நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஸ்மார்ட்போன்... - உங்கள் தகவல்களைப் பாதுகாக்க ஸ்மார்ட் வழிகள்!

ஸ்மார்ட்போன்... - உங்கள் தகவல்களைப் பாதுகாக்க ஸ்மார்ட் வழிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்மார்ட்போன்... - உங்கள் தகவல்களைப் பாதுகாக்க ஸ்மார்ட் வழிகள்!

ஸ்மார்ட்போன்... - உங்கள் தகவல்களைப் பாதுகாக்க ஸ்மார்ட் வழிகள்!

ஸ்மார்ட் போன்களின் வருகையால் பணப் பரிமாற்றம் தொடர்பான நமது பணிகள் முற்றிலும் எளிமையாக மாறியிருக்கின்றன. முன்பெல்லாம் ஒருவருக்குப் பணம் அனுப்ப வேண்டுமென்றால், வங்கிக்குச் சென்று படிவத்தை நிரப்பி, பின்பு வரிசையில் நின்று அனுப்ப வேண்டியிருந்தது.

ஆனால், இன்றைக்கு ஒரு நொடியில் பணப் பரிமாற்றங்களைச் செய்ய முடிகிறது, வங்கிக்கு நேரில் செல்வதற்கான அவசியம் என்பதே இல்லாமல் போய்விட்டது. வங்கிகள் மட்டும்தான் என்றில்லை, நம் தனிப்பட்ட தகவல்கள் உட்பட அனைத்தையும் உள்ளங்கையில் சேமித்து வைத்திருக்கின்றன ஸ்மார்ட் போன்கள்.     

ஸ்மார்ட்போன்... - உங்கள் தகவல்களைப் பாதுகாக்க ஸ்மார்ட் வழிகள்!

ஒரு வங்கிக்குத் தேவைப்படும் பாதுகாப்பு ஸ்மார்ட் போனுக்கும் தேவைப்படும் அல்லவா? உங்கள் ஸ்மார்ட் போனை எப்படி பாதுகாப்பாக வைத்துக் கொள்வது என்று பார்ப்போம்.

உங்கள் ஸ்மார்ட் போனின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு ரொம்பவும் மெனக்கெடத் தேவையில்லை. சின்னச் சின்ன வழிமுறைகளைப் பின்பற்றினால் போதும், உங்கள் ஸ்மார்ட் போனின் பாதுகாப்பை மேம்படுத்தலாம். அவை என்னவென்று பார்ப்போம்.

ஸ்மார்ட் போன் லாக் & ஆப் லாக்

ஸ்மார்ட் போனின் அடிப்படைப் பாதுகாப்பு வசதி என்றால் அது, ஸ்கிரீன் லாக்தான். அதை பலர் உபயோகிப்பதில்லை. ஸ்கிரீன் லாக் இல்லாமல் இருந்தால், எளிதில் மற்றவர்கள் ஸ்மார்ட் போனின் தகவல்களை அணுக முடியும். எனவே, ஸ்கிரீன் லாக் வசதியைக் கட்டாயமாகப் பயன்படுத்துங்கள். சில சமயங்களில் உங்களது ஸ்கிரீன் லாக் மற்றவர்களுக்குத் தெரிந்துவிட்டால், உடனே பாஸ்வேர்டை மாற்றி  ஸ்மார்ட் போனை லாக் செய்யலாம்.

மற்றொன்று, ஆப் லாக். இப்போது பெரும்பாலான ஸ்மார்ட் போன்களில் இந்த வசதி இருக்கிறது. இதன் மூலமாக ஒரு சில குறிப்பிட்ட ஆப்ஸ்களை மட்டும் லாக் செய்ய முடியும். இதன் மூலமாக உங்கள் ஸ்மார்ட்போன் மற்றவர்கள் கையில் இருந்தாலும், உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படும்.

என்கிரிப்ஷன்

பலருக்கும் இந்த வசதி ஸ்மார்ட் போன்களில் இருப்பதே தெரிவதில்லை. அப்படியே தெரிந்திருந்தாலும் பயன்படுத்துவதில்லை. என்கிரிப்ஷன் வசதியைப் பயன்படுத்தினால் உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள மொத்தத் தகவல்களையும் வேறு வடிவில் என்கிரிப்ட் செய்து சேமிக்க முடியும். இதனால் மற்றவர்கள் உங்கள் தகவல்களைத் திருட நினைத்தாலும் அதை அவர்களால் பெற முடியாது. இதன் மூலமாக உங்கள் ஸ்மார்ட் போனைத் தொலைத்தாலும்கூட, மற்றவர்களால் உங்கள் தகவல்களை அணுக முடியாது. என்கிரிப்ஷன் வசதியைப் பயன்படுத்தி, முழு ஸ்மார்ட் போனையும் பாதுகாப்பானதாக மாற்றலாம்.

செக்யூரிட்டி அப்டேட்கள்


உங்கள் ஸ்மார்ட் போனின் மென்பொருளை அப்டேட்டாக வைத்திருங்கள். செட்டிங்க்ஸ் பகுதியில் இருக்கும் ‘Software Updates’ என்ற இடத்தில் உங்கள் ஸ்மார்ட்போன் அப்டேட்டாக இருக்கிறதா என்றும், ஏதாவது சாஃப்ட்வேர் அப்டேட்கள் வந்திருக்கிறதா என்பதையும் அறிந்துகொள்ளலாம். அதேபோல, ஆப்களையும் அப்டேட்டாக வைத்திருங்கள். தற்போது பயன்படுத்தும் ஆப்களில் இருக்கும் குறைகளைச் சரிசெய்வதற்காகவே புதிய அப்டேட்கள் தரப்படும் என்பதால், அவசியமான ஆப்களை யோசிக்காமல் அப்டேட் செய்துவிடுங்கள்.

அப்ளிகேஷன்கள்

ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தும் ஆப்களை அதன் அதிகாரபூர்வ ஸ்டோர்களில் இருந்து மட்டுமே தரவிறக்கம் செய்யுங்கள். apk.போன்று வெளியில் இருந்து பெறப்படும் ஆப்களை இன்ஸ்டால் செய்வதை முடிந்தவரைத் தவிர்க்கலாம். வெளியில் இருந்து தரவிறக்கப்படும் ஆப்களால் உங்கள் தகவல்கள் திருடப்படும் வாய்ப்பு அதிகம். அதுபோல, தேவையான  ஆப்களை மட்டும் இன்ஸ்டால் செய்யுங்கள்.  அதிகம் பயன்படுத்தாத ஆப்கள் வேண்டாமே!

ஆன்டிவைரஸ்

கணினிப் பாதுகாப்புக்கு எப்படி ஆன்டி வைரஸ் மென்பொருள் தேவைப்படுமோ , அதேபோல ஸ்மார்ட் போனுக்கும் தேவைப்படும். பெரும்பாலான ஆன்டிவைரஸ் மென்பொருள்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. ஆப் லாக், வைரஸ் ஸ்கேனிங், தொலைந்த மொபைலைக் கண்டறிய என பல்வேறு வசதிகள் இதில் இருக்கின்றன.

உங்கள் மொபைலில் மிக முக்கியமான தகவல்கள் சேகரிக்கப்பட்டிருந்தால் ஆன்டி வைரஸ் மென்பொருள் அவசியம் தேவைப்படலாம். இதன் மூலமாக உங்கள் மொத்த ஸ்மார்ட் போனையும் முழுமையாகப் பாதுகாக்க முடியும்.
இவை இல்லாமல் இன்னும் சில பாதுகாப்பு விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

* ஸ்மார்ட் போன்களை உங்கள் அனுமதி இல்லாமல் மற்றவர்கள் பயன்படுத்துவதற்கு அனுமதிக்காதீர்கள்.

* யாராவது உதவிக்காக உங்கள் ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தினாலும் அவர்கள் தவறாக ஏதாவது செய்கிறார்களா என்பதைக் கண்காணியுங்கள்.

* பிரவுசர்களில் ஜிமெயில், ஃபேஸ்புக் போன்றவற்றை லாக்-இன் செய்தால், வேலை முடிந்தவுடன் லாக் - அவுட் செய்துவிடுங்கள். நம்முடைய மொபைல்தானே என்ற அலட்சியம் வேண்டாம்.

* பெர்சனல் விஷயங்களை மொபைலில் வைத்திருப்பதைத் தவிர்க்கலாம். அப்படிபட்ட விஷங்களைப் பாதுகாப்பாகக் கணினி, ஹார்ட்டிஸ்க் போன்ற வேறு இடத்தில் சேமித்து வைக்கலாம்.

* மொபைலைச் சரிசெய்வதற்காகவோ, பராமரிப்புக்காகவோ வெளியிடங்களில் தந்தால் அதிலுள்ள தகவல்கள் அனைத்தையும் நீக்கிவிட்டுக்  கொடுப்பது பாதுகாப்பானது.

* நீங்கள் பயன்படுத்தும் ஆப்ஸ்கள் உங்கள் மொபைலில் எந்தத் தகவல்களை அணுகுவதற்கு அனுமதி கேட்கின்றன என்று கவனியுங்கள். தேவையில்லாத தகவல்களை அணுக அனுமதி கேட்டால் மறுத்துவிடலாம்.

* Permission Manager என்ற வசதியின் மூலமாக இதை நீங்கள் கண்காணிக்கலாம்.

-மு.ராஜேஷ்