
எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி
அரசு வேலைக்கு லீவு போட்டு விட்டு, போயஸ் கார்டனில் தங்கி ஜெயலலிதாவின் ‘அரசியல் ஆலோசகர்’ வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தார் நடராசன். ‘அரசு ஊழியர், கட்சி வேலைகளை எப்படிப் பார்க்கலாம்?’ என்கிற விமர்சனங்கள் கிளம்பின. ‘‘எனக்கும் அரசியலுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. ஜெயலலிதாவுக்குத் தோழியாக என் மனைவி சசிகலா இருக்கிறார். அவருக்கு நான் கணவன். மனைவி போகும் இடமெல்லாம் நானும் போகிறேன்’’ எனச் சொல்லி காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தார். ‘நடராசனும் சசிகலாவும் என் குடும்ப நண்பர்கள்’ என ஜெயலலிதா அறிக்கைவிட்ட நிலையில், 1988-ம் ஆண்டு இறுதியில் அரசு வேலையை ராஜினாமா செய்தார் நடராசன். ஆனால், அதற்கு முன்பே நடராசன் மீது துறைரீதியான விசாரணையை முடுக்கி விட்டிருந்தது தமிழக அரசின் செய்தித் துறை.
அரசியல் ஈடுபாடு, துறைரீதியான பிரச்னைகள் உள்ளிட்ட எல்லாவற்றையும் சேர்த்துதான் நடராசன் மீது விசாரணை வளையம் சுற்றப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான், தனது ராஜினாமா கடிதத்தை ஸ்பீடு போஸ்டில் அரசுக்கு அனுப்பினார். ‘நடராசன் ராஜினாமா ஏற்கப்படுமா... அல்லது டிஸ்மிஸ் செய்யப்படுவாரா?’ என விவாதம் ஓடிக் கொண்டிருந்தது. கார்டனில் இருந்தபடியே நடராசன் நடத்திய லீலைகள் அனைத்தும் விசாரணை டீம் முன்பு வைக்கப்பட்டன. ஊட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதாவுடன் நடராசன் தரிசனம் தந்தது, மதுரை நட்சத்திர ஹோட்டலில் ஜெயலலிதா தங்கியதற்கான பில்லை செட்டில் செய்தது, ட்ரைடென்ட் ஹோட்டலில் தங்கியபடியே அரசியல் சித்து வேலைகளைக் காட்டியது என அனைத்துக்கும் ஆதாரங்கள் அள்ளிப் போடப்பட்டன.

கவர்னர் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த தமிழகத்தில், 1989 ஜனவரியில் சட்டசபைக்குத் தேர்தல் நடப்பது உறுதியாகியிருந்தது. ஆயத்த வேலைகள், வேட்பாளர்கள் தேர்வு, பிரசாரம் எனத் தேர்தல் பணிகளை முழுவேகத்தோடு செய்ய வேண்டியிருந்ததும், நடராசனின் ராஜினாமாவுக்கு முக்கியக் காரணம். ராஜினாமா கொடுத்த பிறகு தீவிர அரசியலில் கால் பதித்தார் நடராசன். ஜெயலலிதாவோடு சேர்ந்து தேர்தல் பணிகளைத் தீவிரமாகச் செய்தார். சென்னை சாலிகிராமத்தில் ‘நமது எம்.ஜி.ஆர்’ பத்திரிகைக்குப் புதிதாக அலுவலகம் அமைத்தார்கள். புதிய அச்சு இயந்திரத்தின் மூலம் பத்திரிகையையும் தேர்தல் போஸ்டர்களையும் அச்சடித்து, தேர்தலை எதிர்கொள்ளத் திட்டமிட்டார்கள். கட்சியின் நிதி,சென்ட்ரல் வங்கி கிளைக்கு மாற்றப்பட்டிருந்தது. கடனுக்காக அந்த வங்கியின் மண்டல மேலாளருடன் ஜெயலலிதா பேச்சுவார்த்தை நடத்தியபோது நடராசனும் உடன் இருந்தார்.
தேர்தல் வேலைகள் சூடு பிடித்தன. கட்சிக் கொடியேற்றும் நிகழ்ச்சிகளில் மாவட்டந்தோறும் ஜெயலலிதா ரவுண்ட் அடித்துக் கொண்டிருந்தார். ‘காங்கிரஸ் கூட்டணிக்கு இனி வாய்ப்பே இல்லை’ எனத் தெரிந்ததும், கட்சியைப் பலப்படுத்த ஜெயலலிதாவும் நடராசனும் முயன்றார்கள். ‘நால்வர் அணி’யால் ஜெயலலிதா அணி பலவீனமாகி இருந்தது. அதனால் பிரிந்தவர்களுக்கு வலை வீசினார் நடராசன். அதில் முதலில் வீழ்ந்தவர் திருநாவுக்கரசர். முதன்முறையாக நடராசனைப் பற்றி வெளிப்படையாக விமர்சித்துப் பேசியவர் திருநாவுக்கரசர்தான். ஆனாலும், அவரை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவந்துவிட முடிவு செய்தார் நடராசன். எப்படி கே.கே.எஸ்.எஸ்.ஆரை நேரில் போய் சந்தித்து சமாதானம் செய்தாரோ, அதே பாணி கடைபிடிக்கப்பட்டது.
அரசியலில் அந்தர் பல்டி என்பதே அடிப்படைத் தகுதி. தலைமையின் மீது கடுமையான விமர்சனங்களை வைக்கும் முக்கிய நிர்வாகிகள், சில ஆண்டுகள் கழித்து அதே தலைமையிடம் சரணாகதி ஆவது அரசியலில் ‘சாதாரணமப்பா’தான். ஆனால், ஜெயலலிதாவையும் நடராசனையும் வார்த்தைகளில் வறுத்தெடுத்ததோடு, கட்சி நிதியில் முறைகேடு வரை வசை பாடிய திருநாவுக்கரசரின் வாய், ஒன்றரை மாதத்திலேயே ‘நாற வாய்’ ஆனதுதான் அந்தர் பல்டி அரசியலின் முதல் அதிசயம். ‘நால்வர் அணி’யில் இடம்பெற்றிருந்த திருநாவுக்கரசர், திடீரென ஜானகி அணியினரோடு பேச ஆரம்பித்தார். அதோடு போயஸ் கார்டனின் சிக்னலுக்கும் சமிக்ஞைகள் கொடுத்துக் கொண்டிருந்தார். ‘நால்வர் அணி’யில் இருந்துகொண்டே, ‘‘விரைவில் ஜானகி அணியுடன் இணைப்பு’’ என அறிவித்தார் திருநாவுக்கரசர். உடனே ‘நால்வர் அணி’யில் இருந்து மறுப்பு கிளம்பியது. அதன்பிறகு ‘ராமாவரம் தோட்டம் சலோ...’ எனக் கிளம்பினார். பல முறை ஜானகியைச் சந்தித்தார். இப்படி ஜானகியை அவர் சந்தித்த விஷயத்தையே, ‘நால்வர் அணி’யில் இருக்கும் மற்றவர்கள், பத்திரிகைகளைப் பார்த்துதான் தெரிந்துகொள்ள முடிந்தது. இப்படியான சூழலில்தான் நடராசன் மூலம் தூது வந்தது. ‘‘தூக்குக் கயிற்றில் தொங்குவேனே தவிர ஜெயலலிதாவிடம் சரணாகதி அடைய மாட்டேன். செத்தாலும் அங்கே போக மாட்டேன்’’ என வீராவேசம் பேசிய திருநாவுக்கரசர் என்ற மானஸ்தன், ஒரு கட்டத்தில் போயஸ் கார்டனில் போய் விழுந்தார்.
திருநாவுக்கரசருடன் ஜெயலலிதாவை போனில் பேச வைத்தார் நடராசன். ‘‘திருநாவுக்கரசர் மட்டும் வந்தால் போதாது. கூடவே, நால்வர் அணியை அழைத்து வர வேண்டும்’’ என கார்டன் கட்டளை போட்டது. உடனே, பண்ருட்டி ராமச்சந்திரனிடம் பேசினார் திருநாவுக்கரசர். ‘‘மீண்டும் ஜெயலலிதா அணியில் இணைந்துவிடுவோம்’’ என வேண்டுகோள் வைத்தார். இப்படி 1988 நவம்பரில் மூன்று முறை பண்ருட்டியாரைப் பார்த்தார். திருநாவுக்கரசரை இழுத்து வரும் வேலையை மன்னார்குடியைச் சேர்ந்த ஜெகதீசன், ராமதாஸ் ஆகியோரிடம் ஒப்படைத்திருந்தார் நடராசன். அவர்கள்தான் பேச்சுவார்த்தையின் மீடியேட்டராக இருந்தார்கள்.
ஒரு வழியாக நவம்பர் 15-ம் தேதி போயஸ் கார்டன் வந்து ஜெயலலிதாவைச் சந்தித்தார் திருநாவுக்கரசர். அந்தச் சந்திப்பு முடிந்ததும் மீண்டும் பண்ருட்டி ராமச்சந்திரனைப் போய்ப் பார்த்தார். ஆனால், பண்ருட்டியார் பிடி கொடுக்கவில்லை. தான் மட்டும் தனியாகப் போய்ச் சேருவது சிறப்பாக இருக்காது என்பதற்காக நிர்வாகிகளை அழைத்துச் செல்ல எடுத்த முயற்சிகள் தோற்றுப் போயின. நவம்பர் 16-ம் தேதி காலை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் எம்.ஜி.ஆருக்குச் சிறுநீரகம் தானம் அளித்த லீலாவதியுடன் போய், ஜெயலலிதா முன்னிலையில் மீண்டும் கட்சியில் இணைந்தார். ஐந்தே நிமிடங்களில் கட்சியில் சேரும் வைபவம் நடந்து முடிந்தது. மகிழ்ச்சியோடு கிளம்பிப் போனார் திருநாவுக்கரசர்.
கொஞ்ச நேரத்திலேயே பத்திரிகை அலுவலக ஃபேக்ஸ் மிஷின்களில் வந்து விழுந்தது ஜெயலலிதாவின் அறிக்கை. ‘என்னைத் தாக்கிப் பேசியதற்கெல்லாம் திருநாவுக்கரசர், நேரிலும் எழுத்து மூலமும் மன்னிப்புக் கேட்டுவிட்டார்’ எனச் சாதுரியம் பேசியது அறிக்கை. அந்த எழுத்துக்குப் பின்னால் நடராசனின் நடை இருந்தது.
படம்: பா.காளிமுத்து
(தொடரும்)