
சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,
முழுநிலவு கழிந்து இரு நாள்கள்தான் ஆகின்றன. நிலவின் ஒளியை, கூடிநிற்கும் கருமேகங்கள் முழுமையாக மறைத்திருந்தன. கடும் இருட்டுக்கு நடுவில் இங்கும் அங்குமாக மின்னல் வெட்டிச் சரிந்துகொண்டிருந்தது. தேக்கனும் வேட்டூர் பழையனும் உடன்வந்த வீரர்களோடு கீதானியையும் அலவனையும் மட்டும் அழைத்துக்கொண்டு நடுமலையில் இருந்த பாரியிடம் வந்தனர்.
கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த மாணவர்களுக்குச் சில மருத்துவங்களைச் செய்து, குகை ஒன்றில் தங்கச்சொல்லிவிட்டு வந்தனர். நடுமலையிலிருந்து சென்றிப்புகை மேலேறியதைப் பார்த்துக் காட்டுக்குள் இருந்த நால்வர் ஏற்கெனவே பாரியிடம் வந்திருந்தனர். அனைவரும் இப்போது ஒன்றிணைந்தனர்.
காயங்கள் அதிகமாக இருந்ததால், தேக்கனை பாரி எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவனோ, வேட்டூர் பழையனையும் சேர்த்து அழைத்து வந்தது வியப்பை ஏற்படுத்தியது. அடர் இருளுக்குள் மழை கொட்டித்தீர்க்கப்போகிறது. இடியோசையும் வெட்டும் மின்னல் ஒளியும் காட்டை மிரட்டிக்கொண்டிருந்தன.

ஏற்றுக்கொள்ள முடியாத உண்மைகள் கசப்பினும் கொடியவை. அவற்றை விழுங்கவோ, கரைக்கவோ முடியாது. சில கனிகளை வேட்டூர் பழையன் கொடுத்த பிறகு மாணவர்களின் தொண்டைக்குழியில் இருந்த கசப்பு சற்றே மட்டுப்பட்டது. ஆனால், பெரியவர்களின் உடல் முழுவதும் அது ஏறியிருந்தது. ஓடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவனும் விழுங்க முடியாத கசப்பை இந்தப் பெரியவர்களுக்கு வழங்கிவிட்டுப் போயிருக்கிறான். எனவே, இப்போது பெரியவர்கள் பேசப் பேச அவர்களுக்குள் மாணவர்களுக்குச் சுரந்ததைப்போல கசப்பு சுரந்துகொண்டிருந்தது. சகித்துக்கொள்ளவே முடியாத கசப்பு. தேவவாக்கு விலங்கைக் கண்ணெதிரே தூக்கிக்கொண்டு ஓடுவதைப் பற்றிப் பேசுவதைவிட கொடுங்கசப்பு வேறில்லை.
“இந்த மலைத்தொடரின் அமைப்பைப் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை என்பது கொற்றவையின் கூத்துக்களத்திலிருந்து நடுமலை வரை அவர்கள் ஓடிவந்த வழித்தடத்தின் வழியே அறிய முடிகிறது. அதே நேரத்தில் எவ்வளவு கொடுங்காட்டுக்குள்ளேயும் நுழைந்து வெளியேறக்கூடிய ஆற்றல்கொண்டவர்கள் என்பதும் அவர்கள் வந்த வழித்தடத்திலிருந்து அறிய முடிகிறது” என்றான் பாரி.
“யார் இவர்கள்? எத்தனை பேர் வந்துள்ளார்கள்? இந்தத் திசையை நோக்கிப் போனால் எந்த நாட்டை அடைவார்கள்?” என்று கேட்டான் வேட்டூர் பழையன்.
“அவர்கள் ஓடிக்கொண்டிருக்கும் திசையை வைத்து அவர்களின் நாட்டை நம்மால் கண்டறிய முடியாது. அவர்கள் எளிமையானதும் சரியானதுமான திசைவழியைத் தேர்வுசெய்து ஓடவில்லை. எந்த வழியில் ஓடினாலும் இலக்கை அடைய வேண்டும் என்ற உறுதியோடு ஓடுகின்றனர்” என்று சொன்ன பாரி, சற்றே இடைவெளிவிட்டுச் சொன்னான் “எந்தவொரு வேந்தனின் கட்டளைக்காகவும் இவர்கள் இந்தப் பணியைச் செய்யவில்லை. அரசர்களின் போர்வீரர்கள் இவ்வளவு உறுதிப்பாட்டை ஒருபோதும் கொண்டிருக்க முடியாது. அதையும் தாண்டிய ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் இந்த வேலையை இவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்” என்றான். பாரியின் கணிப்பு மிகச்சரியானது எனத் தேக்கனுக்குத் தோன்றியது. அவர்கள் கண்களில் இருந்த ஆவேசம் எந்தக் கணத்திலும் குறையவில்லை. எல்லாவற்றையும் தகர்த்தெறியும் வலிமையும் உறுதியும் கொண்டவர்களாக அவர்களை உணர்ந்திருந்தான் தேக்கன்.

வேட்டூர் பழையனோ பேசப்படும் சொற்களின் வழியே அவர்களின் வேகத்தையும் திறனையும் மனதுக்குள் உருவகித்துக்கொண்டிருந்தான். ‘இவ்வளவு பெரிய தாக்குதலை நடத்திவிட்டு எதிரிகள் ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், பாரியும் தேக்கனும் நிதானமாகப் பேசிக்கொண்டிருக்கின்றனரே’ என்று புதிதாய் வந்து சேர்ந்த வீரர்கள் பதறியபடி நின்றிருந்தனர்.
நடுமலைக்கும் கடைசி மலையான காரமலைக்கும் இடையில் மூன்றாம் சரிவில் இருக்கும் காட்டாற்றின் நடுவில் அவர்களைத் தாக்கும் புதியதொரு தாக்குதல் முறையை வேட்டூர் பழையன் சொன்னான்.
‘`அவர்கள் உடலின் வடிவத்தையும் வலிமையையும் சிந்தித்தால், தண்ணீர்தான் இயல்பிலேயே அவர்களைக் கட்டுக்குள் கொண்டுவர ஏதுவான இடம். அவர்களின் பலத்தையே பலவீனமாக மாற்றலாம்” என்று வாதிட்டான்.
“நீரின் வேகம் வலிமையாக இருந்தால் மட்டுமே அது உதவிசெய்யும். இல்லையென்றால், மிக எளிதில் அந்தத் திட்டத்தை அவர்களால் முறியடித்துவிட முடியும்” என்றான் தேக்கன்.
வேறு வழியென்ன எனச் சிந்தித்தபோது பாரி சொன்னான், “நடுமலையிலிருந்து காரமலை வரை அவர்களைக் குறுக்கீடு செய்ய வேண்டாம். ஓடட்டும். அவர்களுடன் வந்துள்ளவர்கள் இன்னும் எத்தனை பேர் என்பது நமக்குத் தெரிய வேண்டும். அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்த பிறகுதான் நாம் தாக்குதலைத் தொடுக்க வேண்டும்” என்றான்.
தேக்கனும் வேட்டூர் பழையனும் சற்றே அதிர்ந்தனர். காரமலையைத் தாண்டிவிட்டால் சில இடங்களில் ஒன்றிரண்டு குன்றுகள் இருக்கின்றன. சில இடங்களில் அதுவும் இல்லை. மிக எளிதாகச் சமதளக் காடுகளுக்குள் நுழைந்துவிடலாம். எனவே, பாரி சொல்வது ஆபத்தான திட்டமாக அவர்களுக்குத் தோன்றியது.
“இதைத் தவிர வேறு எந்தத் திட்டமிடலைச் செய்தாலும் நம்மால் அவர்களை வளைக்க முடியாது. அடிப்படையில் அவர்கள் எத்தனை பேர் என்பது தெரியாமல், எந்தத் திசையை நோக்கி ஓடுகிறார்கள் என்பதும் தெரியாமல் காட்டுக்குள் அவர்களை நம் வீரர்கள் மறித்துத் தாக்குவது கடினம். நீங்கள் சொன்னபடி, ரத்தச்சிலந்திகள் கீழ் இறங்குவதற்குள் புதரை விலக்கி அந்த இடத்தைக் கடந்துள்ளனர் என்றால், அது எளிதான செயல் அல்ல. அதைவிட அடர் கானகம் வேறு எதுவும் இல்லை. அதையே ஊடறுத்து வெளிவந்துள்ளனர். இனி அவர்கள் பச்சைமலைத்தொடரின் எந்த ஒரு காட்டையும் எளிதில் கடந்துவிடுவார்கள்.”

பாரி சொல்வது நம்ப முடியாத, ஆனால் நம்பியே ஆகவேண்டிய ஒன்றாக இருந்தது.
“இன்னும் சற்றுநேரத்தில் மழை இறங்கப் போகிறது. மழை தொடங்கிவிட்டால், அவர்களால் இந்தக் குத்துக்கல் பள்ளத்தாக்கில் ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியாது. மண்ணின் சரிவும் இறங்கியோடும் தண்ணீரின் வேகமும் யாரையும் இழுத்துக் கொண்டு போய்விடும். எனவே, இன்று இரவு முழுவதும் அவர்கள் ஏதேனும் ஓர் இடுக்கினில் தங்கித்தான் ஆக வேண்டும். மழை நின்ற பிறகு நாளைக் காலையில்தான் அவர்கள் இறங்கத் தொடங்குவார்கள். பகல் முழுவதும் இறங்கினால் மாலை நேரத்தில் அடிவாரத்தை அடையலாம். மண் நன்கு ஈரமாகிவிட்டால், நேரம் இன்னும் அதிகமாகும். அதன் பிறகு எவ்வளவு வேகமாக ஓடினாலும் காரமலையை அடைய அடுத்த நாள் உச்சிப்பொழுது கடந்துவிடும்.
ஆனால், நாம் இப்போது இங்கிருந்து ஓடைச் சரிவின் வழியே நடக்கத் தொடங்கினால் எவ்வளவு மழை பெய்தாலும் ஒரு பாதிப்பும் ஏற்படாது. நாளை மாலைக்குள் காரமலையின் உச்சியை அடைந்துவிடலாம். ஒரு முழு இரவு நம் கையில் இருக்கிறது. அங்கிருந்து தாக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்” என்றான் பாரி.
நீண்டநேரம் அமைதியாகவே இருந்த தேக்கன், இப்போதும் அப்படியே இருந்தான். ஆனால், இவ்வளவு நேரம் உரையாடிக்கொண்டிருந்த வேட்டூர் பழையனோ, மறுமொழி ஏதும் கூறாமல் அமைதியானான். பாரி, பழையனை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான்.
சிறிது நேரத்துக்குப் பிறகு பழையன் சொன்னான், “எல்லாம் எதிர்திசையில் நடந்து கொண்டிருக்கின்றன.”
பழையன் சொல்லவருவது புரியவில்லை. பாரியின் முகமறிந்து பழையன் விளக்கினான், “மேற்கு திசைக் காடுகளில் பறம்பை நோக்கிப் படைகளை நகர்த்த பாதை அமைத்துக் கொண்டிருந்தான் சேரன். நாமும் மிகத்தீவிரமாக அதைக் கண்காணித்துக்கொண்டிருந்தோம். ஆனால், நேரெதிராகக் கிழக்கு திசையிலிருந்து பறம்புக்குள் நுழைந்து கொற்றவையின் கூத்துக்களம் வரை இவர்கள் வந்துள்ளனர். நமது கவனத்தைத் திருப்பி அதற்கு நேர் எதிர்திசையிலிருந்து உள்நுழைந்துள்ளனர். அதேபோன்ற சூழ்ச்சிதான் ஓடிக்கொண்டிருக்கும் இந்தச் செயலின் பின்னணியிலும் இருக்கும் என நினைக்கிறேன்” என்றான் பழையன்.
எவரும் மறுப்பேதும் சொல்லாமல் அவன் சொல்வதை மட்டும் கவனித்தனர்.
“தேவவாக்கு விலங்கை வைத்து என்ன செய்ய முடியும்? அதற்காக ஏன் உயிரைக்கொடுத்து அவர்கள் ஓடிக்கொண்டிருக்கின்றனர்?”
பழையனின் வினாவைத் தொடர்ந்து அமைதியே நீடித்தது.
பழையன் சொன்னான், “அவர்களின் தேவை அந்த விலங்கு அல்ல. அதைக் கவர்ந்து நம்மை இழுக்கப் பார்க்கின்றனர். அந்த விலங்குக்காகப் பறம்புமலையைவிட்டு சமதளத்தில் இறங்கப் போகும் மனிதனே அவர்களின் இலக்கு” என்று சொல்லி நிறுத்திக்கொண்டான் பழையன். அவன் யாரைச் சொல்ல வருகிறான் என்பது புரிந்தது.
இவ்வளவு தொலைவு மலையில் ஓடியவர்களை விட, காரமலையில் மறைந்திருப்பவர்கள்தான் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பர். ‘`நாமும் ஆயத்தமாக அவர்களை அங்கு எதிர்கொள்ளும் போது, நம் கையருகிலிருந்து நழுவி அவர்கள் மலையைவிட்டு இறங்கப் போகிறார்கள். பறம்பின் தேவவாக்கு விலங்கு நழுவிப்போவதை அனுமதிக்க முடியாத நாம், தாக்குதலின் தொடர்ச்சியாக நம்மை அறியாமலேயே மலையைவிட்டு நழுவி சமதளக் காட்டுக்குள் நுழையப்போகிறோம். அங்கே நம்மைச் சூழ அவர்கள் காத்திருப்பார்கள்” என்றான் பழையன்.
அவர் சொல்வதைச் சட்டென மறுத்துவிடும் நிலை இல்லை. உடன் நின்றிருந்த வீரன் சற்றே தயக்கத்தோடு கேட்டான், “ஆனால், பறம்பை இவ்வளவு குறைவாக மதிப்பிட்டு, இவ்வளவு துல்லியமான திட்டமிடலைச் செய்யும் அளவுக்கு யாருக்குத் துணிவிருக்கும்?”

“யாருக்குத் துணிவிருக்கும் என்பது நமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், யாருக்கோ துணிவிருந்திருக்கிறது என்பதைத்தான் இப்போது நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.”
“உங்களின் கருத்துதான் என்ன?”
“நடுமலைக்கும் காரமலைக்கும் இடையிலேயே அவர்களை அழித்தால்தான் உண்டு. எக்காரணம் கொண்டும் காரமலையின்மீது ஏற அவர்களை அனுமதிக்கக் கூடாது” என்று பாரி உறுதியாகச் சொன்னான். தொடர்ந்து, “அதற்கு வாய்ப்பில்லை. நாம் நின்று திட்டமிட முடியாது; ஓடிக்கொண்டேதான் திட்டமிட முடியும். இருவரின் ஓட்ட வேகத்தில் இருக்கும் இடைவெளிதான் நமக்குக் கிடைக்கும் நேரம். நாம் அவர்களைத் தாக்க ஆயத்தமாவதற்கான குறைந்தளவு நேரம் இந்தக் குறிப்பிட்ட தொலைவை ஓடிக் கடக்க அவர்களை அனுமதிப்பதன் வழியாகவே கிடைக்கும். அவர்கள் நம்மிலும் வேகமாக ஓடக்கூடியவர்கள். ஆனால், தவறான வழியில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். நாம் சரியான வழியில் ஓடுவதால், அவர்களின் வேகத்தை எளிதாகக் கடந்து முன்னிலையை அடைய முடியும்.”
“சரி, நாம் காரமலையை விரைவில் அடைந்து விட்டால், அவர்கள் வந்துசேர்வதற்குள் நம்மால் எவ்வளவு வீரர்களைத் திரட்டிவிட முடியும்?” எனக் கேட்டான் பழையன்.
“போரிடப் புதிதாக வீரர்கள் தேவையில்லை. இங்கு இருப்பவர்களே போதும்” என்றான் பாரி.
அவனது சொல் தேக்கனையும் பழையனையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ‘பதற்றத்தில் பாரி நிதானம் தவறுகிறானோ’ எனத் தோன்றியது. தோன்றிய மறுகணமே, ‘இல்லை, பாரி உதிர்க்கும் சொற்கள் பறம்பைப்போல் நிலைகொண்டவை. ஒருபோதும் உதிராது. எந்தச் சூழலிலும் பாரி நிதானம் இழப்பவனல்லன்’ என்றும் தோன்றியது.
‘ஆனால் இப்போது ஏற்பட்டுள்ளது புதிய சூழல். இதை வழக்கமான ஒன்றைப்போல மதிப்பிடவும் முடியாது’ என்றும் தோன்றியது. இருவருக்கும் குழப்பமே மிஞ்சியது. பாரி குழப்பமற்று இருந்தான். அது இவர்கள் இருவரையும் மேலும் குழப்பத்துக்குள்ளாக்கியது.
பாரி தொடர்ந்தான், “எனக்கு வீரர்கள் தேவையில்லை. காட்டுக்குள் எதிரிகளின் நகர்வை உணர்த்தும் அடையாளக்காரர்கள் மட்டுமே தேவை” என்றவன் மேலும் சொன்னான், “அவர்களை வழக்கமான தாக்குதல் முறைகளால் ஒன்றும் செய்துவிட முடியாது. அவர்களை அழித்து, தேவவாக்கு விலங்கைக் காப்பாற்ற வேறு வழிமுறையைத்தான் பின்பற்ற வேண்டும். அதைப் பற்றி நான் சிந்தித்துவிட்டேன்” என்றான்.
பாரியின் குரலில் இருந்த உறுதி எதிர் கேள்விக்கான இடம் எதையும் விட்டுவைக்கவில்லை. ஆனாலும் பழையன் கேட்டான், “நீ இவ்வளவு உறுதிகொண்டு சொல்வதால் நான் ஏற்கிறேன். ஒருவேளை, அவர்கள் தேவவாக்கு விலங்கைத் தூக்கிக்கொண்டு சமதளக் காட்டுக்குள் நுழையும் சூழல் வந்தால், பறம்பைவிட்டு நீ கீழிறங்கக் கூடாது. நாங்கள் பின்தொடர்ந்து தாக்கி அதைக் கைப்பற்றுகிறோம்.’’
“இந்த உறுதியை அளிப்பதன் மூலம் எனது உறுதியைக் கேள்விக்குள்ளாக்க விரும்பவில்லை. அவர்களால் ஒருபோதும் பறம்பின் எல்லையைத் தாண்ட முடியாது.” பாரியின் சொல் பாறையென நிலைகொண்டது.
இடியோசையில் திசைகள் நடுங்கின. மழை இறங்கியது. வெட்டும் மின்னலொளியில் காட்டின் மேற்கூரை கழன்றுவிட்டதுபோல் தெரிந்தது. “தேவவாக்கு விலங்கு என்பது, கொற்றவையின் குறிசொல்லும் குழந்தை. அதை எதிரியிடம் பறிகொடுப்பது நமது உயிரைக் கொடுப்பதற்கு நிகர். ஒருபோதும் அது நிகழாது.’’ - முழங்கும் பாரியின் குரலே இடியோசையென காடெங்கும் ஒலித்தது.

எதிரிகளை அழிக்கும் பணி பாரியினுடைய தானது. அவர்கள் எந்த இடத்தில் காரமலையைக் கடக்கப்போகின்றனர் என்பதைக் கண்டடைவதும், அங்கிருந்து அவர்கள் போகும் வழியைத் தெளிவாகத் தெரியப்படுத்துவதும்தான் மற்றவர்களின் வேலை.
இருப்பவர்களை இருகூராகப் பிரித்தனர். பாரி தன்னுடன் கீதானியையும் அலவனையும் வைத்துக்கொண்டான். வந்த வீரர்களில் அம்பு எய்வதில் சிறந்த இருவரை உடன் அழைத்துக் கொண்டான். மற்ற எல்லோரையும் இன்னொரு குழுவாக்கினான். அவர்களுக்கான பணி உறுதியானவுடன் அவர்கள் நடுமலையின் தென்புறம் நோக்கிப் புறப்படத் தொடங்கினர். பாரி, வடதிசையை நோக்கிப் புறப்பட்டான்.
காட்டில் வீறுகொண்டு மழையடிக்கும்போது, நிலம் பார்த்து மிகக்கவனமாக அடியெடுத்து வைக்க வேண்டும். இல்லையென்றால், நீரும் நிலமும் மனிதனை விழுங்கிவிடக்கூடும். ஆனால், இப்போது நடப்பது வேறொன்று. மின்னலைக் கைக்கோலாகக்கொண்டு நடக்கும் மனிதர்களை, காடு பார்த்துக்கொண்டிருந்தது. தங்கள் தோளில் பட்டுத் தெறிக்கும் நீர்த்துளி மண்ணில் விழும் முன் மறுகுன்று கடக்க அவர்கள் முயன்று கொண்டிருந்தனர்.
தேக்கனும் வேட்டூர் பழையனும் உடன் வந்த நான்கு வீரர்களும் தென்திசை நோக்கி விரைந்தனர். அதிகாலைக்குள் குடிமனூரை அடைந்தே ஆகவேண்டும். அங்குதான் கூவல்குடியினர் இருக்கின்றனர்.
இந்த ஆண்டு நடந்த கொற்றவைக் கூத்தில் எட்டாம் நாள் விழா கூவல்குடியினருடையது. கூவல்குடியினர், இயற்கையின் ஆதிமைந்தர்கள்; தவளையை வழிபடுபவர்கள். தவளையின் குரல்வளையிலிருந்து எழும் ஓசை, பறையின் அதிர்வோசையையும் விஞ்சக்கூடியது. அதனால்தான் தவளையை ‘ஓசையின் அரசி’ என்று அழைக்கின்றனர்.
அளவு சிறுத்த இடியை அடித்தொண்டையில் வைத்து இரவெல்லாம் கக்கிக்கொண்டே இருக்கும் உயிரினம் அது. களைப்பின்றி ஓசையை எழுப்பிக்கொண்டே இருப்பதில் தவளைக்கு நிகரானது எதுவும் இல்லை. கூவல்குடியினரும் அதைப்போல்தான். அவர்களின் குரல்வளை இடியோசைக்கு நிகரானது மட்டுமன்று, இளைப்பாறுதல் அற்றது. எவ்வளவு பெரிய மலைத்தொடரையும் ஒலிக்குறிப்புகளைக்கொண்டு இணைத்துவிடும் ஆற்றல்கொண்டது.
மலையில் ஓசையெழுப்பும் பெருங்கருவி என்றால், அது காரிக்கொம்புதான். எல்லா மலையூர்களிலும் அது இருக்கும். அதை எளிதாக எடுத்து ஊத முடியாது. அதை ஊத மிகச்சிறந்த பயிற்சி வேண்டும். முழுவலிமையோடு ஊதினால் மலை முழுவதும் எதிரொலிக்கும். ஒருமுறை ஊதுவது, இரட்டித்து ஊதுவது என்ற இரண்டு முறைகளால் மலைமக்கள் தங்களின் குறியீட்டு முறையைப் பயன்படுத்திச் செய்திகளைப் பரப்புகின்றனர்.
இதிலிருந்து சற்றே மாறுபட்டவர்கள் பறம்பின் மக்கள். அவர்கள் காரிக்கொம்பைச் சிறப்பாகப் பயன்படுத்துவர். ஆனால், அதை நிலைகொண்ட ஊர் இருக்கும் இடத்தில்தான் பொதுவாகப் பயன்படுத்த முடிகிறது. காட்டுக்குள் உள்ள ஒரு மனிதன், உதவி தேவைப்பட்டால் என்ன செய்ய முடியும் எனச் சிந்தித்து சென்றிக்கொடியைக் கண்டறிந்தனர்.
காரிக்கொம்பைத் தூக்கி ஊதப் பயிற்சி தேவை. அப்போதுதான் அது தொலைவுக்குக் கேட்கும். ஆனால், சென்றிக்கொடியால் புகைபோடுதல் மிக எளிது. சிறுவர்கூட தனக்கு உதவி தேவை என்று காட்டின் இன்னொரு மூலையில் இருப்பவருக்குத் தெரிவித்துவிட முடியும். அவ்வளவு எளியது மட்டுமன்று, சிறந்ததும்கூட. அதிலும் பிரச்னை இல்லாமல் இல்லை. புகையை, பகலில் மட்டுமே பயன்படுத்த முடியும். அதுவும் மழைக்காலத்தில் மேகங்கள் திரண்டுவிட்டால் மறைக்கப்பட்டுவிடும்.
மேளதாள ஓசைகள், காரிக்கொம்பு, சென்றிப்புகை என உதவி கேட்கும் வழிமுறைகள் பல இருந்தாலும், ஒவ்வொன்றிலும் நிறைகுறைகள் இருக்கின்றன. ஆனால், இந்தக் கருவிகள் எவையும் கூவல்குடியைச் சேர்ந்த ஒரு தனிமனிதனுக்கு இணையாகா. அவர்கள் இடியை விழுங்கி இரவெல்லாம் கக்கிக்கொண்டிருப்பவர்கள். பழுத்த கனியை பாறையில் எறிந்து தெறிக்கவைப்பதைப்போல, ஓசையைக் காற்றுடன் மோதவிட்டுத் தெறிக்கவிடக் கூடியவர்கள். தம் அடிநாக்கை மடித்து எழுப்பும் ஒலியால் காட்டுக்கே ஒலிவேலி கட்டுகிறவர்கள். அவர்களின் இருப்பிடமான குடிமனூரை நோக்கியே தென்புறம் சென்றுகொண்டிருக்கிறது தேக்கனின் தலைமையிலான குழு.
கொட்டும் மழையில், மிக மெதுவாகவே நடந்தான் பாரி. அவனுக்கு நிறையவே நேரம் இருந்தது. கீதானியும் அலவனும் கடந்த இரு நாள்களாக ஓடிய ஓட்டத்தை அவன் அறிவான். அதுமட்டுமல்ல, எதிரிகளின் தக்குதலாலும் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன. தொண்டைக்கசப்புக்கு வேட்டூர் பழையன் மாற்று கொடுத்துள்ளான். அதனால்தான் இப்போது அவர்களால் சற்றே இயல்பாக இருக்க முடிகிறது. இல்லையென்றால், இந்நேரம் அவர்கள் குரல் நாளங்களைப் பிய்த்தெறிய ஆயத்தமாகியிருப்பார்கள்.
பாரி, இருவரையும் அரவணைத்து அழைத்துச்சென்றான். மற்ற வீரர்கள் இருவரும் ஆவேசத்தோடு முன்னால் ஓடிக்கொண்டிருந்தனர். காட்டோடையில் பெருகும் நீர் பார்த்து இரவெல்லாம் நடந்தனர். இடியும் மின்னலும் பாறையெங்கும் விழுந்து சரிந்துகொண்டிருந்தன. மழையோசை கேட்டு விலங்குகள் பம்மிக்கிடந்தன. நீரின் விதவிதமான ஒலிகளால் காடு நிறைந்துகிடந்தது.
ஒளிக்கீற்று மெள்ள பரவத் தொடங்கியபோது நாய்வாய் ஊற்றுக்கு வந்து சேர்ந்தனர். மழை சற்று முன்னர்தான் நின்றது. உடல்மேல் பொழிந்துகிடந்த நீர் உதிர்த்துப் பறவைகள் சிறகசைக்கத் தொடங்கின. காரமலையின் அடிவாரம் செல்ல இன்னும் சிறிதுதொலைவே இருந்தது. கிழக்குதிசை வெளிச்சம் காரமலையின் மேலிருந்து வழியத் தொடங்கியது . பாரியின் கண்களுக்குத் தூர் அகன்ற உடைமரம் ஒன்று கண்ணில் பட்டது. அதைப் பார்த்ததும் நின்றுவிட்டான். உடன் வந்தவர்களும் நின்றனர்.
இந்த மரத்தில் என்ன இருக்கிறது என்று மற்றவர்கள் உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தனர். பாரி, வீரர்கள் இருவரையும் பார்த்துச் சொன்னான், “உடைமுற்களைக் கை நிறைய ஒடித்து வாருங்கள்.’’
வீரர்கள் இருவரும் முள் ஒடிக்கப் போனார்கள். அலவனையும் கீதானியையும் அருகில் இருக்கும் பறையின்மீது உட்காரச் சொன்னான். இருவரும் உட்கார்ந்தனர். ‘முள் ஒடித்து என்ன செய்யப்போகிறான் பாரி?’ என்ற எண்ணம் வீரர்கள் இருவருக்கும் இருந்ததைப்போலவே இவர்களுக்கும் இருந்தது.
வீரர்கள் மிகக்கவனமாக ஒவ்வொரு முள்ளாக ஒடிக்கத் தொடங்கினர். பாரி, அலவனைக் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான். அலவனின் கவனம் உடைமரத்தில் இருந்ததால், அவன் பாரியைக் கவனிக்கவில்லை. கீதானி காலால் மெள்ளத் தட்டியபிறகுதான் கவனித்தான்.
“சிறுத்துக் கிடக்கும் உடைமரப் புதருக்குள் கொம்பேறி மூக்கன் கிடக்குமே, உன்னால் பிடித்துவிட முடியுமா?” என்று கேட்டான் பாரி.

“முடியும்” என்றான் அலவன்.
“பிடித்து வா, பார்ப்போம்” என்றான் பாரி.
அலவன், கீதானியைத் துணைக்கு அழைத்துக்கொண்டான். கழி ஒன்றை எடுத்துக் கொண்டு புதரின் ஒரு பக்கத்தை அசைக்கச் சொல்லி, மறுபக்கத்தில் நின்று கவனித்தான். கொம்பேறி மூக்கன், கொப்புகளைவிட்டு மறுகொப்புக்கு மிக வேகமாகப் பயணிக்கக் கூடியது. பிடிப்பது எளிதல்ல. பார்த்த கணத்தில் கடந்து செல்லும் வல்லமைகொண்டது. கீதானி ஒவ்வொரு புதராகப் போய் அசைத்தான். அலவனின் கண்கள் கூர்மையாகத் தேடின.
முள் ஒடிக்கும் வீரர்களுக்கும் பாம்பு பிடிக்கும் மாணவர்களுக்கும், இந்தப் பணியைச் செய்யச் சொன்னதன் காரணம் விளங்கவில்லை. ‘எதிரிகளின் வலிமையைப் பற்றி நேற்றிரவு பேசிய பேச்சுக்கும், இப்போது செய்துகொண்டிருக்கும் செயலுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? ஒற்றைக் கையால் தேக்கனை அடித்துத் தூக்கும் அந்த வீரர்களை இந்தச் சிறுமுள்ளையும் பாம்பையும்கொண்டு தாக்கி வீழ்த்திவிட முடியுமா?’ சிந்திக்கச் சிந்திக்கக் குழப்பமே மிஞ்சியது. இவற்றை வைத்து பாரி என்ன செய்யப்போகிறான் என்பது புரிந்துகொள்ளவே முடியாததாக இருந்தது.
பாறையில் உட்கார்ந்த பாரி சொன்னான், “முள் ஒடிக்கும் முன் மூக்கனைப் பிடித்து வா அலவா.’’

முள் ஒடிக்கும் வீரர்களுக்கு அப்போதுதான் தோன்றியது, ‘சிறுவன் பாம்பை உடனே பிடித்து விட்டால், நாம் பின்தங்கிவிடுவோமே’ என்று. மாணவர்களுக்குத் தோன்றியது, ‘அவர்கள் எளிதில் முள் ஒடித்துவிடுவார்கள். அதற்குள் நாம் மூக்கனைப் பிடித்தாக வேண்டும்’ என்று. இருவரும் இப்போதுதான் கவனம்கொள்ளத் தொடங்கினர்.
வேகவேகமாக வேலை நடந்துகொண்டிருந்தது. வீரர்கள் சடசடவென ஒடிக்க நினைத்தனர். கவனமாக இல்லையென்றால், அது விரல்களைக் குத்திக் கிழித்துக்கொண்டே இருக்கும். அதுவும் இரவு முழுவதும் நனைந்ததால் அவர்களின் விரல்கள் ஊறிப்போய் இருந்தன. நகங்களின் முனையை வைத்தே ஒடித்துக்கொண்டிருந்தனர். இருவரும் கை நிறைய ஒடித்துவந்து பாறையில் கொட்டினர்.
சற்றே சாய்ந்து உட்கார்ந்த பாரி, விரல்களால் கிளறி, மிக நீளமாக இருக்கும் முள்களையும் நீளமற்று இருக்கும் முள்களையும் ஒதுக்கிவிட்டு நடுத்தரமான அளவுகொண்ட முள்களை மட்டும் தனியே பிரித்தெடுத்தான்.
பாரி இதை ஏன் செய்கிறான் என்று புரியாமல் வீரர்கள் இருவரும் முழித்துக்கொண்டிருந்தபோது அலவனிடமிருந்து குரல் கேட்டது, “கொம்பேறி மூக்கன் கிடைக்கவில்லை. கொடிமூக்கன்தான் கிடைத்துள்ளான். போதுமா, இல்லை இன்னும் தேடவா?”
“கொண்டு வா, அதன் அளவைப் பார்ப்போம்” என்றான் பாரி.
புதர் விலக்கி அவர்கள் வெளிவந்தபோது அதன் நீளத்தைப் பார்த்து வீரர்கள் இருவரும் விக்கித்துப்போனார்கள். அலவன் அதன் கழுத்தைப் பிடித்திருந்தான். கீதானி அதன் நடுப்பகுதியைப் பிடித்திருந்தான். கை முழுவதும் சுற்றிச் சுருண்டிருந்த அதன் நீளம் பார்க்கவே அச்சமூட்டுவதாக இருந்தது.
‘கொம்பேறி மூக்கன் கிடைக்கவில்லையே’ எனச் சிந்தித்த பாரி, பிடிபட்ட கொடிமூக்கனைக் கொண்டுவரச் சொன்னதற்குக் காரணம் அதன் நீளத்தை அறியத்தான். அவன் எதிர்பார்த்ததைவிட வயது முதிர்ந்ததாக அது இருந்தது.
“இது போதும், வா” என்றான் பாரி.
இருவரும் பாறை நோக்கி வந்தனர். தனக்கான ஆயுதத்தைப் பாரி தயார் செய்யத் தொடங்கியபோது, காரமலையின் மேல்விளிம்பிலிருந்து எட்டிப்பார்த்தான் கதிரவன்.
- பறம்பின் குரல் ஒலிக்கும்...