Published:Updated:

வெள்ளி நிலம் - 19

வெள்ளி நிலம் - 19
பிரீமியம் ஸ்டோரி
News
வெள்ளி நிலம் - 19

ஜெயமோகன் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

முன்கதை: இமயமலைப்பகுதியில் இருக்கும் ஒரு மடாலயத்தில், பராமரிப்புப் பணி நடைபெறும்போது கிடைக்கும் மம்மி ஒன்றைக் கடத்திச்செல்ல சிலர் முயல்கிறார்கள். அதைத் துப்புதுலக்க காவல்துறை அதிகாரி பாண்டியன் வருகிறார். அவருடன் நரேந்திர பிஸ்வாஸும் நோர்பாவும் சேர்கிறார்கள். இந்த விசாரணைக்காக இவர்கள் பூட்டான் செல்கிறார்கள். பல இன்னல்களைக் கடந்து, புலிக்குகை என்னும் ஒரு மடாலயத்துக்குச் செல்கிறார்கள். பல புத்தர் சிலைகளைப் பார்க்கிறார்கள். அந்த மடாலயத்தின் தலைமை லாமாவைச் சந்தித்து, அவரிடம் ஒரு படத்தைக்காட்டி விசாரிக்கிறார்கள். பிறகு அங்கிருந்து வெளியேறி, திபெத்திய பௌத்த ஞானி மிலரேபா குகைக்குப் போகிறார்கள். மிலரேபாவின் கதையை நரேந்திர பிஸ்வாஸ் சொல்கிறார்.

வெள்ளி நிலம் - 19

அன்றிரவு பாண்டியனும் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸும் நோர்பாவும் நாக்போவும் ராணுவ முகாமில் தங்கினார்கள். அங்கே, காவலுக்கு நிறைய நாய்கள் இருந்தன. பெரும்பாலும் எல்லா நாய்களுமே ஜெர்மன் ஷெப்பர்ட் இனத்தைச் சேர்ந்தவை. உடல்நிறைய முடியுடன் ஓநாய்போலத் தெரியும். நாக்போ உள்ளே நுழைந்ததுமே அவை குரைத்தபடி ஓடிவந்தன.

நாக்போ வாலை ஆட்டியபடி மெள்ள, “நான் நண்பன்” என்றது.

“ஆனால் நீ குண்டாக இருக்கிறாயே” என்று முதலில் வந்த ஜெர்மன் ஷெப்பர்ட் இனத்தைச் சேர்ந்த நாயான ஹௌலர் கேட்டது.

“நான் உயர்ந்த இனம்” என்று நாக்போ சொன்னது.

“கடித்துப் பார்ப்போமா?” என்று ஹௌலர் கேட்டது.

“முட்டாளே, உன்னைச் சங்கிலி போட்டுக் கட்டிவைத்திருக்கிறார்கள். என் கழுத்தில் பட்டைகூட இல்லை. பார்த்தாயா?” என்றது நாக்போ.

ஹௌலர், “அதுதானே?” என்றபின் மற்ற நாய்களைப் பார்த்து முனகியது.

அவற்றில் வயது மூத்த நாயான பார்க்கர், “அவன் சொல்வது உண்மைதான். அவனிடம் அந்தச் சிறுவன் பேசிக்கொண்டு வருவதை நானே கண்டேன்” என்றது.

“என்ன செய்ய?” என்று ஹௌலர் கேட்டது.

“நாம் அவனுடைய நண்பர்கள் என்று சொல்” என்றது பார்க்கர்.

“நாம் நண்பர்கள்” என்று ஹௌலர் சொன்னது.

நாக்போ வாலை வேகமாக ஆட்டி “சரி… நாம் மகிழ்ச்சியாக இருப்போம்” என்றது.

நாக்போ மூக்கை நீட்டிக்கொண்டு செல்ல, ஹௌலர் மூக்கை நீட்டியது. இரண்டு நாய்களும் மூக்கை உரசிக்கொண்டன. மற்ற நாய்களும் வந்து மூக்கை உரசிக்கொண்டன.

நாக்போ மூத்த நாயான பார்க்கரிடம் சென்று, “வணங்குகிறேன் மூத்தவரே” என்று சொல்லி தலையைத் தாழ்த்தியது.

பார்க்கர் தலையைத் தூக்கி, “நன்றாக இருடா” என்றது.

வெள்ளி நிலம் - 19

நாய்களின் அந்தச் செய்கைகளை நோர்பா பார்த்து நின்றான். பாண்டியன் பார்த்தபோது, அவை ஒன்றை ஒன்று பார்த்து உறுமுவதுபோலவும் முனகுவதுபோலவும் வாலை ஆட்டுவதுபோலவும்தான் தோன்றியது.
“இங்கே சாப்பாடு எப்படி?” என்று நாக்போ கேட்டது.

ஓர் இளம்நாய், “இங்கே அனைவருக்கும் நாய்களுக்குரிய சிறப்பு உணவுதான்” என்றது.

“மாட்டிறைச்சி?” என்றது நாக்போ.

“அப்படி என்றால் என்ன?” என்றது அந்த நாய்.

“பன்றி?” என்று பரிதாபமாக நாக்போ கேட்டது.

“பன்றிகளே இங்கே இல்லை” என்றது ஹௌலர்.

நாக்போ நோர்பாவிடம், “நாம் சென்றுவிடுவோம்” என்றது.

“இரு, இங்குள்ள உணவைச் சாப்பிட்டுப்பார். ராணுவத்தில் மோசமான உணவு கொடுக்க மாட்டார்கள்” என்றான் நோர்பா.

நாக்போ சோகமாக நாய்களுடன் சென்றது.

அப்போது ஒரு விசில் ஓசை கேட்டது. ஹௌலர்  “வா, சாப்பாட்டு நேரம்” என்றபடி பாய்ந்தோடியது. நாய்கள் வரிசையாகச் சென்று நின்றன.

ஒருவன் சிறிய புண்ணாக்கு உருளைகள் போன்ற நாயுணவைத் தட்டுகளில் வைத்தான். “சாப்பிடு” என்றது ஹௌலர்.

“இதையா?” என்று நாக்போ கேட்டது.

“ஆம், இதுதான்” என்றது ஹௌலர்.

நாக்போ குனிந்து மோந்து பார்த்து. “ஆ, மாடு!” என்றது.

“எங்கே?” என்றது பார்க்கர்.

“இதோ, இது மாட்டிறைச்சி! ஆ” என்று கூவிய நாக்போ, வாலைச்சுழற்றிக்கொண்டு நோர்பாவிடம் ஓடிவந்தது. அவனை நக்கிவிட்டு மீண்டும் ஓடிப்போய், அந்த உணவை அள்ளி அள்ளி விழுங்கியது. மகிழ்ச்சி தாளாமல் வால் சுழற்றி தன்னைத்தானே சுற்றிவந்தது.

அன்றிரவு, நாக்போ மற்ற நாய்களுடன் முகாமைக் காவல்காத்தது. அவற்றுடன் தூங்கியது. இரவில் நல்ல குளிர். பெரிய பனிப்பொழிவு இருந்தது. நோர்பா காலையில் எழுந்து வந்து கதவைத் திறந்தபோது, கதவு பனியில் புதைந்திருந்தது. அவன் அதை உதைத்தான். பனிப்பாளம் பிளந்து கதவு திறந்தது. வெளியே பனியின் வெண்மை வெயில்போலத் தெரிந்தது.

வெளியே, வெண்ணிறமாக ஒரு நாய் நின்று குதித்தது. அதன் குரைப்பைக் கொண்டுதான் அது நாக்போ என்று நோர்பா அறிந்தான். அதன் உடலெங்கும் பனி படர்ந்திருந்தது. ஆனால், மிக உற்சாகமாக இருந்தது. “நான் அத்தனை பேரையும் தோற்கடித்தேன்” என்று நாக்போ சொன்னது.

“அந்த நாய்கள் எங்கே?” என்றான் நோர்பா.

“அவர்களை அடைத்துவிட்டார்கள். நாம் மலைக்குப் போக வேண்டும் அல்லவா?” என்றது நாக்போ.

அவர்கள் காலை உணவுக்குப் பின் கிளம்பினார்கள். பனிப்பொழிவும் காற்றும் நின்றுவிட்டிருந்தன. ஒரு ராணுவ ஹெலிகாப்டர் அவர்களுக்காகக் காத்து நின்றிருந்தது. அவர்கள் அதில் ஏறிக்கொண்டனர். நான்கு பெட்டிகளையும் ஏற்றினார்கள்.

வெள்ளி நிலம் - 19

ஹெலிகாப்டர் ஓட்டுநர், “நான் இதுவரை நாயை வைத்து ஓட்டியதில்லை” என்றார்.

நாக்போ, ”நான் பலமுறை முட்டாள்கள் ஓட்டும் வண்டிகளில் ஏறியிருக்கிறேன்” என்றது.

நோர்பா, “பேசாமலிரு” என்றான்.

டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ், “நான் இந்தப் பகுதியின் வரைபடத்தை முழுமையாக ஆராய்ந்தேன். இங்கே அப்படி டோர்ஜே லெக்பாவுக்கு ஒரு கோயில் இருப்பதாக எந்த ஆவணத்திலும் இல்லை. எந்தக் குகையும் பதிவுசெய்யப்படவில்லை” என்றார்.

“அப்படியென்றால், நீங்கள் இங்கே பான்மதத்தினர் வழிபடும் ஷென்ராப் மிவோச்சேயின் சிலையோ, ஓவியமோ இருப்பதாக எப்படி அறிந்தீர்கள்? அதை நம்பித்தானே நாம் வந்தோம்?” என்றான் பாண்டியன்.

“அதை ஒரு சீனப் பயணி 18-ம் நூற்றாண்டில் பதிவுசெய்திருக்கிறார். அவர் பெயர், ஷு லு. அவர், பான் மதத்தின் தடையங்களைத் தேடிப் பயணம்செய்தவர். அவர் பார்த்த கோயில் இங்கே எங்கேயோ உள்ளது” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

“நேரிலேயே பார்ப்போமே” என்றான் பாண்டியன்.

அவர்கள், ஹெலிகாப்டரில் தாழ்வாகப் பறந்தார்கள். அலையலையாக மலை உச்சிகள் வந்துகொண்டே இருந்தன. பாண்டியன் தொலைநோக்கி வைத்து மலைகளைப் பார்த்தான்.

பனி மூடிய மலைகள் வெண்மையான தாளைக் கசக்கிப்போட்டதுபோலத் தெரிந்தன. “பனி இல்லாமல் இருந்தாலாவது பார்த்துவிடலாம். இப்போது மிகக் கடினம்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.
“ஹெலிகாப்டரை அந்தப் பனிப்பாளம் மீது இறக்க முடியுமா?” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

“தாழ்வாகச் சென்று பார்க்கிறேன். அந்தப் பனிப்பாளம் காற்றில் அலையடிக்கவில்லை என்றால் இறங்கலாம்” என்றார் ஓட்டுநர்.

தாழ்வாகப் பறந்துசென்று பார்த்தனர். பனிப்பாளம் பளிங்குபோல உறுதியாக இருந்தது. “இறங்கலாம்” என்றார் ஓட்டுநர். ஹெலிகாப்டர் மெள்ள அதன்மேல் இறங்கி நின்றது.

அவர்கள் இறங்கிக்கொண்டார்கள். அதில் ஏற்றிய நான்கு அலுமினியப்பெட்டிகளை இறக்கினார்கள். டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் அவற்றைத் திறந்தார். அவற்றுக்குள் மெல்லிய அலுமினியத்தாலான சிறகுகளும் பிற உதிரிப்பாகங்களும் இருந்தன. அவற்றை இணைத்தபோது, மிகச் சிறிய ஹெலிகாப்டர்போன்ற கருவி உருவாகி வந்தது. அதற்கு நான்கு கால்கள் இருந்தன. கொடுக்குகள்போல இரண்டு கைகள். ஒன்றில் கேமரா இருந்தது. இன்னொன்றில் விளக்கு இருந்தது.

“பெரிய பறக்கும் சிலந்தி போலிருக்கின்றன” என்றான் நோர்பா ஆச்சர்யத்துடன்.

வெள்ளி நிலம் - 19

“இவற்றை டிரோன்கள் என்கிறார்கள். இங்கிருந்து நாம் இவற்றை இயக்கலாம். இவை இன்று சினிமா எடுக்கப் பயன்படுகின்றன. அமெரிக்க ராணுவம், இவற்றில் குண்டுகளை ஏற்றிச்சென்று போரில் தாக்குகிறது” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

அவற்றில் கேமராக்களைப் பொருத்தினர். ‘‘மூன்று டிரோன்கள் உள்ளன. ஆளுக்கு ஒன்றாகப் பறக்கவிடுவோம். இந்த மலைப் பகுதியை இவை நுணுக்கமாகப் படம் எடுக்க முடியும்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

கருவிகளை இயக்கியதும் டிரோன்களின் சிறிய விசிறிகள் சுழன்றன. ஒவ்வொரு டிரோனிலும் நான்கு விசிறிகள் இருந்தன. தட்டாரப்பூச்சி பறப்பதுபோல டிரோன்கள் ர்ர்ர்ர் என எழுந்து பறந்து, மேலே சென்றன. ஒரு சிறிய கருவியால் அவற்றை இயக்க நோர்பா கற்றுக்கொண்டான்.

அவை, சிறிய வண்டுகளைப்போல மலை மடிப்புகளை அணுகி அணுகிப் பறந்தன. கேமராக்களால் படம் பிடித்தன. அந்தப் படம் அவர்களிடமிருந்த கணிப்பொறியில் பதிவாகிக்கொண்டே இருந்தது.

மூன்று மணிநேரம் அவர்கள் அந்த டிரோன்களைக்கொண்டு மலைகளில் தேடினர். பின்னர் ஹெலிகாப்டரில் ஏறி இன்னொரு மலை உச்சியில் இறங்கி, அங்கே தேடினர்.

திடீரென்று டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ், “இதோ” என்றார். அவர்கள் ஓடிவந்து பார்த்தனர். டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் அந்தப் படத்தைப் பெரிதுபடுத்திக்கொண்டே சென்றார். அந்தப் படத்தில் ஒரு குகை தெரிந்தது.
“இயற்கையான குகை. ஆனால், மேலே செல்ல படிகள் வெட்டப்பட்டுள்ளன” என்றான் பாண்டியன்.

“ஆம், இந்த இடம்தான்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ், “கிளம்புவோம்.”

அவர்கள் டிரோன்களைத் திரும்ப வரவழைத்துப் பிரித்து, பெட்டிகளில் அடுக்கி, ஹெலிகாப்டரில் ஏற்றினர். ஹெலிகாப்டரில் அவர்களும் ஏறிக்கொண்டனர். ஹெலிகாப்டர் அவர்களை அந்தக் குகை அருகே கொண்டுசென்றது. அதிலிருந்து கயிறு இறங்கியது. அதன் வழியாக அவர்கள் மூவரும், நாக்போவும் இறங்கினர்.

“எலும்பு வாசனை அடிக்கிறது!” என்றது நாக்போ.

“வாருங்கள்’’ என்றபடி பாண்டியன் முன்னால் சென்றான். அவர்கள் அந்தக் குகையை அணுகி, பாறையில் வெட்டப்பட்டிருந்த சிறிய படிக்கட்டுகளில் ஏறி மேலே சென்றார்கள்.

“இங்கே பிட்சுக்கள் எப்படி வருவார்கள்?” என்றான் பாண்டியன்.

‘‘மிகக்கடினம். ஆகவேதான் எவருக்கும் தெரியவில்லை.  கயிறு கட்டி ஏறி வருவார்கள் என நினைக்கிறேன்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

குகையின் உள்ளே சிறிய அளவுக்கே இடமிருந்தது. எதிர்ச்சுவரில் டோர்ஜே லெக்பாவின் சிறிய சிலை புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டிருந்தது. கையில் வஜ்ராயுதம் ஏந்தியபடி அமர்ந்திருந்தது அச்சிலை.
“இங்கேதான் மிலரேபா வந்து தியானம் செய்தார் என நினைக்கிறேன். இந்த டோர்ஜே லெக்பா தெய்வம்தான் அவரை மலைத் தெய்வங்களிடமிருந்து காப்பாற்றியது” என்றான் நோர்பா.

“அவர் ஏன் இங்கே வரவேண்டும்?” என்றான் பாண்டியன்.

டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ், “நான் சொல்கிறேன் சரியா என்று பாருங்கள். இங்கேதான் அவர் ஷென்ரோப் மிவோச்சே என்ற கொடூர தெய்வத்தை மந்திரம் மூலம் தன்னுடன் சேர்த்துக்கொண்டார். அந்த தெய்வத்தை அவர் இங்கே வந்து திரும்ப விட்டுவிட்டார். அதன் பின்புதான் அவருக்கு விடுதலை கிடைத்தது.”

“அப்படியென்றால், ஷென்ரோப் மிவோச்சேயின் சிலை எங்கே?” என்றான் பாண்டியன்.

“இங்கே இருக்க வேண்டும்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ். அந்தச் சுவர் அருகே சென்று டோர்ஜே லெக்பாவின் சிற்பத்தைத் தடவிப்பார்த்தார்.

நாக்போ வந்து அந்தப் பாறையை மோந்து பார்த்துக் குரைத்தது. அவர், அந்தப் பாறைச்சுவரின் விளிம்பில் கைவைத்துப் பார்த்தார்.

“இந்தப் பாறையைவைத்து குகையை மூடியிருக்கிறார்கள். இந்தக் குகை மேலும் ஆழம் கொண்டது. இதோ, இந்த இடைவெளியில் காற்று வருகிறது” என்று டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் சொன்னார்.

அவர்கள் அந்தப் பாறையைத் தள்ளித் திறக்க முயன்றனர். மெள்ள அது அசைந்தது. பின்பு, சுழன்று திறந்துகொண்டது. உள்ளே, குகை இருட்டாக விரிந்துசெல்வதை அவர்கள் கண்டார்கள்.

(தொடரும்...)

வெள்ளி நிலம் - 19

இயந்திரத் தேனீக்கள்

ட்ரோன் என்றால், நேரடியாக என்ன பொருள்? ஆண் தேனீ. UAV விரிவாக Unmanned Aerial Vehicle என்று சொல்லப்படும் ஆளில்லா விமானங்களை, அவை பறக்கும் விதத்தைக்கொண்டு அவ்வாறு சொல்கிறார்கள். 2005-ல் அமெரிக்க ராணுவம் இதைப் பயன்படுத்த ஆரம்பித்தது. சிறிய விமானங்கள் பறக்க எரிபொருள் தேவை. அந்த எரிபொருளின் எடையை அவை மேலே தூக்கிச் செல்ல வேண்டும். ஆகவே, முன்பு சிறிய விமானங்களைச் செய்ய முடியவில்லை. சக்திவாய்ந்த மின்கலங்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது, டிரோன்கள் உருவாகிவிட்டன.

வெள்ளி நிலம் - 19

தேனீக்களுக்கு எத்தனை சிறகுகள்? இரு பக்கங்களிலும் இரண்டிரண்டாக நான்கு சிறகுகள் உண்டு. நான்கையுமே தனித்தனியாக இயக்க அதனால் முடியும். அவ்வாறு சிறகுகளைப் பல வகையாக மடிப்பதன்மூலம், அது காற்றில் முன்னும் பின்னும் பறக்க முடிகிறது. ஒரே இடத்தில் நிற்கவும் முடிகிறது. இது, பூவுக்குள் எப்படி வேண்டுமென்றாலும் நுழைந்து தேன் உண்ண உதவுகிறது.

டிரோனில் நான்கு விசிறிகள் உள்ளன. அவை, தனித்தனியாகத் திரும்ப முடியும். ஆகவே, அவை தேனீ போலவே காற்றில் முன்னும் பின்னும் செல்லும். அசையாமல் மிதந்து நிற்கவும் முடியும்.