மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!
பிரீமியம் ஸ்டோரி
News
அனுபவங்கள் பேசுகின்றன!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ. 200 ஓவியங்கள்: ராமமூர்த்தி

பெற்றோரே உஷார்!

என் தோழி தன் கணவனிடம் வாட்ஸ்அப்பில் வந்த குழந்தைகள் பார்க்கக்கூடாத வீடியோ ஒன்றைக் காட்டி, அதைப்பற்றி அவரிடம் பேசிக்கொண்டிருந்திருக்கிறாள். இதை கவனித்த தோழியின் ஐந்து வயது குழந்தை தானும் அந்த வீடியோவைப் பார்க்க வேண்டும் என்று அடம்பிடிக்க தர்ம சங்கடமாகப் போய்விட்டது அவளுக்கு. ஆன்லைனைக்குள் வந்துவிட்டாலே நம் செல்போனில் நமக்குத் தேவையில்லாத வீடியோக்கள் வந்து விழுவதைத் தவிர்க்க முடிவதில்லை. அப்படியிருக்க நம் செல்போனைக் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருளாகக் கொடுத்துவிட்டு அவர்களைக் கண்காணிக்க தவறினோம் என்றால் அதுவே அவர்களுக்குத் தேவையில்லாத மன உளைச்சலைக் கொடுத்துவிடும். உஷார் பெற்றோரே!

-கவிதா சிவக்குமார், வாலாஜா

அனுபவங்கள் பேசுகின்றன!

பாக்கெட் உணவுகள்.. பீ கேர்ஃபுல்..!

நான் எப்போதும் பொருள்களை வாங்கியதும் கவரின் வாய்ப்பகுதியை மட்டும் `கட்’ பண்ணிவிட்டு கவரோடு டப்பாவினுள் வைப்பேன். பொருள்கள் நமர்த்துப் போகாமல் இருப்பதற்காக இந்த ஏற்பாடு. ஒருமுறை பேரீச்சம்பழம் வாங்கி, கவரோடு போட்டுவைத்துப் பயன்படுத்தி வந்தேன். அது தீரும் நிலையில்தான் கவரின் அடியில் கரப்பான் பூச்சி இருப்பது தெரியவந்தது. பழங்களோடு செத்துப்போன கரப்பான்பூச்சியும் `பேக்’ ஆகியிருக்கிறது. உடைத்து உதிரி உதிரியாகப் போட்டு வைத்திருந்தால் போடும்போதே தெரிந்திருக்கும். `இவ்வளவு நாள்கள் இதையா சாப்பிட்டுக்கொண்டு இருந்தோம்!’ என்று நினைக்கவே எனக்கு அருவருப்பாகிவிட்டது. 

அனுபவங்கள் பேசுகின்றன!

எனவே, எந்தப் பொருளையும் நன்கு பார்த்த பிறகுதான் பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொண்டேன். தோழிகளே... உங்களுக்கும் இது எச்சரிக்கையாக இருக்க உதவும் என்று நம்புகிறேன்.

- எஸ்.சாந்தி, திருச்சி

அனுபவங்கள் பேசுகின்றன!

அவஸ்தையில் முடிந்த அலட்சியம்!

ஒருமுறை கல்யாண வீட்டுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தேன். கிளம்பும் அவசரத்தில், காஸ் அடுப்பில் பாலை வைத்தவள், அப்படியே அதை மறந்துவிட்டுக் கிளம்பிப் போய்விட்டேன். கணவர் தற்செயலாக வீட்டுக்கு வந்திருக்கிறார். வீட்டின் அருகே குடியிருந்தவர்கள் செய்வதறியாது, திகைத்துப்போய்த் தவித்திருக்கிறார்கள். காரணம், வீட்டினுளிருந்து புகை மண்டலமும், கருகித் தீயந்த வாடையும் வந்ததுதான்.  அவசரமாகக் கதவைத் திறந்து உள்ளே ஓடிச் சென்று பார்த்தபோது காஸ் அடுப்பின் மீது இருந்த பால் பாத்திரம் ஒரே நெருப்புக் கோளமாக செக்கச் செவேலென்று இருக்கவே பயந்துபோய், சிலிண்டரை ஆஃப் செய்துவிட்டு, பாத்திரத்தைக் கீழே இழுத்துப் போட்டிருக்கிறார் கணவர். இன்னும் சிறிது தாமதமாக அவர் வந்திருந்தாலும், வீடே பற்றி எரிந்திருக்கும். அன்றிலிருந்து எங்கே கிளம்பினாலும், வீட்டில் இருக்கும் ஆபத்தான பகுதிகளைச் சரி பார்த்துவிட்டுத்தான் கிளம்புவோம்.

- டி.மேரிராணி தேவராஜன், மதுரை

அனுபவங்கள் பேசுகின்றன!

கட்டாயத்தை விதைத்தால்... கஷ்டம்தான் விளையும்!

என் பேரன் ப்ளஸ் டூ தேர்வில் குறைந்த மார்க் பெற்றுத் தேர்ச்சி பெற்றுள்ளான். குறைந்த மார்க் எடுத்ததால் பெற்றோர் அவனை ``எப்போ பார்த்தாலும் செல்லும் கையுமா அலைஞ்சியே... `படி, படின்’னு சொன்னா `பரீட்சை சமயத்துல படிச்சாப் போதும்’னு சொன்னியே... இப்ப பாத்தியா என்ன மார்க் வாங்கியிருக்கேன்னு!’' என்று திட்டித்தீர்த்து விட்டனர். கூனிக்குறுகி நின்ற பேரனைச் சமாதானப்படுத்தி, ``அவன்தான் `ஃபர்ஸ்ட் குரூப் வேண்டாம்... என்னால சமாளிக்க முடியாது’ன்னு உங்ககிட்ட கெஞ்சினானே. நீங்கதானே பி.இ. அல்லது மெடிக்கலுக்குப் படிக்க வைக்கணும்னு அவனைக் கட்டாயப்படுத்தினீங்க. பிள்ளைகளுக்கு எது விருப்பமோ அதில்தான் படிக்க வைக்கணும். கட்டாயப்படுத்தினால் இப்படித்தான் முடியும். இனியாவது அவனுக்கு விருப்பமான காலேஜிலோ, பாலிடெக்னிக்கிலோ சேர்த்துப் படிக்க வையுங்க’’ என்று அறிவுரை கூறினேன்.

பிள்ளைகளை அவர்கள் விருப்பத்துக்கு எதிராக வளர்க்க நினைத்தால், முதலுக்கே மோசமாகிவிடும் என்பதைப் பெற்றோர்கள் பலர் இன்னமும் உணராமல் இருப்பது வேதனை!

- ச.லெட்சுமி, செங்கோட்டை