
எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி
நாவலர் பிரிந்து ‘நால்வர் அணி’யை உருவாக்கியதால் அப்செட்டான ஜெயலலிதா, உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியலில் இருந்து கொஞ்ச காலம் லீவு எடுத்துக் கொண்டார். அரசியலில் பங்கெடுக்க ஆரம்பித்த பிறகு முதன்முறையாக ஜெயலலிதா ஓய்வு எடுத்துக் கொண்டது இப்போதுதான். ‘இரண்டு மாதம் பூரண ஓய்வு’ எனச் சொல்லி, ஜெயலலிதா அரசியல் லீவு எடுத்தது பலருக்கும் ஆச்சர்யம். இந்த யோசனையைச் சொன்னது சசிகலா குடும்பம்தான்.
ராஜீவ் காந்தியைத் தொடர்புகொண்டு காங்கிரஸ் கூட்டணிக்கு முயன்றபடியே இருந்தார் ஜெயலலிதா. ஆனால், காங்கிரஸ் பிடிகொடுக்கவில்லை. எம்.ஜி.ஆர் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காலத்தில், தனக்கு ஆபத்து ஏற்பட்டால் தொடர்பு கொள்வதற்காக ராஜீவ் காந்தியின் பெர்சனல் நம்பரை வாங்கி வைத்திருந்தார் ஜெயலலிதா. அந்த நம்பருக்குத் தொடர்புகொண்டபோது சரியான ரெஸ்பான்ஸ் இல்லை. அதனால் டெல்லிக்கே சென்று பிரதமர் ராஜீவ் காந்தியைச் சந்தித்துவிட முடிவுசெய்து, விமான டிக்கெட் எல்லாம் எடுத்து வைத்திருந்தார். ஆனால், ராஜீவ் காந்தியைச் சந்திக்க நேரம் தரப்படவில்லை. ராஜீவ் காந்தி பார்க்க மறுத்த இப்படியான சூழலில்தான், ‘ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக, டாக்டரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற வேண்டியிருப்பதால் இரண்டு மாதம் ஓய்வு தேவை. துணைப் பொதுச்செயலாளர் ஹண்டே எல்லா பொறுப்புகளையும் பார்ப்பார்’ என 1988, ஜூலை 25-ம் தேதி அறிவிப்பு வெளியானது.

இந்த அறிவிப்புக்குப் பிறகுதான் ஜூலை 29-ம் தேதி நெடுஞ்செழியன் விடுத்த அறிக்கையில், ‘கழகத்தின் நிதியைத் தன் விருப்பத்துக்கு ஏற்ற வகையில், வங்கிகளில் தனது பலவகைப்பட்ட பெயர்களில் தானே வைத்துக்கொண்டார். அதைத் தான் விரும்பியபோதெல்லாம் செலவு செய்யவும் முடியும் என்ற வகையில் ஜெயலலிதா செயல்பட்டார். தான் நினைத்தால் கழகத்தின் எந்தக் குழுவையும் கலைக்கலாம். தான் நினைத்தால் கட்சியில் எவரையும் சேர்க்கலாம், நீக்கலாம் என்ற வகையில்தான் ஜெயலலிதா செயல்பட்டார்’ எனச் சொல்லியிருந்தார்.
ஜெயலலிதாவிடம் எப்போதும் இல்லாத அளவுக்குச் சர்வாதிகாரம் குடி புகுந்ததற்குக் காரணமே சசிகலா குடும்பம்தான். அதைப் பற்றியும் பூடகமாகச் சொன்னார் நெடுஞ்செழியன். ‘சர்வாதிகாரம் அளவுக்கு மீறிப் போகிற கட்டத்தில் அமிர்தமும் நஞ்சாகும். பூனையும் புலியாகும். கூனனும் நிமிர்வான். குருடனும் விழி பெறுவான். குமுறுகின்ற எரிமலையும் வெடிக்கும். அதேபோல செல்வியாரின் சர்வாதிகார வெறித்தனம் உச்சாணிக்கொம்பில் ஏறிக் குதியாட்டம் போடத் தொடங்கியபோது, ஜெயலலிதாவை அடையாளம் காட்ட வேண்டிய அவசியம் உண்டானது’ எனச் சொல்லியிருந்தார்.
ஜெயலலிதாவின் ‘ஓய்வு’ என்பது பலருக்கும் புரியாத புதிராக இருந்தது. கட்சி நிதி, சசிகலா குடும்பம் தலையீடு எனச் சர்ச்சை எழுந்த நிலையில், ஓய்வு அறிவிப்பு மேலும் சர்ச்சைகளை உண்டாக்கியது. இதற்கிடையே கட்சி நிதி விவகாரத்தில் ஜெயலலிதாவும் திருநாவுக்கரசரும் பரஸ்பரம் நோட்டீஸ்களை அனுப்பிக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் ‘நால்வர் அணி’யைச் சேர்ந்த அரங்கநாயம் பிரஸ் மீட்டைக் கூட்டினார். ‘‘கூட்டுத் தலைமை கூடாது என்கிற வாதம் எழுந்ததால்தான், சமாதானத்துக்கு வழியில்லாமல் போய்விட்டது. ஜெயலலிதாவைச் சுற்றி இருக்கும், கட்சிக்குச் சம்மந்தமில்லாத அவரது குடும்ப நண்பர்களால்தான் பிரச்னைகளும் குழப்பங்களும் ஏற்பட்டன. ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி, கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கே தெரியவில்லை. கட்சிப் பணத்தை வங்கியில் போடாமல் சொந்தச் செலவுக்குப் பயன்படுத்தும் நிலை இதுவரை எந்த அரசியல் கட்சியிலும் ஏற்பட்டதில்லை’’ எனக் காட்டமாகச் சொன்னார் அரங்கநாயகம்.
சமரச முயற்சிகளின்போது மூன்று நிபந்தனைகளை, நால்வர் அணி முன் வைத்தது. ‘கிச்சன் கேபினெட்டான நடராசன் குடும்பம் வெளியேற வேண்டும்; ஜெயலலிதாவால் கலைக்கப்பட்ட அரசியல் விவகாரக் குழு புதுப்பிக்கப்பட வேண்டும்; கட்சியின் நிதி ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்’ என்பவைதான் அந்த மூன்று கோரிக்கைகள். ஆனால், இதில் ஒன்றை ஏற்றுக் கொண்டாலும் தங்களுக்குச் சிக்கல் என நினைத்தது சசிகலா குடும்பம். சமரச முயற்சிகளை எடுத்தவர்களில் ஒருவரான மதுரை முன்னாள் துணை மேயர் நவநீதகிருஷ்ணன், இந்த நிபந்தனைகளை ஜெயலலிதாவிடம் சொல்ல முயன்றார். நவநீதகிருஷ்ணன், போயஸ் கார்டன் போனபோது அவரை வழிமறித்தது பூனைப் படை. அந்தப் படைக்குத் தலைவராக இருந்தவர், சசிகலாவின் சகோதரர் திவாகரன். ‘‘தலைவியைப் பார்க்க வேண்டும்’’ எனக் கெஞ்சியும் திவாகரன் அவரை அனுமதிக்கவில்லை.

ஓய்வில் இருந்த ஜெயலலிதாவை யாருமே சந்திக்க முடியவில்லை. ஓய்வு அறிவிப்புக்குப் பிறகு பண்ருட்டி ராமச்சந்திரன் சொன்ன ஒரு விஷயம் முக்கியத்துவம் வாய்ந்தது. ‘‘மனநோய் முற்றித் தற்கொலை முயற்சி மேற்கொண்டால் வேறு பெயரில் மருத்துவமனையில் புகுந்து சிகிச்சைப் பெற வாய்ப்பு இருக்கிறது. சான்றாக, ‘லலிதா’ என்னும் பெயர் கொண்டவர், ‘ஷீலா’ என்ற பெயரில் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்’’ என்றார். அதோடு நிற்கவில்லை. ‘‘ஜெயலலிதா என்ற பொம்மையைத் தெருத் தெருவாய் அழைத்துச் சென்றோம். அதற்கு அரசியல் சொல்லிக் கொடுத்தோம். பேசக் கற்றுக் கொடுத்தோம். ஆனால், அந்தப் பொம்மை இன்று நம்மையே எதிர்க்கிறது. அது வெறும் பொம்மைதான் என்பதை மக்களுக்குப் புரிய வைப்போம்’’ என்றார். அந்தப் பொம்மைக்கு நடராசன் கீ கொடுத்துக் கொண்டிருந்தார்.
இப்படியான வாய்ச் சண்டைகளின் தொடர்ச்சியாக நெடுஞ்செழியன் அளித்த பேட்டியில், ‘‘ஜெயலலிதாவைப் பற்றி நாங்கள் பேசவே மாட்டோம். அவரைத் தாக்கவில்லை. அவரின் முகமூடியைத்தான் அகற்றுகிறோம். எக்ஸ்போஸ் மட்டுமே செய்கிறோம்’’ என்றார். அப்போது கட்சியின் நிதி விவகாரத்தையும் தொட்டார். ‘‘ஜெயலலிதாவின் கூட்டங்களுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்யப்பட்டன. தி.நகரில் நடந்த கூட்டத்துக்கு ஆறு லட்சம் ரூபாய் செலவு. இப்படி லட்சக்கணக்கில் செலவு செய்து மாவட்டச் செயலாளர்களால் எப்படிக் கூட்டம் போட முடியும்? பிரமாண்டமான கட் அவுட்கள் எல்லாம் எதற்கு? மதுரையில் நடந்த கூட்டத்துக்கு ஈஃபில் டவர் மின்விளக்கு ஜோடனை எதற்கு? கூரை போடாத மேடைகளில் பேசிதான் பெரியாரும் அண்ணாவும் கூட்டங்களை நடத்தினார்கள். கட்சிக் கொடியைக் கட்டக்கூட கான்ட்ராக்ட் விட்ட பிறகு கட்சி எப்படி வளரும்? எங்கிருந்து தொண்டன் வருவான்? நாங்கள் தொண்டர்களுக்கு உற்சாகம் ஊட்டுவோம். கான்ட்ராக்டர்களுக்கு அல்ல’’ என்றார்.
கான்ட்ராக்டர்களுக்கு உற்சாகம் ஊட்டியது சசிகலா குடும்பம்!
(தொடரும்)