
எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி
‘நால்வர் அணி’ உதயமானதற்குப் பிறகு ஜெயலலிதா - திருநாவுக்கரசர் மோதல் உச்சகட்டத்தைத் தொட்டது. அப்போது ஜூனியர் விகடனுக்கு திருநாவுக்கரசர் அளித்த பேட்டியில், சசிகலா குடும்பத்தைப் பற்றி விரிவாகப் பேசியிருந்தார்.
‘‘ஜானகி முதல்வராவதற்கு முன், ஜெயலலிதாவைப் பொதுச்செயலாளர் ஆக்க முடிவுசெய்தோம். 1987, டிசம்பர் 31-ம் தேதி ஜெயலலிதாவைப் பொதுச்செயலாளராக்கும் தீர்மானத்தைப் பண்ருட்டியார்தான் எழுதினார். அதில் நான், அரங்கநாயகம், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.. சௌந்தரராஜன் மற்றும் பலர் கையெழுத்திட்டோம். போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதாவுடன் முக்கியத் தலைவர்கள் பேசி, அடுத்தகட்ட நடவடிக்கைகளை முடிவு செய்வது வழக்கம்.
அப்போது அரசு அதிகாரியும் ஜெயலலிதாவின் உதவியாளருமான நடராசனை அழைத்து, அவரையும் டிஸ்கஷனில் ஜெயலலிதா உட்கார வைப்பார். மூத்த தலைவர்கள் கருத்துச் சொல்லும்போது, உடனே ஜெயலலிதா, ‘நடராசன், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’ என்று அவரிடம் கேட்பார். அவரும் கிரிக்கெட் சிறப்பு வர்ணனை மாதிரி ஏதாவது சொல்வார். விளையாட்டே தெரியாதவர் எப்படி வர்ணனை செய்ய முடியும்? அவர் அரசியல் கருத்துச் சொல்வது எங்களை அவமதிப்பது மாதிரி இருந்தது. எங்கள் வருத்தத்தை ஜெயலலிதாவிடம் சொன்னேன். அவர் என்மேல் கோபப்பட்டதுதான் மிச்சம். நடராசனிடமும் நாசூக்காகச் சொன்னேன். அவருக்குப் புரிந்துகொள்கிற பக்குவம் இல்லை.

ஜானகி ஆட்சி கவிழ்கிற வரையில் முக்கிய முடிவுகள் எடுப்பது, அறிக்கைகள் விடுவது என எல்லாவற்றையுமே மூத்த தலைவர்களைக் கேட்டுத்தான் ஜெயலலிதா செய்வார். ஆனால், காலப்போக்கில் அவருடைய போக்கு மாறியது. போகப் போக நடராசன் நேரடியாக அரசியலில் தலையிட ஆரம்பித்தார். எங்கள் ஆதரவு எம்.எல்.ஏ-க்களைப் பாதுகாப்பாக டூர் அழைத்துச் சென்றதால், கே.கே.எஸ்.எஸ்.ஆருக்குக் கட்சிக்காரர்களிடையே நல்ல செல்வாக்கு இருந்தது. கட்சியின் மாநில அமைப்பாளர் அல்லது எம்.ஜி.ஆர் இளைஞர் அணிச் செயலாளர் பதவி தனக்குக் கிடைத்தால் உற்சாகமாகப் பணியாற்ற முடியும் என அவர் நினைத்தார்.
ஒருநாள் நடராசன் போனில் என்னை அழைத்து, புதுப் பொறுப்பாளர்கள் பட்டியலைப் படித்தார். அந்தப் பட்டியலில் கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு முக்கியப் பொறுப்பு கொடுக்கவில்லை. இதை நடராசனிடம் எடுத்துச் சொன்னேன். உடனே அவர் ‘உங்கள் தகவலுக்காகத்தான் இதைப் படித்தேன். ஆலோசனைக்காக அல்ல. பட்டியல் ஏற்கெனவே பத்திரிகைகளுக்குச் சென்றுவிட்டது’ என்றார். மூத்த தலைவர்கள் அதிர்ச்சியுற்றார்கள். சேலம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து சேலம் கண்ணனுக்கு இணையாக ஓர் இணைச் செயலாளரையும் நியமித்தார்கள். ஜெயலலிதாவின் விசுவாசிகளுக்கு இதுதான் கதியா? தவறுகளை ஜெயலலிதாவிடம் சுட்டிக்காட்டினேன். என் மீது கோபப்பட்டார்.
தலைவர் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின், போயஸ் கார்டன் அருகே ஜேப்பியாரின் ஆட்கள் நடமாட்டம் அதிகமிருந்தது. உடனே புதுக்கோட்டையிலிருந்து ‘கராத்தே’ தெரிந்த 24 பேரை 24 மணி நேர டியூட்டியில் ஜெயலலிதாவின் பாதுகாப்புக்குப் போட்டிருந்தேன். அப்போது போயஸ் கார்டனில் நடராசன் ஆட்கள் கிடையாது. பிறகு கராத்தே வீரர்கள் துரத்தப்பட்டனர். போயஸ் கார்டனை நடராசனின் உறவினர்கள் ஆக்கிரமித்துக் கொண்டார்கள். நடராசனின் ‘பூனைப்படை’யும் தயாரானது. தி.நகர் ஜெர்மன் ஹாலில் நடந்த பொதுக்குழுவில் ஜெயலலிதாவைப் பார்க்க தொண்டர்கள் முண்டியடித்தார்கள். உடனே பூனைப்படையினர், துப்பாக்கியைக் காட்டித் தொண்டர்களைச் சுட்டு விடுவதாக மிரட்டினர். தொண்டர்கள் பயந்துபோய்ச் சிதறி ஓடினார்கள். பிரதமரின் பாதுகாப்புப் படையேகூட செய்யத் துணியாத இந்தச் செயலைச் செய்தார்கள்.
யார் என்ன சொன்னார்களோ... அடுத்த நாள் ஜெயலலிதா என்னிடம், ‘என் உயிருக்கு ஆபத்து வருகிறது. இந்தச் சதிக்குப் பின்னால் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்’ என்று ஆத்திரப்பட்டார். கட்சிக்காரர்களுக்குக் கொலைகாரப் பட்டம் கொடுத்தது அதிர்ச்சியைக் அளித்தது. தன் நிழலைகூடச் சந்தேகிக்கும் நிலைக்கு ஜெயலலிதா வந்துவிட்டார்!

நடராசனின் கட்டுப்பாட்டில் ஜெயலலிதா இருந்தார். நடராசனின் போக்கோ, தி.மு.க.-வுக்குச் சாதகமாகவே அமைந்து வந்தது. அதனால், இதற்கு ஒரு முடிவுகட்ட நினைத்தோம். அதன் விளைவு, கட்சி பிளவுபடும் அளவுக்கு இப்போது பிரச்னை வளர்ந்துவிட்டது. நடராசன் தி.மு.க-வின் கைக்கூலி. ஜெயலலிதாவைத் தவறான பாதையில் அழைத்துச் செல்கிறார். காங்கிரஸ் கட்சியுடனான உறவை ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் கெடுத்துவிட்டன. வி.பி.சிங்கைச் சந்தித்தது, பேட்டிகளில் தாறுமாறான விமர்சனங்கள் செய்தது எல்லாமே ஜெயலலிதாவுக்கு எதிராக அமைந்தன. இதற்கு ஜெயலலிதா மட்டுமல்ல, நடராசனும் பூனைப்படையும் கூடக் காரணம். பத்திரிகைக்காரர்களைக்கூட பூனைப்படை தாக்கியது. முப்பது மைல் தூரம் ஜோதியை ஏந்தியபடி ஓடிவந்து, கொடுத்த தொண்டர்களை அவமானப்படுத்தினர். பூனைப்படையினர் ஜோதியைப் பிடுங்கியெறிந்துவிட்டு அவர்களை அடித்துத் துரத்தினார்கள்.
‘ஓஹோ’ என்று ஆரம்பித்த எங்கள் அணி, மளமளவென்று சரியத் துவங்கியது. இன்று ஜெயலலிதா மர்ம மாளிகையில், பயங்கர மனிதர்களுக்கு நடுவே சிக்கியிருக்கிறார். அவரைக் காப்பாற்ற நினைக்கிறபோது ‘பண்ருட்டியும், திருநாவுக்கரசும் காங்கிரஸுக்குப் போய்விடுவார்கள். காங்கிரஸுடன் 50/50 தொகுதி ஒதுக்கீட்டுக்கும், கூட்டணி மந்திரிசபைக்கும் ஒப்புக்கொண்டு விட்டார்கள்’ என்று நடராசன் வதந்தி பரப்பினார். நடராசன் குடும்பம் விலகாத வரை சமாதானத்துக்கு வழி இல்லை. தி.மு.க-வைத் தோற்கடிக்க காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் தேவை. தி.மு.க எதிர்ப்புச் சக்திகள் ஒன்றாக வேண்டும்.
தொண்டர்கள் வியர்வையும் ரத்தமும் சிந்திச் சேகரித்த நிதிக்குக் கணக்கு ஒழுங்காக வைக்கப்பட வேண்டும். தொண்டர்கள் நிதி சேர்த்தது கட்சிக்காக... நடராசன் குடும்பம் தன் வசதிகளைப் பெருக்கிக்கொள்வதற்கு அல்ல. கட்சித் தொண்டர்களின் பணத்துக்குக் கணக்குக் கேட்டால், ‘குரைக்கிற நாய்களுக்குப் பதில் சொல்ல வேண்டியதில்லை’ என்று கோபமாக என்னைத் திட்டினார். தொண்டர்களிடமே அன்பு பாராட்டாத ஜெயலலிதா, நாட்டு மக்களிடம் எப்படி அன்பு செலுத்துவார்? அவர் ஆட்சி அமைத்தாலும், அது ‘மக்கள் விரோத ஆட்சி’யாகவே அமையும். ஒரு சர்வாதிகாரியின் கையில் தமிழகம் சிக்கி அலங்கோலமாகக் கூடாது என்பதைச் சரியான தருணத்தில் நாங்கள் புரிந்துகொண்டோம்’’ என விரிவாகப் பேசியிருந்தார் திருநாவுக்கரசர்.
(தொடரும்)