மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

சாதிப்பார்கள் பிரபாகரன்கள்!

எஸ்.சண்முகசுந்தரம், வைத்தீஸ்வரன்கோவில்.

ஹாய் மதன் கேள்வி - பதில்

இவ்வளவு நாள் போராடியும் பிரபாகரனால் சாதிக்க முடியவில்லையே - இதைக் காலத்தின் கட்டாயம் என்று சொல்லலாமா?

காலத்தின் கட்டாயம் அல்ல - துரோகம். எத்தனையோ போராளிகள் தங்கள் லட்சி யத்தை அடைவதற்கு முன்பே கொல்லப்பட்டார்கள். பிற்பாடு, இன்னொரு தலைமுறை கிளம்பி அவர்கள் லட்சியத்தை நிறைவேற்றி இருக்கிறது. அந்தப் புரட்சித் தீயை விதைத்தவர்கள் அந்தப் போராளிகள்தான். ரோம் நாட்டில் அடிமைகளின் சுதந்திரத்துக்காக வாள் எடுத்துப் போராடிய அடிமைகளின் தலைவன் ஸ்பார்ட்டகஸ் கொடூரமாகக் சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்பட்டான். பிற்காலத்தில் அடிமைத்தனம் ஒழிந்தது. இன்றும் ஸ்பார்ட்டகஸ் மறக்கப்படவில்லை. சுதந்திர இந்தியாவை பகத்சிங் பார்க்கவில்லையே! சே குவேராவை இன்றுவரை உலகம் போற்றுகிறது. ஒரு நாட்டின் வரலாற்றோடு ஒப்பிட்டால், ஒரு தனி மனிதனின் -போராளி யின் ஆயுட்காலம் மிகக் குறுகியது. அது எப்படிப்பட்ட ஆயுட்காலம் என்பதுதான் பெருமிதத்துக்குரிய விஷயம். பிரபாகரனின் லட்சியத்தை, பிற்காலத்தில் பிரபாகரன்கள் சாதித்துக் காட்ட மாட்டார்கள் என்று நினைக்கிறீர்களா?

##~##

ஜெ.பத்மா, சென்னை-8

எந்த வயதில் நோபல் பரிசு வாங்குவது சிறந்தது?

ரொம்ப வயசான பிறகு வாங்குவது தான் நல்லது. காரணம், நோபல் பரிசு வாங்கியவர்கள் யாருமே அதற்குப் பிறகு உருப்படியாக எதையும் சாதித்தது இல்லை என்கிறார் பெருங்கவிஞர் டி.எஸ்.எலியட். (அவரும் நோபல் வாங்கியவரே!)

ஜி.அசோக்குமார், பெங்களூரு.

உலகம் முழுவதும் இயங்கும் 'ரெட் க்ராஸு’க்குத்  தனிப்பட்ட ஒரு மதமான கிறித்துவ சிலுவைக் குறியை ஏன் பயன்படுத்துகிறார்கள்?

மத விஷயம் யதேச்சையானது! 'ரெட் க்ராஸ்’ (1863-ல்) உருவாக முக்கியக் காரணமாக இருந்தவர், சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த வங்கி நிறுவனர் ஹென்றி ட்யூனான்ட். அவர் பிறந்த நாட்டுக்குப் பெருமை சேர்க்க, சுவிஸ் கொடியில் இருந்த சிலுவைச் சின்னத்தைப் பயன்படுத்தினார்கள். ஆனால், சுவிஸ் கொடியில் இருப்பது சிவப்புப் பின்னணியில் வெள்ளை சிலுவை, லேசான மாற்றம்!

என்.என்.வெங்கட்ராமன், மதகுசாலை.

மதன் சார், சரியாக இரவில் தூக்கம் வரவில்லை. கனவில் நடிகைகள் ஒருவர் ஒருவராக வந்து செல்கிறார்கள். இதற்கு என்ன செய்யலாம்?

தயவுசெய்து நீங்கள் அவர்களில் யாராவது ஒரு நடிகையை விரைவில் தேர்ந்தெடுத்து, அவருக்கு ரசிகராக ஆகிவிடுவது உங்கள் உடல் நலனுக்கு நல்லது என்பது என் தாழ்மையான கருத்து!

வி.எம்.செய்யதுபுகாரி, அதிராம்பட்டினம்

துயரமான சம்பவங்களை கேலிச் சித்திரமாகத் தீட்டும்போது தங்களின் மனநிலை எப்படி இருக்கும்?

கார்ட்டூன் வரையும்போது ஒரு துயரமும் இருக்காது. வரைந்த பிறகு சோகம் சூழ்ந்துகொள்ளலாம். எந்தக் கலையாக இருந்தாலும், அதில் ஈடுபடும்போது மூளை மட்டுமே வேலை செய்யும். ஒரு பாடகர் உணர்ச்சி மிகுந்த பாடலைப் பாடும்போது பாதியில் அழ மாட்டார். அழுதால், மேலே பாட முடியாது!

மகிழை.சிவகார்த்தி, புறத்தாக்குடி.

மாதம் ஏதாவது ஒரு பண்டிகை வந்துவிடுகிறதே... (இது இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும்?)

ஹாய் மதன் கேள்வி - பதில்

உறவினர்கள், நண்பர்கள் என்று மனிதச் சமுதாயம் மகிழ்ச்சியாக ஒன்றுகூடுவதற்கும், புத்துணர்வு பெறுவதற்கும், வீட்டுத் தலைவருடைய பர்ஸ் காலி ஆவதற்கும் தான் பண்டிகைகள். அவை இல்லாமல் இருந்தால் வாழ்க்கை 'வெறிச்’ என்றாகிவிடும். (செலவு பண்ணும் கணவர்களுக்கும் சேர்த்து!)

 கண்.சிவகுமார், திருமருகல்.

பதில் சொல்ல வாய்ப்பளித்த எனக்கு நன்றி கூறக் கூடாதா?

நான் பதில் சொல்வேன் என்று எதிர்பார்த்து, சில சமயம் ஒரு வருஷத்துக்கும் மேலாக பொறுமையாகக் காத்திருக்கும் வாசகர்களுக்கு நன்றி சொன்ன பிறகுதான் உங்களுக்கு நன்றி சொல்வேன்!