மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 44

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

கூவல்குடியினர் எட்டுப்பேரை அழைத்துவந்தான் தேக்கன். அதில் மூன்று பேர் வயதானவர்கள். ஐந்து பேர் இளைஞர்கள். வயதானவர்கள் எழுப்பும் ஓசை இணையற்றதாக இருக்கும். மலையின் எந்த எல்லைக்கும் அவர்களால் குறிப்புச் சொல்ல முடியும். ஆற்றுநீரில் சுழி ஏற்படுவதுபோல காற்றில் ஓசைகொண்டு சுழிக்கச்செய்யும் ஆற்றல்கொண்டவர்கள். ஆனால், காட்டை ஊடறுத்து வேகமாக ஓட முடியாது. இளைஞர்களால் அவர்களின் அளவுக்கு ஓசையைக் காடுதாண்டி வீச முடியாது. ஆனால், தங்களின் ஓட்டத்தால் அந்த இடைவெளியை நிரப்பிவிடுவார்கள்.

ஊரிலிருந்த எட்டுப்பேரை அழைத்துக்கொண்டு அதிகாலையிலேயே காரமலையில் ஏறத் தொடங்கிவிட்டான் தேக்கன். மிக விரைவாகவே அவர்கள் மலையுச்சியை அடைந்துவிட்டனர். காரமலையின் ஒவ்வொரு முகட்டுக்கும் ஒவ்வொருவராகப் பிரித்து அனுப்பப்பட்டனர். பொழுதடைவதற்குள் அவர்கள் தங்களின் இருப்பிடங்களில் நிலைகொண்டனர்.

ஒரு திசையிலிருந்து மறுதிசைக்குக் கண்ணுக்கெட்டிய தொலைவுவரை காரமலை, இப்பொழுது ஒலிக்கண்ணிகளால் பின்னப்பட்டுவிட்டது. இந்த எல்லைக்குள் எதிரிகள் எவ்விடத்தில் மலையைக் கடந்தாலும், கண்டறிந்து ஒலியெழுப்பிக் குறிப்புகொடுக்க அவர்கள் ஆயத்தமாக இருந்தனர்.
மலைமுகட்டுக்கு வந்ததும் வேட்டூர் பழையன் புறப்படத் தயாரானான். எதிரிகளை வீழ்த்த பாரி என்ன உத்தியை வகுத்திருக்கிறான் என்பதைச் சொல்லவில்லை. ஆனாலும் மலையடிவாரத்தில் முழு தயாரிப்போடு இருக்க வேண்டியது கட்டாயம் என்று தோன்றியது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 44

“இங்கிருந்து காரிக்கொம்பை ஊதினாலே கீழே வேட்டுவன் பறையிலிருக்கும் நீலன் வீரர்களோடு ஆயத்தமாகிவிடுவான். ஆனால், அந்த ஓசை எதிரிகளையும் விழிப்படையச் செய்துவிடும். எனவே, நான் நேரில் போகிறேன்” என்று சொல்லிப் புறப்பட்டான் வேட்டூர் பழையன்.

பழையனைக் கீழே அனுப்புவது முறையல்ல என்று தேக்கனுக்குத் தோன்றியது. மலையின் மீதிருந்து எதிரிகளை வீழ்த்தப் பாரி போரிடும் போது, நாம் உடனிருப்பது  கட்டாயம் என்று தோன்றிய அதே நேரத்தில் முன்னெச்சரிக்கை யாகச் சிலவற்றைச் செய்ய வேண்டியதும் அவசியம் எனத் தோன்றியது. முடிவெடுக்கத் தயங்கினான் தேக்கன்.

வேட்டூர் பழையனால் தேக்கனைப் புரிந்துகொள்ள முடிந்தது. அவன் எதிரிகளைக் கூத்துக்களத்திலிருந்து விரட்டிவருகிறான். அவனது எல்லா முயற்சிகளையும் முறியடித்து அவர்கள் முன்னேறிவருகின்றனர். பறம்புநாடு,  தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை இப்படியோர் எதிரியைக் கண்டதில்லை. அதே நேரம் பாரி, ‘அவர்களை வீழ்த்தும் வழிமுறையைக் கண்டறிந்துவிட்டேன்’ என்று திடமான சொல்கொண்டு காத்திருக்கிறான்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 44எதிரிகளின் தாக்குதலைத் தனது உடல் முழுவதும் ஏற்றிருக்கிறான் தேக்கன். அவர்களின் ஆற்றல்பற்றி அவனுக்கு ஆழமான கருத்து உருவாகியிருக்கிறது. அவர்களை வீழ்த்தும் உத்தியைப்பற்றி பாரி எதுவும் சொல்லாததால், தேக்கனின் மனம் நிலைகொள்ளவில்லை. தடுமாற்றம் தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

புரிந்துகொண்ட பழையன், புரியாததைப்போல அவனைவிட்டு விலகி நடக்கத் தொடங்குகிறான். இரண்டு கிழவர்களின் மனநிலையும் இரண்டு விதமாக இருக்கின்றன.

ஆனால், இருவரும் பாரியின் சொல்லை ஏதோ ஒருவகையில் கடந்துகொண்டிருக்கின்றனர். ஒருவேளை, பாரியால் எதிரிகளை வீழ்த்த முடியாமற்போய்விட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் மனதின் ஆழத்தில் உருவாகியிருக்கிறது. அதனை அவர்கள் நம்பாமலிருக்க முயல்கின்றனர். ஆனால், எதிரியின் இணையற்ற ஆற்றல் அவர்களை அடுத்தடுத்து சிந்திக்கச் செய்கிறது. அச்சிந்தனை பாரியின் சொல்லைக் கடந்தும் போய்க்கொண்டிருக்கிறது.

மூன்று மலைகளைக் கடந்து உள்ளே வருவதுதான் எல்லாவகையிலும் கடினமானது. உள்ளே வந்துவிட்டால், வெளியேறுவது அவ்வளவு கடினமல்ல. இயற்கையில் அமைந்துள்ள இந்தச் சாதகமான நிலையை இரு கிழவர்களும் அறிவர். காட்டுக்குள் தப்பியோடும் ஒருவனை விரட்டிச்சென்று மறிப்பது எளிதல்ல. அதுவும் இவர்கள் அபாரமான ஆற்றல் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

எண்ணங்கள் ஓடியபடி இருக்க, வேட்டூர் பழையன் புறப்பட்டான். காரமலையின் கீழ்த்திசைச் சரிவில் இருக்கும் ஒவ்வொரு பாறையும், பிளவும், முடிச்சும், மரமும், செடியும், விலங்கும் அவன் சொல் கேட்பன. எதிரிகளைப்பற்றி இவ்வளவு நேரம் கேட்ட செய்திகளிலிருந்து அவன் சில முடிவுகளுக்கு வந்திருந்தான். எதிரிகளை வீழ்த்த எவற்றைச் செய்யக் கூடாது என மனதில் பட்டியலிட்டான். ‘வேட்டுவன் பாறையில் மிகச் சிறந்த வேட்டைநாய்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றைத் தாக்குதலில் ஈடுபடுத்தக் கூடாது. சுண்டாப்பூனையையே கொன்று வீசியவர்கள் வேட்டைநாயை எளிதில் வீழ்த்திவிடுவார்கள்.

தேக்கனையே  அடித்துத்தூக்கியவர்கள், எவ்வளவு பெரியவீரனையும் சரித்துவிடுவார்கள். எனவே, அவர்களை நேர்நிலையில் எதிர்கொள்ளக் கூடாது. உடலின் வலிமையும் காட்டுச்செடியைக் கிழித்து முன்னகரும் ஆற்றலும் இணையற்றவையாக இருக்கின்றன. எனவே, அவர்களைப் பின்தொடர்ந்து விரட்டித்தாக்க முடியாது. இவற்றையெல்லாம் கடந்த வழியென்ன இருக்கிறது என்று  சிந்தித்தபடியே மலையிறங்கினான் வேட்டூர் பழையன்.

நீண்டநேரம் சிந்தித்தாலும் விடையேதும் கிடைக்கவில்லை. ஆனால், பாரி எதனை யோசித்து அவ்வளவுத் தெளிவாகச் சொன்னான். இவற்றைக் கடந்த தாக்குதல்முறையைப்பற்றி பாரி சிந்தித்திருப்பான். அது என்னவாக இருக்கும்?’ வினாவிற்கான விடையேதும் கிடைக்காமலே கால்கள் நடந்துகொண்டிருந்தன.

வெகுதொலைவு இறங்கியபின் வேறோர் எண்ணம் தோன்றியது. ‘இவ்வழிகள் அல்லாத வேறுவழி பற்றிய திட்டம் இல்லாமல் நாம் கீழே போய் என்ன செய்யப்போகிறோம்?  மாற்றுவழியைக் கண்டுபிடித்திருக்கும் பாரியுடன் இணைந்து தாக்குதல் தொடுப்பதுதானே இப்போதைய தேவை.’

மனம் நிலைகொள்ள மறுத்தது. ‘இதே குழப்பம் தேக்கனுக்கும் இருக்கிறது. ஆனால், பாரி மட்டும் எப்படி குழப்பம் சிறிதுமின்றித் தெளிவான முடிவெடுத்தான்?’ என்று நினைத்த கணம் நடையை நிறுத்தி, ‘மீண்டும் காரமலை ஏறிவிடலாமா?’ என்று தோன்றியது.

வேட்டூர் பழையன் நிலைதடுமாறினான். ஆனாலும் சட்டெனத் தெளிந்தான். ‘வீழ்த்த முடியாத மனிதர் யார் இருக்கிறார்? காக்காவிரிச்சியையே வீழ்த்த முடிந்த  பாரியால் மனிதனை வீழ்த்த முடியாதா? எவ்வளவு பெரும்வீரனாக இருந்தாலும்  திருடிச்செல்பவனின் உள்ளம் அச்சங்கொள்ளத்தானே செய்யும். அதனைத் தடுக்க நினைப்பவன் வெற்றிபெறுவதற்கு வீரத்தைக் கடந்த ஆயுதங்களும் உண்டு. எண்ணங்கள் உருவேறியபடி இருக்க, வேட்டூர் பழையனின் கால்கள் பலமடங்கு வேகத்தோடு வேட்டுவன் பாறையை நோக்கிக் கீழிறங்கிக் கொண்டிருக்கின்றன.

வீரயுக நாயகன் வேள்பாரி - 44

கொற்றவைக் கூத்திற்குப் போனதிலிருந்து எவ்வியூரிலே தங்கியிருந்த மயிலா,  சில நாள்களுக்கு முன்புதான் கீழிறங்கி வந்தாள். வந்ததும் வேட்டுவன் பாறையிலிருந்த நீலனைப் பார்க்கப் போனாள்.  நீலனோ பகரி வேட்டைக்குச் செல்பவர்களோடு இணைந்து உள்காட்டுக்குப் போயிருந்தான். மூன்று நாள்களாக அவன் வந்து சேரவில்லை. அதன்பின் இருவரும் சந்தித்துக்கொண்டாலும் முழுப் பொழுதையும் சேர்ந்து கழிக்கும் வாய்ப்பின்றியே இருந்தது.

நேற்று பகலில்தான் இருவரும் சந்தித்தனர். மாதங்கள் கடந்ததால், தவித்தலையும் கண்களோடு மயிலா கேட்டாள், “நான் சொல்லும் இடத்துக்கு என்னை அழைத்துச்செல்.”

“எங்கே?” என்றான் நீலன்.

“சுனைவால் முடுக்கிற்கு.”

நீலன் எதிர்பார்க்கவில்லை. “வழக்கமாக அருகிலிருக்கும் குன்றுக்குத்தானே செல்வோம். இப்பொழுது ஏன் அங்கு அழைத்துச்செல்லச் சொல்கிறாய்?”

“காரணமிருக்கிறது. அழைத்துச்செல்.”

‘அங்கு சிறிய நீர்க்குட்டை மட்டுமே உண்டு. அதைக்காணவா அவ்வளவு தொலைவு செல்ல வேண்டும்?’ என நீலன் தயங்கினான்.

“ஏன் தயங்குகிறாய்?” எனக் கேட்டாள் மயிலா.

“சுனைவால் முடுக்கு, காரமலையின் பின்புறச்சரிவில் இருக்கிறது. நாம் போய்ச் சேரவே இரவாகிவிடுமே” என்றான்.

“ஆமாம். அது இருளுக்குள் இருந்து காணவேண்டிய இடம்” என்றாள்.

நீலனுக்குப் புரியவில்லை. “அவ்விடம் சிறிய நீர்க்குட்டை மட்டுமே உண்டு. நீ வேறு இடத்தை நினைத்துக்கொண்டு சுனைவால் முடுக்கைச் சொல்கிறாய் என்று நினைக்கிறேன்” என்றான்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 44


“இல்லை. நான் தெரிந்தேதான் சொல்கிறேன். என்னை அவ்விடம் அழைத்துச்செல்.”

“வானில் கருமேகங்கள் ஏறிவருகின்றன. பொழுது மறைவதற்குள் மழை வந்துவிடும். இரவெல்லாம் கொட்டித்தீர்ப்பதற்கான வாய்ப்பிருக்கிறது” என்றான் நீலன்.

அவனது அறியாமையை  எண்ணிச் சிரித்தபடி மயிலா சொன்னாள், “அதற்காகத்தான் என்னை அழைத்துச்செல்லச் சொல்கிறேன்.”

இப்பொழுதும் அவனுக்குப் புரியவில்லை. `அது, கண்டுமகிழும் இடமுமில்லை; காதல்கொள்ள ஏற்ற இடமுமில்லை. அங்கு ஏன் அழைத்துச்செல்லச் சொல்லி இவ்வளவு வலியுறுத்துகிறாள்?’ எனச்  சிந்தித்தபடியே அவ்விடம் நோக்கி நடக்கத் தொடங்கினான் நீலன்.

மயிலாவுக்குக் கபிலரோடு இருந்த காலத்தைப்பற்றி நீலனிடம் பகிர்ந்துகொள்ள எண்ணற்ற செய்திகள் இருந்தன. அதேபோலத்தான் நீலனுக்கும். கடந்த வாரம் முழுவதும் உள்காட்டிற்கு வேட்டைக்குப் போனதால் சொல்லத் தவித்துக்கொண்டிருக்கும்  சொற்களோடு காத்திருந்தான்.

பொதுவாக எல்லையில் கவனம் செலுத்துவதால்,  பிற வீரர்களோடு சேர்ந்து உள்காட்டு வேட்டைக்கு நீலன் போவதில்லை. ஆனால், மயிலா இல்லாத வெறுமையைக் கடக்க முடியாததால் மனமாற்றத்திற்காகத் தான் இம்முறை பகரி வேட்டைக்குச் செல்பவர்களோடு இணைந்து போனான்.
 
கார்காலம், உயிரினங்கள் இணை சேரும் காலம். அதுவும் உள்காடுகளில் பெருங்குன்றுகளே ஒன்றினையொன்று கட்டியணைத்துக் கிடப்பதைப் போலத்தான் காட்சிக்குத் தெரியும். தும்பிகளில் தொடங்கி துதிக்கைத் திருகும் யானைகள் வரை இணையும் காலஅளவைப்பற்றியே பார்த்தும் கணித்தும் பேசிச்சென்றனர் அனைவரும்.

வேட்டையாட வேண்டிய விலங்கினைக்கூட எல்லா காலங்களிலும் வேட்டையாடிவிட முடியாது. இணை சேர வழியின்றிக் கூட்டங்களிலிருந்து தப்பிய விலங்குகள் மட்டுமே கார்காலத்து வேட்டைக்கு உகந்தவை. தாவரங்கள் ஒன்றிணையொன்று பின்னுவதுபோல விலங்குகளும் பின்னுகின்றன. விலங்குகள் பிடறிக்கவ்வி முயங்குவதைப்போல தாவரங்களும் முயங்குகின்றன.

பகரி வேட்டையாடச் செல்லும் அனைவருமே வயதில் மூத்த பெரியவர்கள்தான். அவர்களின் உதவிக்காக இளைஞர்கள் சிலர் உடன் சென்றனர். கார்காலத்தில் கனிந்தி ருக்கும் உயிரினங்களின் காதல் வாழ்வைப் பெரியவர்கள் எளிதில் கடந்துபோய்விடுவர். ஆனால், இளைஞர்களால் அப்படிக் கடக்க முடியவில்லை. இணைசேருதல் உயிரினப் பொதுமை. ஆனால், அக்காட்சி காணும் கண்களுக்குள் கடத்தும் உணர்வு பொதுமையானதல்ல. வாழ்வின் எந்நிலையில் அவன் நிற்கிறானோ, அந்நிலையோடு தொடர்புடையது.  இளைஞர்கள் நிற்கும் நிலையில் நிலைகொள்ளாமல் இருந்தனர். காமம் நிலை கொள்ளாமையை அடிப்படையாகக் கொண்டது. அது நடப்பன, ஊர்வன, பறப்பன என எவ்வொன்றிலுமிருந்து பாய்ந்துவந்து மனிதனைக் கவ்விப் பிடித்துக்கொள்ளக் கூடியது.

விளார் விளாராக உடம்பிற் பதிந்த தடம்போல, மண்ணிற்பதிந்து கிடக்கும் தடத்தைப் பார்த்ததும் ஒரு பெரியவர் சொன்னார், “இது புலியின் முதற்கூடுகை. வால்கொண்டு அடித்த தடங்கள் இவை” கடக்கும்பொழுது சொல்லும் செய்திகள் கடக்க முடியாதவைகளாக மாறுவதை இளைஞர்கள் உணர்ந்தபடியே இருந்தனர். மயிலாவின் சடை பின்னிய கூந்தலின் தடம் தனது மார்பில் பதிந்துகிடந்த நினைவு நீலனைத் தாக்கிச்சென்றது.

பெரியவர்கள் தடங்களை மண்ணிற் பார்த்துச் சொன்னபடிக் கடப்பதை, இளைஞர்கள் நினைவிற் பார்த்துக் கடக்க முடியாமல் நின்றனர். 

“மண்ணில் காதல்கொண்டால் அடுத்தவர் கண்ணில் தடம்படும் என்பதால்தான் முருகன் பரண் அமைத்தான். அடுத்து வந்தவர்கள் நான்கு காலூன்றிச் சிறுபரண் அமைத்து, இறுகக்கட்டிக்கொண்டனர். அதனைக் ‘கட்டில்’ என்றும் அழைத்தனர்” என்றார் முன்னால் போன பெரியவர்.

இளைஞர்களின் விழிக்குறிப்பறிந்து அவர் இப்பேச்சைத் தொடங்கினார். பேச்சு எந்தக் கணம் காமத்தின் பக்கம் போகிறதோ, அதன்பின் அதிலிருந்து விலகுதலை அதுதான் முடிவுசெய்யும்; நாம் முடிவுசெய்ய முடியாது.

விலகுதலும் இணைதலும் எப்பொழுது என்பதைக் கணிப்பதில்தான் இருக்கிறது காமத்தைக் கைக்கொள்ளும் வித்தை. அந்தப் பெரியவர் வித்தை தெரிந்த வீரனாக இருந்தார். இந்தவொரு குறிப்புச்சொன்னதும் இளைஞர்கள் மிகக் கவனமாக அவரைச் சூழ்ந்து வந்தனர். தனது சொல்லோடு அவர்களை இணைத்த பெரியவர் அதன்பின் வீடு திரும்பும்வரை அவர்கள் விலகாமல் பார்த்துக்கொண்டார். “தேனின் சுவை சுவைப்பதில் அல்ல, சுவைத்ததில் இருக்கிறது. காமமும் அப்படித்தான்” என்று அவர் சொன்ன சொல்லின் ஆழம்செல்ல அவர்களால் முடியவில்லை.

வீரயுக நாயகன் வேள்பாரி - 44

மயிலா மட்டுமல்ல, அந்தக் கிழவன் சொன்ன சொற்கள் அனைத்தும் நீலனைப் பின்தொடர்ந்து வந்துகொண்டேயிருந்தன. அவன் சுனைவால் முடுக்கு நோக்கி மிக வேகமாக அவளை அழைத்துச் சென்றுகொண்டிருந்தான். மழை இறங்கும்முன் காரமலையின் முகட்டைத் தாண்டிவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு நடந்துகொண்டிருந்தான்.

சற்றுத் தொலைவில் சமதளமான இடமொன்றில் மண் பிரண்டு கிடந்தது. இவ்வளவு அகலமாக மண் பிரண்டு கிடக்கிறதே என்று சற்று அருகில் சென்றான். உள்ளுக்குள் இருந்து பிரண்ட மண் எங்கும் சிதறிக்கிடந்தது. அதன் நடுவில் பெரும்பள்ளம் உருவாகியிருந்தது. அவ்விடத்தை நின்று பார்த்தான் நீலன். அருகில் வந்த மயிலா, “இங்கு என்ன நடந்துள்ளது?” எனக் கேட்டாள்.

உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த நீலன் சொன்னான். “தங்களின் கூட்டத்திலிருந்து பிரிந்துவிட்ட காட்டெருமைகள் தனித்து அலைகின்றன. அவ்வகைக் காட்டெருமைகள் மிக ஆபத்தானவை. அவ்வாறு தனித்தலையும் இரு காட்டெருமைகள் எதிர்பட்டால், ஒன்றினையொன்று தாக்கத்துவங்கும். மிகக் கொடூரமாக அத்தாக்குதல் நிகழும். மரணம் வரை இரண்டும் தாக்குவதை நிறுத்தாது. மூன்று அல்லது நான்கு நாள்களுக்குக்கூட அத்தாக்குதல் நீடிக்கும். இறுதியில் அவற்றிலொன்று மடிந்து வீழ்ந்தபின்தான் அம்மோதல் முடிவுக்கு வரும்” என்று சொன்னவன் மேலும் சொன்னான், “இவ்விடத்தில் குறைந்தது மூன்று நாள்கள் இரு காட்டெருமைகள் சண்டையிட்டுள்ளன. இல்லையென்றால், இவ்வளவு பெரும்பரப்பில் மண் பள்ளமாகி இருக்காது” என்றான்.

“தோற்றது என்ன ஆகியிருக்கும்?” என்று மயிலா கேட்டாள்.

“தோற்றது ஓடத் தொடங்கும். ஓடத் தொடங்கிவிட்டாலே அதன் மரணம் அடுத்த சில அடிகளில் நிகழப்போகிறது என்று பொருள். வென்றது, அதனைக் குத்தித்தூக்கிப் பள்ளத்தில்  வீசியிருக்கும்” என்றான்.

பள்ளத்தை வியந்து பார்த்துக்கொண்டிருந்த மயிலாவை, “சரி. வேகமாகச் செல்ல வேண்டும்” என்று அழைத்தபடி விரைந்தான் நீலன். காரமலை உச்சியைத் தாண்டும்முன் மழை இறங்கத் தொடங்கியது. அங்கங்கு பாறை இடுக்குகளிலும் குகைகளிலும் அண்டியபடி மழை பார்த்து நகர்ந்தனர்.

நள்ளிரவில் பெருமழை கொட்டித்தீர்க்கும் பொழுது அவர்கள் சுனைவால் முடுக்குக்கு வந்துவிட்டனர். சுனையோரமிருக்கும் பாறைமறைப்பில் பதுங்கினர். எதிரிலிருந்த சிறியகுளம், கொட்டும் மழையில் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. ‘இவ்விடம் வர ஏன் மயிலா விருப்பப்பட்டாள்?’ என்று நீலன் சிந்தித்துக்கொண்டே இருந்தான். மழை நின்றது. பாறைகளின் மேலிருந்து பாய்ந்து கடக்கும் நீரினோட்டம் மட்டுப்படத் தொடங்கியது.

சுனைக்கு முன் பெருகித்தேங்கியிருந்த நீர் முழுவதும் சிறிதுநேரத்தில் வழிந்தோடியது. தேங்கிய நீர் எப்பொழுது வடியும் என்று காத்திருந்த மயிலாவின் கண்கள் இங்குமங்குமாக அலைமோதிக்கொண்டிருந்தன. நீர் முழுமையும் வழிந்தோடியபின் அவள் காணவந்த காட்சியைக் கண்டாள். மனம் மகிழ்வில் மலர்ந்தது. பாறையில் சாய்ந்தபடி குகையைப் பார்த்து உட்கார்ந்திருந்த நீலனின் தோள்தொட்டுத் திருப்பினாள்.

‘எதைப் பார்க்கச் சொல்கிறாள்?’ எனக் குழம்பியபடியே அவன் திரும்பிய கணம், அப்படியே சிலிர்த்து அடங்கினான். அந்தச் சிறு நீர்த்தேக்கம் முழுவதும், சின்னஞ்சிறு சுடர்கள் எரிந்துகொண்டிருந்தன.

நீலனுக்கு, தான் காண்பதை நம்ப முடியவில்லை. “என்ன இது... விளக்கேற்றி வைத்ததைப்போல எங்கும் அசையும் சுடர்?”

அவன் வியந்துசொல்லி முடிக்கும்முன் மயிலா சொன்னாள், “இதுதான் தீப்புல்.”

நீலனின் கண்கள் சிற்றொளி கண்டு உறைந்து நின்றன. நீர்பட்டு அடங்கியவுடன் ஒளிரும் தன்மைகொண்டது தீப்புல். மின்மினிப்பூச்சியின் உடல்போல இப்புல்லின் உடல் இன்னும் சிறிதுநேரம் ஒளிர்ந்து அடங்கும். அதனைப்பற்றி நீலன் கேள்விப்பட்டிருக்கிறான். அறுபதாம் கோழியின் கழிவில்தான் இப்புல் முளைக்கிறது என்று சொல்வதும் அவன் அறிந்ததே. ஆனால், இன்றுதான் முதன்முறையாகப் பார்க்கிறான்.

மயக்கம் நீங்க நெடுநேரமானது. இருளுக்குள் நெளியும் ஒளியின் அழகைவிட்டுக் கண்கள் எப்படி விலகும்? விலகாத கண்களைத் தன்னை நோக்கித் திருப்பக் கன்னம்தொட்டு இழுத்தாள் மயிலா.

கருவிழி, தீப்புல்லில் நிலைகுத்தி நிற்க, முகம் மட்டும் திரும்பியது.  “இவ்விடம் தீப்புல் இருக்கிறது என்பதை நீ எப்படி அறிந்தாய்?”

மெல்லிய காற்றுக்குப் புற்கள் ஆட, தீயின் நாவுகள் எங்கும் அசைந்தாடின. பார்க்கக் கிடைக்காத காட்சியை இமை மூடாமல் பார்த்தபடியே சொன்னாள். “இவ்விடம் தீப்புல் இருக்கிறது என்பதை அங்கவை சொன்னாள்.”

வீரயுக நாயகன் வேள்பாரி - 44

வியப்பு அடுத்த கட்டத்தை அடைந்தது.

“அவள் எப்படி இவ்விடம் அறிந்தாள்?”

“அவளின் காதலன் சொன்னானாம்.”

வியப்பு உறைநிலை அடைந்ததைப் போலானது.

“இது எப்பொழுதிருந்து?” எனக் கேட்டான் நீலன்.

சற்றே சிரித்தபடி சொன்னாள், “நாம் தொடங்கி நீண்டகாலத்துக்குப் பின்தான் அவர்கள் தொடங்கியுள்ளனர்” சொல்லும் பொழுது முகம் முழுவதும் தீப்புல்லாய் ஒளிர்ந்தது.

கைநீட்டி அருகிருந்த தீப்புல் ஒன்றைப் பறித்தாள். அவனை தனது மடியிற்கிடத்தி புல்கொண்டு மார்பில் எழுதினாள்.

சற்றே கூசிச் சிலிர்த்தபடி அவன் கேட்டான், “என்ன செய்கிறாய்?”

“தீப்புல்கொண்டு உன் பெயர் எழுதுகிறேன்.”

அவன் அமைதியானான். தீயின் நாவுகள் அவன் உடலுக்குள் இறங்கிக்கொண்டிருந்தன. மழையில் குளிர்ந்து நடுங்கிய உடலுக்குள்ளிருந்து அனல் மேலேறிவரத் தொடங்கியது. தீயின் நாவுகள்கொண்டு எழுதியவளின் மீது, நாவின் நுனிகொண்டு தீ ஊற்றினான் நீலன். சுடர்விட்டு எரிந்தது தீ. சுனை நீரோடையின் ஈரம்பட்டு நனைந்த பாறைகளின் மீது, அவர்களது மேனியின் இளம்சூடு படர்ந்து மறைந்தது.

மயங்கி, கிறங்கி, உருகி, கரைந்த நீலன் அவளது மடியினில் தலைசாய்த்தான். அவள் அவனது தலையைக் கோதியபடி தீப்புல்லின் அசைவுகளைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். புல்லின் அகலத்துக்கும் உயரத்துக்கும் ஏற்றாற்போல் திரியின் சுடர் அசைந்தாடிக் கொண்டிருந்தது. இருளப்பிக்கிடக்கும் காட்டுக்குள் ஒளிரும் சுடர்களைப் பார்த்தபடியே அவள் மயங்கிக் கண்சொருகினாள்.

கடைசியாய் இருந்த தீப்புல் மீண்டும் நீரில் மூழ்கியது. மயங்கிய நிலையிலிருந்த மயிலா சற்றே கவனம்கொண்டு பார்த்தாள். அங்குமிங்குமாக மீண்டும் தீப்புல்கள் நீரில் மூழ்கின. சுனைநீரின் ஓசையில் வேறு ஓசை கேட்கவில்லை. கண்ணிமைத்து உற்றுப்பார்த்தாள். கால்கள் மிதித்தோடி அவ்விடத்தைக் கடந்து கொண்டிருந்தன. மிருகங்கள் ஓடுகின்றனவோ என நினைத்தாள். ஆனால், அவளின் கண்ணிற்பட்ட உருவங்கள் மனிதவடிவில் இருந்தன. மயக்கம் கலைந்து விழித்துப் பார்ப்பதற்குள் ஓடி மறைந்துவிட்டன.

வீரயுக நாயகன் வேள்பாரி - 44

மடியிற்கிடந்த நீலனிடம் சொன்னாள், “மனிதர்கள் ஓடுகிறார்கள்.”

“எங்கு?”

“காட்டுக்குள்.”

சற்றுத் தலைநிமிர்ந்து பார்த்தான். “இந்த இருளுக்குள் விலங்குகள் மட்டுமே மலைப்புதரில் நுழைந்து ஓட முடியும்?”  

‘விலங்குகளைத்தான் நாம் தவறாக நினைத்து விட்டோமோ?’ என்று மயிலாவுக்குத் தோன்றியது. தோன்றிய கணமே இல்லையென்ற முடிவுக்கு வந்தாள். அவளின் கண்கள் உருவங்களைத் தெளிவாகவே பார்த்திருந்தன.

பொழுதுவிடியும்வரை அவள் பதற்றங் கொண்டே இருந்தாள். நன்றாக விடிந்ததும் அவ்விடம் போய்ப் பார்த்தனர். நீர்நிலை கடந்து கிடந்தன மனிதர்களின் காலடித்தடங்கள்.

நீலனுக்குப் பொறி கலங்கியதுபோல இருந்தது. அவனால் நம்ப முடியவில்லை. ‘யார் இவர்கள், ஏன் நள்ளிரவில் இப்படி ஓடினர், எதை எடுத்துச் செல்கின்றனர்?’ வினாக்கள் உடலை வெறியேற்றின. “எத்தனை பேர் இருந்தார்கள்?”

“பத்துக்கும் மேல்” என்றாள் மயிலா.

“நீ வழிபார்த்து வா. நான் புறப்படுகிறேன்” எனச் சொல்லி ஈட்டியேந்தியபடி அவர்கள் சென்ற திசையில் காரமலையின் மேல்விளிம்பை நோக்கி ஓடத் தொடங்கினான் நீலன்.

எதிரிகள் காரமலையின் விளிம்பை நரிப்பாறையின் முகட்டோரமாகக் கடந்தனர். சற்றுத் தொலைவிலிருந்தபடி அவர்களைப் பார்த்த கூவல்குடி கிழவன் நீட்டியிழுத்து ஓரோசையைக் குறிப்பிட்ட பாறையை நோக்கி வீசினான். பாறையிடுக்கில் மோதிய ஓசை காரமலையெங்கும் எதிரொலித்தது. நரி ஊளையிடும் ஓசையது. புதிய ஆட்களால் எளிதில் ஐயங்கொள்ள முடியாது. ஆனால், பறம்பின் மக்களுக்குத் தெரியும்.

கிழவன் ஓசைகொடுத்த இடத்தை மலை யெங்கும் நிற்கும் கூவல்குடியினர் கணித்தனர். நரிப்பாறையைக் கடந்தோடும் எதிரிகளைப்  பின்தொடர்ந்து ஓசையெழுப்பியபடி அவர்கள் ஓட வேண்டும். எனவே, தாங்கள் நின்றிருந்த இடத்திலிருந்து அவர்களை நோக்கி குறுக்குவெட்டாக இறங்கிக்கொண்டிருந்தனர். தேக்கனும் அவ்வாறே இறங்கிக்கொண்டிருந்தான்.

காத்திருந்த பாரி ஓசை கேட்டதும் அவர்களின் ஓட்டத்தைக் கணக்கிட்டு, தானிருக்கும் இடத்தி லிருந்து ஊடறுத்து இறங்கினால் எவ்விடம் அவர்களின் மீது தாக்குதல் தொடுக்கலாம் என்பதைக் கணித்து சரசரவென கீழிறங்கத் தொடங்கினான்.

ஓசை கேட்டதும் கீழ்மலையில் இருந்த வேட்டூர் பழையனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. அவனால் நீலனைக் கண்டறிய முடியவில்லை. நீலனைப்போன்ற சிறந்த வீரனில்லாது இவ்வளவு வலிமை மிகுந்த எதிரியை எதிர்கொள்வது கடினம். ஆனாலும் கூவல்குடியினரின் ஓசை கேட்டதும் எதிரிகள் இறங்கும் திசை நோக்கி வீரர்களோடு ஆயத்தமானான் பழையன்.

ஓசை கேட்ட சிறிதுநேரத்திலே காரமலையின் முகட்டை அடைந்தான் நீலன். இது நரியின் ஊளையல்ல; கூவல்குடியினரின் குரல் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். என்ன நடக்கிறது இவ்விடம் என்ற குழப்பம் அவனைத் தாக்கியது. எதிரிகள் எதையோ செய்துவிட்டுத் தப்பி ஓடுகின்றனர். இந்நேரத்தில் அவர்களை எதிர்கொண்டு வீழ்த்த வேட்டுவன் பாறையில் இல்லாமல், இப்படிப் பின்னால் ஓட வேண்டியதாகி விட்டதே என்று வேதனை உருவானது. வேதனை, கட்டுக்கடங்கா வேகங் கொள்ளச்செய்தது.

அனைத்துத் திசைகளிலிருந்தும் எதிரிகளை நோக்கிப் பறம்புமக்கள் இறங்கிக் கொண்டிருக்கும் பொழுது காலம்பனின் முகம் இதுவரை இல்லாத பெருமகிழ்வைக்கொண்டது. காரமலையின் மேல்விளிம்பைக் கடந்ததும் அவன் முடிவு செய்துவிட்டான், ‘பச்சைமலைத் தொடரின் இரண்டு மலைகளைக் கடந்து கடைசி மலையின் விளிம்பையும் கடந்துவிட்டோம். இனி இந்தவொரு சரிவு மட்டுமே. இச்சரிவில் பெரும்படையே எதிர்வந்து நின்றாலும் அடித்துத்தூக்கும் வல்லமை உண்டு. இதுவரை இல்லாத அளவு இருபதுக்கும் மேற்பட்ட வர்களோடு இப்பொழுது ஓடுகிறோம். இப்பெரும் எண்ணிக்கையை எதிர்த்து நிற்க எவராலும் முடியாது. கண்ணுக்கு எதிரில் பறம்பின் எல்லை தெரியத் தொடங்கிவிட்டது. மலையடிவார சமதளக்காடுகள் கரம்விரித்து அழைக்கின்றன.’

விடாமல் ஓடிவந்த அயர்வும் சோர்வும் கணநேரத்தில் மறைந்தன. கால்கள் மேலும் வேகங்கொண்டன. சரிவுப்பாறையில் பெருங்கற்கள் உருள, கால்கள் ககனத்தில் பறந்துகொண்டிருந்தன. காலம்பனின் மனம் இலக்கை அடையப்போகும் நேரத்தைத் துல்லியமாகக் கணித்தது.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...