
சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,
விலங்கின் பாய்ச்சலைப் பின்னுக்குத் தள்ளும் ஆற்றல்கொண்டது வேள்பாரியின் பாய்ச்சல். ஆனால், இன்று அதையும் விஞ்சும் வேகத்தை, காடு பார்த்துக்கொண்டிருந்தது. பாரி வேட்டை தொடங்கியது. நாணேற்ற துடித்துக்கொண்டிருந்த விரல்களைக் கட்டுப்படுத்தப் போராடினான் பாரி. கட்டுப்பாடுகளை எல்லா நேரங்களிலும் மனம் சிறப்பாகக் கையாள்வதில்லை. ரத்தக்கறை படிந்த கணத்தில் அதன் முடிவு எப்படி இருக்கும் என்பது ஊகத்துக்கு அப்பாற்பட்டது.
அவன் நினைத்ததைவிட விரைவாக இந்த இடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டான். சிறு குன்றின் மறுபக்கத்தில் எதிரிகளின் வருகைக்காகக் காத்திருந்தான். வீரர்கள் இருவரும் ஆயத்தநிலையில் நின்றனர். அலவனும் கீதானியும் அம்பின் முனையில் நஞ்சு முள்ளைச் செருகிக் கொடுத்துவிட்டு மறு அம்பினைக் கொடுக்கக் காத்திருந்தனர். காஞ்சிரை மரத்தின் பின்னணியில் அவர்களின் உருவம் கண்ணில்படும் பொழுதுக்காகக் காத்திருந்தனர் அனைவரும்.
ஓசை எழுப்பியவனின் தொண்டைக்குழியில் ஈட்டியைச் செருகியவுடன் அவன் ஓடைக்குள் சரிந்துவிழுந்தான். அவன் விழுந்து மடிந்ததைப் பார்த்தபிறகுதான் காலம்பன் அந்த இடம்விட்டுப் புறப்பட்டான்.

ஓட்டத்தை நிறுத்தி ஓசை கேட்டுத் திரும்பியதும், அவனைத் தேடித் தாக்கவும் அவன் இறந்துவிட்டானா என்பதை உறுதிப் படுத்தவும் காலம்பன் செலவழித்த நேரம்தான் பாரி முன்வந்து சேரக் கூடுதல் வாய்ப்பை உருவாக்கியது. முன்னோக்கிச் சென்று மிகப் பொருத்தமான இடத்தைத் தேர்வுசெய்து காத்திருந்தான் பாரி.
ஓசை கொடுப்பவனைக் கொன்றபிறகுதான் காலம்பனின் மனதில் குழப்பங்கள் தோன்றத் தொடங்கின. ‘காரமலையின் மேல் விளிம்பிலிருந்து அவ்வப்போது ஓசை கேட்டது. காலை நேரத்து உயிரினங்களின் ஓசை என்றே கவனம்கொள்ளாமல் விட்டுவிட்டோம். அவை அனைத்தும் மனிதர்கள் எழுப்பிய ஓசையென்றால், அவர்கள் யாருக்காக எழுப்பி னார்கள்? இந்த ஓசை கேட்டு வரப்போகிறவர்கள் யார்? அல்லது ஆயத்தநிலையில் நிற்கப் போகிறவர்கள் யார்? நம்மீது தாக்குதல் தொடுக்க எந்த இடத்தை அவர்கள் தேர்வுசெய்துள்ளனர்?’ என்று அவன் சிந்தித்துக்கொண்டிருந்தபோது, பாரி தேர்வுசெய்த இடத்தில் மிகச்சரியாக வந்துகொண்டிருந்தான் காலம்பன்.
வில்லில் இழுபடும் நாண், விடுபடும் கணத்துக்காகக் காத்திருந்தது. வீரர்கள் இருவரும் பாரியின் தொடக்கத்தை எதிர்பார்த்திருந்தனர். வலதுகையின் பிடரி நரம்பு முறுக்கேறியபோது, விரல்களின் வலு இன்னும் கூடியது. ஆனாலும், முதன்மையாக ஓடிக்கொண்டிருக்கும் காலம்பனை நோக்கிப் பாரி அம்பினை எய்தவில்லை.
அடுத்தடுத்து மூன்று முறை அம்பை எய்துவதற்கு ஏற்றாற்போல் எதிரிகளின் கூட்டம் தடுப்பேதும் இல்லாமல் முழுமையாக முன்னால் வரும்வரை காத்திருந்தான் பாரி. தனது தாக்குதல் இலக்குக்குள் எதிரி வந்தபிறகும் தாக்காமல் காத்திருக்கப் பயிற்சி கைக்கொடுப்பதில்லை. அங்கு கைக்கொடுப்பதெல்லாம் முழுமையையும் அழிக்க வேண்டும் என்ற வெறி மட்டும்தான். அடங்காத வெறிகொண்டு நிதானத்தைக் கைக்கொள்வது மட்டுமே மனம் பக்குவப்பட்டதன் உச்ச அடையாளம். அம்பின் முனை கண்ணிமைப் பொழுதுகூட முன்பாய்ந்தோ, பின்தங்கியோ சென்றுவிடக் கூடாது என்பதில் மிகக் கவனம்கொண்டிருந்தான் பாரி.
குன்றின் மேடான பகுதியிலிருந்து சிறு ஓசை கேட்டுக் காலம்பன் திரும்பிய கணத்தில் அம்புகள் காற்றைக் கிழித்துக்கொண்டு வந்தன. தற்காத்துக்கொள்ள மரங்களோ பெரும்பாறையோ அற்று வெறும் கொடிகள் மட்டுமே படர்ந்து கிடக்கும் இடத்தில் பாய்ந்துவந்த அம்பில் ஒன்றுகூட இலக்குத் தப்பவில்லை. இரண்டாவது அம்பைத் தொடுக்க எடுத்துக்கொண்ட நேரம் மட்டுமே எதிரிகளுக்குக் கிடைத்த சிறு வாய்ப்பாக அமைந்தது.
எதிர்பாராத தாக்குதலை எதிர்கொள்ள, சில கணங்கள் தேவைப்பட்டன. கூட்டத்தின் தலைவன் யார் என்பது தெரியாவிட்டாலும் முன்னால் வருகிறவர்கள் சட்டென மறைந்து கொள்ள மரமோ, பாறைகளோ இல்லை. ஆனால், பின்னால் வருகிறவர்களுக்கு அந்த வாய்ப்பு இருக்கிறது என முடிவுசெய்த பாரி, தாக்குதலின் முதல் இலக்காகக் கடைசியாக வந்துகொண்டிருப்பவர்களைக் குறிவைத்தான்.

தன்னுடைய தோள்பட்டையில் வந்து செருகிய அம்பை உருவி எடுத்தான் ஒருவன். சிறு விரல்நுனி அளவே அது உள்ளே போயிருந்தது. அம்பைத் தொலைவில் வீசியபடிச் சொன்னான், “இது தைத்து நாம் வீழ்வோம் என நினைத்துப் போரிடுபவர்களை என்ன சொல்வது?”
“அவர்கள் நம்மைக் கண்டுணர்ந்து நெருங்கிவிட்டார்கள். நாம் இந்த இடத்தைவிட்டு விரைவாக அகல்வோம்” என்று கத்தியபடி காலம்பன் ஓட்டத்தின் வேகத்தைக் கூட்டினான். மரமோ, பெரும்பாறையோ அற்ற இந்தப் பகுதி அம்பு எய்தித் தாக்குவதற்கு ஏற்றது. இதை விரைவில் கடக்க வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்தபோது கால்களின் விசை இரட்டிப்பானது. ஓடிக்கொண்டே அடுத்து செய்யவேண்டியது என்ன என்று சிந்தித்தபோதுதான் ஏதோ ஒரு மாற்றத்தை உணர்ந்தான். என்னவென்று நிதானிப்பதற்குள் புரிந்துவிட்டது, தனக்குப் பின்னால் விரைந்து வரும் கால்களின் ஓசை அறுபட்டுவிட்டதென்று. என்ன ஆனது எனத் திரும்பி, புதர் விலக்கி அந்த இடம் வந்தபோது அம்பு தைத்த அறுவர், மண்ணில் சாய்ந்துகிடந்தனர்.
மற்றவர்கள் மறைப்புகளில் அண்டியபடி சாய்ந்து கிடந்த ஒருவனின் முதுகில் இருந்த கூடையை எடுக்க முயன்றனர். அம்பு எய்துகிறவர்கள் உயரமான, மிகப் பொருத்தமான இடத்திலிருந்து எய்துவதால் தப்பிப்பது கடினமாக இருந்தது. கூடையைக் கழற்ற முற்பட்டபோது இன்னொருவனின் கழுத்தில் செருகியது அம்பு. அவன் மயங்கிச் சரிய அதிக நேரம் ஆகவில்லை.
நிலைமையின் விபரீதத்தைக் காலம்பன் உணரத் தொடங்கினான். அவை வெறும் அம்புகள் அல்ல; நஞ்சு தடவிய அம்புகள்கூட. உடலைச் செயழிலக்கச்செய்ய நாள்கணக்கில் ஆகும். அதனினும் கொடும் ஆயுதம்கொண்டு தாக்குதல் நடக்கிறது. புரிந்துகொண்ட கணம் ``விழுந்து கிடப்பவனிடம் இருக்கும் கூடையை எடுக்க முயலாதீர்கள். விரைந்து இந்த இடம்விட்டு வெளியேறுங்கள்” என்று கத்தினான். அவனது குரலின் அதிர்வு அடங்குமுன் அனைவரும் பாய்ந்து வெளியேறினர். ஆனால், நீண்ட தொலைவுக்கு மறைப்புகள் ஏதுமின்றி இடுப்பளவு இருக்கும் செடிகொடிகளுக்குள்தான் ஓடவேண்டியிருந்தது. அம்புகள் கணக்கின்றி சீறிக்கொண்டிருந்தன. பாரி, முழு வேட்டையையும் முடிக்க முயன்று கொண்டிருந்தான்.
முன்னால் சென்றுகொண்டிருந்த காலம்பனின் பாய்ச்சல், மின்னல் வேகம்கொண்டது. கணிக்க முடியாத வேகத்தில் அவர்களின் கால்கள் பாய்ந்துகொண்டிருந்தன. தங்களின் போக்கைச் ‘சட்’டென மாற்றி இடப்புறச் சரிவில் இறங்கலாம் எனக் காலம்பன் முடிவுசெய்தான். அது தாக்குதல் தொடுப்பவர்களுக்குக் குழப்பத்தை உருவாக்கக் கூடியது. தங்களின் வேகத்தை இனி எவனாலும் பின்தொடர்ந்து நெருங்க முடியாது என அவன் எண்ணிய கணத்தில், அவன் ஓடும் திசையின் மேட்டுப் பகுதியிலிருந்து மீண்டும் ஒரு செந்நாய் ஊளையிட்டது.
விக்கித்து நின்றான் காலம்பன். ‘என்ன நடக்கிறது இங்கு? இன்னொருவன் ஓசை எழுப்பிக்கொண்டிருக்கிறான். ஓசை எழுப்புவதை எத்தனை பேர் செய்கிறார்கள்? மூன்று மலைகளிலும் நாம் ஆட்களை நிறுத்தியதைப்போல, மூன்றாம் மலையெங்கும் அவர்கள் நிறுத்தியுள்ளார்களா?’ என நினைத்துக்கொண்டே பாதையை மாற்றிப் புதர்க்காட்டுக்குள் நுழைந்தான்.
பெருமரங்களும் அடர்ந்த புதர்களும் இனி இல்லை. குறுமரங்களின் காடும் பனைமரக் கூட்டமே விளைந்து கிடக்கின்றன. கண்காணாமல் மறைந்து விரைவதற்கு இனி வாய்ப்பில்லை என்று காலம்பன் கணித்தபோது, அவன் போன புதிய திசையின் எதிர்புறத்திலிருந்து கோட்டானின் குரல் கேட்டது.
பனங்காட்டிலிருந்து இயல்பாகக் கேட்கும் ஓசைதான் அது. ஆனால், அது கோட்டானின் ஓசை என்று நம்பக் காலம்பன் ஆயத்தமாக இல்லை. எந்தத் திசையும் அவர்கள் சூழ்ந்துவிட்டார்கள் என்ற முடிவுக்குப் போனான். சற்றே வேகம் குறைத்தபோது உடன்வந்து நிற்பவர்களின் எண்ணிக்கை பேரதிர்ச்சியைக் கொடுத்தது. அம்புகளுக்குத் தப்பி வந்து சேர்ந்தது அறுவர் மட்டுமே. பேரழிவு, பத்து பனை தொலைவைத் தாண்டுமுன் நிகழ்ந்து முடிந்துவிட்டது. அப்படியென்றால், பறம்பின் வீரர்கள் எவ்வளவு துல்லியமான ஆயத்தத்தோடு இருந்துள்ளனர்.

மனம் ஒருகணம் கலங்கியது. மறுகணம் மீண்டது. இனிச் சமவெளியல்லாத பகுதியின் வழியே செல்வோம். இந்த அறுவர் போதும். அவர்களின் தோளிலே இருக்கும் இரு கூடை போதும். எண்ணிக்கொண்டே அதற்குத் தகுந்த திசை வழியைத் தேர்வுசெய்தான் காலம்பன். சற்றே பின்வாங்கிச் சிற்றோடையைக் கடந்து இடப்புறக் காட்டை ஊடறுத்துச் செல்ல முயன்றான்.
அவனது வருகைக்காகக் காத்திருந்தான் பாரி. குறிப்பொலிகள் சரியான அடையாளங்களைப் பாரிக்குக் காட்டிக்கொண்டிருந்தன. மிகவும் கவனமாகத்தான் சிற்றோடையில் காலம்பன் இறங்கினான். அதைவிடக் கவனமாகப் பாரி அவனை நோக்கிக் கொண்டிருந் தான். அடுத்தடுத்து அவர்கள் உள்ளே இறங்கினர். காத்திருந்த பாரியின் விரல்கள் நாணை விடுவித்தபோது அம்புகள் சீறின.
ஓசை கேட்டதும் எதிரிகள் சிற்றோடையெங்கும் கிடக்கும் பாறைகளின் மறைவில் பதுங்கினர். ``இருவரின் மீது அம்பு தைத்தது உறுதி’’ என்று வீரர்கள் சொன்னார்கள். ஆனால், எல்லோரும் பாறையின் மறைவில் பதுங்கியதால் தாக்கப் பட்டவர்கள் எத்தனை பேர் எனத் தெரியவில்லை.
சற்றே விலகி அவர்களை எதிர் கொள்ளும் முகமாகக் கீழ்த்திசைக்குப் போக முடிவெடுத்தான் பாரி. புதர்க்காட்டைக் கிழித்துக்கொண்டு ஓடைக்கரையோரம் ஓடின கால்கள். சரிபாதிக்கு மேல் வீழ்த்திவிட்ட மகிழ்வில் வீரர்களின் வேகம் பல மடங்கு அதிகரித்தது. பாரியின் கணிப்பையும், நுட்பத்தையும், வீரத்தையும், ஆவேசத்தையும் அருகிருந்து பார்க்கும் இந்தக் கணம், மற்ற நால்வருக்கும் இணையற்றதாக இருந்தது.
சிற்றோடையின் கீழ்த்திசைக்கு வந்ததும் பொருத்தமான இடத்தில் நின்று பார்த்தான் பாரி. தாக்கப்பட்ட இடத்தில் சரிந்து கிடந்த இருவரைத் தவிர, வேறு யாரும் இல்லை. `அதற்குள் எங்கே போனார்கள்?’ என அவன் தேடியபோது கூவல்குடியினரின் ஓசை, ஓடையின் மேல்புறத்திலிருந்து கேட்டது. காலம்பன் தனது முடிவை மாற்றினான். `தேவாங்கு விலங்கை எடுத்துச் செல்வதுதான் தனது நோக்கம். பறம்பின் மக்களைத் தாக்கி அழிப்பது தனது வேலையில்லை’ என்று சொல்லிவந்த அவன், இப்போது வேறு சிந்தனைக்குப் போனான். தங்களை நோக்கித் தாக்குதல் தொடுப்பவர்களை அழிக்காமல் தங்களால் தேவாங்கு விலங்கைக் கொண்டு செல்ல முடியாது என்பது தெரிந்துவிட்டது. எனவே, எதிர்த்தாக்குதல் நடத்தும் உத்தியை வகுத்தான்.
கூடையைச் சுமந்திருக்கும் இருவரை மலையின் சரிவொன்றில் பதுங்கி இருக்கச் செய்தான். மீதம் உள்ள நால்வரும் தாக்குதலுக்கு ஆயத்தமாகினர். ஓடையின் மறுகரையில் உள்ள புதர்க்காட்டைக் கிழித்துத் தாக்குதல் தொடுப்பவர்களைத் தேடி அவர்கள் முன்னேறினர். பச்சைமலைத் தொடரில் ஏறத் தொடங்கிப் பத்து நாள்கள் ஆகிவிட்டன. ஆனால், இந்தப் பத்து நாள்களும் பதுங்கியே செயல்பட்டுக்கொண்டிருந்த அவர்கள், முதன்முறையாகத் தாக்குதல் தொடுக்கும் ஆவேசத்தோடு பீறிட்டு ஓடினர். காலம்பன், மரங்களை முறித்துக்கொண்டு முன்னகர்ந்தான். அவனது கண்ணில்படும் மனிதனை ஒற்றைக்கையால் ஒடித்தெறியும் வேகம்கொண்டான்.

சற்றும் எதிர்பாராமல் கூடையோடு மலைச்சரிவில் பதுங்கி இருப்பவர்களின் திசையிலிருந்து கூவலோசை கேட்டது. ஓடிக்கொண்டிருந்த காலம்பன் அதிர்ந்து நின்றான். சிற்றோடையில் இருக்கும்போது தங்களைத் தாக்கியவர்கள் இந்த மேட்டின்மீது நின்றுதான் அம்பு எய்தார்கள். அவர்களைத் தேடித்தான் அவன் போய்க்கொண்டிருந்தான். ஆனால், இப்போது தேவாங்கு விலங்குகளோடு இருப்பவர்களை நோக்கி ஆபத்து வரப்போகிறது எனத் தெரிந்ததும் மீண்டும் அவர்களை நோக்கித் திரும்பினான்.
கூவல்குடியினரின் ஓசை கேட்டதும் சிற்றோடையின் கீழ்ப்புறம் இருந்த பாரி அதை நோக்கி ஓடத் தொடங்கினான். காலம்பன், ஓடையின் வலப்புறப் புதர்களின் வழியேயும் பாரி, ஓடையின் இடப்புறப் புதர்களின் வழியேயும் ஓடிக்கொண்டிருக்கும் போது ஓசை வந்த திசையை நோக்கி மலைக்கு மேலே இருந்து இணை சொல்ல முடியாத வேகத்துடன் கீழிறங்கிக் கொண்டிருந்தான் நீலன்.

ஓடையைச் சுற்றியே மீண்டும் மீண்டும் கூவல்குடியின் குரல் கேட்கிறது, அங்கு என்னதான் நடக்கிறது என்பது புரியாது தத்தளித்தான் பழையன். மலையின் சரிபாதிக்கும் கீழ், தந்தரைக்கு மிக அருகில்தான் அந்த இடம் இருக்கிறது. `நாம் வீரர்களோடு அந்த இடம் போவோமா?’ எனத் தோன்றியது. `ஒருவேளை வேறு வழியில் அவர்கள் கீழிறங்கித் தப்பிக்க முற்பட்டால் என்ன செய்வது?’ என்று சிந்தித்து, மேலேறிப் போகும் திட்டத்தைக் கைவிட்டான். அவர்கள் இறங்க வாய்ப்புள்ள பகுதியைக் கணித்தபடி ஆயத்தநிலையில் இருந்தான் வேட்டூர் பழையன்.
இதுவரை இல்லாத சினம், காலம்பனின் மனதில் உருவேறியபடி இருந்தது. ‘இந்த விலங்கை எடுத்துச் செல்லத்தான் எவ்வளவு இழப்புகளைச் சந்தித்து எவ்வளவு பெரிய முயற்சியைச் செய்துள்ளோம். அது வெற்றிகரமாக முடியப்போகும் இறுதிக்கட்டத்தில் முற்றிலும் எதிர்பாராத தாக்குதலை எதிர்கொள்ளவேண்டியதாகிவிட்டது. ஆனாலும், எந்தக் காரணம்கொண்டும் இந்த முயற்சியில் நாங்கள் தோற்க மாட்டோம். அதையும் மீறி நாங்கள் தோற்க நேர்ந்தால், எங்கள் அத்தனை பேரின் உயிரும் இந்த மலையில் மடிந்தாலும் எம்மில் ஒருவன் அந்தக் கூடையைச் சுமந்து பறம்பின் எல்லையைத் தாண்டி வெளியேறிப் போவதைத் தடுக்கும் வலிமை எவனுக்கும் இல்லை.’
காலம்பனின் நாடிநரம்புகள் எல்லாம் கனன்றுகொண்டிருந்தன. எதிர்படும் பாறையைக் கையால் குத்தி நொறுக்கிவிடும் ஆவேசத்தோடு ஓடிக்கொண்டிருந்தான். சிற்றோடையின் இரு கரைகளிலும் பறவைகள் படபடத்து விலகியபோது இருவரும் உணர்ந்தனர் இணையாக ஓடிவரும் எதிரியை. தேவாங்கின் கூடை சுமந்து உட்கார்ந்திருப்பவர்களை நோக்கி பாரி விசைகொண்டு ஓடியபோது எதிரிகளின் ஈட்டி பாரியின் பின்னால் வந்துகொண்டிருந்த வீரன் ஒருவனைச் சாய்த்தது.
ஓடையின் நாணல்களுக்கு இடையிலும் அம்புகள் இறங்கிக்கொண்டுதான் இருந்தன. காட்டின் தன்மையும் காற்றின் வேகமும் அறிந்து அம்பு எய்துவதில் பறம்பின் வீரர்களுக்கு இணை சொல்ல முடியாது. ஆனால், இந்த இரண்டு குறிப்புகளையும் அறியாமலேயே எதிரிகள் எறியும் ஈட்டியின் வலிமை மரங்களைத் துளைத்துச் செல்லக்கூடியதாக இருந்தது.
கூடையோடு பதுங்கி இருந்தவனை நோக்கிப் பாரியின் அம்புகள் பாய்ந்தபோது, எதிர்த்திசையில் ஓடிவந்துகொண்டிருந்த எதிரிகளின் மீது நீலனின் ஈட்டி இறங்கியது. மேலிருந்து வந்த வேகத்தில் இணையற்ற விசையோடு எறியப்பட்ட ஈட்டி எதிரியின் மார்பில் தைத்து அம்பினைப்போல் நின்றபோது, அவர்கள் எறிந்த ஈட்டி பாரியோடு வந்துகொண்டிருந்த இன்னொரு வீரனின் மார்பைத் துளைத்து வெளியேறியது.
சூழலை யாராலும் கணிக்க முடியவில்லை. பின்னால் வந்தவர்கள் பதுங்கினார்களா, வீழ்ந்தார்களா, மறைந்தார்களா எனக் காலம்பனால் கணிக்க முடியாததைப்போல பாரியாலும் கணிக்க முடியவில்லை. அலவனும் கீதானியும் ஓட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தொலைவில் ஓடிவந்துகொண்டிருந்தார்கள்.
கூடையோடு பதுங்கிய இருவரின் மீதும் அம்புகள் பாய்ந்ததைக் காலம்பன் உறுதிப்படுத்தியபோது, தனக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த இரு வீரர்களும் இல்லை என்பதைப் பாரி உணர்ந்துகொண்டான். காலம்பன் வெறியின் உச்சத்தில் இருந்தபோது அதனினும் மூர்க்கம்கொண்டிருந்தான் பாரி. அம்புகளற்று நின்றிருந்த பாரியை நோக்கி ஓடிவந்துகொண்டிருந்தனர் கீதானியும் அலவனும். மேலிருந்து ஈட்டியைப் பாய்ச்சிய வேகத்தில் நிலைதடுமாறி உருண்டு கொண்டிருந்தான் நீலன்.
உருளும் திசை பார்த்துப் பாரியும் காலம்பனும் கவனம் சிதறவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் முதன்முறையாக நேர்கொண்டு பார்த்தனர். தன்னை நோக்கி ஓடிவந்துகொண்டிருக்கும் கீதானியின் பக்கம் திரும்பாமலே அவன் வரும் வேகத்தைக் கணித்து அம்பை வாங்கக் கையை நீட்டினான் பாரி. தனது முழு வேகத்தோடு வந்துகொண்டிருந்த கீதானி, அம்பை பாரியிடம் நீட்ட முனைந்தபோது அவனது முதுகைத் துளைத்து வெளியேறிக்கொண்டிருந்தது காலம்பன் எறிந்த ஈட்டி. ஒரு கணம் அதிர்ந்து நின்றான் பாரி. அம்பைத் தர முடியாத ஏக்கத் தோடு கீதானி மண்ணில் சரிந்து கொண்டிருந்தபோது, பின்னால் வந்து கொண்டிருந்த அலவன் தடுமாறிப் பள்ளத்தில் உருண்டுகொண்டிருந்தான்.
களத்தில் மிஞ்சி நின்றது காலம்பனும் பாரியும் மட்டுமே. விழுந்த இடத்திலிருந்து தலைநிமிர்ந்து நீலன் பார்த்தபோது அங்கு நடப்பது எதுவும் புரியவில்லை. அவன் வீழ்ந்த பள்ளத்திலிருந்து மேலேறும் முன், பாறைகளும் மரங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி நொறுங்குவதைப்போல் உணர்ந்தான். ‘பாரி இங்கு எப்படி வந்தான்? யார் அந்த எதிரி? என்ன நடக்கிறது?’ எதுவும் புரிபடவில்லை. பள்ளத்திலிருந்து வேரினைப் பிடித்து மேலேறி வந்த நீலனின் கண்களில் இருவரும் தென்படவில்லை.
இங்கும் அங்குமாக அலைமோதி ஓடையோரத்துப் பாறையின் பின்புறம் நோக்கி ஓசை கேட்டுப் போனான். நேற்று மயிலாவோடு வந்தபோது மண் பிரண்டு பெரும்பள்ளமாகக் கிடக்கும் இந்த இடத்தில் காட்டெருமைகள் மோதிய கதையை நீலன் சொன்னான். இப்போது அந்த இடத்தில் காட்டெருமையினும் வலுகொண்டு இருவர் மோதிக்கொண்டிருந்தனர்.
காலம்பனின் தோள்கள் பாறையைச் சிதைக்கவல்லது. பாரியின் தோள்களோ பாறைகொண்டும் சிதைக்க முடியாதது. இரண்டும் ஒன்றுடன் ஒன்று நேர்கொண்டு மோதிச் சரிந்தன. காட்டெருமைகளின் ஆற்றல் கொம்புகளில் இல்லை; அவற்றிலும் வலிமையான முன்னெற்றியின் குமிழ்தான். அதே குமிழ்கள் பிடரியோடு சேர்ந்த முன் மார்பில் இறுகியிருந்தது. மோதும் வேகமும் ஓசையும் காடு அதிரச்செய்தன.
காலம்பன் தனது எதிரியின் உடலை இரு கூராக்க முற்பட்டபோது, எதிரியும் அதற்குத்தான் முயல்கிறான் என்பதை உணர்ந்தான். சற்றே உடல் விலக்கி பின்விசை கொடுத்து முட்டித் தூக்கினான் காலம்பன். பாரியின் கால்கள் எளிதில் மண்விட்டு அகலவில்லை. நிலத்தில் வேர் ஊன்றுவதைப்போல ஊன்றி நிற்கும் பாரியை அவ்வளவு எளிதில் காலம்பனால் அசைத்து எடுத்துவிட முடியவில்லை.

காலம்பனின் தோள்கள் மிகவும் விரிந்தவை. உறுதியிலும் உயரத்திலும் ஒப்பிட முடியாதவை. பாரியை அப்படிச் சொல்லிவிட முடியாது. ஆனால், தோற்றத்தின் அளவுகள் தீர்மானித்து விடுவதில்லை என்பதைப் பாரியைச் சரிக்க முடியாத கணத்தில் காலம்பனும் உணர்ந்தான்.
இருவர் சமநிலையில் மற்போர் புரியும்போது, இணைதலும் விலக்குதலும் மரபன்று. நீலன் திகைத்து நின்றான். முன்காலால் மண்ணைத் தொடர்ந்து வாரியெடுத்து பெரும்பள்ளத்தை உருவாக்கி வைத்திருந்தன காட்டெருமைகள். கொம்புகள் முட்டித்தூக்கி வீசியதால், சிதறிய மண்கட்டிகள் எங்கும் கிடந்தன. ஆனால், அதனினும் பெரும்பள்ளமும் மண் சிதறலும் நிகழ்ந்துகொண்டிருந்தன.
மூர்க்கம்கொண்டு மோதுவதற்கு உருவேறியிருக்கும் வெறியே அடிப்படையாகிறது. ‘இவ்வளவு பெரும் வீரர்களோடு காட்டைக் கிழித்து, உள்நுழைந்து, தேவாங்கைக் கைப்பற்றி, வெளியேறப்போகும் கடைசிப் பொழுதில் மறித்து அழிக்கும் இவனின் உயிர் எடுக்காமல் விடேன்’ என்று மண் பிளப்பதைப்போல் அடித்து நகர்த்தினான் காலம்பன்.
‘பறம்பின் குல அடையாளத்தைக் கைப்பற்றி, மூன்று மலை கடந்து, உயிர் பல சிதைத்து, காரமலையின் கரை தொட நினைக்கும் இவனின் எலும்புகொண்டு இந்த இடம் அகழ்ந்து கீதானியை அடக்கம் செய்ய குழியமைப்பேன்’ என்று மனதுக்குள் முழங்கினான் வேள்பாரி.
காட்டெருமைகளின் குணங்கள் மாற்ற முடியாதவை. ஒன்றுடன் ஒன்று மோதி, எதிரியின் மரணம் பார்த்துத்தான் களம்விட்டு அகலும். அது எத்தனை பகல், எத்தனை இரவானாலும் பின்வாங்காது. பாதக் குளம்பிலிருந்து உச்சிக்கொம்பு வரை அடங்கா சினம் தேங்கி நிற்கும். அந்தச் சினமே கிழிபடும் மேல் தோளினைத் தனது கொம்புகொண்டு கூடுதலாகக் கிழித்துத் தனக்குத்தானே வெறியேற்றிக்கொள்ளச் செய்யும். இருவரும் அதனையே செய்தனர்.
சோர்வும் தளர்வும் நெருங்காதவண்ணம் உள்ளுக்குள்ளிருந்து ஆத்திரத்தை ஊதிப்பெருக்கிக்கொண்டனர். எதிரியைச் சாய்க்கக்கூடிய வேளை நீடிப்பதை ஒருவராலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இரண்டுமுறை காலம்பனின் அடித்தொடையின் பின்நரம்பு பாரிக்கு வசப்பட்டது. அதில் சுழித்து அடித்தால் சரிவான் அவன். ஆனால், மற்போரில் அதைச் செய்யக் கூடாது என மனதைத் திசை மாற்றினான் பாரி.
காலம்பனின் இடுப்பில் கட்டியிருந்த ஆடையின் தடித்த சரடுக்குள் கழுத்தினில் இறக்கக்கூடிய குத்துக்கோல் இருந்தது. சட்டென அதை எடுத்து எதிரியின் தோளிலே இறக்கும் வாய்ப்பு வந்த கணம் காலம்பன் தன்னையே அவமானமாகக் கருதினான். `எனது வீரத்தை எனது கையால் சிதைக்கும் செயலைவிட நான் மரணத்தையே தழுவுவேன்’ என்று உறுதிகொண்டான்.
அவனது எண்ணம் அந்த உறுதி ஏற்கும் கணம் பாரியின் எதிர்பாராத தாக்குதலில் தூக்கி அடிக்கப்பட்டான். மண் சிதைந்து எங்கும் தூசி படர்ந்துகொண்டிருந்தபோது சரிவிலிருந்து இறங்கி வந்து சேர்ந்தான் தேக்கன். பாரியின் மீது எண்ணிலடங்காத கற்கள் சரிந்து விழுவதைப் போல இருந்தது அதன் பிறகான காலம்பனின் தாக்குதல்.
கண்ணின் ஓரத்தில் தேக்கன் வந்தது பாரிக்குத் தெரிந்தது. இவ்வளவு வலிமைவாய்ந்த எதிரிகளைத் தன்னந்தனியாகச் சந்தித்து இருமுறை மோதி, இருவரை வீழ்த்தி, தனது உடலெங்கும் பெரும் தாக்குதலைத் தாங்கி சற்றும் அசராமல் மூன்று மலைகளைக் கடந்து, கடைசிக் கணம்வரை ஆறாத சினத்தோடு வந்து கொண்டிருக்கும் பறம்பின் ஆசான் கண்ணில்பட்ட கணம் பாரியின் ஆவேசம் சூறைக்காற்றாய் மேலெழுந்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நெருப்பை ஊடறுத்துச் செல்லும் விட்டிலைப்போல காலம்பனைப் பிளந்து நுழையும் வேகத்தோடு முன் தலையால் குத்தி நகர்த்தினான் பாரி. இதுவரையிலான தாக்குதலைவிட இருமடங்கு வேகத்தோடு, தான் தூக்கி வீசப்படுவதைக் காலம்பன் உணர்ந்தான்.
தனியொரு வீரன் தன்னை முட்டிச் சாய்க்கும் வீரத்தோடு இருப்பதை முதன்முறையாக உணர்ந்த காலம்பன், அதே முன் தலை முட்டின் வழியே விலா எலும்பை நொறுக்கி அவனது வீரத்துக்குக் கைம்மாறு வழங்க வேண்டும் என்ற வெறிகொண்டபடி, மண்ணில் விழுந்த வேகத்தில் புரண்டு எழுந்தான். விழுந்து புரண்டதில் அவன் இடுப்பில் முடிச்சிடப்பட்ட ஆடை கிழிபட்டதால், சரட்டுக்குள் குத்துக்கோல் இருப்பது சூரிய ஒளியில் பளிச்சிட்டது. அதைப் பார்த்த கணத்தில் தேக்கன் கத்தினான். “பாரி... மோதுவதற்காக அவன் அருகில் செல்லாதே, குத்துக்கோல் மறைத்துள்ளான்” என்று கத்தியபடி தனது இடுப்பிலிருந்த குறுவாளைத் தூக்கி வீசினான்.
வெறிகொண்ட பாரியின் கண்கள், காலம்பனையே பார்த்துக்கொண்டிருந்தன. குறுவாள் எங்கு விழுந்தது எனத் தெரியாது. விழுந்த கணம் வெகுண்டெழுந்த காலம்பன், பாரியின் மீது பாயப்போகும் கணத்தில் பின்னாலிருந்து கத்திய கிழவனின் குரல் மனதை இடியெனத் தாக்கியது. எழும் புழுதிக்கு நடுவே உறையவைக்கும் சொல்லாக அது இருந்தது. சற்றே தடுமாறி அவன் சொல்லிய பெயரை இன்னொரு முறை நினைவுபடுத்திப்பார்த்தான்.
அவனது தாக்குதலை எதிர்கொள்ள பாரி நின்றபோது, காலம்பனின் வாய், கிழவன் சொன்ன பெயரை உச்சரித்தது. “பா……ரி”
‘நான் பாரி எனும் மாமனிதனுடனா இவ்வளவு நேரமும் மோதிக்கொண்டிருந்தேன்’ மனம் நம்ப மறுத்தது. எதிரியைப் பாரியாக எண்ணத் தொடங்கிய கணத்திலிருந்து அவனது ஆவேசம் உதிரத் தொடங்கியது. அடிவேர் அறுபட்ட மரம்போல் உணர்ந்தான் காலம்பன். தாக்குதலுக்காகப் பறவையின் சிறகுபோல விரிந்த அவனது கைகள் அவனை அறியாமலேயே ஒன்றிணைந்துகொண்டிருந்தன.
அவனது செயல்கள் எவையும் அவன் கட்டுப்பாட்டுக்குள் இல்லை. பாரியைப் பற்றி சிறுவயது முதல் கேள்விப்பட்ட கதைகள் காலம்பனின் செயலைத் தம்வயம் எடுத்துக்கொண்டன. பெருக்கெடுத்த குருதியின் ஆவேசத்தை, குலக்கதைகள் கீழிறக்கின. அவனது கைகள் குவியத் தொடங்கும்போது, கால்கள் மண்ணை நோக்கிச் சரிந்துகொண்டிருந்தன.
- பறம்பின் குரல் ஒலிக்கும்...