
சசிகலா ஜாதகம் - 69 - வேட்பாளர் செலக்ஷன்... கலெக்ஷன்!
திருநாவுக்கரசரோடு ஜெயலலிதா அணியில் சேர்ந்த எம்.ஜி.ஆரின் அண்ணன் மகள் லீலாவதிக்கு அங்கே மரியாதை கிடைக்கவில்லை. ஜெயலலிதாவுக்குப் போட்டியாக அவர் வந்துவிடக் கூடாது என முன்ஜாக்கிரதை முத்தண்ணாவாக செயல்பட்டது சசிகலா குடும்பம். லீலாவதியையும் அவரது அண்ணன் பிரபாகரனையும் கூட்டங்களில் பங்கேற்க விடாமல் தடுத்தது பூனைப்படை.
இப்படியான நிலையில், 1988 நவம்பர் 28-ம் தேதி சென்னையில் பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது காங்கிரஸ் கட்சி. அதை வைத்து சித்து விளையாட்டு ஒன்று அரங்கேறியது. ‘சதிச் செயலை முறியடிப்போம்; மீண்டும் எம்.ஜி.ஆர் ஆட்சியை அமைப்போம்; அன்னை ஜானகி அவர்களே... புரட்சிச் செல்வி ஜெயலலிதா அவர்களே... ஒன்று சேருங்கள்!’ என்ற வாக்கியங்களோடு சென்னை மாநகர சுவர்களில் பளீர் போஸ்டர்கள் திடீரென மின்னின. காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பதற்காக ஜெயலலிதா அணியைச் சேர்ந்த ஹண்டே, டெல்லிக்கும் தமிழகத்துக்கும் பறந்தும் பலன் ஏதுமில்லை. கூட்டணி முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்த நிலையில், இந்தப் போஸ்டர் ஐடியாவைக் கொடுத்தார் நடராசன். அதாவது, ‘ஜானகி அணியும் ஜெயலலிதா அணியும் ஒன்றுசேர வேண்டும்’ என்கிற விஷயத்தைக் கிளப்பி, இணைப்புப் பேச்சுவார்த்தைகள் நடத்துவது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினால் காங்கிரஸ் மிரளும் என்பதுதான் நடராசனின் பிளான்.

அந்தத் திட்டத்தை நோக்கிக் காய்கள் நகர்த்தப்பட்டன. ‘ஜெ’ அணியின் கே.கே.எஸ்.எஸ்.ஆரும் ‘ஜா’ அணியின் முத்துசாமியும் ரகசியமாக சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அந்த நேரத்தில், திருநெல்வேலி டூரில் இருந்தார் ஜெயலலிதா. அங்கே கட்சி நிர்வாகிகள் சிலர் செய்தியாளர்களை அழைத்து, ‘‘ ‘நீங்களும் ஜானகியும் ஒன்று சேர வேண்டும் என சென்னையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கிறதே...’ என்கிற கேள்வியை ஜெயலலிதாவிடம் எழுப்புங்கள்’’ எனச் சொன்னார்கள். இதற்கு ஏற்பாடு செய்ததே நடராசன்தான். நிருபர்களும் கேள்வி எழுப்ப, ‘‘இணையலாமே’’ என ஜெயலலிதாவும் பதில் சொன்னார். ஒரு கட்டத்தில் ‘இணைப்பு சாத்தியம்’ என்பதுபோல சீரியஸாக இந்த டிராமா போய்க் கொண்டிருந்த நிலையில், நடராசனின் திட்டத்தை ஆர்.எம்.வீரப்பன் மோப்பம் பிடித்தார். ‘‘காங்கிரஸை மிரட்டுவதற்காக ஜெயலலிதா போடும் நாடகம் இது’’ எனக் கட்சியின் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் சொன்னார்.
இந்த நாடகத்தை இதற்கு மேலும் வளர்த்தால் சிக்கலாகிவிடும் என நினைத்தார்கள் சசிகலா குடும்பத்தினர். ‘ஜெயலலிதாவைத் தலைவியாகவும் முதல்வர் வேட்பாளராகவும் ஏற்றால்தான் இணைப்பு’ என எஸ்.டி.சோமசுந்தரம் அறிக்கை விட்டார். அதோடு திடீரென பொதுக்குழுவைக் கூட்டிய ஜெயலலிதா, ‘‘என் தலைமையில் இருக்கும் கட்சியே வலிமையானது. முதல்வர் வேட்பாளர் நான்தான். என் தலைமையை ஏற்றுக் கொள்கிறவர்களுடன்தான் கூட்டணி.’ என அறிவித்தார். உடனே காங்கிரஸ், ‘‘ஜெயலலிதா அணியுடன் கூட்டணி இல்லை.’ எனச் சொன்னது. அதுவரையில் காங்கிரஸையோ ராஜீவ் காந்தியையோ விமர்சனம் செய்யாமல் இருந்த ஜெயலலிதா, திடீரென ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி கொடுத்தார். ‘‘போஃபர்ஸ் பிரச்னை காங்கிரஸுக்குப் பாதகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தான் குற்றவாளி அல்ல என்பதை ராஜீவ் காந்தியால் நிரூபிக்க முடியவில்லை’’ எனச் சீறினார். காங்கிரஸைக் கூட்டணிக்குப் பணிய வைப்பதற்காக நடராசனால் நடத்தப்பட்ட நாடகத்தை நம்பி கே.கே.எஸ்.எஸ்.ஆர், முத்துசாமி உள்பட பலரும் ஏமாந்து போனதுதான் மிச்சம்.
‘காங்கிரஸுடன் கூட்டணி வேண்டும்’ என்பதுதான் கே.கே.எஸ்.எஸ்.ஆரின் விருப்பம். அது சாத்தியமில்லாது போனால் ஜானகி - ஜெயலலிதா அணிகள் இணைந்து தேர்தலைச் சந்திக்க வேண்டும் என விரும்பினார். இரண்டுமே நடக்கவில்லை. ‘ஜெயலலிதாவுடன் கூட்டணி இல்லை’ என காங்கிரஸ் அறிவித்த அடுத்த நாள், போயஸ் கார்டனில் நடராசனைச் சந்தித்தார் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ‘‘ ‘யாருடனும் கூட்டணி இல்லை, தனித்துப் போட்டி’ என அம்மா அறிவித்த பிறகு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலர் எனக்கு போன் செய்து, அம்மாவைப் பாராட்டினார்கள். நாம் தனித்துப் போட்டியிடுவதால் ஆங்கிலப் பத்திரிகை ஒன்று நம்மை ஆதரிக்க முடிவு செய்திருக்கிறது” என்றெல்லாம் நடராசன் சொல்லிக்கொண்டே போக... கே.கே.எஸ்.எஸ்.ஆர் சலனமே இல்லாமல் கேட்டுக்கொண்டிருந்தார். ‘‘பிரைம் மினிஸ்டர் ஆபீஸில் எனக்கு கான்டாக்ட் உண்டு... என்னிடம் சிதம்பரம் பல முறை பேசியிருக்கிறார்... அம்மாவுக்கு டெல்லியில் இருந்து அழைப்பு வரப் போகுது... காங்கிரஸோடு உடன்பாடு ஏற்பட்டாச்சு... டெல்லியில் இருந்து அம்மாவிடம் பேசிட்டாங்க...’’ - இப்படியான நடராசனின் காது குத்தல்களைக் கேட்டுப் பழகிவிட்டதால், கே.கே.எஸ்.எஸ்.ஆரின் காதுகள் அப்போது செவிடாகியிருந்தன.
தேர்தல் வேலைகள் வேகமெடுக்க ஆரம்பித்தன. விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டன. விருப்ப மனுவுக்கு விண்ணப்பக் கட்டணம் 1,000 ரூபாய் என நிர்ணயித்திருந்தார்கள். 1,500-க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு அளித்தனர். ‘போட்டியிட விரும்புகிறவர்கள் ஒவ்வொருவரும் தலா ஒரு லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கட்ட வேண்டும்’ என நிபந்தனை போட்டார்கள். வேட்பாளர்கள் தேர்வில் நடராசனின் கைதான் ஓங்கியது. ‘‘பூலாவாரி சுகுமாறன் கொலையில் குற்றம்சாட்டப்பட்டவர், பெரிய கான்ட்ராக்டர்கள் உட்பட சர்ச்சைக்குரிய பலரும் வேட்பாளர்கள் ஆனதற்குக் காரணம் கரன்சிதான். ஆட்சிமன்றக் குழு அளித்த பட்டியலை ஓரமாக வைத்துவிட்டு நடராசன், தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே சீட் வழங்கினார். டெண்டர் முறையில் சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. பணம் கொடுத்தவர்களே வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றனர்’’ எனக் கட்சியினர் புகார்ப் பட்டியல் வாசித்தார்கள். இன்னொரு பக்கம் பணம் கொடுத்தும் சீட் கிடைக்காத பலர், கூட்டம் கூட்டமாகப் போயஸ் கார்டனுக்குப் படையெடுத்தார்கள். அவர்களைப் பூனைப்படை விரட்டியடித்தது.
நடராசனின் அத்துமீறல்களால் வேட்பாளர்களை மாற்றச் சொல்லியும் ஆங்காங்கே பிரச்னைகள் கிளம்பின. ஓமலூரில் இருந்து வந்தவர்கள் போயஸ் கார்டனை முற்றுகையிட்டனர். அவர்களிடம் பேசிய நடராசன், ‘‘ஆனானப்பட்ட நாவலரையே விரட்டிவிட்டேன். சேலம் கண்ணன் யார்? சேலத்துக்கே அவர் என்ன கொம்பனா? திருச்செங்கோட்டுக்கு டிக்கெட் கேட்டார். எதற்குக் கொடுக்க வேண்டும். அவருடைய நண்பர் ராஜாவுக்குக் கொடுத்தேன். திருச்சியில் ஸ்ரீரங்கத்துக்காரன் இறக்கையை வெட்டியாச்சு. மதுரையில் நவநீதகிருஷ்ணனாம். அவரையும் விரட்டியாச்சு. தேர்தலுக்குப் பிறகு பாருங்கள்... யார் யாருக்கு என்ன நடக்கும் எனத் தெரியும்’’ என்று வீராவேச முழக்கம் கொடுத்தார்.
தேனியைச் சேர்ந்த ஸ்ரீதரும் திருச்செங்கோட்டைச் சேர்ந்த பி.டி.தனகோபாலும் பணம் கொடுத்தும், அவர்களுக்குப் பட்டை நாமம் போட்டார்கள். பணம் திரும்பி வராததால் கட்சி அலுவலகத்துக்கும் போயஸ் கார்டனுக்கும் அலைந்து கொண்டிருந்தார்கள். அவர்களால்தான் முதன்முறையாக ஜெயிலுக்குப் போனார் நடராசன். ‘அரசியலில் இருந்து விலகுகிறேன்’ என்கிற அதிரடி முடிவை ஜெயலலிதா அறிவித்ததும் அப்போதுதான்!
(தொடரும்)