
எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி
‘‘பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு பேடி. பேடியாக வாழ்வதைவிடச் சேலை கட்டிய கருணாநிதியாய் வாழ்வது எவ்வளவோ மேல். நம்மைவிட்டுப் போனவர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். தலையில் எண்ணெய் தடவிச் சீவி அழகாக வைக்கிறோம். சீவும்போது மூன்று நான்கு முடிகள் கீழே விழுந்துவிடும். அந்த முடிகள், மீண்டும் தலைக்கு வர முடியாது. கீழே விழுந்த அந்த முடிகளுக்கு மதிப்பில்லை. அவை உதிர்ந்த முடிகள்...’’ - 1988 ஆகஸ்ட் 17-ம் தேதி தஞ்சாவூரில் ஜெயலலிதா உதிர்த்த இந்த ‘உதிர்ந்த ரோமங்கள்’ உரை, அரசியலில் மிகவும் பிரபலம்!
அரசியல் லீவுக்குப் பிறகு தஞ்சாவூர் போனார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, அருகில் இருந்த ராமநாதன் ஹாலுக்கு நடந்து செல்ல முயன்றார். அவரைத் தடுத்து காரில் ஏற்றியது பூனைப்படை. இதே ஹாலில்தான் முந்தைய தினம் ‘நால்வர் அணி’யின் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. அதற்குப் பதிலடியாக ஜெயலலிதா கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில்தான், நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், அரங்கநாயகம், திருநாவுக்கரசர் ஆகியோர் அடங்கிய ‘நால்வர் அணி’யை ‘உதிர்ந்த ரோமங்கள்’ என விமர்சித்தார் ஜெயலலிதா. சசிகலா குடும்பத்தின் சொந்த ஊரில், இப்படி ஜெயலலிதா முழங்க யார் காரணம் என்பதை, ‘நால்வர் அணி’யினர் உணர்ந்திருந்தனர். அந்தச் செயல் வீரர்கள் கூட்டத்தில், ‘‘யார் பேச்சையும் கேட்காதீர்கள். அந்தக் கும்பலை மதிக்காதீர்கள். என்னைக் கைப்பொம்மையாக ஆட்டி வைக்கலாம் என நினைத்தார்கள். நான் வாளை சுழற்றினால் எதிரிப்படை தாங்காது’’ என ஜெயலலிதா சீறினார். ஆனால், அந்த வார்த்தைகள் சசிகலா குடும்பத்துக்குத்தான் சரியாகப் பொருந்தியிருந்தது. அந்தக் கூட்டத்தை மட்டுமல்ல கைப்பொம்மையாக ஜெயலலிதாவையும் பின்னால் இருந்து இயக்கிக் கொண்டிருந்தார் நடராசன்.

ஜெயலலிதா தற்காலிக அரசியல் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் 1988 ஆகஸ்ட் 2-ம் தேதி, நெடுஞ்செழியன் உள்பட நால்வரைக் கட்சியிலிருந்து நீக்கினார்கள். ‘‘கட்சியின் நிதியைச் சூறையாடத்தான் எங்களை நீக்கியிருக்கிறார்கள். அதை அனுமதிக்க மாட்டோம்’’ என்றார்கள் ‘நால்வர் அணி’யினர். அதோடு ஆகஸ்ட் 4-ம் தேதி அன்று, பொதுச் செயலாளர் பதவியில் இருந்து ஜெயலலிதாவை நீக்கியது ‘நால்வர் அணி’. அடுத்த நாள் ‘நால்வர் அணி’யின் அரசியல் விவகாரக் குழு கூடி வெளியிட்ட அறிவிப்பில், ‘மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள், வசூலித்து வைத்திருக்கும் நன்கொடைகளை ஜெயலலிதாவிடம் வழங்க வேண்டாம். பொதுக்குழு கூடி தக்க முடிவு எடுக்கும் வரையில் தங்கள் வசமே வைத்திருங்கள்’ எனக் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
‘வசூல் வேட்டை’ நடத்தலாம் என நினைத்த சசிகலா குடும்பத்துக்கு ‘செக்’ வைக்கப்பட்ட நிலையில், இரண்டு வார ஓய்வுக்குப் பிறகு ஆகஸ்ட் 6-ம் தேதி ஜெயலலிதா அரசியல் ரீ என்ட்ரி கொடுத்தார். ராயப்பேட்டை அ.தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்ற, சட்டமன்றத் தேர்தல் நிதி வசூல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அதன்பிறகு அ.தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் பி.குழந்தைவேலு நிருபர்களிடம் பேசும்போது, ‘‘கட்சிப் பணத்தை ஜெயலலிதா தனது சொந்த செலவுக்கோ அல்லது தன்னிடம் பணியாற்றுபவர்களுக்கோ பயன்படுத்தியது கிடையாது’’ என விளக்கம் கொடுத்தார். ஆனால், ‘‘மரங்கொத்திப் பறவையைப் போல, ஜெயலலிதா பணம் கொத்தும் பாவை; பதவி கொத்திப் பாவை; பாடுபடுவோரைக் கொத்திடும் பாவை; பண்பாளர்களைக் கொத்திடும் பாவை’’ என்றார் நெடுஞ்செழியன்.
அதன்பிறகு எதிரும் புதிருமாக வார்த்தைப் பிரயோகங்கள் நாற்றமடிக்க ஆரம்பித்தன.
‘‘ஜெயலலிதா என்னும் பழந்தின்னி வெளவாலுக்கு எம்.ஜி.ஆர், அரவணைப்பும் அனுமதியும் கொடுத்ததால், அது, அ.தி.மு.க தோட்டத்தில் நுழைந்து, தன் விருப்பம் போல கனிகளைக் கொத்தித் தின்று கொழுத்தது. இனி அதைக் குடியிருக்க அனுமதிப்பது தவறு. அந்தப் பழந்தின்னி வெளவாலைத் தோட்டத்தை விட்டு அடியோடு அகற்றிவிட முடிவு செய்திருக்கிறோம்’’ - நெடுஞ்செழியன்.
‘‘நாலாந்தரமாகப் பேசிவரும் ஜெயலலிதா, முந்தானையை இழுத்துப் போர்த்தி வருகிற நிலை மாறி, முக்காடு போடவேண்டிய சூழ்நிலை விரைவில் வரும்’’ - திருநாவுக்கரசர்.
‘‘எம்.ஜி.ஆருக்குப் பிறகு அ.தி.மு.க-வை ஜெயலலிதா கட்டிக் காப்பாற்றுவார் என நினைத்தோம். குதிரைக் குட்டிதான் என நம்பி வாங்கினோம். கழுதைக் குட்டி என்று தெரிந்து எஸ்.டி.சோமசுந்தரத்திடம் கொடுத்துவிட்டு ஒதுங்கிவிட்டோம்’’ - பண்ருட்டி ராமச்சந்திரன்.
‘‘புரட்சித்தலைவருக்குச் செய்து கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காகவே நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன்’’ - ஜெயலலிதா.
‘நால்வர் அணி’ உருவாவதற்கு முன்பு சமரசப் பேச்சுவார்த்தைகளில் அதிகம் பங்கு எடுத்தவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அங்கும் இங்கும் ஊசலாடியவர், ஒரு கட்டத்தில் ஜெயலலிதா அணியிலேயே இருந்துவிட்டார். ஆனாலும், அவருக்கான மரியாதைகள் கிடைக்கவில்லை. ஜெயலலிதாவோடு ஏற்பட்ட ஒரு வாக்குவாதத்தில் கோபம் அடைந்து, ஊருக்குத் திரும்பினார். அதன்பின் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களுடன் தனி ஆவர்த்தனம் நடத்தத் திட்டமிட்டார். இது சசிகலா குடும்பத்தினருக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. ஏற்கெனவே தங்கள் மீது குற்றச்சாட்டு சொல்லித்தான் ‘நால்வர் அணி’ பிரிந்தது. இப்போது கே.கே.எஸ்.எஸ்.ஆருடன் சேர்ந்து இன்னும் சிலரும் பிரிந்து போனால், ஜெயலலிதாவின் கோபம் தங்கள் பக்கம்தான் திரும்பும் என நினைத்தார்கள். கே.கே.எஸ்.எஸ்.ஆரைச் சமாதானம் செய்யும் நடவடிக்கையில் நடராசன் இறங்கினார். ஒரு வழியாக சமாதானமும் ஆனது. இந்தநிலையில் செப்டம்பர் மாதம் கே.கே.எஸ்.எஸ்.ஆர் மீது ஆசிட் வீசப்பட்டது. மதுரையில் அனுமதிக்கப்பட்ட அவரை ஜெயலலிதா போய்ப் பார்த்தார்.
எப்படியாவது ஜெயலலிதாவை ஆட்சியில் அமர வைத்தால்தான் தங்களுக்கு அறுவடை என நினைத்த சசிகலா குடும்பம், அதற்கான வேலைகளை முன்னெடுத்தது. அதில் ஒன்றுதான் ஜெயலலிதாவின் இலவச அறிவிப்புகள். இலவச அறிவிப்புகளுக்கான முன்னோடியே ஜெயலலிதாதான். இந்த ஐடியாவைக் கொடுத்தவர் நடராசன். ஏழைகள் அனைவருக்கும் இலவச வீடுகள், மாணவர்களுக்கு இலவசப் பஸ் பாஸ், விவசாயிகள் அனைவருக்கும் பம்பு செட், இலவச மின்சாரம், இலவச உரம், பூச்சிக்கொல்லி மருந்து, நிலவரி ரத்து, ஒரு படி அரிசி ஒன்றேமுக்கால் ரூபாய், வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு மாதம் 200 ரூபாய்’ என அவரின் இலவச அறிவிப்புகள் வரிசை கட்டி வந்தன. நெடுஞ்செழியன், ‘‘இலவச திட்டங்களை நாசிக்கில் அச்சடித்த நோட்டாக இருந்தால் கொடுக்க முடியாது. வேண்டுமானால் அம்மையார் சிவகாசியில் அச்சடித்து கொடுக்கலாம். வெள்ளிக் கட்டிலில் படுத்துக் கொண்டு தங்கக் கனவுகள் காண்கிறார்’’ என்றார்.
(தொடரும்)