
சசிகலா ஜாதகம் - 70 - ஜெயலலிதா ராஜினாமா... ஜெயிலுக்குப் போன நடராசன்!
‘அரசியலில் இருந்து ஜெயலலிதா விலகல். எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தார்’ - 1989 மார்ச் 19-ம் தேதி காலையில் வெளியான அத்தனை நாளிதழ்களிலும் இதுதான் தலைப்பு செய்தி!
‘‘அமைதியாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த என்னை, எம்.ஜி.ஆர் அரசியலில் ஈடுபடுத்தினார்.
எம்.ஜி.ஆர் மறைந்த உடனேயே அரசியலைவிட்டு விலகிட விரும்பினேன். ஆனால், என்னைச் சுற்றியிருந்த தலைவர்கள் பலர், என்னைத் தடுத்தனர். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் சம்பவங்கள், எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கின்றன. நேர்மை, நாணயம், கண்ணியம் ஆகியவற்றைத் தொடர்ந்து கடைபிடித்து வந்தபோதிலும், அரசியலில் ஈடுபட்ட ஒரே காரணத்தினால் இதுவரை வேறு எந்தப் பெண்ணுக்கும் நேர்ந்திராத வகையில் அத்தனை கேவலமான அவமானங்களுக்கும் கீழ்த்தரமான இழிச் சொற்களுக்கும் ஆளாக்கப்பட்டுவிட்டேன். ஏழாண்டு காலப் பொதுவாழ்வில் நான் கண்ட ஒரே லாபம் இதுதான். ஆனால், ‘பரிசுத்தமான முறையில் என்னுடைய அரசியல் வாழ்வை நடத்தியிருக்கிறேன்’ என்று என் மனசாட்சியைத் தொட்டு என்னால் தலைநிமிர்ந்து தைரியமாகக் கூறமுடியும்.
1987 டிசம்பரில் இருந்தே எனது உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. 1988 முழுவதும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை பெறாமல், ஓய்வும் எடுத்துக்கொள்ளாமல், தீவிர அரசியல் பணியில் ஈடுபட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டதால் எனது தேக நிலை மேலும் சீர்கெட்டுவிட்டது. இனிமேல் தீவிர அரசியலில் பணியாற்ற இயலாத அளவுக்கு எனது உடல் ஆரோக்கியம் சீர்கேடு அடைந்துள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய பொறுப்புகளுக்குரிய கடமைகளைச் சரிவர நிறைவேற்ற முடியாத நிலையில் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க நான் விரும்பவில்லை. எனவே அரசியலை விட்டு விலகுகிறேன். இதுவரை எனக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் எனது இதயமார்ந்த நன்றி.’’ - இப்படிக்கு ஜெயலலிதா

ஜெயலலிதாவின் இந்த முடிவுக்குப் பின்னால் அரசியல் முடிச்சுகள் பின்னப்பட்டிருந்தன. 1989 ஜனவரி 21-ம் தேதி. தமிழகம் முழுவதும் வாக்குச் சாவடி வரிசையில் மக்கள் காத்துக் கிடக்கிறார்கள். கருணாநிதி, ஜெயலலிதா, மூப்பனார், ஜானகி என நான்கு முதல்வர் வேட்பாளர்கள். ஜெயலலிதா, ஜானகி, நாவலர் என அ.தி.மு.க மூன்று அணிகளாகப் பிரிந்து, தமிழக சட்டசபைத் தேர்தலை எதிர்கொண்டது. இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டதால் ‘இரட்டைப் புறா’ சின்னத்தில் ஜானகி அணியும் ‘சேவல்’ சின்னத்தில் ஜெயலலிதா அணியும் போட்டியிட்டன. காங்கிரஸும் தி.மு.க-வும் தனித்துக் களமிறங்கின. வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டபோது தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. ஜெயலலிதா அணிக்கு 27 இடங்களும் ஜானகி அணிக்கு ஒரு தொகுதியும் கிடைத்தன. சட்டமன்ற முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார் ஜெயலலிதா. தேர்தல் தோல்விக்குப் பிறகு ‘ஜா’, ‘ஜெ’ அணிகள் இணைந்து, ஒருங்கிணைந்த அ.தி.மு.க.-வுக்குப் பொதுச்செயலாளர் ஆகி, இரட்டை இலையும் கிடைத்துவிட்டது. ஆனாலும் ஜெயலலிதா விரக்தியில் இருந்தார்.
‘ஆட்சியைப் பிடித்துவிடலாம்’ என நடராசன் சொன்ன நம்பிக்கை பொய்த்துப் போனது. விரக்தியில் ஜெயலலிதா கார்டனைவிட்டு வெளியே வரவில்லை. கட்சி நிதி மற்றும் தேர்தல் வசூல் பஞ்சாயத்துகள், சீட் கேட்டவர்கள் பணத்தைத் திருப்பிக் கேட்டது என எல்லா அழுத்தங்களும் ஜெயலலிதா மீது விழுந்தன. இந்தப் பிரச்னைகளுக்கு சசிகலா குடும்பம்தான் காரணம் எனச் சொல்லி, அவர்களை ஜெயலலிதா திட்டித் தீர்த்தார். கோபமடைந்த சசிகலா, கார்டனைவிட்டு கிளம்பி ஊருக்குப் போனார். ஜெயலலிதா தனிமையில் தவித்தார். 1989 மார்ச் 17-ம் தேதி. திடீரென ஒரு முடிவை எடுத்தார். பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் லெட்டர் பேடுகளில் ஜெயலலிதாவின் பேனா, பாய்ச்சல் காட்டுகிறது. அந்தக் கடிதங்களை கவரில் போட்டு உதவியாளர்கள் சுரேஷ், நடராஜன் ஆகியோரை அழைத்து, ‘‘இந்தக் கவரைச் சபாநாயகரிடம் கொடுத்துவிட்டு மற்ற கடிதங்களைப் பத்திரிகை அலுவலகங்களுக்குத் தந்துவிடுங்கள்’’ எனச் சொல்கிறார் ஜெயலலிதா.

ஆனால், அந்த உதவியாளர்கள் சபாநாயகரிடமும் பத்திரிகை அலுவலகங்களுக்கும் செல்லாமல், ஆழ்வார்பேட்டை பீமண்ண கார்டன் தெருவுக்குள் நுழைகிறார்கள். அங்கேதான் நடராசனின் வீடு இருக்கிறது. நடராசனிடம் கடிதங்களை அவர்கள் கொடுக்க... வாங்கிப் பார்த்துவிட்டு அவர் அதிர்ச்சி அடைகிறார். ‘‘நீங்கள் கார்டனுக்குப் போக வேண்டாம்’’ எனச் சொல்லி உதவியாளர்களை அனுப்பி வைக்கிறார்.
தூர்தர்ஷன் என்ற ஒரு சேனலும் ரேடியோவும் பத்திரிகைகளும்தான் அன்றைக்கு இருந்த ஊடகங்கள். தூர்தர்ஷனைப் பார்த்த ஜெயலலிதா, தன் அரசியல் விலகல் செய்தி வராததைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். மாலை நாளிதழ்களிலும் செய்தி வரவில்லை. ‘ஜெயலலிதா விலகினால் தங்களுக்கு வாழ்வில்லையே’ என நினைத்து பத்திரிகை அலுவலகங்களுக்குப் போக வேண்டிய ஜெயலலிதாவின் அறிக்கையை நடராசன் கைப்பற்றி விட்டதால், பிரேக்கிங் நியூஸுக்கு பிரேக் விழுந்தது. தனக்கு வேண்டப்பட்ட பத்திரிகை அலுவலகங்களுக்கு போன் போட்டு, ஜெயலலிதா விசாரித்தபோது ‘‘அறிக்கை வரவில்லை’’ எனப் பதில் வந்தது. கோபம், ஜெயலலிதா உச்சந் தலையில் ஏறி உட்கார்ந்து கொள்கிறது.
வீட்டில் இருந்த பணியாளர்களை எல்லாம் தேடுகிறார். யாருமே அங்கு இல்லை. வேலை பார்த்தவர்கள் அத்தனை பேரும் நடராசனின் ஆட்கள். ‘நியூஸ் வராமல் போனால் ஜெயலலிதா என்ன செய்வார்’ என்பது நடராசனுக்குத் தெரிந்திருந்தது. அதனால் கார்டனைக் காலியாக்கியிருந்தார். வெளியே போவதற்கும் கார் டிரைவர்கூட இல்லை. கார்டனில் இருந்த ஒரே ஒரு பையனிடம் ஜெயலலிதா விசாரிக்க... ‘‘எல்லோரும் சார் (நடராசன்) வீட்டுக்குப் போயிட்டாங்க...” எனச் சொல்கிறான். ‘தன் ராஜினாமா கடிதத்தை மீடியாவுக்குக் கிடைக்கவிடாமல் தடுத்தது நடராசன்’ எனப் புரிகிறது. அந்தப்பையனின் கன்னத்தில் அறைந்து கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு போன் போடச் சொல்கிறார் ஜெயலலிதா. ‘‘உடனே வாருங்கள்’’ என கே.கே.எஸ்.எஸ்.ஆரை அழைத்து, அவர் காரிலேயே நடராசன் வீட்டுக்குப் போனார் ஜெயலலிதா. அங்கே இருவருக்கும் கடும் வாக்குவாதம். ‘‘மை பிராப்பர்ட்டி... கிவ் மி மை லெட்டர்ஸ்... என் கடிதங்களைப் பிடுங்கி வைக்க உனக்கு எந்த ரைட்ஸும் இல்லை’’ என ஜெயலலிதா சீற, ‘‘கடிதங்கள் என்னிடம் இல்லை. சசிகலாவிடம்தான் இருக்கிறது’’ என நடராசன் சமாளிக்கிறார். ‘‘மரியாதையா கொடு. என் கடிதங்களை எடுத்து வைத்துக்கொள்வதற்கு நீ யார்? இதற்கெல்லாம் நீ பதில் சொல்ல வேண்டி வரும்’’ என ஏரியா அதிர கத்துகிறார் ஜெயலலிதா.

‘ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர்’ என்பதால், நடராசன் வீட்டை உளவுத்துறை போலீஸ் நோட்டமிட்டுக் கொண்டிருந்தது. அப்படி உளவு பார்த்த போலீஸுக்கு அடிக்கிறது ஜாக்பாட். ‘‘மை பிராப்பர்ட்டி’’ என்கிற வார்த்தை மட்டும், காவலர்களுக்குக் காதில் விழ.. தகவலை பிக்பாஸுக்குத் தட்டி விடுகிறார்கள். ‘ஜெயலலிதாவின் பிராப்பர்ட்டி ஏதோ நடராசன் வீட்டில் இருக்கிறது. அது என்ன? அதைக் கைப்பற்றினால் ஏதோ கிடைக்கும்’ எனக் கணக்குப் போடுகிறது, புதிதாக ஆட்சிக்கு வந்த கருணாநிதி அரசு.
நடராசனின் வீட்டில் சோதனை போட நாள் குறிக்கிறார்கள். அதற்குக் காரணம் வேண்டாமா? ‘தேர்தலில் சீட் தருவதற்காகப் பணம் வாங்கி மோசடி செய்துவிட்டு மிரட்டுகிறார்கள்’ எனத் தேனி ஸ்ரீதர் கொடுத்த புகாரைத் தூசி தட்டி எடுத்துக்கொண்டு, நடராசன் வீட்டுக்குள் 1989 மார்ச் 18-ம் தேதி நுழைகிறது போலீஸ். அங்கிருந்து எடுத்த ராஜினாமா கடிதம் சபாநாயகர் தமிழ்க்குடிமகனுக்கும் அறிக்கைகள் மீடியாவுக்கும் போகின்றன. ஜெயலலிதா செய்ய நினைத்த ராஜினாமாவை நடராசன் தடுத்தார். அவர் தடுத்ததை தி.மு.க அரசு நிறைவேற்றியது. வீட்டில் சோதனை போட்ட கையோடு, நடராசனைச் சிறையிலும் அடைக்கிறது போலீஸ்.
(தொடரும்)