மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!
பிரீமியம் ஸ்டோரி
News
அனுபவங்கள் பேசுகின்றன!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ. 200ஓவியங்கள்: ராமமூர்த்தி

சிறிய ஸ்டிக்கர்... பெரிய நிம்மதி!

அனுபவங்கள் பேசுகின்றன!

சமீபத்தில் என் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். வீட்டை மிகவும் நேர்த்தியாகப் பராமரித்து வைத்திருந்தார்கள். தேவையில்லாத பொருள்கள் எங்குமே இல்லை. அதோடு, அவர்களின் டூவீலர், ஏ.சி, வாட்டர் ப்யூரிஃபையர், காஸ் ஸ்டவ் என அனைத்திலுமே `அடுத்த சர்வீஸ் எப்போது?’ என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டு சிறிய ஸ்டிக்கர் வடிவில் ஒட்டியிருந்தார்கள். குறித்த காலத்தில் பராமரிப்பு செய்வதால் தேவையற்ற பழுதுபார்க்கும் செலவு மிச்சம் என்று கூறினார்கள். இந்த யோசனை எனக்கும் நல்லதாகப்பட்டது. இதை அனைவரும் பின்பற்றலாமே தோழிகளே!

- பொன்னழகு தேனப்பன், மதுரை

சந்தோஷத்தில் ஆழ்த்திய சமயோஜிதம்!

அனுபவங்கள் பேசுகின்றன!

திருமண வீட்டில் மணமகன், மணப்பெண்ணுக்கு மெட்டி அணிவிக்கும் வைபவம். மணமகளின் கால் விரலில், மெட்டி நுழைய மறுத்தது. மணமகன், சற்று அழுத்தமாக நுழைக்க, மணப்பெண்ணின் மகிழ்ச்சியான முகம் சுருங்கியது. சுற்றியுள்ளவர்கள் பதற்றத்துடன் நிற்க, மணப்பெண்ணின் சகோதரி, தன் ஹேண்ட் பேக்கிலிருந்து ஃபேர்னஸ் க்ரீமை எடுத்து, அக்காவின் விரல்களில் தடவி, ``அத்தான்... இப்பப் போடுங்க’’ என்றாள். மெட்டி வழுக்கிக்கொண்டு சென்று `ஜம்’மென்று பொருந்திவிட்டது. மணமக்கள் வீட்டார், மணப்பெண் சகோதரியின் சமயோஜிதத்தைப் பாராட்டினர். மணப்பெண்ணின் முகத்தில் மீண்டும் சந்தோஷம். சிறிய விஷயம்தான்... பெரிய பிரச்னையை எளிதாகச் சமாளித்துவிட்டது.

- என்.கோமதி, திருநெல்வேலி

வேண்டாமே... வீண் விமர்சனம்!

எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள ஓரிரு வீடுகளில் ஆண்கள் காலையில் எழுந்து வாக்கிங் கிளம்பும் முன்பு வாசலைப் பெருக்கி, கோலமிட ஏதுவாக தரையில் தண்ணீர் தெளித்துவிடுவார்கள். பிறகு, பெண்கள் வந்து கோலம் போடுவார்கள். இதைக் கவனித்த அடுத்த தெரு பெண் ஒருவர் தேவையற்ற விமர்சனம் செய்தார். அதற்கு, `வேலைக்குப் போகும் எங்கள் மனைவியருக்கு உதவுகிறோம். எங்கள் வீட்டு வேலையை யார் செய்தால் என்ன?’ என்று பக்கத்து வீட்டுக்காரர் பொட்டில் அடித்தாற்போல சொல்ல, அந்தப் பெண் பதில் ஏதும் கூறாது சென்றுவிட்டார்.

அனுபவங்கள் பேசுகின்றன!

‘உலகில் மாறாதது மாற்றம் மட்டுமே’ என்பதை பெண்களாகிய நாம் முதலில் உணர்வது அவசியம். இப்படி வேலை செய்பவர்களைப் பாராட்டுவோம். அடுத்தவர்களை விமர்சனம் செய்வதன்மூலம் குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்துவதைக் கவனமாகத் தவிர்ப்போம்.

 - சாந்தி ரங்கநாதன், திருச்சி

கோலப் பாட்டி நடத்தும் பாடம்!

எனக்கு வயது 80. கணவரின் பென்ஷன் பணத்தில் வாழ்ந்து வருகிறேன். எனக்குத்  தேவையானதை  நானே  போன் செய்து வாங்கி சமைத்து, பாத்திரம் தேய்த்து, துணி துவைத்து என்னை நானே பார்த்துக்கொள்வதில் எனக்குப் பெருமை உண்டு.

அனுபவங்கள் பேசுகின்றன!

எங்கள்  ஏரியாவில்  வயதாகி, முதுகில் கூன் விழுந்து நிமிர்ந்து  நடக்கமுடியாத  ஓர் அம்மாவைப் பார்த்து வருகிறேன். காலை 4 மணியில் இருந்து 9 மணி வரை பத்து பன்னிரண்டு வீடுகளில் வாசல் பெருக்கி, தண்ணீர் தெளித்துக் கோலம் போட்டு கிடைத்த பணத்தில் தேவையானதை வாங்கிச் சாப்பிடுகிறார்.  இந்த நிலையிலும் நன்கு குளித்துச் சுத்தமாக வலம் வருகிறார். இரவில் எங்கோ ஓர் இடத்தில் ஒதுங்கித் தூங்கி, காலையில்  சிரித்த  முகத்தோடு நடமாடுகிறார். யார் உதவியும் எதிர்பாராமல் வாழ்க்கை நடத்தும் இந்த அம்மாவைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குப் புதுத்தெம்பு வந்துவிடுகிறது. பென்ஷன் பணம் கிடைக்கப்பெறும் நான், சுயமாக வாழ்க்கை நடத்துவதை ஏதோ பெரிய சாதனையாக எண்ணி வந்ததற்காக இப்போது என்னை நானே கிண்டலடித்துக்கொள்கிறேன்.

வாழ்க்கையில் சிறிய துயரம் ஏற்பட்டாலும் கைபிசைந்து நிற்பவர்கள், இந்த அம்மா போன்றவர்களைப் பார்த்துப் பாடம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்!

- கங்கா ராமநாதன், நீலாங்கரை