அடிப்படை முளைத்துக்கிடக்கும் செடிகொடிகளிலும் இருக்கிறது. பறம்பின் எந்த நிலத்திலும், எந்தப் புதரிலும் எந்தக் காட்டிலும் வேகங்குறையாமல் ஓடக்கூடியவன் வேள்பாரி. அவனது பாதத்தின் அகலமும் தோள்களின் வலிமையும் இணையற்றவை. பிடரிமயிர் சிலிர்க்க ஓடும் பாரியின் ஓட்டத்தை மறித்து நிற்கும் உயிர் எதுவும் பறம்புக்காட்டுக்குள் இதுவரை இல்லை.

ஓடிக்கொண்டிருந்த எதிரிகள் எதிர்த்திசைக் காட்டை நோக்கி ஓடாமல் வலப்புறச் சரிவை நோக்கி இறங்கத் தொடங்கினர். யாராவது பின்தொடர்ந்துவந்தால் அவர்களைத் திசைமாற்றவே இத்தந்திரத்தைச் செய்தனர். அவர்கள் தங்களின் வழியை மாற்றிவிட்டனர் என்பதைச் சிறிதுநேரத்திலே கண்டறிந்தான் பாரி.

வீரயுக நாயகன் வேள்பாரி - 42


சிவப்புமூக்கு ஆக்காட்டி வலப்புற ஓடையின் பக்கம் நெடுநேரம் குரல்கொடுத்துக்கொண்டிருந்தது. அவர்கள் அப்பக்கம் திரும்புவார்கள் என யாரும் எதிர்பார்க்க முடியாது. அத்திசை நோக்கி படுவேகமாகப் பாரி இறங்கினான்.

‘எலிவால் முகட்டில் மோதல் நடந்தபொழுது மூன்று பேராக இருந்தவர்கள் இப்பொழுது எப்படி எண்ணற்றவர்களாக மாறினர். முகட்டின் கீழ்த்திசையில் ஏன் மறைந்திருக்க வேண்டும்? அப்படி என்றால் இன்னும் எத்தனை பேர் மறைந்துள்ளனர்?’ மனதில் வினாக்கள் அடுத்தடுத்து எழுந்துகொண்டிருந்தபொழுது அதற்கான விடையைக் கண்டறியும் முன்னே அடுத்த வினா எழுந்து வந்தது.

‘எலிவால் முகட்டைக் கடந்து கீழ்ப்புறம் இறங்கியவர்கள் அதற்குள் எப்படி முகட்டின் அடிவார ஓடையை அடைந்தார்கள்? தேக்கனிடம் சில சொற்களைப் பேச மட்டுமே நான் நேரஞ்செலவிட்டேன். ஆனால், அவர்கள் அதற்குள் ஓடைக்குப் போய்விட்டார்கள் என்றால் அவர்களின் வேகம் நினைத்துப் பார்க்க முடியாதபடி இருக்கிறது. தேக்கனும் மாணவர்களும் இணைந்து தாக்குதல் தொடுத்தபின் வேகத்தை இன்னும் கூட்டியுள்ளனர். என்ன கூட்டினாலும் என்ன; அவர்கள் பறம்பின் காட்டுக்குள்தானே ஓடிக்கொண்டிருக்கின்றனர்.’

பாரியின் மனம் எதிரிகளைப் புரிந்துகொள்ளவும் அவர்களின் வேகத்தைக் கணிக்கவும் தனது தாக்குதலுக்கான முறையை உருவாக்கவும் முயன்றுகொண்டிருந்தபொழுது, அவனது கால்கள் ஏறக்குறைய பறந்துகொண்டிருந்தன.

கீழ்த்திசை ஓடையை அவன் அடைந்தான். காட்டோடையில் நீர் பெருகி ஓடியது. ஓட்டத்தின் வேகம் முழுமையாக அறுந்தது. ஓடையை நீந்திக்கடந்தான். அவர்கள் வெகுநேரத்துக்கு முன்னமே ஓடையின் மறுகரைக்குப் போய்விட்டனர். அது அடர் மரங்களற்ற காடு. புல்மேவிய இரு குன்றுகளைக்கொண்டது.  ஓடுவதற்கு ஏற்ற நிலவாகு. பாரி கரையேறும் முன்னே அவர்கள் கண்பார்வையில் இருந்து மறைந்துவிட்டனர்.

`எதிரிகளின் ஆற்றல் ஓட்டத்தில் இருக்கிறது. அடர்ந்த மரங்களுக்கிடையிலே இவ்வளவு வேகமாக ஓடக்கூடியவர்கள், புதர்களற்ற நிலப்பரப்பில் இன்னும் விரைவுகொள்வர். அதுவும் தங்களைப் பறம்பினர் கண்டறிந்துவிட்டனர் என்பதனால் கட்டுக்கடங்காத வேகங்கொள்வர். அதனைத் தடுக்க என்னவழி?’ என்று சிந்தித்தபடியே கரையில் அடர்ந்து கிடக்கும் காட்டு மரங்களுக்கிடையே புகுந்து வெளியேறினான்.

வெளியேறிய இடத்தில் முடிச்சிட்டுக் கிடந்த பெருவேர்களைத் தாவிக்கடந்தபொழுது அவன் கண்ணிற்பட்டதொரு செடி. சட்டென ஓட்டத்தை நிறுத்திப் பெருமுடிச்சுகளை நோக்கித் திரும்பினான்.

மரவேர்களின் கீழ்ப்பக்கம் முளைத்துக் கிடந்ததைப் பார்த்ததும், மனதின் ஆழத்துக்குள் இருந்து சிறு மகிழ்ச்சி மேலேறி வரத் தொடங்கியது. மர வேர்களின் இடப்புறம் அனுவல்லிப்பூண்டு விளைந்து கிடந்தது.

சற்றே நின்று மூச்சுவாங்கினான். அதன் இலைகளை எடுத்து உண்போமா, வேண்டாமா என முடிவெடுக்கச் சிறிது தயங்கினான். அனுவல்லிப்பூண்டின் இலை மனிதனை மூர்க்கம் கொள்ளவைக்கும். இரத்த ஓட்டத்தைக் கூட்டி வெறியேற்றும். உடலுக்குள்ளிருக்கும் ஆற்றலின் விசையை பெருந்தீயெனக் கிளர்த்திவிடும். அவனது சிந்தனை என்னவாக இருக்கிறதோ அதனை நோக்கி பெருவேகத்தில் உடலை ஏவும். எனவே அதனை உட்கொள்வதில் மிகக்கவனம் தேவை.

வீரயுக நாயகன் வேள்பாரி - 42

ஏற்கெனவே உடலெங்கும் வெறிகூடிக்கிடந்த பாரி சற்றே சிந்தித்து ஒரு சில இலைகளை வாயில் போட்டுக்கொள்வோம் என நினைத்து அதன் ஒரு தண்டினை இழுத்தான். மொத்தச்செடியும் கையோடு வந்தது. எண்ணத்தின் வேகம் அப்படி இருக்கிறது என்பதை உணரமுடிந்தது. ஓரிரு இலைகளை மட்டும் பறித்து வாயிற்போட முனைந்தான். அப்பொழுது அருகில் இருந்த பாறையின் பின்புறம் மூச்சிரைக்கும் சிற்றோசை கேட்டது. ஏதோவொன்று இளைப்பாறுகிறது என நினைத்தான். ஆனால், ஓசையின் தன்மை சற்று மாறுபட்டிருந்தது. என்னவென பார்க்க பாறையின் பின்புறம் தலையை நீட்டினான்.

அங்கு சுண்டாப்பூனைகள் இரண்டு கலவி கொண்டிருந்தன. உச்சநிலையில் இயங்கிக் கொண்டிருந்த அவற்றின் கண்களைப் பாரியின் கண்கள் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தன. பன்றிப்பல்லினைப்போல் நீண்டு வளைந்த அவற்றின் பற்கள் வெளித்தெரிய  மூர்க்கமேறிச் சினந்துகொண்டிருந்தன. பார்த்தபடி அனுவல்லிப்பூண்டின் இலைகளை ஒவ்வொன்றாய் மென்றுகொண்டிருந்தான். ஆண்பூனையின் மூக்கின் முனையில் இருந்த துடிப்பும் ஆவேசமும் பாரியின் முகத்திலும் இருந்தன.

அவன் அம்முடிவையெடுப்பது என உறுதி கொண்டபொழுது பறித்த செடியில் இலைகள் எவையும் மிஞ்சவில்லை. அவனது வேகமும் வெறியும் அப்படி இருந்தன. அவை இயங்கி முடிக்கும் கணத்துக்காகக் காத்திருந்தான்.

அவை தமது பணியை முடித்துவிட்டன என்று அவன் முடிவுசெய்த கணம், வலதுகால் அருகிருந்த கல்லை எத்திவிட்டது. அந்தக் கல் கீழிருந்த பெண்பூனையின் முன் நெற்றியில் பட்டுத்தெறித்தது. சற்றே கண் சொருகியிருந்த அது இத்தாக்குதலால் வெகுண்டபொழுது மேலிருந்த ஆண்பூனை நிலைதடுமாறிச் சரிந்தது. இரண்டின் கண்களுக்கும் முன்னால் பாரி.

கலவி முடிந்ததும் உருவாகும் தீராப்பசியோடு சீண்டிவிடப்பட்ட சினமும் சேர்ந்தது. இரண்டும் நின்றுகொண்டிருப்பவனைத் தாக்க பாயத் தொடங்கியபொழுது, அவன் தனது வேலையைக் காட்டத்தொடங்கினான். கால்கள் முன்பாய்ந்து ஓடத்தொடங்கின. சுண்டாப்பூனையின் வெறி கணக்கில்லாத மடங்கு பெருகியது.

சீண்டலின் உச்சத்துக்கு இரு பூனைகளும் உள்ளாயின. சுண்டாப்பூனையின் மூர்க்கமும் அனுவல்லிப்பூண்டின் இலைகள் கிளர்த்திய மூர்க்கமும் காற்றைக் கிழித்து, காட்டை அதிரச்செய்தன. பாரியும் வெறிகொண்ட இருவிலங்குகளும் ஓடிய வேகம் இதுவரை காடு பார்த்திராதது. ஓட்டத்தின் வேகம் கூடக்கூட சுண்டாப்பூனைகளின் வெறி மேலேறியபடியே இருந்தது.  காலைப்பொழுதில் தொடங்கிய கலவி இவ்வுச்சிப்பொழுதில்தான் முடிவுக்கு வந்தது. உடல் மொத்தமும் இடைவிடாது இயங்கி முடித்ததும் அடிவயிறெங்கும் பற்றியெழும் பசிநெருப்பு அவற்றின் மூர்க்கத்தை எண்ணிலடங்காத மடங்கு அதிகப்படுத்தியது. கல்லாலடித்துச் சீண்டிவிட்டு, சீண்டியவனின் கால்கள் நிற்காமல் ஓடும்பொழுது அவை இதுவரை இல்லாத சினமும் சீற்றமும் மிக்கவைகளாயின.

காடறிய அடிநாக்கில் நஞ்சுக்கசப்பை உள்வாங்கிய மாணவர்கள் நேற்றிருந்து ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். கொடும் நஞ்சு இடைவிடாமல் அவர்களின் தொண்டைக்குள் சுரந்துகொண்டே இருக்க என்னவொரு வேதனையை அவர்கள் அனுபவித்திருப்பார்கள். வீரகுடி ஆசானை அடித்துத் தூக்கிப்போட்டு தேவவாக்கு விலங்கைத் தூக்கிச்செல்லும் வலிமை இவ்வுலகில் யாருக்கோ இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்வதும் செத்துமடிவதும் ஒன்றுதான். பறம்புநாட்டின் அடையாளத்தை எடுத்துச்செல்லும் இவர்களின் உயிர் இன்னும் பறம்பின் எல்லைக்குள்தான் இருக்கிறது என்பதை சகித்துக்கொள்ள முடியாத கோபமும் வெறியும் பாரியைக் கட்டுக்கடங்காத ஆவேசங் கொள்ளச்செய்தன.

ஓட்டத்தின் வேகத்தைச் சரிந்துகிடக்கும் நிலமும் படர்ந்துகிடக்கும் செடிகொடிகளும் முடிவுசெய்கின்றன. சுண்டாப்பூனைகளின் முதுகெலும்பு வில்லைப்போல வளைந்து நீள நான்குகாற்பாய்ச்சலில் ஓடிவந்து கொண்டிருந்தபொழுதும் அவற்றால் நெருங்க முடியாத வேகங்கொண்டு பாரி ஓடுவதற்குக் காரணம், கண்ணுக்கு முன்னால் ஓடும் எதிரிகளும் கண் தெரியாத வெறியை உருவாக்கிய அனுவல்லிப்பூண்டுமே. விலங்குகள் தங்களின் இரை நழுவிப்போகும் காலம் நீளுகையில் இயல்பிலே பல மடங்கு ஆவேசத்தை அடைகின்றன. சுண்டாப்பூனைகள் இவ்வளவு வேகங்கொள்வதற்கு அதுதான் காரணம். பாரி அவற்றைவிட வேகமெடுத்து ஓடிக்கொண்டிருப்பதற்கும் அதுதான் காரணம். இப்பொழுது அவனது மனமும் செயலும் விலங்கினும் கொடுஞ்சினம் கொண்டிருந்தன.

அதையும் கடந்து ஒருவேளை சுண்டாப்பூனைகள் அவன்மீது பாயுமேயானால் இடுப்பில் இருக்கும் இரு கத்திகளும் அவற்றின் கீழ்த்தொண்டையில் இறங்க ஆயத்தமாகத்தான் இருந்தன. ஆனால், பாரி அதனைச் செய்யப்போவதில்லை. ஏனென்றால் விரட்டிவரும் இரண்டும் அவனுடைய இரையல்ல, ஆயுதங்கள்.

காமத்தில் ஏறிய வேகங்குறையாமல் அவற்றை இழுத்து வந்துகொண்டிருப் பதற்குக் காரணம், அதே வேகத்தோடு வேட்டையில் இறக்குவதற்காகத்தான். சுருள்வால் கொண்ட சுண்டாப்பூனையின் பன்றிப்பற்களும் நீள்வளைவு நகங்களும் பறம்பின் தரப்புக்காகக் களமிறங்கப்போகின்றன. தீராத காமம் தீரும்பொழுது கிடைக்கவேண்டிய உணவுக்கான விருந்துக்கு அழைத்துச்சென்றான் வேள்பாரி.

இதோ... விருந்து மிக அருகில் வந்துவிட்டது. அவன் அழைத்துவரும் விருந்தாளிகள் அதனைவிட அருகில் வந்து விட்டன. முன்னால் ஓடிக்கொண்டிருப்பது வேட்டை உணவு, பின்னால் வந்துகொண்டிருப்பன வேட்டை விலங்குகள். இரண்டுக்கும் இடையில் விட்டுவிலகும் சரியான கணத்தை, முன்வைத்த கால்விரல்கள் தீர்மானித்தன.

பாரி இடப்புறப்பள்ளம் நோக்கி எவ்விப்பாய்ந்து சரிந்த கணத்தினை சுண்டாப்பூனைகளால் நினைவுகொள்ள முடியாமல் இருந்ததற்குக் காரணம், கையளவு தொலைவில் ஓடிக்கொண்டிருந்த எண்ணற்ற மனிதர்களின் ஓட்டம். சரிவில் உருண்டு, வேர்கள் பிடித்து, இங்குமங்குமாக தூக்கிவீசப்பட்டு, அடிப்பள்ளத்தில் பாரி நிலைகொண்டபொழுது மேலே வேட்டை முழுவேகத்தில் நடந்துகொண்டிருந்தது. சுண்டாப்பூனைகளின் ஆவேசத்துக்கும் ஆற்றலுக்கும் இரை எதுவும் மிஞ்சாது.

கதறலும் தாக்குதலும் உச்சத்தில் நிகழ்ந்தன. எதிரிகள் என்னவென்றே கணிக்கமுடியாதபொழுது நிகழ்ந்த தாக்குதல் இது.  ஓசைகள் காற்றைக்  கிழித்துக்கொண்டிருந்தன. உயிர்போகும் கதறலும் ஆவேசங்கொண்ட கூக்குரலும் எங்கும் எதிரொலித்தன.

எத்தகைய ஆயுதத்தைக்கொண்டு தாக்கினாலும் இவ்வளவு வலிமைகொண்ட எதிரிகளின் கூட்டத்தை தனியொருவன் அழிப்பது எளிதன்று. பாரி இக்கூட்டத்தை அழிக்க, காட்டின் வலிமை மிகுந்த ஆயுதத்தை ஏவியுள்ளான். எந்தவொரு எதிரியாலும் நினைத்துப்பார்க்க முடியாத தாக்குதலாக இது இருக்கப்போகிறது.

சுண்டாப்பூனையின் முன்வளைந்த பன்றிப்பள்ளும் முனைநீண்ட அதன் கால்நகங்களும் ஓடிக்கொண்டிருப்பவர்களின் மேலே ஒருமுறை பட்டாற்போதும், அதன்பின் அவன் கொட்டும் குருதிக்கு அளவேதும் இருக்காது. 

அதுவும் பழக்கப்படுத்தவே முடியாத காட்டுவிலங்குகளை வைத்து நிகழ்த்தும் தாக்குதலை எதிர்கொண்டு மீள்வது எளிதல்ல. வேட்டை நாயைத் தவிர வேறு எவ்விலங்கையும் மனிதனை நோக்கி ஏவ முடியாது. அதுவும் இப்பயங்கர விலங்கை எப்படி ஏவினார்கள் என்ற திகைப்பு அடங்குமுன் அவர்களின் உயிர்மூச்சு அடங்கியிருக்கும்.

பாறையின் மேற்புரத்தில் கேட்டுக்கொண்டிருந்த பேரோசை கொஞ்சங்கொஞ்சமாகக் குறையத்தொடங்கியது. வேட்டை முடிவுக்கு வந்ததை எழும் ஓசைகள் சொல்லின. பாரி மேலேறிவர முடிவெடுத்தான். குருதி மிதக்கும் குளம்போல இருக்கும் அந்த இடத்தைக் காண திண்டுகளையும், வேர்களையும் பிடித்து மேலேறி வந்தான். ஒரு போர்க்களத்தின் உள்ளங்கையைப்போல் அவ்விடமிருந்தது.

இங்குமங்குமாகப் பலரும் சிதறிக்கிடந்தனர். அருகில் குடல்சரிந்து ஒரு சுண்டாப்பூனை கிடந்தது. இன்னொன்று  தப்பியோடியிருக்க வேண்டும். ஒரு கூடையைக் கடித்து இழுத்துள்ளதால் அதிலிருந்த தேவவாக்கு விலங்குகள் வெளியில் சிதறியிருக்கின்றன. அவற்றைத் தப்பியோடிய பூனை விழுங்கி முடித்திருக்க வேண்டும்.

குருதிக்களம்விட்டு பார்வையை நகர்த்தி அடுத்த குன்றைப் பார்த்தான் பாரி. தப்பித்த மூவர் சற்றுத்தொலைவில் நடுமலையின் விளிம்பை நோக்கி ஓடிக்கொண்டிருந்தார்கள். மூவரின் தோள்களிலும் கூடைகள் இருந்தன. ஆவேசங்கொண்ட சுண்டாப்பூனைகளின் தாக்குதலையும் மிஞ்சி ஓடும் மூவரைப் பாரியின் கண்கள் வியப்புற்றுப் பார்த்தன.

ஏழுபேரைப் பலிகொடுத்தாலும் தூக்கிய மூன்று கூடைகளை விட்டுவிடாமல் அவர்கள் ஓடிக்கொண்டிருக்கின்றனர். பாரி மீண்டும் ஓடத் தொடங்கினான். எதிரிகளின் ஆற்றல் நம்பமுடியாதபடி இருந்தது. இவ்வளவு தாக்குதலுக்குப் பின்பும் அவர்களின் வேகம் குறையாமல் இருந்ததை அவனது கண்கள் கணித்துக்கொண்டிருந்தன. உடன் வந்தவர்களில் பெரும்பான்மையோரின் மரணம் அவர்களின் வேகத்தைச் சிறிதும் தளர்த்தவில்லை.

அவர்களின் உடலும் மனமும் எதனையும் பொருட்படுத்தாத வேகங்கொண்டிருக்கின்றன என்று அவனுக்குத் தோன்றியது. மீண்டும் அவன் ஓடத் தொடங்கினான். நடுமலையின் உச்சிக்கு வந்தான். அவன் கண்ணுக்கு முன்னால் தேவவாக்கு விலங்கை எடுத்துக்கொண்டு மூவர் நடுமலையின் முகட்டைக் கடந்திருந்தனர். அவர்கள் கீழிறங்கிய இடம் மனிதனால் சற்றும் நகரமுடியாத பெரும் மலைப்பள்ளத்தாக்கு. இதில் மிகமிகக் கவனமாகவே கால்களை நகர்த்தமுடியும். வேர்களையும் பாறையிடுக்குகளையும் பிடித்தபடியே இறங்கவேண்டும். இப்பகுதி முழுவதும் இப்படித்தான்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 42

பொழுது மங்கத்தொடங்கிய நேரம் அவர்கள் பாறைகளின் இண்டு இடுக்குகளின் வழியே கவனமாக இறங்கிக்கொண்டிருந்தனர். பொருத்தமான இடத்தில் நின்று அவர்களைக் கவனிக்கத் தொடங்கினான். இப்பொழுது அவர்கள் மூன்று பேராக இல்லை. நிறைய தலைகள் தெரிந்தன. பாறையின் இடுக்குகளில் காத்திருந்தவர்கள் மீண்டும் இணைந்துவிட்டனர் என்பது புரிந்தது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 42மூச்சிரைத்தபடி பார்த்துக்கொண்டிருந்தான். கண்களுக்கு முன்னால் வேட்டை தப்பித்துப் போய்க்கொண்டிருந்தது. சுண்டாப்பூனைகளை வீழ்த்திவிட்டுத் தப்பிப்போகும் மனிதர்களை அவனது கண்கள் முதன்முறையாகப் பார்த்தன. தாவிக்குதித்து அவர்களை விரட்டிச்செல்ல உடல் துடித்தபொழுது, மனம் சூழலைப் புரிந்துகொள்ளப் போராடியது. அடங்காத ஆவேசத்தோடு சற்றே பின்னால் திரும்பினான்.

ஆதிமலையின் எலிவால் முகட்டிற்கு நேரே சென்றிப்புகை மேலெழுந்து உச்சிவரை போய்க்கொண்டிருந்தது. பறம்பின் ஆசான் உதவிகேட்டு புகைபோட்டிருக்கிறான் என்பது புரிந்தது. ஆசான் புகைபோட்டு நீண்டநேரம் ஆகியுள்ளது.எதிர்திசையில் ஓடிக் கொண்டிருந்ததால் பாரியின் கண்களுக்கு அது தெரியவில்லை. இப்பொழுதுதான் பார்த்தான்.

பாரி அவர்களை விரட்டத்தொடங்கிய உடனே சென்றிப்புகை போட்டுவிட்டான் தேக்கன். ஆதிமலையின் இரண்டாவது மூன்றாவது குன்றுப் பகுதிகளில் பெரும் பரப்பளவில் ஊர்களே கிடையாது. இரத்தச்சிலந்திக் காடாதலால் மனிதர்களும் வேட்டைக்கோ, மற்றவைகளுக்கோ இப்பக்கம் வரமாட்டார்கள். எனவே புகை பார்த்து வருவதாக இருந்தால் மிகத்தொலைவில் இருந்துதான் வர வேண்டும். ஆனால், மழைக்காலமாதலால் மேகங்கள் கீழிறங்காமல் இருந்தால்தான் புகை உச்சிக்குப் போனாலும் மனிதர்களால் கண்டறிந்து வர முடியும்.

தேக்கன் புகைபோட்டு பாதிநாள் கடக்கப்போகிறது; யாரும் வரவில்லை. கடுமையான தாக்குதலுக்கு உள்ளானதால் மாணவர்கள் கொடும் வேதனையில் இருந்தார்கள். பொழுது மறைய சிறிதுநேரமே இருந்தது. அடுத்து என்ன செய்யலாம் என்பதைப் புகைபார்த்து வருகிற ஆளை வைத்துத்தான் முடிவுசெய்ய வேண்டும். இரண்டு, மூன்று திட்டங்களோடு தேக்கன் காத்திருந்தான்.

மடுவன் தொலைவில் கைநீட்டிக் காண்பித்தான். யாரோ வருவது தெரிந்தது. தேக்கன் உற்றுப்பார்த்தான். வந்து நின்றது வேட்டூர் பழையனும் இரு வீரர்களும். ஆதிமலையின் புலிவால் குகையில் தங்கியவன் காலை நேரங்கழித்து புறப்பட்டிருக்கிறான். இரண்டாம் குன்று தாண்டும்பொழுது பார்த்திருக்கிறான். இரத்தச்சிலந்தி காட்டுப்பகுதியில் இருந்து சென்றிப்புகை ஏற்றப்பட்டுள்ளது. மிகத்தொலைவில் புகை எழுந்துள்ளது. ஆனால், இப்பகுதிக் காட்டுக்குள் வேறு யாரும் இருக்கப்போவதில்லை. எனவே உதவிக்கு நாம்தான் இங்கிருந்து போக வேண்டும் என்று நினைத்து வீரர்களோடு நாள்முழுவதும் நடந்து வந்து சேர்ந்தான்.

வேட்டூர் பழையனுக்கு நடந்ததை தேக்கன் விளக்கினான். தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள் வலியாலும் கசப்பின் கொடுமை தாங்காமலும் துடித்துக்கிடந்தார்கள். கருவிழி உருகி வழிந்தவன், உருண்டு பெரும்பள்ளத்தில் வீழ்ந்ததில் மயக்கநிலையை அடைந்தான். வேட்டூர் பழையனுக்குப் பார்க்கும் காட்சி, கேட்கும் கதை எதையும் நம்ப முடியாமல் இருந்தது.

தேக்கன் விழுந்து உருண்டதில் இடுப்பின் பின்பகுதியில் பெரும் ஈக்கி குத்தி உள்சொருகியிருந்தது. ஈக்கியை எடுத்துவிடச் சொன்னான். பழையன் கவனமாக அதனைப் பிடித்து வெளியே இழுத்தான். “ஆ”வென கத்திய தேக்கனின் குரல்  துண்டிக்கப்பட்டதைப்போல பாதியில் ஒலியற்று நின்றது. அவனது கண்கள் எதிரில் பார்த்த காட்சியே அதற்குக் காரணம். எதிரில் நடுமலையின் உச்சியில் சென்றிப்புகை மேலேறிக்கொண்டிருந்தது. தேக்கனின் கண்கள் அகலத்திறந்தபடி இருந்தன. மேலெழும் புகை பார்த்து வாய் மட்டும் முணுமுணுத்தது “அது...   பாரி.”

ஒரே நாளில் பறம்பின் ஆசானும், பறம்பின் தலைவனும் சென்றிப்புகைபோடும் நாளும் வந்தது.  

- பறம்பின் குரல் ஒலிக்கும்...