மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சசிகலா ஜாதகம் - 65 - ‘அரசியலை விட்டு விலகிவிடுவேன்!’ - நடராசனுக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம்

சசிகலா ஜாதகம் - 65 - ‘அரசியலை விட்டு விலகிவிடுவேன்!’ - நடராசனுக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம்
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா ஜாதகம் - 65 - ‘அரசியலை விட்டு விலகிவிடுவேன்!’ - நடராசனுக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம்

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

‘நீங்கள் போய்விட்டால், நான் அரசியலை விட்டு விலகிவிடுவேன்’ - நடராசனுக்கு ஜெயலலிதா எழுதிய பெர்சனல் லெட்டரில் இருந்த வாசகம் இது. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா அணியில், நாவலர் நெடுஞ்செழியன் ஆதரவாளர்கள் முரண்டு பிடித்துக்கொண்டிருந்த போது, அவர்கள் நடராசனைத்தான் குறிவைத்தனர். ‘கட்சியில் நடராசனின் தலையீட்டைத் தடுத்து நிறுத்தினால்தான் உடன்பாடு’ எனப் போர்க்கொடி தூக்கினார்கள். அந்த நேரத்தில்தான், ‘‘எதற்காக எனக்குக் கெட்ட பெயர்? நானும் என் மனைவியும் உங்களிடமிருந்து விலகிக்கொள்கிறோம்’’ என ஜெயலலிதாவிடம் கோபமாக நடராசன் சொல்லி விட்டுக் கிளம்ப... அவரைச் சமாதானப்படுத்த ஜெயலலிதா கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

ஜெயலலிதாவின் பெர்சனல் லெட்டர் என்கிற அந்தத் துருப்புச் சீட்டை வைத்துக்கொண்டுதான் நடராசன் தன் ஆட்டத்தை ஆரம்பித்தார். கட்சி நிதி, தேர்தல் நிதி என வசூல் வேட்டை நடத்திக்கொண்டிருந்த சசிகலா குடும்பம், அடுத்து வேட்பாளர்களைக் குறிவைத்தது. அதுவும் கட்சிக்குள் அதிர்வலைகளை உண்டாக்கியது.

சசிகலா ஜாதகம் - 65 - ‘அரசியலை விட்டு விலகிவிடுவேன்!’ - நடராசனுக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம்

கட்சி சார்பாகத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு செய்பவர்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றபோது, ஜெயலலிதாவிடம் யோசனை ஒன்றைச் சொன்னார் திருநாவுக்கரசர். ‘‘தேர்தலில் சீட் கேட்பவர்கள் கட்சி அலுவலகத்தில் பத்தாயிரம் ரூபாய் டெபாசிட் கட்ட வேண்டும். அந்தத் தொகை, வேட்புமனு தாக்கல் தேதி முடிந்த பிறகு திருப்பிக் கொடுக்கப்படும். இதனால், டிக்கெட் கிடைக்காதவர்கள் போட்டி வேட்பாளராகக் களத்தில் இறங்க மாட்டார்கள். இது எம்.ஜி.ஆரின் டெக்னிக். அதுபோல இப்போது நாமும் சீட் கேட்பவர்களிடம் 25,000 ரூபாய் டெபாசிட் வாங்கலாம்’’ என்றார் திருநாவுக்கரசர். இந்த யோசனையை முதல் நாள் ஆமோதித்த ஜெயலலிதா, அடுத்த நாள் ரிவர்ஸ் கியர் போட்டார்.
‘‘நீங்கள் சொன்ன யோசனையின் பின்னணி எனக்குத் தெரியும். தமிழகம் முழுவதும் உங்கள் ஆதரவாளர்களுக்குப் பணம் கொடுத்து சீட் வாங்க திட்டமிட்டிருக்கிறீர்கள். அதனால்தான் இந்த யோசனையைச் சொல்கிறீர்கள்’’ என திருநாவுக்கரசரிடம் சீறினார் ஜெயலலிதா. தன் யோசனையைக் கேள்விப்பட்ட நடராசன், முந்தைய தினம் ஜெயலலிதாவுக்கு மந்திராலோசனை செய்துவிட்டார் என்பது திருநாவுக்கரசருக்குப் புரிந்தது. ‘‘உங்கள் கற்பனைக்கு எல்லையே இல்லையா? தமிழ்நாடு முழுவதும் வேட்பாளரை நிறுத்தும் அளவுக்கு வசதி படைத்தவனா நான்? இருந்த கொஞ்சப் பணத்தையும் உங்களுக்குச் செலவழித்து விட்டு நிற்கிறேன்’’ என திருநாவுக்கரசர் வேதனையோடு சொல்ல... அவரை சமாதானப்படுத்தி அனுப்பியிருக்கிறார் ஜெயலலிதா.

‘திருநாவுக்கரசரின் யோசனையைச் செயல்படுத்தினால், வேட்பாளர் தேர்வில் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்குச் சீட் கொடுக்க முடியாமல் போய்விடும்’ என்பதால், அதை முடமாக்கினார் நடராசன். இந்த விஷயத்தைக் குறிப்பிட்டுச் சொல்லும் திருநாவுக்கரசர், ‘‘தனிப்பட்ட முறையில் நடராசனுக்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் ‘நீங்கள் போய்விட்டால் நான் அரசியலைவிட்டு விலகிவிடுவேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதத்தைக் கட்சிக்காரர்களிடம் நடராசன் பெருமையாகக் காட்டி, அவர்களையெல்லாம் தன் வீட்டுக்கு வரவழைத்துக் கொண்டிருந்தார். நடராசன் தயவிருந்தால்தான் தேர்தலில் சீட் கிடைக்கும் என்கிற எண்ணத்தை உருவாக்கி வந்தார்’’ என்றார்.

தேர்தல் நிதி தில்லுமுல்லுகளும் வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்தன. 1989 சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்காக நிதி திரட்டும் பணியில் கட்சிகள் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. அப்போது, ‘‘தி.மு.க தேர்தல் நிதியாக இரண்டரை கோடி ரூபாய் வசூலாகி இருக்கிறது’’ என கருணாநிதி அறிவித்தார். உடனே ஜெயலலிதாவும், ‘‘கட்சிக்கு ஒண்ணரை கோடி ரூபாய் நிதி சேர்ந்தது” என மதுரை பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். நிதி வசூலாகாமலே, நிதி பெற்றதாக அறிவித்ததால் இது பிரச்னையை உருவாக்கிவிட்டது. மதுரைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அசோகா ஹோட்டலில் தங்கியிருந்தார் ஜெயலலிதா. அங்கே நிர்வாகிகளைச் சந்தித்தவர், ‘‘மதுரை மாவட்டக் கழகத்தின் சார்பில் ஐந்து லட்ச ரூபாய் நிதியளிப்பதாக அறிவியுங்கள்’’ என்றார். ‘‘பணத்துக்கு எங்கே போவது?’’ என நிர்வாகிகள் கேட்டபோது, ‘‘ஒரு பெட்டியில் நூறு ரூபாய் நோட்டுகளை மேலே வைத்துப் பணம் இருப்பது மாதிரி காட்டுங்கள்’’ என்றார் ஜெயலலிதா. ‘‘வசூலே செய்யாமல் நிதி சேர்த்ததாக அறிவித்தால் சந்தேகம் வரும். கூட்டச் செலவு போக ஒரு லட்ச ரூபாய் தேர்தல் நிதி வசூலானதாக அறிவிக்கலாம். ஐந்து லட்சம் என்று அறிவித்தால், அந்தப் பணத்தைக் கட்சிப் பெயரில் வங்கியில் போட வேண்டும். அநாவசிய சிக்கல்கள் வரும்’’ எனச் சொன்னார்கள். ‘‘ஐந்து லட்சம் என்று அறிவியுங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன்’’ என்றார் ஜெயலலிதா.

அடுத்த நாள் தஞ்சாவூர் கூட்டத்திலும் இந்த ‘நிதி வசூல் நாடகம்’ நடத்தப்பட்டது. இந்தப் பொய் நாடகத்தின் திரைக்கதையை எழுதியவர் நடராசன். இந்த நாடகத்தின் பின்னணி, இதை வைத்து மற்ற மாவட்டச் செயலாளர்களைக் கெடுபிடி செய்வதுதான். ஒரு கட்டத்தில் ‘‘தேர்தல் நிதி தந்தால்தான் கூட்டத்துக்கு வருவேன்’’ என ஜெயலலிதாவையே சொல்ல வைத்தார் நடராசன். அதனால் கட்சிக்கு நிதி சேர ஆரம்பித்தது. இப்படி சேர்ந்த நிதியை வங்கியில் செலுத்தவில்லை எனப் புகார் கிளப்பினார்கள் நாவலர் அணியினர். ‘40 லட்ச ரூபாயைத் தன் பெயரில் வங்கியில் ஜெயலலிதா போட்டுக் கொண்டார்’ எனக் குற்றச்சாட்டு படித்தார்கள். ‘‘கட்சிப் பெயரில் வங்கியில் பணத்தைப் போட்டால், ஜானகி அணியினர் ‘அது அ.தி.மு.க. பணம்’ என்று சொல்லி வங்கியிலிருந்து பணத்தை எடுக்கவிடாமல் முடக்கிவிடுவார்கள். அதோடு மூத்த தலைவர்கள்தான் பணத்தை என் சொந்தப் பெயரில் போட்டுக்கொள்ளச் சொன்னார்கள்’’ என ஜெயலலிதாவைச் சொல்ல வைத்தார் நடராசன்.

ஜெயலலிதா பங்கேற்ற மாவட்ட பொதுக் கூட்டங்களிலும் சசிகலா குடும்பத்தினரால் பிரச்னைகள் ஏற்பட்டன. ‘திருவிழாவைப் போல அலங்கார வளைவுகளும், கட் அவுட்களும், வரவேற்பு பதாகைகளும் கட்டப்பட்டு, ஊரே திருவிழாக்கோலம் பூண வேண்டும்’ என நடராசனிடம் இருந்து முன்கூட்டியே உத்தரவுகள் வரும். இதில் எது குறைந்தாலும் மாவட்டச் செயலாளர்களின் கதி அவ்வளவுதான்! தமிழகம் அதுவரை கண்டிராத மிக ‘காஸ்ட்லி’யான அரசியல் தலைவராக ஜெயலலிதாவை ஆக்கியதே நடராசன்தான். எம்.ஜி.ஆருக்கு வரும் அதே அளவு கூட்டம்தான் ஜெயலலிதாவுக்கு வருகிறது என்கிற பிம்பத்தை ஜெயலலிதாவிடம் ஏற்படுத்தியிருந்தார் நடராசன்.

சசிகலா ஜாதகம் - 65 - ‘அரசியலை விட்டு விலகிவிடுவேன்!’ - நடராசனுக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம்

தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒரு கூத்து நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில்தான் ‘உண்டியல் ஏந்தி நிதி வசூலிக்கப் போவதாக’ அறிவித்தார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்தபோது, இப்படி உண்டியல் வசூல் செய்தார். அப்போது தொண்டர்கள் நகைகளையும் உண்டியலில் போட்டார்கள். அதேபோல், ‘ஜெயலலிதாவுக்கும் மக்கள் ஆபரணங்களை அள்ளிக்கொடுத்தார்கள்’ எனப் பத்திரிகைகளில் செய்தி வர வேண்டும் என்பதுதான் நடராசனின் விருப்பம். அதன்மூலம் ஜெயலலிதாவிடம் ஸ்கோர் செய்துகொள்ள விரும்பினார். இதற்காக நகைகளைக் கழட்டிப் போட ஆட்களை ‘செட்டப்’ செய்திருந்தார்கள் நிர்வாகிகள். ஆனால், ஏற்பாடு செய்த பெண்கள் சரியான நேரத்தில் வந்து சேரவில்லை! அந்தக் கோபத்தில் சில நிமிடங்கள் மட்டும் பேசிவிட்டுக் கிளம்பினார் ஜெயலலிதா.

கன்னியாகுமரியில் நடந்த பொதுக் கூட்டத்தில் போதிய நிதி வசூலாகாததால் கூட்டத்துக்கு ஜெயலலிதா வரவில்லை.கோபத்தில், ஹோட்டலிலிருந்து சென்னை திரும்புவதற்காகக் கிளம்பினார் ஜெயலலிதா. ‘‘என் மானத்தைக் காப்பாற்றுங்கள்’’ என ஜெயலலிதாவின் காலில் விழுந்து மாவட்டச் செயலாளர் கெஞ்சினார். அதன்பிறகே ஜெயலலிதா மேடைக்கு வந்தார்.

பொதுக்கூட்டங்களில் பேசும்போதுகூட தி.மு.க-வை விமர்சிப்பதைவிட ஜானகி அம்மையாரைத் திட்டுவதிலேயே கவனம் செலுத்தினார் ஜெயலலிதா. ஜானகி அம்மையாரின் வயதைக்கூடப் பொருட் படுத்தாமல் ‘சல்லாபம், உல்லாசம்’ என்றெல்லாம் பேசியது, மேடையிலிருந்த தலைவர்களையும் எதிரேயிருந்த தொண்டர்களையும் கூச வைத்தது.

நடராசனின் திட்டப்படி எல்லாம் அரங்கேறிக் கொண்டிருந்தன.

(தொடரும்)