மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அஃக் - வண்ணதாசன்

அஃக் - வண்ணதாசன்
பிரீமியம் ஸ்டோரி
News
அஃக் - வண்ணதாசன்

அஃக் - வண்ணதாசன்

து முதல் தடவை அல்ல. இதற்கு முன்பும் இப்படி நிகழ்ந்திருக்கிறது. எனக்கு மிக நெருக்கமான ஒன்றின் அல்லது ஒருவரின் இழப்பு, மிக தூரத்தில் புள்ளியாகி மறைந்துகொண்டிருக்கும் நேரத்தில், ஓர் அன்றாடத் தகவல்போல வரும். ‘குழாயில் தண்ணீர் வரவில்லை’, ‘அஞ்சாம் நம்பர் பஸ் போய் ரொம்ப நேரம் ஆச்சு’ என்பதாக.  

அஃக் - வண்ணதாசன்

நான் எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்தேன். முகநூல் பக்கத்தில் இருந்து விலகியிருக்கும் நாள்கள் அப்போது தொடங்கியிருந்தன. அங்குள்ள பதிப்பின் ஆங்கில தினசரியின் எட்டாம் அல்லது ஒன்பதாம் பக்கத்தின் தமிழ்நாட்டுச் செய்திகளில் பரந்த்தாமன் மறைவு குறித்த வரிகள் வரச் சாத்தியமே இல்லை. ஊருக்கு வந்தபின் விகடனில் வெய்யில் எழுதிய கட்டுரையில் அந்த ‘எழுத்தாயுத மாத ஏட்டுக்காரன்’ என்னைப் பார்க்காமல் வேறு எங்கோ பார்த்துக்கொண்டிருக்கிறான். எங்கோ பார்க்கிறவனைத்தானே நமக்கும் பிடிக்கிறது. பொங்கலுக்குக் கூட்டிவைத்த அடுப்புக்கட்டிபோல செம்மண்ணும் சுண்ணாம்பு இழையும் பனையோலைச் சாம்பல் கருக்குமாக அவன் அஃக் நாலாதிசையிலும் கலைந்து கிடக்கிறது.

உருகி வழியும் இறுகிய பாறையின் உச்சிவெயில் மினுமினுப்புடன் பரந்த்தாமன் என்னுடைய ராஜாஜி சாலை வங்கி மேஜையின் முன்னால் நிற்கிறார். புடைத்த கன்ன எலும்புகளுக்குள் சற்று அளவில் சிறிய கண்கள், கீழிறங்கிய கிருதாவும் தாடியும். பாலு மகேந்திரா தொப்பியை அவர் அகற்ற முடியாத வகையில் கையில் ஒரு சிலேட்டை ஏந்தியிருப்பதுபோல ஒரு விளம்பரப் பலகையை வைத்திருந்தார். அதில் அவர் எடுக்க இருக்கும் திரைப்
படத்தின் பெயர் எழுதப்பட்டிருந்தது. இசை - இளையராஜா என்ற வரி பிரதானமாக இருந்தது. அதன் கீழ் இயக்குநர் பெயரில் அவர்.

என்னுடன் அவருடைய பணத் தேவையைச் சுருக்கமாகச் சொல்கிறார். என்னிடம் உடனடியாகத் தர அன்றைக்குப் போதிய நிலையில்லை. சம்பளத் தேதிக்குப் பின் தருவதாகச் சொல்கிறேன். அவர் போய்விடுகிறார். சரியாக நான் குறிப்பிட்ட தினத்தில் வருகிறார். அப்போதும் அவர் கையில் அதே விளம்பரப் பலகை. அவரை ஜாகீர் அம்மாப்பாளையம் அல்ல, சென்னை முற்றிலும் தின்றிருந்தது. தீப்பட்டுக் கருகிய காகிதத்தின் சுருளலாக இருந்தார். அவருக்குச் சில ஆயிரங்கள் தேவையிருக்க, என்னால் சில நூறுகளே கொடுக்க முடிந்தது. என்னைக் கடுமையாகக் கோபித்துக்கொண்டார். அவர் அஃக்கன்னாவிற்குக் கீழ் இருந்து என்னைச் சேகரித்து என் நாற்காலியில் அமர நெடுநேரம் ஆயிற்று.

கிட்டத்தட்ட என்னை அவர் உமிழ்ந்துவிட்டுப் போயிருந்தார். நான் குனிந்தபடி இருந்தேன். என்னை எங்கள் துறை உதவிப் பொது மேலாளரின் டபேதாராக இருக்கும் ‘பாய்’ தோளில் கைவைத்துக் கூப்பிட்டார். அவருக்குத் தாந்திரீகம் எல்லாம் தெரியும். சில சித்துகள் செய்வார். என்னை அவருக்குப் பிடிக்கும். முழுக்கைச் சட்டையால் மூடப் பட்டிருக்கும் கைகளை என் தோளில் இருந்து எடுக்காமல், காட்டமான பீடி வாசனை அடிக்கும் குரலில் சொன்னார், “சூப்பர் ஆளு சார். வாசல் வரைக்கும் கூடப்போய் செண்டாஃப் பண்ணிட்டு வாரேன்” என்றார். நான் இக்கணம் டபேதார் பாயின் கனல்போல் சிவந்த கண்களையும் பரந்த்தாமனின் கடல் ஆழத்தில் அலைவுண்டு கிடந்த கண்களையும் நினைத்துக் கொள்கிறேன்.

அஃக் - வண்ணதாசன்


`````````
எல்லோரையும்போல, என் முதல் சிறுகதைத் தொகுப்பைப் பார்க்க நானும் அவசரப்பட்டிருந்தேன். நானே என் கைச்செலவில் வெளியிடும் மோசமான முடிவுக்கு இடையில், அதைப் பதிப்பிக்கச் சரியானவராக நான் பரந்த்தாமனைத் தேர்ந்திருந்தது நல்ல விஷயம். அது கோபால் (கலாப்ரியா), மற்றும் நான் இருவருமாக எடுத்த கூட்டு முடிவு. கூட்டுப்புழுக்களும், பால்வீதியும் ஏற்கெனவே பரந்த்தாமன் வடிவமைப்பில் வந்திருந்தன. தாமரை இதழின் மேல் ஓரத்தில் பரந்த்தாமன் செய்துகொடுத்திருந்த சதுர பிளாக்குகளில் அச்சாகியபடி இருந்த கோலம், திராட்சைக் குலை, பாதச் சுவடுகள் எல்லாம் அவரிடம் எங்களை அழைத்திருக்க வேண்டும். கோபால் என்னுடைய பதினைந்து சிறுகதைகளையும் ஒரு குறிப்பிட்ட தொகையையும் எடுத்துக் கொண்டு சேலம் பஸ் ஏறி ஜாகீர் அம்மாப் பாளையம் போய்விட்டான்.

74 டிசம்பரிலிருந்து கிட்டத்தட்ட 76 டிசம்பர் வரை ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’ அச்சாகிக்கொண்டே இருந்தது. அந்த இரண்டு வருடங்களுக்கும் இடையே பரந்த்தாமனுக்கும் எனக்கும் நடந்த கடிதப் பரிமாற்றங்களின் சாரமான வரிகளின் பின் இணைப்பில் எங்கள் இரண்டு பேர் வீட்டுக்குமான தூரமும் நெருக்கமும் தெரியும். தூரமும் நெருக்கமும் இல்லாத வீடு எங்கே உண்டு?

நான் போனேனோ இல்லையோ, எனக்காக என் சினேகிதன் தனுக்கோடி அழகர் அவரைப் பார்த்துவிட்டு வந்தான். பரந்த்தாமனின் ட்ரெடில் மெஷினைப் பற்றி, சுற்றி இரைந்து கிடந்த காகிதங்கள் பற்றி, தனுக்கோடியிடம் பரந்த்தாமன் காட்டிய அச்சான ஃபாரங்கள் பற்றிய அவனுடைய சித்திரம் அசலானது. நான் அம்பை பாலனிடம், கோமாவிடம், ஆர்.பாலுவிடமிருந்து எல்லாம் சேகரித்துக் கொடுத்த தொகையை எடுத்துக்கொண்டு மறுபடியும் கோபால்தான் சேலம் போனான்.

ஒரு புதையலை எடுப்பதுபோல, நாங்கள் பிரித்த அட்டைப் பெட்டியில் 400-லிருந்து 420 பிரதிகள் ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’ இருந்தன. மிக நேர்த்தியான இளம் பச்சையில் உயர் ரகக் காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட லெட்டர் பேடுகள், இளஞ்சிவப்பு, மஞ்சள், ஊதா நிறங்களில் கலைக்கமுடியாத ஒப்பனைகளின் முகப்பு அச்சடிக்கப்பட்ட கார்டுகள் இருந்தன.

அந்தத் தொகுப்பின் கதைகள் தவிர, கதைகளையும்விட, அச்சைக் கலையாக்கியிருந்த பரந்த்தாமனின் வடிவமைப்பு, இடையில் இடையில் இருந்த அவருடைய லினோ கட், பன்வர் கட் ஓவியங்கள் எங்கெங்கோ என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்தன. டில்லி வரை கூட. என் 2016, 21 டிசம்பரை நோக்கி பரந்த்தாமன் செய்த முதல் நகர்த்தல் அது.

சென்னையிலிருந்து வேறு ஊருக்கு வேலை மாறிய பிறகும், அவரைப்பற்றிக் கேள்விப்பட்டுக்கொண்டேதான் இருந்தேன். நடிகர் பார்த்திபனின் பராமரிப்பில் இருப்பதாக, சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் அஃக் இதழ்களின் தொகுப்புக்காக சி.மோகனுடன் உட்கார்ந்து அவர் வடிவமைப்பதாக, ரவிசுப்ரமணியனும் கோபாலும் பயணமொன்றில் சென்னைப் பேருந்து நிலைய நிறுத்தம் ஒன்றில் அவரைப் பார்த்துப் பேசியதாக,  இவை எல்லாவற்றிலும் கொடுமையாக அவர் ஒரு காப்பகத்தில் இருப்பதாக. அப்போதைய அவருடைய நேர்கோடற்ற உரையாடல்களில் மீண்டும் அஃக் இதழ் இருந்ததாம். தி.க.சி இருந்தாராம். வண்ணதாசன் இருந்தானாம்.

இந்த வரியில்தான் என் குற்ற உணர்வின் பாரம் என்மேல் சரிகிறது. அவர் ஒரு காப்பகத்தில் இருக்கிறார் என்ற தகவலுக்குப் பின், எத்தனையோ முறை, தனிப்பட்ட முறையிலும்,புத்தகக் கண்காட்சிகளுக் காகவும் சென்னை வந்து திரும்பியிருக்கிறேன். ஒரு முறைகூட நான் அவரைப் பார்க்கவில்லை. பார்க்க வேண்டும் என்றுகூடத் தோன்றவில்லை என்பதுதான் பெரிய அசிங்கம்.சோவியத் லிட்ரேச்சர் இதழ்களுக்கு வெளியே, தமிழ்ப் பத்திரிகைச் சூழலில், லினோ கட், பன்வர் கட் ஓவியங்களை அஃக்கிலும் பரந்த்தாமனிடமும்தான் அறிந்தேன். மரச் செதுக்கு ஓவியங்கள்போல, இந்த லினோ கட், பன்வர் கட் ஓவியங்கள் எல்லாம், ஏதோ ஒரு கடினமான ஊடகத்தில் ஒரு கூர்மையான கருவியால் கீறி, குடை வரையாகச் செய்யப்படுவதாக இருக்கலாம். என்னிடம் உடனே எடுத்துப் பார்த்துக் கொள்ளும்படி எந்த அஃக் இதழும் இல்லை. தாமரை இதழ் இல்லை. ஏன்? பரந்த்தாமன் கலையாக்கிக் கொடுத்த ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’ பிரதிகூட இல்லை. வெட்கமாக இருக்கிறது. துயரமாக இருக்கிறது. கொந்தளிப்பாக இருக்கிறது. ஒரு கூரான ஆயுத எழுத்தால் என்னைக் கிழித்து இப்போது ஏதேனும் வரைவேன் என்றால், அது அஃக் பரந்த்தாமனின் உருவம் கீறப்பட்ட லினோ கட் ஓவியமாக இருக்கும்.