மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 45

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

நேற்று அதிகாலை நாய்வாய்ஊற்றின் இடப்புறப் பாறையின் மீதிருந்துதான் பாரி தனது ஆயுதத்தை உருவாக்கத் தொடங்கினான். கொடிமூக்கனைப் பிடித்தபடி அலவனும் கீதானியும் நின்றிருந்தனர். மற்ற இருவீரர்களும் உடைமர முட்களை ஒடித்துமுடித்து அடுத்து என்ன செய்யப்போகிறான் பாரி என்று எதிர்பார்த்து நின்றிருந்தனர்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 45

“கொடிமூக்கனின் வாயைத்திற” என்றான் பாரி.

அலவன் அதன் கழுத்துப்பகுதியில் இருக்கும் தாடையை அழுத்தப்போகும்பொழுது பாரி சொன்னான், “அது சிலநேரம் நஞ்சை பீச்சியடிக்கக் கூடியது, அப்பக்கம் திருப்பிக் கொள்.”

அலவன் இடப்புறம் திருப்பியபடி அடிக்கழுத்தை அமுக்கிப் பெருவிரலை சற்று மேலேற்றினான். மேலுங்கீழுமாகத் தாடை அகன்றதும் கண்ணிமைக்கும் நேரத்தில் நஞ்சைப் பீய்ச்சியடித்தது. நஞ்சின் சீற்றம் கண்டு அதிர்ந்தனர்.

பெரிதுமில்லாமல், சிறியதுமில்லாமல் நடுத்தரமான நீளத்தோடு இருந்த முட்களைக் கை நிறைய அள்ளி கொடிமூக்கனின் வாய்க்குள் போட கையை அருகில் கொண்டுவந்தான் பாரி. அவனது உள்ளங்கையிலிருந்த ரேகை இடுக்கின் வழியே முட்கள் வரிசையாக இறங்கிக் கொடிமூக்கனின் நாக்கோடு இணைந்து படிந்தன. அகன்ற அதன் வாய்க்குள் சுமார் முப்பது முட்கள் அடங்கின. முட்கள் எதுவும் மேல்நோக்கி இல்லாமல் சமநிலையில் கிடப்பதைப்போலத்  தாடையைச் சற்றே அசைத்துச் சமப்படுத்தினான் அலவன். 

“இப்பொழுது வாயை மூடு” என்றான் பாரி.

கழுத்துப்பகுதியை அழுத்திக்கொண்டிருந்த அவனது விரல்கள் இப்பொழுது மேல்வாயையும் கீழ்வாயையும் சேர்த்து அமுக்கி வாயை மூடின. அலவனின் கையெலும்பை நொறுக்குவதைப்போல் கொடிமூக்கன் இறுக்கிச் சுருண்டுகொண்டிருந்தது. பாதி உடலைக் கீதானிப் பிடித்திருந்தான். ஆனாலும், முறுக்கித் திருகும் அதன் ஆற்றலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

“எருக்குநாரைக்கொண்டு வாயைக்கட்டு” என்றான் பாரி.

வீரர்கள் இங்குமங்குமாக அலைந்து நாரெடுத்து வந்தனர். கொடிமூக்கனின் வாயை நார்கொண்டு இறுகச் சுற்றினர்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 45

“குறைந்தது மூன்று சுற்றாவது சுற்று. முடிச்சு, எக்காரணம்கொண்டும் கீழ்த்தாடையில் இருக்கக் கூடாது. மேல்தாடையின் மேலே இருக்க வேண்டும்” என்றான் பாரி. அவனது ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் இருக்கும் பொருள் அவர்களை வியப்பில் ஆழ்த்தியது. 

அதன் வால் சுழற்றிச் சுழற்றி அடித்துக்கொண்டிருந்தது. உடலின் கீழ்ப்பகுதி வரை அழுத்திப்பிடித்திருந்த கீதானி வால்பகுதியையும் சேர்த்து அமுக்கிப்பிடிக்க முயலும்பொழுது பாரி சொன்னான், “வாலினைச் சுழற்றி அடிக்கட்டும். உன்மேல் படாமல் மட்டும் பார்த்துக்கொள்” என்றான்.
“சரி” யென்று சொல்லி அதற்குத் தகுந்தாற்போல் அலவனும் கீதானியும் கொடிமூக்கனைப் பிடித்துக்கொண்டனர். கொடிமூக்கன் தாடையைத் திறக்க முயலும்போதெல்லாம் அதன் நஞ்சுப்பை விரிந்து, வாய் நிறைய நஞ்சை உமிழ்ந்துகொண்டே இருந்தது. வாய்க்குள் இருக்கும் முட்கள் நஞ்சில் ஊறிக்கொண்டே இருந்தன.

எப்பொழுதெல்லாம் வாலைச் சுழற்றுகிறதோ அப்பொழுதெல்லாம் நஞ்சுப்பை திறந்தது. அதனால்தான் வாலைச் சுழற்றி அடிக்கட்டும் என்றான் பாரி. 

வாயைக்கட்டியவுடன் மலையேறத் தொடங்கினர். விரைந்து ஓட வேண்டிய தேவையில்லை. ஆனாலும், உள்ளத்தின் வெறி வேகத்தைக் கூட்டியபடியே இருந்தது. காரமலையின் நான்கில் ஒரு பங்கைக் கடந்தனர். முதலில் கையெலும்பு நொறுங்குவதைப்போல முறுக்கிய கொடிமூக்கன் சற்றே அமைதியடையத் தொடங்கியது. அதனைக் கவனித்த பாரி, “வீரனிடம் பாம்பினைக் கொடு” என்றான். “சரி”யென்று சொல்லி அலவன் அதனை வீரனின் கைக்கு மாறினான்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 45



வாங்கிய கணத்தில் மீண்டும் வெகு ஆற்றலோடு உடல்முறுக்கி சீறித் தலைநெளித்து எழப்பார்த்தது. வீரன் சற்றே பதற்றமடைந்தான். அவனது கை முழுவதும் சுற்றித் திருகியது. வால் பகுதியின் துடிப்பு மிக அதிகமானது. புதிய உடற்சூட்டுக்கு மாறும்பொழுது அது மீண்டும் எழுச்சிகொண்டு தாக்கத் தலைப்படும். வால்சுழற்றி விடாது அடிக்க, நஞ்சுப்பை இடைவிடாது நஞ்சை உமிழும். அதனால்தான், குறிப்பிட்ட இடைவெளி வந்ததும் பாரி அலவனிடமிருந்து இன்னொருவனுக்குக் கொடிமூக்கனை மாற்றினான்.

இப்பொழுது இன்னும் வேகத்தோடு அவர்கள் காரமலையின் மீது ஏறிக்கொண்டிருந்தனர். ‘நேற்று இரவு முழுவதும் பெருமழை கொட்டித்தீர்த்தது. எனவே, எதிரிகளால் குத்துக்கல் பள்ளத்தாக்கில் ஓரடிகூட எடுத்துவைத்திருக்க முடியாது. சரியான இடம் பார்த்து பதுங்கினால் மட்டுமே அவர்கள் உயிர்தப்பிக்க முடியும். இல்லையென்றால், நீரின் வேகம் அவர்களை இழுத்துவந்து பெரும்பாறையில் அடித்துச் சிதறவைக்கும். அவர்கள் மழை நின்ற அதிகாலையில்தான் இறங்கத் தொடங்குவார்கள்.

பகல் முழுவதும் இறங்கினால்தான் பொழுதடையும் நேரம் சமதளத்தை அடைய முடியும். அதன்பின் முழுவேகத்தோடு ஓடுவார்கள். பகலும் இரவுமாக ஓடினாலும் காரமலையின் உச்சியை வந்தடைய மறுநாள் பொழுதுவிடியும்’ என்று கணித்தபடியே பாரி நடந்துகொண்டிருந்தான்.
அவனது கண்ணில் இச்சி மரமொன்றுபட்டது. “அதனது செதில்களில் வழிந்திருக்கும் பிசினை எடுத்துக்கொள்” என்று கீதானியைப் பார்த்துச் சொன்னான். கீதானியும் அவ்வாறே பிசினைப் பிய்த்தெடுத்துக்கொண்டான். ஓட்டம் படுவேகமாக இருந்தது. நடுப்பொழுது கடந்ததும் கொடிமூக்கனை இன்னொருவீரனின் கைக்கு மாற்றச்சொன்னான் பாரி. புதியசூடு கண்டு மீண்டும் சீறி வால் முறித்து, நஞ்சைக் கக்கியது. முட்கள் நஞ்சினைக் குடித்து ஊறின.

பாரி மிக நிதானமாக ஆனால், தெளிவான தயாரிப்புகளோடு போய்க்கொண்டிருந்தான். கடக்கும் வழியில் மலைப்பருத்தியைப் பார்த்தான். “அதன் இலையைப் பறித்துக்கொள்” என்றான். கீதானி பறித்துக்கொண்டான்.  இடுக்குப்பாறையின் வழியே வேர்களைப் பிடித்து மேலேற வேண்டிய சூழல் வந்தது. ஒருகையில் பாம்பைப் பிடித்துக்கொண்டிருக்கும் வீரனால், வேர்களைப் பிடித்து மேலேற முடியாது. என்ன செய்யலாம் என்று சிந்தித்தனர்.

‘பெரும்பாறையைக் கடக்க இவ்வழியன்றி வேறுவழியைப் பயன்படுத்தினால் அதிகத் தொலைவு நடக்க வேண்டியிருக்கும். இப்பொழுது கூடுதல் நேரத்தை எடுத்துக்கொள்வது நல்லதல்ல. குத்துக்கல் பள்ளத்தாக்கைவிட்டுச் சமதளத்தை அடைந்துவிட்டால் எதிரிகள் என்ன வேகம் எடுப்பார்கள் என்பதை முடிவுசெய்வது கடினம். நாம் மிகவிரைவாக முன்நோக்கிச் செல்ல வேண்டும்’ என்று சிந்தித்த பாரி கொடிமூக்கனை அலவனிடம் கொடுக்கச் சொன்னான். உடற்சூடு மாறியவுடன் அது மீண்டும் வால்முறுக்கி நஞ்சை உமிழ்ந்தது. வேர்களால் அலவனை முறுக்கிக்கட்டி மேலே தூக்குவது எனப் பாரி முடிவெடுத்தான்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 45

சரசரவென மேலேறியவர்கள் அவ்வாறே அலவனைக் கட்டித்தூக்கினர். வேர்கள் உடலையும் பாம்பு கையையும் சுற்றி இருக்க அலவன் காற்றில் சுழன்றபடி மேலேறிக்கொண்டிருந்தான். பாறையை மேலேறிக்கடந்ததும் மீண்டும் ஓட்டம் தொடங்கியது. ஓட்டம் ஒருவனின் காலில் இருந்து இன்னொருவனின் காலுக்கு விரைந்து பரவக்கூடியது. முன்செல்பவனின் கால்கள் தன்னியல்பிலேயே பின்வரும் கால்களை இயக்கத் தொடங்கிவிடுகிறது.

அவர்கள் விரைவுகொண்டு ஓடினர். சற்றுத் தொலைவு கடந்ததும் உக்காமூங்கில் மரம் பெரும்புதரெனக்  கிடந்தது. “அதன் இலைகளையும் பறித்துக்கொள்” என்றான் பாரி. நீண்ட ஈட்டிபோல இருக்கும் அதன் இலைகளையும் வீரர்கள் பறித்துக்கொண்டனர்.

நடையின் வேகம் குறையாமல் இருந்தது.  முந்தைய நாள் இரவில் பெய்த பெருமழையால் காடு  குளிர்ந்து எங்கும் மணம்  வீசிக்கொண்டிருந்தது. அனைத்தையும் கவனித்தபடி நடந்த பாரி எதனின்பாலும் எண்ணங்களைச் செலுத்தாமல் போய்க்கொண்டிருந்தான். அவன் மனமெங்கும் எதிரிகளே நிறைந்திருந்தனர்.

மாலைப்பொழுதுக்குள் காரமலையின் உச்சியை அடைந்தனர். ‘தேக்கனும் இந்நேரம் கூவல்குடியினரை அழைத்து வந்திருப்பான். அவர்களும் மலைவிளிம்புகளில் அணிவகுத்திருப்பர்’ என்று எண்ணியபடிப் பார்வையின் கோணம் மறையாத இடத்தைத் தேர்வு செய்தான். 

அனைவரையும் நன்றாக ஓய்வெடுக்கச் சொன்னான். இரவு முழுக்கக் கொடிமூக்கனைக் குறிப்பிட்ட நேர இடைவெளியில் கைமாற்றிக்கொண்டே இருந்தான். நஞ்சுப்பை விடாது கக்கிக்கொண்டே இருந்தது. ஒரு பகல் முழுவதும் நஞ்சூரிய முட்கள் உடலில் தைத்தால், அதன் நஞ்சைத் தாங்கும் சக்தி எந்த உயிருக்கும் கிடையாது. ஆனால், இப்பொழுதோ பகலும் இரவுமாக இருமடங்கு நேரம் முட்கள் நஞ்சேறிக்கிடக்கின்றன. இதன் வீரியம் அளவற்றதாக இருக்கும். கொம்பேறி மூக்கனை ஒப்பிட்டால் கொடிமூக்கனின் நஞ்சு வீரியம் குறைந்ததுதான். ஆனால், நஞ்சேறும் பதத்துக்கு இருமடங்கு நேரம் கிடைத்ததால், இதுவும் அளவற்ற வீரியத்தோடுதான் இருக்கும்.

காரமலையின் உச்சியின் மீது இரவு முழுவதும் கவனம்கொண்டிருந்தனர். பொழுது விடியத் தொடங்கியது. கதிரவனின் ஒளிக்கீற்று மேலேறின. வீரர்கள் வைத்திருந்த அம்பின் முனையைக் கத்தியால் சிறிதாகப் பிளக்கச் சொன்னான் பாரி. அவர்களும் அவ்வாறே பிளந்தனர்.

குகையை ஒட்டி உப்பறுகஞ்செடி இருந்தது. “அதன் இலையையும் கணுவையும் உடைத்தால் பால் வரும். அந்தப் பாலை விரல்கள் முழுவதும் தேய்த்துக் கொள்” என்று கீதானியைப் பார்த்துச் சொன்னான். கீதானியும் அதன் கணுவையும் இலையையும் உடைத்தான். பாலூறி வந்தது. ஊற ஊறத் தனது வலதுகையின் ஐந்து விரல்களிலும் படும்படி அதனைத் தேய்த்துக்கொண்டான்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 45

“கொடிமூக்கனின் வாய்க்கட்டைக் கழற்று” என்றான்.

அலவன் பாம்பைப் பிடித்திருக்க வீரனொருவன் எருக்குநாரின் முடிச்சை அவிழ்த்து கட்டைக் கழற்றினான். கழற்றிய வேகத்தில் அது வாய்திறந்து சீறாமல் இருக்க அலவனின் விரல்கள் அதன் தாடையை அழுத்திப் பிடித்திருந்தன. மலைப்பருத்தி இலையைப் புரட்டிவைத்து, கொடிமூக்கனின் வாயை அதில் கவிழ்க்கச்சொன்னான். அலவனும் அவ்வாறே செய்தான். நஞ்சேறிய முட்கள் அவ்விலையில் கொட்டப்பட்டன. முட்களோடு சேர்ந்து கொடிமூக்கனின் நஞ்சு எச்சிலாய் வடிந்துகொண்டிருந்தது. வடியும் நஞ்சுநூல் அறுபட நேரமானது. பொறுமையோடு அனைவரும் அதைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

முற்றிலும் வடிந்தவுடன், “அதனை வெளியில் போய்விட்டுவிடு” என்றான் பாரி. அலவன் குகைக்கு வெளியே போய்ப் புதர் ஒன்றின்மீது கைநீட்டி, அது வெளியேற வாகாகப் பிடியைத் தளர்த்தினான். அம்பு பாய்வதைப்போல அவன் கையிலிருந்து பாய்ந்து மறைந்தான் கொடிமூக்கன்.

மலைப்பருத்தியின் மீது கொட்டிக்கிடப்பவை உடைமர முட்கள் அல்ல, நஞ்சு நிரம்பிய பாம்பின் பற்கள். அவற்றைப் பார்த்த வீரன் ஒருவன், `ஒரே ஒரு பாம்பிலிருந்து இத்தனை பாம்புகளை உருவாக்கிவிட்டானே பாரி’ என வியந்து நின்றான்.

பாரி சொன்னான், “தாக்குதல் தொடுக்கும்போது ஒவ்வொரு முள்ளாய் எடுத்து அம்பின் முனையில் இருக்கும் சிறுபிளவுக்குள் பொருத்தித் தர வேண்டியது அலவனும் கீதானியும் செய்ய வேண்டிய வேலை. முட்களை மிகக்கவனமாக எடுக்க வேண்டும். எடுக்கும்பொழுது சின்னதாய்த் குத்தினாலும் எடுப்பவனின் மேலே நஞ்சு ஏறிவிடும்”  என்றான். அதனால்தான் உப்பறுகஞ்செடியின் பாலை விரல் முழுவதும் தேய்த்துக்கொள்ளச் சொன்னான் பாரி. பால்தேய்த்துக் காய்ந்த விரல்களின் மேல் உக்காமூங்கிலின் இலையைக் கசக்கித்தேய்த்தபடி இச்சிப் பிசினை பூசிக்கொள்ளச் சொன்னான். பிசினைப் பூசிக்கொண்ட சிறிதுநேரத்திலே அது காய்ந்து இறுகி விரல்கவசம்போல் ஆனது. இனி முட்கள் விரல்களில் தைக்க முடியாது. கீதானியால் நஞ்சேறிய முட்களை எடுத்துத் தர முடியும். அவனுக்கு நஞ்சால் தீங்கும் நேராது. இந்த விரல்கவசம் எதுவும் அலவனுக்குத் தேவையில்லை. அவன் பாம்பின் வாயில் இருந்தே அதனை எடுத்துத்தரும் வல்லமை கொண்டவன்.

பாரியின் செய்முறைகள் சிறிது சிறிதாகப் புரியத் தொடங்கும்பொழுது உருவான நம்பிக்கை அளவற்றதாக இருந்தது. வீரர்கள் தாக்குதலுக்கு ஆயத்தமாயினர். பெருவில் ஒன்றைப் பாரிக்குத் தந்தனர். மற்ற இருவில்களை ஏந்தி நின்றனர் வீரர்கள் இருவரும்.

பாறையின் மேல் நின்று காரமலையின் நாலாபுறமும் கண்களைச் சுழலவிட்டுக் கொண்டிருந்தான் பாரி. அவன் கணித்த நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. ‘நேற்று இரவு சிறிதுநேரம் கனமழை பெய்ததால் எதிரிகளின் ஓட்டம் சற்றே தடைபட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. அதுதான் இந்தத் தாமதத்துக்குக் காரணம்’ என்று மனதுக்குள் கணக்குப்போட்டுக் கொண்டிருந்தான்.

பாரியைச் சுற்றி நான்குபேரும் பாய்ந்துசெல்லத் தயார் நிலையில் இருந்தனர்.  கைவிட்டுப்பிரியும்பொழுது கொடிமூக்கனிடம் இருந்த சீற்றம், இப்பொழுது நான்குபேரின் உடலிலும் இருந்தது. நஞ்சேறிய முள்ளும், பகையேறிய கண்ணும், முறுக்கேறிய நரம்புமாக அவர்கள் கொதிப்பேறி நின்றிருந்தனர். காரமலையின் கீழ்த்திசைக் காட்டைக் கிழித்துச்செல்லக் கால்கள் காத்திருந்தன.

வீரயுக நாயகன் வேள்பாரி - 45



பொழுதுவிடிந்து நீண்ட நேரமாயிருந்தது. காடெங்கும் இருந்து பறவைகள் கலைந்து பறந்தன. கண்கள் இங்குமங்குமாக அலைமோதிக்கொண்டிருந்தன. சற்றும் எதிர்பாராத திசையிலிருந்து நரி ஊளையிடும் ஓசை எதிரொலித்தது. இது கூவல் குடியினரின் ஓசை. எதிரிகள் நரிப்பாறையின் வழியே காரமலை விளிம்பைக் கடந்துள்ளனர். கணநேரத்தில் பாரி எல்லாவற்றையும் கணித்தான்.

தானிருக்கும் இடத்திலிருந்து அவர்கள் இறங்குமிடத்திற்குச் செல்ல ஆகும் நேரத்தையும் வழித்தடத்தையும் அவனது மனம் திட்டமிட்டது. கணிப்புகளை விஞ்சும் வேகத்தில் கால்கள் பாய்ந்துகொண்டிருந்தன. நெடுந்தொடர்கொண்ட காரமலை, குன்றுகளும் பிளவுகளும் நிறைந்தது. பாரி இருக்குமிடத்திலிருந்து இரு பெரும்பிளவுகள் தாண்டி அங்கு செல்ல வேண்டும். ‘கூவல்குடியைச் சேர்ந்த பிறரும் அவர்கள் இறங்கும் திசைநோக்கி இந்நேரம் பாய்ந்து சென்றுகொண்டிருப்பர். எதிரிகளின் ஓட்டம் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஓசையாகக் காடெங்கும் எதிரொலிக்கும்’ எனப் பாரியின் மனம் எண்ணிக்கொண்டிருந்தது.

மலைச்சரிவில் ஓடும் வழித்தடத்தைக் கண்கள் பார்த்திருக்க, கூவல்குடியினர் எழுப்பும் ஓசையைக் காது கூர்மையாய் கவனிக்க, கால்கள் இணையற்ற வேகத்தில் பாய்ந்து கொண்டிருந்தன.

லைச்சரிவில் கால்களில் மிதிபட்டுக் கற்கள் உருண்டு தெறித்தன. கதிரவன் மேலேறுவதைப் பார்த்தபடி காலம்பன் ஓடிக்கொண்டிருந்தான். ‘பறம்பு வீரர்கள் எப்படியும் மறிக்க முயல்வார்கள். வேட்டுவன் பாறையின் அருகே ஓர் ஊர் உள்ளது. அப்பக்கம் போகாமல் வேறு திசைநோக்கி இறங்க வேண்டும்’ என்று சிந்தித்தபடியே அவன் ஓடினான். வெற்றியின் எல்லையை நெருங்கும்போது களைப்பு தானே மறைந்து போய்விடும்; புது உத்வேகத்தை எண்ணத்தின் வழியே உடல் எடுத்துக்கொள்ளும்.

அவர்களுடைய ஓட்டத்தின் வேகம் இவ்வளவு கூடுவதற்கு அதுவே காரணம். காலம்பனின் கவனம் இறங்கும் திசையில், கீழே மறித்துத் தாக்க வாய்ப்புள்ள இடங்கள் பற்றியே இருந்தது. பின்னால் அவ்வப்பொழுது எழும் ஓசையை அவன் கவனம் கொள்ளவில்லை.

காரமலையில் நான்கில் ஒரு பகுதித் தொலைவைக் கடந்தபொழுதுதான் அவனது கவனம் சற்றே அதன்மீது சென்றது. இரண்டொரு முறை நரி ஊளையிடும் ஓசை கேட்டது. உச்சிமலையின் மீது நரிக்கென்ன வேலை என்று சிந்திக்க நேரமின்றி ஓடிக்கொண்டிருந்தான். பின்னர் காட்டுக்கோழியின் கூவல் ஓசை கேட்டது. கூவலின் அளவு பெரிதாக இருந்தது. ‘மிக அருகில் இருந்து கூவுகிறது. அதனால்தான் இவ்வளவு சத்தமாகக் கேட்கிறது’ என்று காலம்பனும் மற்றவர்களும் நினைத்துக்கொண்டனர்.

காலம்பனின் கவனம், இறங்கும் திசையில் எதிர்கொள்ளப்போகும் எதிரிகளின் மீதே இருந்தது. பின்னால் சங்கிலித்தொடர்போல் பின்னப்பட்டுவரும் ஓசைகளின் குறிப்புகளை அவன் அறியவில்லை. நேரம் செல்லச்செல்ல அவர்களின் கால்கள் வேகத்தைக் கூட்டின. ஆனால், அதே அளவு வேகத்தோடு காரமலையின் பல இடங்களில் இருந்து அவர்களை நோக்கிக் கால்கள் வந்துகொண்டிருந்தன.

வீரயுக நாயகன் வேள்பாரி - 45

எதிரிகளின் ஓட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாது. ஆனால், அவர்கள் இறங்கும் திசையறிந்து அதனை நோக்கிக் குறுக்கிட்டு வருவதால், கூவல்குடியினரும் பாரியும் மிகத்துல்லியமாக அவர்களை நெருங்கிக் கொண்டிருந்தனர்.

காரமலையின் சரிபாதியை அவர்கள் கடந்துவிட்டனர் என்பதைக் கூவல்குடியினர் வீசியெறியும் கூகையின் குழறல் சொன்னது.  வேட்டுவன் பாறையின் மீது நின்றிருந்த வேட்டூர் பழையன் ஓசைவந்த இடத்தைக் கணித்ததும் அதிர்ச்சியடைந்தான். ‘அவர்கள் சரிபாதித் தொலைவைக் கடந்துவிட்டனர். இன்னும் ஏன் பாரியின் தாக்குதல் நிகழாமல் இருக்கிறது. பாரி எவ்விடத்திலிருந்து வந்துகொண்டிருக்கிறான்? இவ்வளவு நேரமாகியும் வந்துசேர முடியவில்லை யென்றால் அவன் மிகத்தொலைவில் இருந்து வந்துகொண்டிருக்க வேண்டும்.

காரமலையில் வைத்து அவர்களைத் தாக்குவது என்ற திட்டமே ஆபத்தானது. இப்பொழுதோ அவர்கள் பாதிமலையைக் கடந்துவிட்டனர். இனி அவர்களைத் தாக்குவது இன்னும் ஆபத்தானது’ பழையனின் மனம் குழம்பியது. தவறிழைத்துவிட்டோமோ என்று தோன்றியது. பாரி இந்த ஆலோசனையைச் சொன்னபோது உறுதியாக மறுத்திருக்க வேண்டும், அவ்வாறு செய்யாதது சரியன்று என்று தனக்குத்தானே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தான்.

எதிரிகளைப் பின்தொடர்ந்து ஓடிவரும் நீலனுக்கு எதுவும் புரியவில்லை. ‘ஓடிக்கொண்டிருப்பவர்கள் யார்? கூவல்குடியினர் ஓசையை எழுப்பியபடியே இருக்கின்றனரே, அவர்கள் யாருக்காக ஓசையெழுப்புகின்றனர்? ஓடுகிறவர்கள் எங்கெங்கோ வளைந்து செல்கின்றனர். கணிக்க முடியாத பாதையில் அவர்கள் செல்கின்றனர். ஓடுபவர்கள் எதிரிகளாக இருந்தால் மேலே இருந்து காரிக்கொம்பு ஊதினால் போதுமே, கீழே இருக்கும் வீரர்கள் ஆயத்தமாகிவிடுவார்களே. அவ்வாறு செய்யாமல் வேறுபட்ட ஒலியெழுப்பியபடி ஏன் கூவல்குடியினர் ஓடுகின்றனர்?’

காரமலையில் தன்னால் சிந்திக்க முடியாத செயல்கள் நடந்துகொண்டிருப்பதை நினைத்து மிகவும் குழம்பிப்போனான் நீலன். அக்குழப்பம் மனதுக்குள் ஆத்திரத்தைக் கூட்டவே செய்தது. ஆற்றல்பெருக்கி ஓடினான். எவ்வளவு விரைந்து ஓடினாலும், ஓசை கேட்கும் பகுதியை அவனால் நெருங்கவே முடியவில்லை. ‘இவ்வளவு வேகமாகவா அவர்கள் ஓடுகின்றனர்?’ நம்ப முடியாத குழப்பம் அவனைத் திண்டாடவைத்தது.

கீழ்த்திசைக் காவல் பொறுப்பாளனான தனக்குள் ஏற்படும் தடுமாற்றத்தை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கூவல்குடியினர் யாராவது கண்ணிற்பட்டால் நடப்பதென்ன என்பதை அறிந்துகொள்ளலாம். ஆனால், ஓசை கேட்கும் இடங்கள் நேர்கோட்டில் இல்லாமல் இங்குமங்குமாக இருக்கின்றன. எனவே யாரும் கண்ணிற்பட வாய்ப்பின்றி இருக்கிறது.

தேக்கன் தன்னால் முடிந்த அளவு வேகமாக ஓடிவந்துகொண்டிருந்தான். அவனது உடலில் அடிவிழாத இடமே இல்லை. கைக்கட்டை இன்னும் கழற்றவில்லை. ஆனாலும் விடாது துரத்திவருகிறான். கூவல்குடியினரிடம் தெளிவாகச் சொன்னான், “எக்காரணங் கொண்டும் எனக்காக நீங்கள் நிற்கக் கூடாது. எதிரிகளைப் பின்தொடர்ந்து நீங்கள் போய்க்கொண்டே இருக்க வேண்டும். நான் குரல் கேட்டு வந்துவிடுவேன்” என்று.

வீரயுக நாயகன் வேள்பாரி - 45

மிகவும் தள்ளித்தான் தேக்கன் வந்து கொண்டிருந்தான். அவனது கண்ணில் தனித்துச்செல்லும் மனித உருவம் ஒன்றுபட்டது. சற்றே நின்று பார்த்து நெருங்கினான். அது பெண் என்பதை உறுதிப்படுத்திய கணம் சத்தம் கொடுத்தான். தொலைவில் போய்க்கொண்டிருந்த மயிலா பதில் கொடுத்தாள்.

யாரெனத் தெரியாமல் நீலன் விரட்டிச் செல்வதை மயிலா சொன்னவுடன் தேக்கனின் கவலை இரட்டிப்பாகியது. நீலனை வைத்துதான் தாக்குதல் திட்டத்தை வேட்டூர் பழையன் தீட்டியிருந்தான். ஆனால், நீலனோ எதிரிகளின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறான் என்பதை அறிந்தபோது தேக்கனைச் சோர்வு தாக்கியது. நீலன் இல்லாமல் வேட்டூர் பழையன் என்ன செய்துகொண்டிருப்பான் எனச் சிந்தித்தபடி நடந்தான். நடையின் வேகம் குறையக் கூடாது என மனதில் நினைத்துக்கொண்டே நடந்தான். ஆனால், தேக்கனைவிட பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானது மயிலாதான். உடலெல்லாம் இரத்தவிளாராக இருக்க, கையில் கட்டுபோடப்பட்ட நிலையில் தேக்கனைப் பார்த்ததும் அவள் அதிர்ந்து போனாள். ‘பறம்பின் ஆசானை இவ்வளவு கொடுமையாகத் தாக்கிவிட்டு ஓடும் வலிமைகொண்டவர்கள் யார்? அவர்களை நீலன் இன்னும் ஏன் கொல்லாமல் இருக்கிறான்?’ என்று அதிர்ந்து நின்றுவிட்டாள்.

நடுவில் பாறைகளில் விழுந்து சிற்றாறு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அதனைக் கடக்க கவனமாக இறங்க வேண்டியிருந்தது. காலம்பன் முதலிலே இறங்கினான். அனைவரும் ஒருவர் பின் ஒருவராக இறங்கினர். சிலர் நீர்பருகினர். ஆனாலும் ஓட்டத்தின் வேகம் குறைந்துவிடக் கூடாது என்பதற்காக அளவோடு பருகினர். சிலர் அதனையும் தவிர்த்தனர். தேவாங்கு விலங்கு திடீர் திடீரென ஓசை எழுப்புவதும், அடங்குவதுமாக இருந்தது.

ஓடையின் மறுகரைப்பாறையின் மீது காலம்பன் ஏறினான். அவனைத் தொடர்ந்து ஒவ்வொருவராய் ஏறினர். மீண்டும் கால்கள் வேகமெடுக்கத் தொடங்கியபொழுது ஓடையின் அக்கரையில் இருந்து செந்நாய் ஊளையிடுவதைப் போன்ற ஓசை கேட்டது. முன்னெடுத்து ஓடிக்கொண்டிருந்த காலம்பனுக்கு சற்றே ஐயம் வரத்தொடங்கியது. ஓட்டத்தை நிறுத்தி மீண்டும் ஓடைக்கரை விளிம்புக்கு மரங்களினூடே மறைந்தபடி வந்தான்.

பாரியின் வேகம் இதனைப்போல் இருமடங்கு. ஆனால், அலவனையும், கீதானியையும் அழைத்துவர வேண்டும் என்பதற்காகப் போதுமான வேகத்திலே வந்துகொண்டிருந்தான். கூவல்குடியினரின் ஓசையைக் கணக்கிட்டு சிற்றோடையை நோக்கி இறங்கிக் கொண்டிருந்தான். இடையில் ஒரு சிறுகுன்று இருந்தது. அதனைக் கடந்த கணத்தில் எதிரிகளை வீழ்த்தலாம் என்ற முடிவோடு வந்து கொண்டிருந்தான் பாரி.

மீண்டும் செந்நாய் ஊளையிடும் ஓசை கேட்டது. அவர்கள் ஓடையைக் கடந்துவிட்டனர் என்பதனை அந்தக் குறிப்புச் சொன்னது. தனது வேகத்தை இன்னும் கூட்ட வேண்டும் என்று அவன் முடிவெடுக்கும்போது ஊளையின் ஓசை பாதியில் அறுபட்டு நின்றது.

ஓடிக்கொண்டிருந்த பாரியின் கால்கள் அப்படியே நின்றன. மற்றவர்களும் நின்றனர். மேல்மூச்சும் கீழ்மூச்சுமாகத் தவித்தபடி எல்லோரும் பாரியின் முகத்தைப் பார்த்தனர். சற்று அமைதிக்குப் பின் பாரி சொன்னான், “எதிரிகள் கூவுகிறவனின் தொண்டைக்குழியில் ஈட்டியை இறக்கிவிட்டனர்”.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...