மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சசிகலா ஜாதகம் - 63 - “நமது எம்.ஜி.ஆருக்கு நடராசன் குடும்பத்தினர்தான் உரிமையாளர்கள்!”

சசிகலா ஜாதகம் - 63 - “நமது எம்.ஜி.ஆருக்கு நடராசன் குடும்பத்தினர்தான் உரிமையாளர்கள்!”
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா ஜாதகம் - 63 - “நமது எம்.ஜி.ஆருக்கு நடராசன் குடும்பத்தினர்தான் உரிமையாளர்கள்!”

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

‘நடராசனும் சசிகலாவும் என் குடும்ப நண்பர்கள்’ என ஜெயலலிதா ஜெயபேரிகை கொட்டியதும் கட்சியில் நடராசன் தலையீடு இன்னும் அதிகமானது. விவகாரம் இன்னும் விகாரமானது. ஜெயலலிதாவும் திருநாவுக்கரசரும் வார்த்தைப் போர் நடத்த ஆரம்பித்தனர். ஆனாலும், இன்னொரு பக்கம் சமரச முயற்சிகளும் நடைபெற்று வந்தன. அந்த முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டைப் போட்டனர் சசிகலா குடும்பத்தினர். தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை வைத்து அறிக்கைகளைவிட ஆரம்பித்தனர். அதில் ஒருவர்தான், ஜெயலலிதா அணியின் அமைப்புச் செயலாளர் அண்ணா நம்பி எம்.பி.

நடராசனையோ, சசிகலாவையோ யாருமே வெளிப்படையாக விமர்சிக்காத நிலையில், திருநாவுக்கரசர் திரி கொளுத்திப் போட்டது நடராசனுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. திருநாவுக்கரசருக்குப் பதிலடி கொடுக்க அண்ணா நம்பியைக் களமிறக்கினார். ‘திருநாவுக்கரசர் ஏதோ உள்நோக்கத்துடன் நடராசனைப் பற்றிப் பேசுகிறார். கட்சியைவிட்டு யார் போனாலும் சரி... ஜெயலலிதா ஆட்சி அமைவதில் மாற்றமில்லை’ எனக் காட்டமாக அறிக்கைவிட்டார் அண்ணா நம்பி. உடனே திருநாவுக்கரசர், ‘‘ஜெயலலிதாவின் அனுமதியோடுதான்  ‘பேச்சுவார்த்தை முறிந்துவிட்டது’ என அண்ணா நம்பி அறிவித்தார் என்றால், சமரசப் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது ஒரு நாடகமா?’’ எனக் கேள்வி எழுப்பினார்.

சசிகலா ஜாதகம் - 63 - “நமது எம்.ஜி.ஆருக்கு நடராசன் குடும்பத்தினர்தான் உரிமையாளர்கள்!”

1988 ஜூலை 10 அன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த திருநாவுக்கரசர், ‘‘இதுவரை கட்சிக்கு வசூலான பெரும் தொகையில் சுமார் இரண்டு லட்சம் ரூபாய்தான் வங்கிகளில் மீதம் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். கட்சிப் பொருளாளர் என்ற முறையில் எனது பெயரில்கூட வங்கிக் கணக்குத் தொடங்கப்படவில்லை. பொதுச் செயலாளர் என்ற அடிப்படையில் இல்லாமல், ஜெயலலிதா பெயரில் தனிப்பட்ட முறையில் தொடங்கப்பட்ட கணக்கிலும் இரண்டு லட்சம் ரூபாய்தான் இருக்கிறது. கட்சித் தொண்டர்கள் சேகரித்துக் கொடுத்த நிதிக்கு, ஜெயலலிதா முறையான கணக்குத் தர வேண்டும். கட்சிக்காக எவ்வளவுத் தொகை சேகரிக்கப்பட்டது என்கிற விவரத்தையும், பொருளாளர் என்ற முறையில் எனக்குத் தெரிவிக்கவில்லை. முறையான கணக்கையும் கட்சியின் வரவு செலவு விவரத்தையும் ஜெயலலிதா தெரிவிக்க வேண்டும்’’ என்றார். கூடவே, ‘‘பாதுகாப்பற்ற சூழ்நிலையில் சூழ்நிலைக் கைதியாக வைக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதாவைக் காப்பாற்றி எம்.ஜி.ஆர் ஆட்சியை ஏற்படுத்துவதுதான் எங்கள் நோக்கம்’’ என்றார். கட்சி நிதியில் நடராசனின் கை இருப்பதையும், அவர் பிடியில் ஜெயலலிதா சூழ்நிலைக் கைதியாகச் சிக்கி இருக்கிறார் என்பதையும் திருநாவுக்கரசர் இப்படி சுட்டிக்காட்டினார்.

இப்படியான வார்த்தைப் பிரயோகங்களுடைக்கிடையே இரண்டு முக்கியமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ‘நமது எம்.ஜி.ஆர்’ என்கிற கட்சிப் பத்திரிகையை ஜெயலலிதா தொடங்கினார். நெடுஞ்செழியனின் 69-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டமும் நடந்தது. ‘நமது எம்.ஜி.ஆர்’ வெளியிட்டு நிகழ்ச்சியும், நெடுஞ்செழியனின் பிறந்தநாள் விழாவும் ஜூலை 11-ம் தேதி ஒரே நாளில் தனித்தனியாக நடைபெற்றன.

ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ‘நமது எம்.ஜி.ஆர்’ வெளியீட்டு விழாவுக்கு,  நெடுஞ்செழியன் ஆதரவாளர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பவில்லை. ஆனால், விழாவில் நெடுஞ்செழியனுக்குப் பிறந்தநாள் வாழ்த்தைச் சொன்னார் ஜெயலலிதா. ‘நமது எம்.ஜி.ஆர்’ பத்திரிகையை ஜெயலலிதா வெளியிட, எஸ்.டி.சோமசுந்தரம் பெற்றுக் கொண்டார். அப்போது பேசிய ஜெயலலிதா, ‘‘இன்று சிலர் கணக்கு கேட்கிறார்கள். வருமானவரித் துறை கணக்கு உட்பட சரியான கணக்குகள் எங்களிடம் உள்ளன. எப்போது வேண்டுமானாலும் இதைப் பொதுக்குழுவில் வைக்கத் தயாராக இருக்கிறேன். இதையெல்லாம் பேச ஒரு இடம் இருக்கிறது. கணக்குக் கேட்பவர்களைப் பார்த்து யாரும் பயப்படத் தேவையில்லை. மற்றவர்களுக்குப் பதில் சொல்ல நான் தயாராக இல்லை. வதந்திகளைப் பரப்பி தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். பல போராட்டங்களுக்கு இடையே கடன் வாங்கி இன்று ‘நமது எம்.ஜி.ஆர்’ பத்திரிகையைத் தொடங்கியிருக்கிறோம். யார் உடன் வந்தாலும், வராவிட்டாலும், நமது லட்சியம் தொடரும்’’ என்றார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். இவ்வளவு விஷயங்களும் நடராசனின் கண் அசைவில்தான் நடைபெற்றன.

தன் பிறந்தநாளையொட்டி நெடுஞ்செழியன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஜனநாயக முறையில் செயல்பட்டு வந்த கட்சியில் முக்கியப் பொறுப்பு வகித்த ஒருவர் ‘நான், என்னுடைய கட்சி, என் திட்டம், என் ஆட்சி, என் முயற்சி, எல்லாம் என்னால்தான், உரிமைகள் அதிகாரங்கள் அனைத்தும் எனக்குத்தான்’ என்று சர்வாதிகார மரபு வழிமுறைகளைக் கடைப்பிடித்து வருவது சரியல்ல’’ என ஜெயலலிதாவைக் குற்றம்சாட்டியிருந்தார். இப்படி ‘நான்’ என்கிற நிலைக்கு ஜெயலலிதாவைச் சசிகலா குடும்பம் தள்ளியிருந்தது. கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் நெடுஞ்செழியனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஆர்ப்பாட்டமாக நடந்து முடிய... சசிகலா குடும்பம் கோபத்தில் கொதிக்க ஆரம்பித்திருந்தது.

சசிகலா ஜாதகம் - 63 - “நமது எம்.ஜி.ஆருக்கு நடராசன் குடும்பத்தினர்தான் உரிமையாளர்கள்!”

கட்சியின் நிதி பிரச்னை நடராசனோடு முடிச்சுப் போடப்பட்டிருந்த நிலையில், ‘நமது எம்.ஜி.ஆர்’ விவகாரமும் நடராசனைச் சுற்றி பின்னப்பட்டிருந்தது. 1988 ஜூலை 12-ம் தேதி நிருபர்களைச் சந்தித்த திருநாவுக்கரசர், ‘‘ஜெயலலிதா அளித்த விளக்கம் யாருக்கும் திருப்தி அளிக்கவில்லை. கட்சிக்குப் பல்வேறு இடங்களில் இருந்து வசூலான பணம் பற்றி பொதுக் கூட்டங்களில் ஜெயலலிதா சொன்னதற்கும், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கூறியதற்கும், நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அதே நேரம், வங்கிக் கணக்குகளில் குறைவான தொகையே போடப்பட்டிருக்கிறது. திரட்டப்பட்ட நிதி முறையாக வங்கிகளில் வரவு வைக்கப்படவில்லை. இதையெல்லாம் எப்படி சகித்துக்கொள்ள முடியும்? இரும்புக் கோட்டைக்குள்ளும் இருட்டிலும் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவைக் காப்பாற்றி, மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம்’’ என்றார்.

ஜெயலலிதாவை இரும்புக் கோட்டையில் சிறை வைத்தவர்களைப்பற்றி மட்டுமல்ல... ‘நமது எம்.ஜி.ஆர்’ பற்றியும் திருநாவுக்கரசர் நிறைய பேசினார். ‘‘நமது எம்.ஜி.ஆர் கட்சிப் பத்திரிகை அல்ல; அது குடும்பப் பத்திரிகை. ஜெயா பப்ளிகேஷன்ஸ் என்கிற பங்குதார நிறுவனத்தில் இருப்பவர்கள்தான், பத்திரிகையின் உரிமையாளர்கள். இந்த நிறுவனத்தில் ஜெயலலிதா, நடராசனின் மனைவி சசிகலா, சசிகலாவின் தம்பி திவாகரன், சசிகலாவின் சகோதரி மகன் தினகரன் ஆகிய நான்கு பேர்தான் பங்குதாரர்கள். நான்கு பேரில் மூன்று பேர் நடராசன் குடும்பத்தினர். கட்சி நிதியில் இருந்து நடத்தப்படுகிற பத்திரிகைக்கு ஒரு குடும்பத்தினர் மட்டும் உரிமையாளர்கள். ‘ஊழல் இல்லாத ஆட்சி அமைப்போம்’ எனச் சொல்லும் ஜெயலலிதா, இப்போதே இப்படிச் செய்தால் எப்படி?’’ என்று கேட்டார்.

ஜூலை 21-ம் தேதி ஜெயலலிதா அணி இரண்டாக உடைந்தது. ‘நால்வர் அணி’ பிறந்தது. உபயம், நடராசன்!

(தொடரும்)